ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

ஆனால்!!!

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது 'ஒளி' என்ற கையெழுத்து பத்திரிகையில்வந்த 'ஆனால்' என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது.
(எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பெண்ணாடம் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும்போது வெளியிட்ட கையெழுத்து பத்திரிகை அது) அதை எழுதியவரும் அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவர்தான்.விவரம் புரியாத வயதில் படித்தபோதும் அந்த கவிதை என்னைக்கவர்ந்த காரணத்தால் ஐம்பத்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதை என்னால் மறக்க முடியவில்லை. அந்த கவிதை இதோ.

எல்லா கடலும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கடலாகும்!

எல்லா மரமும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மரமாகும்!

எல்லா மனிதனும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மனிதனாவான்!

எல்லா கைகளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கைகளாகும்!

எல்லா வாளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய வாளாகும்!

அந்த மனிதன் அந்த கையில் அந்த வாளை எடுததோங்கி

அந்த மரத்தை வெட்டிச்சாய்த்து அந்த கடலில் விட்டெறிந்தால்

டும் டுமீல் என்று எத்தனை பெரிய சப்தமிடும்!

அப்போது நான் சிறுவனாக இருந்த காரணத்தால் அந்த கவிதையின் விளைவாக எழுந்த கற்பனை என்னை ஈர்த்திருக்ககூடும்.

இன்றைக்கு ஒருவேளை அந்த கவிதையை இப்படி எழுதினால்?

எல்லா மதங்களும் ஒன்றானால் எத்துணை மகிழ்ச்சி உண்டாகும்

எல்லா மனங்களும் ஒன்றானால் எத்துணை பெரிய மாற்றம் வரும்

இணைந்த மதங்களும் கலந்த மனங்களும்

இங்கு எத்தனை எத்தனை அமைதி தரும்!!!!

கற்பனை நிஜமாகுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

வே.நடனசபாபதி

திங்கள், 20 ஏப்ரல், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 5

உருவத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

உருவத்தில் சிறியதாய் இருப்பவர்கள் என்றால் நம்மில் பலருக்கு ஏளனம்தான். அவர்களைப்பற்றி நம்மிடையே தான் எத்தனைவழக்குச்சொற்கள்!

'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
குள்ளனைக்கொண்டு ஆழம் பார்.
போன்றவை பல உண்டு.

ஆனால் உருவத்தில் சிறியவர்கள் உண்மையில் புத்திசாலிகள் என்பதும் அவர்கள் அசாதாரணமானவர்கள் என்பதும்தான் உண்மை.

அகத்தியர் குள்ளமானவர் தான். ஆனால் அவர் செய்த சாதனைகள் சாதாரணமானவையா?

மன்னன் மகாபலியை மண்ணுக்குள் அனுப்பிய வாமனர் கூட உருவத்தில் சிறியவர் தான்.

தேசிய கவி பாரதி கூட காந்திமதி நாதனுக்கு 'சின்ன பயல்'ஆகத்தானே தெரிந்தார்!

நம்முடைய கிரிக்கட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர்கள் கூட உயரம் குறைந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் தான் மற்றவர்கள் எட்டமுடியாத உயரத்தை எட்டியுள்ளார்கள் என்பதுதானே நிஜம்!

அவ்வளவு ஏன் நாம் கண்டு களிக்கும் சர்க்கஸில் பபூன்களாக வரும் உயரம் குறைந்த அன்பர்கள் செய்யும் சாகசங்கள் மற்ற எல்லாராலும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை.

உயரத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ அல்லது உருவத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ செய்ய முடியாததை உருவத்தில் சிறியவர்களாக இருப்பவர்கள் சாதிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடல் பெரியதாக இருந்தாலும் அதனுடைய தண்ணீர் உபயோகமாகாது. ஆனால் அதன் அருகே உள்ள சிறு ஊற்று கூட குடிப்பதற்கான தண்ணீரை தரும் என்பதை ஔவைப்பாட்டி கூட
'கடல்
பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்' என்கிறார்.

பனம் பழத்தினுடைய விதை பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து வரும் மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும் நல்ல வெயிலில் ஒருவருக்கு கூட அதன் நிழலில் தங்கமுடியாது. ஆனால் ஆலமரத்தின் பழமும் சிறியது. அதனுடைய விதையும் மீனின் முட்டையினுடைய அளவை விட மிக சிறியதே ஆயினும் அது மரமாக வளர்ந்து தன்னுடைய விழுதுகளின் மூலம் கிளைகளை பரப்பி வளர்ந்து தரும் நிழலில் ஒரு அரசனுடைய நால் வகைப்படைகளும் தங்கமுடியும் என்பதை

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்


என 'வெற்றிவேற்கை' யில் அதிவீரராம பாண்டியர் சொல்கிறார்.
எனவே ஒருவரின் தோற்றத்தை வைத்து எடை போடுவது சரியல்ல.

திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவோட்டம் 9

ஐயா பாடம் மட்டும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை ஆடல் பாடலும் சொல்லிக்கொடுத்தார்.பாடம் கற்றுத்தருவதில் இருந்த அதே கண்டிப்பு கலைகளைக் கற்றுத்தருவதிலும் இருந்தது.

பிள்ளையார் சதுர்த்தியில் தொடங்கி ஆயுத பூஜை வரை எங்களுக்கு பாடங்கள் இருக்காது. அதற்கு பதில் மதியம் எங்களுக்கு கோலாட்ட பயிற்சி கொடுப்பார்.

இன்றைக்கு 'தாண்டியா' ஆட்டம் என அதிசயத்தோடு நாம் காணுகின்ற ஆட்டத்தை ஐம்பதுகளிலேயே எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார் என்பது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.

