திங்கள், 15 ஜூன், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 6

பசி வந்திட பத்தும் பறந்து போம் என்பது பழமொழி.
என்னதான் வேலையில் மூழ்கி இருந்தாலும் வேளா வேளைக்கு சாப்பிடாவிட்டால் வயிற்றுக்குள் போராட்டமே நடக்கும் என்பதுதான் உண்மை.

அதனால் தான் 'வயிற்றுக்கு சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றான் தேசியக்கவி பாரதி. நாம் மாய்ந்து மாய்ந்து உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான்.

'ஒரு சாண் வயிறே இல்லாட்டா, உலகினில் ஏது கலாட்டா?' என்பதும் 'எல்லாமே வயிற்றுக்கு தாண்டா' என்பதும்தான் நிதர்சனம்.

ஆனால் நாம் உணவு கிடைக்கும்போதெல்லாம் நம்மால் வயிற்றை நிரப்பிக்கொள்ளமுடியாது.காரணம் நமது வயிற்றின் கொள்ளளவு 946 ml தான் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே கொள்ளளவுக்கு மேல் நம்மால் சாப்பிடமுடியாது. அப்படி அளவுக்கு மீறி சாப்பிட்டால் அவஸ்தைதான்.

அதனால்தான் வள்ளலார் 'பசித்திரு' என்றார்.ஆனாலும் மார்க் ட்வைன் வேடிக்கையாய் சொல்லுவார். " நீங்கள் விரும்புவதை சாப்பிடுங்கள். சாப்பிட்ட உணவு உள்ளே சென்று போராடட்டும்" என்று!

நம்முடைய ஔவை பாட்டிக்குகூட இந்த உணவு உண்ணும் விஷயத்தில் போராட்டம் இருந்தது போலும். ஔவைப்பாட்டி உணவு கிடைக்காதபோது பசியை பொறுத்துக்கொண்டும் , கிடைக்கும்போது வேண்டியமட்டும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் வாழ தன வயிறு ஒத்துழைக்கவில்லையே என
ஆதங்கத்தில்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

என வயிற்றோடு வாழ்தலே அரிது என்கிறார்.

ஆனால் வயிறு என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்தலே அரிது என நம் பாட்டிக்கு தெரியாதா என்ன!

சனி, 13 ஜூன், 2009

நினைவோட்டம் 12

எங்களது அப்பா தீவிர சைவராக இருந்ததால் எங்களுக்கு சைவக்கடவுளர்களின் பெயரையே வைத்திருந்தார்கள். சைவராய் இருந்தும் எங்கள் ஊரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கும் தர்மகர்த்தாவாக இருந்தார்கள்.

இறைப்பணியோடு மருத்துவப்பணியும் செய்து வந்ததால் எங்கள் ஊரில் காலரா நோய் வந்து மக்கள் கஷ்டப்பட்டபோது காலரா மருந்தை தபால் மூலம் வரவழைத்து நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் எந்த வித கட்டணமும் வாங்காமல் கொடுத்து பல உயிரைக்காப்பாற்றியிருக்கிறார்கள்.(மருத்துவ வசதிகள் நகரில் உள்ளவர்களுக்கே கிடைக்காத காலம் அது)

அதுவுமல்லாமல் பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து எண்ணற்ற பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு யாரோ சொல்லிக்கொடுத்த அந்த வைத்தியத்தை அவர்கள் இறக்கும் வரையில் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பாராது, எந்த நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காது வைத்தியம் செய்திருக்கிறார்கள். இதற்காகவே இரவில் வருபவர்களுக்காக திண்ணையிலேயே மருந்துடனும் ஒரு சொம்புவில் தண்ணீருடனும் படுத்துக்கொள்வார்கள். காரணம் நடு இரவில் வருபவர்களால் வீட்டில் உள்ளவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதுதான்.

எங்கள் ஊரிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலும் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்ததால் இரவு நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்பவர்களும் அறுவடை காலங்களில் காவலுக்கு செல்பவர்களும் பாம்பு கடித்து எங்கள் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு வருவது வழக்கம். பாம்பு கடிக்குமல்லாமல் நண்டுவாக்கிளி, ஜலமண்டலம் போன்ற கொடிய ஜந்துக்களின் கடிக்கும் அவர்கள் அந்த பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அப்பாவால் மரணத்தின் பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அநேகம்.

அப்பா செய்து வந்த அந்த பச்சிலை வைத்தியத்தை அவருக்கு பிறகு எங்கள் வீட்டில் யாரும் தொடராது ஒரு துரதிருஷ்டம் என நான் நினைக்கிறேன்.

நினைவுகள் தொடரும்

வே. நடனசபாபதி