வியாழன், 19 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 5

கணக்கில் ஐயா கொடுத்த பயிற்சிதான் பின்னால் வங்கியில் சேர்ந்தபோது 'கால்குலேடேர் ' உதவி இல்லாமல் கூட்டல் கழித்தல் போன்றவைகளை செய்யமுடிந்தது.

ஐயா மாலை 4 மணிக்கு மற்ற ஆசிரியர் போனதும் கணக்கு மற்றும் பொது அறிவு வகுப்புகள் நடத்துவார். நாங்கள் எல்லோரும் சிலேட்டுடன் தயாராக நிற்கவேண்டும். அவர் கணக்கை போட்டு முடித்து ஒன்று,இரண்டு, மூன்று என சொல்லிமுடிப்பதற்குள் விடையை எழுதி சிலேட்டை கீழே வைத்துவிடவேண்டும். இல்லாவிடில் அடிதான். பிறகு ஒவ்வொருவரிடமும் வந்து விடையைப்பார்ப்பார். தப்பாக போட்டவர்களுக்கு. கிள்ளோ அல்லது குட்டோ நிச்சயம்.

சிலசமயம் கணக்கை பாட்டாகவே பாடி போடுவார். அப்படி அவர் பாடி போட்ட ஒரு கணக்கு 55 வருஷங்களானாலும் இன்னும் நினைவில் இருக்கிறது.


கட்டியால் எட்டுக்கட்டி,

கால், அரை, முக்கால் மாற்று,

செட்டியார் சென்று போனார்,

சிறுபிள்ளை மூன்று பேரு,

கட்டியும் உடைக்கொணாது,

கணக்கையும் போடவேண்டும்.


இறந்துபோன செட்டியார் ஒருவர்க்கு மூன்று பிள்ளைகள். அவர் விட்டுச்சென்ற எட்டு தங்க கட்டிகளை சமமாக பிரிக்கவேண்டும். அதுதான் கணக்கு.

இப்போது வேண்டுமானால் இந்த கணக்கு மிக எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்போது அது கஷ்டமாகத்தான் இருந்தது. இது போன்று பல கணக்குகள். கணக்கோடு பொது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசி வரை வராது என்பார்கள்.

ஆனால் ஐயாவின் பாடங்கள் அந்த பழ மொழியை பொய்யாக்கி ஊரில் உள்ள அனைவருக்கும் கடைசிவரை கை கொடுத்தது என்பது உண்மை. அந்த கால கட்டத்தில் வங்கிகளின் கிளைகள் இன்று போல் எல்லா இடங்களிலும் இல்லை. அதோடு எல்லோரும் சுலபமாக கடனும் வாங்கிவிட முடியாது. எனவே ஊரில் வசதி படைத்தவர்கள் தேவைப்பட்டவர்களுக்கு பிராமிசரி நோட் எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் பிராமிசரி நோட்டை பற்றி தெரியவேண்டும் என்பதற்காக ஐயா எங்களுக்கு எப்படி பிராமிசரி நோட் எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்தார். அதோடு முக்கிய தொழில் விவசாயமாக இருந்ததால் குத்தகை சீட்டு எப்படி எழுதுவது என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

என் கூட படித்தவர்கள் ஐந்தாவதுக்கு மேல் படிக்காததால் அவர்கள் ஊரிலேயே தங்கி பாரம்பரிய தொழிலான விவசாயத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக எல்லோருக்கும் ஐயா சொல்லிக்கொடுத்தது வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்தது என்பது உண்மை. இந்த பிராமிசரி நோட் எழுதுவதை கற்றுக்கொண்டது பதினேழு வருஷங்களுக்குப்பின்னால் வங்கியில் பணி புரியும்போது எனக்கு எப்படி உதவியது என்பதை பிறகு சொல்கிறேன்.

தமிழில் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது அநேகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்காக அதை தருகிறேன்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. பழைய கால முறை பல செவிவழியாகவே சொல்லப்பட்டு/எடுத்துவரப் பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் திரு குமார் அவர்களே! அதனால்தான் நமது முன்னோர்களின் படைப்புகளை நம்மால் இப்போதும் படித்து மகிழ முடிகிறது. கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. I have been reading all your reminiscences. Wonderful. Especially the ones about the teacher and fair weather friends. How true ..those who ignore earlier relationship probably live in fools paradise not knowing that they too would be paid back in the same coin sooner or later.
    Vasudevan

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்.

    இந்தக் கணக்கிற்கு எனக்கு விடை தெரியவில்லை என்பதே உண்மை.

    பன்னிரண்டாம் வகுப்பில் ஏனெதற்கு என்று தெரியாமல் படித்த பல கணக்குகள் இன்று எந்த உபயோகமும் இல்லாமல் மறக்கடிக்கப்பட்டன.

    வாழ்வியல் சார்ந்து கல்வி அன்று கற்பிக்கப்பட்டது புலனாகிறது.


    உங்கள் ஊரில் உங்கள் வயதொத்த எல்லா மாணவர்களும் தொடக்கக் கல்வி வரை கற்றனரா?

    அல்லது, உங்கள் ஆசிரியர் குறிப்பிட்ட வகுப்பார்க்கு மட்டுமே கல்வி என்ற நிலைப்பாடுடையவரா?

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அந்த கணக்கிற்கான விடை இதோ. 5 கால் கட்டிகள், 2 அரை கட்டிகள், 1 முக்கால் கட்டி. ஆக மொத்தம் 8 கட்டிகள். ஒரு பையனுக்கு 4 கால் கட்டிகளும், இன்னொருவனுக்கு 2 அரை கட்டிகளும், மூன்றாமவனுக்கு 1 கால் கட்டியும் மற்றும் 1 முக்கால் கட்டியும் கொடுக்கக்வேண்டும்.
      நீங்கள் சொல்வது சரியே. அப்போதெல்லாம் வாழ்வியல் சார்ந்த கல்வியே கற்பிக்கப்பட்டது.
      எங்கள் ஊரில் உள்ள அனைவருக்குமே சாதி, பாலினம் பாராது அவர் கல்வி கற்பித்தார். அதை அவர் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தார். அவரிடம் படித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்களே!

      நீக்கு