கோலாட்டம் ஆடுவதற்கு ஒவ்வொருவரும் ஒரு ஜோடி கோலாட்ட கழிகளை கொண்டு வரவேண்டும். கோலாட்ட கழிகள் சுமார் 15 அங்குல நீளத்தில் நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருக்கும்.நாங்கள் பிள்ளையார் சதுர்த்தி வருவதற்கு முன்பே எங்கள் ஆசாரியாரிடம் சொல்லி கோலாட்ட கழிகளை தயார் செய்து விடுவோம். கழிகளை அடையாளம் காண்பதற்காக வெவ்வேறு வண்ணம் பூசி எடுத்து செல்வோம்.

ஐயா விநாயக சதுர்த்தி அன்று அவைகளை வைத்து படைத்து கொடுப்பார். ஐயா ஜால்ரா தாளத்தோடு பாட நாங்களும் பாடிக்கொண்டு ஆடவேண்டும். திரு அருட்பா போன்ற பாடல்களை சொல்லிகொடுப்பார்.

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் என்று ஒன்று உண்டு. ஒரு வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாக விடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் எங்களிடம் கொடுத்து எங்களின் ஒரு கோலாட்ட கழியில் சுற்றிக்கொள்ள சொல்வார்.அதை இடது கையில் பிடிக்கவேண்டும் பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க சொல்வார்.

ஐயா ஜால்ரா போட்டு பாட ஆரம்பித்ததும் நாங்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும்.ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் 'மூவ்மென்ட்' உண்டு.

பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும்.அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.

ஐயா உடனே எல்லா கயிற்றையும் பிடித்துக்கொண்டு அவற்றை பிரித்து யார் கயிறு தவறாக சுற்றி இருக்கிறதோ அவர்கள் தலையில் அதே கோலாட்ட கழியை வைத்து இன்னொரு கோலாட்ட கழியால் வேகமாக அடிப்பார். சில சமயம் அவர் கையிலிருக்கும் ஜால்ராவால் வேகமாக தட்டுவதும் உண்டு. அந்த வலியை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்! ஐயாவிடம் இந்த தண்டனை வாங்காதவர்கள் யாரும் இல்லை.

பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' எனப்படும் தெய்வத்திற்கான வாழ்த்துபாடலகளை எல்லோரையும் மனப்பாடம் செய்ய சொல்லுவார். இந்த பாடல்களை விஜயதசமிக்கு பிறகு ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று கோலாட்டம் அடித்து அந்த பாடலை பாடவேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் யார் பாடுவது ஐயாவே தீர்மானித்து அவர்களை பாட சொல்லுவார்.

விஜயதசமி அன்று எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்த பின் பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து ஊரில் உள்ள எல்லா கோவில்களிலும் கோலாட்டம் அடிப்போம்.
பின்பு படிக்கும் பிள்ளைகளின் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கோலாட்டம் அடிக்கவேண்டும். சில வீட்டு முன்னால் பின்னல் கோலாட்டமும் இருக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் 'வாழி' பாட்டு பாடவேண்டும். கடைசியாக அந்த வீட்டு பிள்ளைகள் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தோடு பணம் வைத்து ஆசி பெறுவது வழக்கம். பின்பு கோலாட்டம் ஆடிய பிள்ளைகளுக்கு அந்த வீட்டில் அவல் பொரி வெல்லம் போன்றவைகளை தருவார்கள்.

இந்த ஆட்ட பாட்டங்கள் சுமார் 10 நாட்களுக்குமேல் இருக்குமாதலால் எங்களுக்கெல்லாம் 'குஷி' தான். ஏனென்றால் ஐயாவின் கெடுபிடி அப்போது இருக்காது என்பதால்.

இத்தனை வருடங்கள் ஆகியும் இப்போது கூட என்னால் கோலாட்டத்தை மறக்க முடியவில்லை என்றால் அதற்கு ஐயா கொடுத்த கடும் பயிற்சியே ஆகும்.

'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!'

என வள்ளலாரின் அருட்பாவை நாங்கள் பாடி ஆடியது இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 6 ஏப்ரல், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 4

'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றாலும் கூட 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' என்கிறது குறள்.

அதனால்தான் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றனர் நம்முடைய முன்னோர்கள்.

'பணம் பந்தியிலே' என்றும், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்றும் 'பணம் பத்தும் செய்யும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் நமது பழமொழிகளும் வழக்கு சொற்களும் பணத்தின் அருமைப்பற்றி நமக்கு தெரிவிக்கின்றன.

வறுமையில் வாழ்வோர் வெளியில் நடமாடக்கூட தயங்குவர் என்பதை 'தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்;' என்கிறது விவேக சிந்தாமணி.

கண்ணதாசன் கூட ஒரு பாட்டிலே சொல்லுவார்,
'கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி' என்று.
சொந்த பந்தங்கள் கூட பணம் உள்ளவரைத்தான் மதிக்கும் என்பதால் 'கொண்டு வந்தால் சகோதரி' என்றும் சொல்வதுண்டு. இதற்கு விதிவிலக்காக 'கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்' என்போரும் உண்டு.

ஆனால் ஔவையோ தாய்கூட பணம் இல்லாவிட்டால் மதிக்கமாட்டாள் என்கிறார். கையிலே பணம் இருந்தால் படிக்காதவனாக இருந்தாலும் கூட எல்லோரும் அவனை வரவேற்பார்களாம். பணம் இல்லாதவனை கட்டிய மனைவியும் விரும்பமாட்டாள். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் விரும்பமாட்டாளாம்!.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளுமவேண்டாள் (;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா (து) அவன்வாயிற் சொல்

எனவே 'ஊரோடு ஒத்துவாழ்' என்ற பழமொழிக்கேற்ப நாமும் பணம் சம்பாதிப்போம் நாணயமான வழியில்!