வியாழன், 19 மார்ச், 2009

நினைவோட்டம் 7

ஐயா பிள்ளைகளுக்கு சிம்மசொப்பனம் போல் தோன்றினாலும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். யார் யார் வீட்டில் குழந்தைகள் இருந்தனவோ அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்வார்.

பெண்களுக்கு கல்வி,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என பேசப்படுவதற்கு முன்பே அதாவது ஐம்பதுகளில் அதை தன்னால் முடிந்த அளவு செய்தார் என்பதை இப்போது நினைத்தாலும் அவருடைய சமுதாய நோக்கு எனக்கு சற்று ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

பள்ளியில் படிக்க மாதம் கட்டணம் எட்டணா (ஐம்பது பைசா) தான் வசூலித்தார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் குழந்தைகளுக்கும் தாழ்த்தபட்டோரின் குழந்தைகளுக்கும் கட்டணம் வாங்காமலே பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பது பெருமைப்படவேண்டிய செய்தி.

தினந்தோறும் அரசர்கள் நகர் வலம் வருவதுபோல இரவில் தெரு வலம் வருவார். யார் வீட்டில் பிள்ளைகள் படிக்கும் சத்தம் கேட்கவில்லையோ உடனே அந்த வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். பாடம் படிக்காத மாணவர்களை அவர்கள் பெற்றோர் முன்பே நன்றாக 'கவனித்து' விடுவார். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானே செய்கிறார் என்பதால் அவர் அடிப்பதை தடுக்க மாட்டார்கள்.எனவே அவருக்கு பயந்துகொண்டு நாங்கள் சத்தம் போட்டு சிம்னி விளக்கு முன்னால் படித்துக்கொண்டு இருப்போம்.(அப்போது மின் இணைப்பு வராத காலம்)

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை ஆசிரியர்கள் தற்போது இவ்வாறு பள்ளி நேரம் முடிந்த பின்னும் மாணவர்கள் பற்றி அக்கறை எடுத்துகொள்கிறார்கள்? (பள்ளி நேரத்திலேயே அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தாலே அதிகம்!)

ஒரு தடவை ஐயா விருத்தாசலம் சென்றிருந்த நேரம். இரவு நாங்கள் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த போது எங்களது எதிர் வீட்டில் இருந்த கிளிமங்கலத்து மாமா என அழைக்கப்பட்டவர், 'டேய் பசங்களா! சாமிநாத வாத்தியார் விருத்தாச்சலத்திலிருந்து வரும்போது ஆற்றுக்கிட்டே அரணை கடிச்சு செத்துட்டார் டோய்" என்றார். உடனே நாங்கள் எல்லோரும் சந்தோஷத்தில் 'ஒ' என்றதும் பக்கத்தில் யாரோ கனைக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தால் ஐயா நின்றிருந்தார். அவ்வளவுதான். எங்களது சந்தோஷம் மறைந்து சப்த நாடியும் ஒடுங்கி வீட்டுக்குள் மறைந்துவிட்டோம். ஐயா வருவது தெரிந்தே அந்த மாமா அவ்வாறு செய்தார் என்பது பின்னால் தெரிந்தது.

எதற்கு சொல்கிறேன் என்றால் ஐயா நமக்கு நல்லதிற்குத்தானே செய்கிறார் என அறியாத காலம் அது. அவர் இறந்துவிட்டார் எனக்கேள்விப்பட்டதும் விடுதலை கிடைத்ததாக நினைத்து சந்தோஷப்பட்டோம்.

ஆனால் பின்னாளில் ஐந்தாவது முடித்து அரியலூரில் ஆறாவது (முதல் பாரம்) படித்துக்கொண்டிருந்தபோது உண்மையிலே ஐயா இறந்ததை கேள்விப்பட்டதும் என்னை அறியாமலே கண்ணில் நீர் வந்தது என்பதும் சொந்த உறவினர் மறைந்ததுபோல் எண்ணி அழுதேன் என்பதும் நிஜம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

5 கருத்துகள்:

  1. நினைவோட்டம் அமைதியான ஆறு போல போய்க்கொண்டிருக்கிறது.

    // பாடம் படிக்காத மாணவர்களை அவர்கள் பெற்றோர் முன்பே நன்றாக 'கவனித்து' விடுவார் //

    ”கண் ரெண்ட விட்டுட்டு எப்படி வேணுமானாலும் அடிச்சு சொல்லி குடுங்க” என்று சொன்ன பெரியவர்கள் அந்த காலத்தில் இருந்தனர் என்று எங்கள் ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் திரு கபீர் அன்பன் அவர்களே! அடித்து வளர்த்த பிள்ளைகள் தான் நன்றாக வரும் என நினைத்த காலம் அது. அப்படி வளர்ந்த பிள்ளைகளின் நானும் ஒருவன். தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    முன்னிடுகையில் நான் கேட்ட ஐயம் அகன்றது ஐயா.

    நன்றிகள்.

    பொதுவாகவே காலம் கடந்த ஞானோதயம்தான் நமக்கு.

    இருப்பதன் அருமையை இழப்பில் உணர்ந்து கொள்பவர்களாகவே இருந்துவிடுகிறோம்.

    ஐயா இறந்தார் என்று கேட்டு நானும் அதிர்ந்தேன்.
    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ஐயா இறந்ததை கேட்டு நான் அரியலூரில் அழுததைப்பார்த்து மாமா வீட்டில் அனைவரும் அதிசயமாகப் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது.
      அண்மையில் மறைந்த எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் ஐயா பற்றி ‘எங்கள் வாத்தியார்’ என்ற ஒரு நாவல் எழுதி அது பரிசும் பெற்றது. அதனுடைய படியை நேரில் பார்க்கும்போது தருகிறேன்.

      நீக்கு

    2. என் அண்ணன் எழுதிய நாவலின் பெயர் ‘ஒரு நதி ஓடிக்கொண்டு இருக்கிறது’ என்பதாகும். அவர் பள்ளியில் படிக்கும்போது எழுதிய ‘எங்கள் வாத்தியார்’ என்ற சிறுகதையை இங்கு தவறாக நாவல் என குறிப்பிட்டுள்ளேன்.
      ‘ஒரு நதி ஓடிக்கொண்டு இருக்கிறது’ என்ற நாவல் தான் கோயம்புத்தூர் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருதைப் பெற்றது.

      நீக்கு