புதன், 13 மே, 2009

நினைவோட்டம் 10

ஐயாவிடமிருந்து எப்போது 'விடுதலை' கிடைக்கும் என அறியாமையால் ஏங்கிக்கொண்டிருந்த நான், ஐந்தாவது வகுப்பு வந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் அந்த வருஷம் முடியும் போது அவரிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதால். ஆனால் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் அவரிடம் படித்திருந்தால் பல வேறு விஷயங்கள் அவரிடமிருந்து பெற்றிக்க முடியும். அந்த மாதிரியான தன்னலம் கருதாத ஆசிரியர் இனி யாருக்கும் கிடைப்பாரா எனபது சந்தேகமே. ஐயாவைப்பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

ஐந்தாவது வந்த மாணவர்களில் சிலர் நாம் தான் 'விட்டு விடுதலையாகி' செல்கிறோமே என்பதால் சற்று விஷமம் செய்ய ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் ஐயா ' நான் நினைத்தால் உங்களை குதிரையாகவும் மாற்ற முடியும் அல்லது கழுதையாகவும் மாற்ற முடியும்' என சொல்லுவார். அப்போது நான் நினைப்பதுண்டு. இவர் எப்படி மனிதர்களை மிருகங்களாக மாற்ற முடியும் என்று. பின்புதான் அதன் பொருள் புரிந்தது. பள்ளி முடிந்து செல்லும்போது உயர் நிலைப்பள்ளியில் சேர பள்ளி மாற்று சான்றிதழ் ( Transfer Certificate ) தேவை. அதை தரும்போது அதில் நடத்தை என்ற இடத்தில் நன்று என எழுதினால் நிச்சயம் பள்ளியில் சேரலாம். அதுவல்லாமல் மோசம் என்றோ சுமார் என்றோ எழுதி கையொப்பமிட்டு கொடுத்தால் பள்ளியில் சேர முடியாது. அதைத்தான் ஐயா குதிரையாகவோ அல்லது கழுதையாகவோ மாற்றுவேன் என பொருள் பட சொல்லியிருக்கிறார். 'அந்த' நாளும் எனக்கு வந்தது. தேர்வு முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பின் ஐயா கூப்பிட்டு வாழ்த்தி சான்றிதழை கொடுத்தார். நல்ல வேளையாக என்னை 'குதிரை' யாகத்தான் மாற்றியிருந்தார்!! மிகவும் சந்தோஷத்தோடு சான்றிதழை வாங்கிக்கொண்டு திரும்பினேன். இனி எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் அப்பாவுக்கு கவலை. எனக்கோ சிறையிலிருந்து விடுதலை யாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.ஆனால் எனக்கு அப்போது தெரியாது அந்த மகிழ்ச்சி தற்காலிகம்தான் என்பது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. சுவாரசியம் மிகுந்த தொடர்கதையின் சுவை.

    குதிரை வெற்றி பெற்ற வரலாறு அறிந்தும் அதன் படிநிலைகளை அறிய ஆர்வம் மிகுகிறது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எனது தொடரை, தொடர்கதை என்று சொன்னமைக்கு நன்றி! கதைகள் எழுதாவிட்டாலும், எனது தொடர் கதைபோல் உள்ளது ’ என்பதை அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு