செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நினைவோட்டம் 13

எனது கடந்த கால நிகழ்வுகளைப்பற்றி மனதில் அசை போடும்போது , எங்கள் அப்பாவைப்பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது.எனவே அவ்வப்போது என் அப்பாவைப்பற்றியும் எழுதுவேன்.

புற்றீசல் போல் இப்போது உள்ள தனியார் பள்ளிகள் அப்போது இல்லை.தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. மேலும் பள்ளிகளில் பாடங்கள் முழுக்க முழுக்க தமிழில்தான் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே(ஜில்லா போர்டு ) நடத்தி வந்தன. அந்த பள்ளிகள் எல்லாம் கழக உயர்நிலைப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன.

அப்படி அரியலூரில் இருந்த கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்து சென்றபோது ஜூலை மாதம் ஆகிவிட்டது. பள்ளியில் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தன. நான் ஒரு சிற்றூரில் உள்ள பள்ளியில் படித்திருந்ததால் நுழைவுத்தேர்வு வைத்தே என்னை தேர்வு செய்தார்கள்.

ஒருவித தயக்கத்தோடும் பயத்தோடும் 'பர்ஸ்ட் பாரம்' எனப்படும் ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். அதுவரை தரையில் மணலில் உட்கார்ந்து படித்த எனக்கு, 'டெஸ்க்' எனப்படும் மரத்தால் ஆன இருக்கையில் அமர்ந்து படிப்பதும், கட்டைப்பேனா வைத்து மசிக்கூட்டிலிருந்து மசியை(Ink) தொட்டு எழுதியது போக ஊற்றுப்பேனா(Fountain Pen) மூலம் எழுதுவதும், புதுமையாக இருந்தன.

நான் பாடங்கள் ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து சேர்ந்ததால் வகுப்பு ஆசிரியர் 'உனக்கு எப்படிடா தனியாக திரும்பவும் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது?' என சலித்துக்கொண்டார். ஏனெனில் அந்த நாட்களில்,ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எனக்கு அப்பா முன்பே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருந்ததால் எனக்கு அந்த பாடங்கள் அவ்வளவு கடினமாகத்தெரியவில்லை.

ஆனால் முதல் நாளே எனக்கு வந்தது "சோதனை". மாலையில் பள்ளி விட மணி அடித்ததும் வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக கிளம்பியபோது பேனாவை எங்கோ விட்டுவிட்டேன். வீட்டிற்கு வந்து பார்த்ததில் பேனாவை தொலைத்துவிட்டேன் என்றதும், அழுதபடி எனது மாமா மகனிடம் சொன்னேன். அவரும் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அவர், மறுநாள் காலையில் பேனா தொலைந்தது பற்றி எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் அவர் அந்த கடிதத்தை எல்லா வகுப்புகளிலும் காட்ட அனுமதி கொடுப்பார் என்றும் கவலை வேண்டாம் எனக்கூறி அவரே கடிதம் எழுதிக்கொடுத்தார்.

மறுநாள் அதை தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்று கையொப்பம் வாங்கி, ஒவ்வொரு வகுப்பாக எடுத்து சென்று காண்பித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இருந்த, ஆசிரியர்கள் அதை மாணவர்களிடையே படித்து காண்பித்து, பேனா கிடைத்தால் என்னிடம் தருமாறு கூறினார்கள். ஆனால் S.S.L.C எனப்பட்ட பள்ளி இறுதி வகுப்பு ஆசிரியர் ஒருவர் மட்டும் எனது கடிதத்தை சத்தம் போட்டு வாசித்துவிட்டு சொன்னார். 'வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.' என்று.

அதுதான் நான் கற்ற முதல் பாடம். பேனா கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 2

சப்தம் கேட்டதும் திரும்பிப்பார்த்தபோது, மேலே உத்திரத்தில் இருந்து ஒரு கட்டுவிரியன் ('வளகழப்பான்' என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது) எனது கட்டிலில் விழுந்து கீழே இறங்கி ஓடியது.

எனக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுதாகரிப்பதற்குள் அது ஓடி மறைந்துவிட்டது. அன்று இரவு முழுவதும் விளக்கை அணைக்காமல் கட்டிலில் உட்கார்ந்தே இருந்தேன்

இருமல் வராமல் இருந்திருந்தால், என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே அன்று இரவு தூங்கவில்லை. பிறகு அதை மறந்தே போனேன்

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து கதவை திறந்தபோது அதே விரியன் பாம்பு , நடு ஹாலில் ஓடிக்கொண்டிருந்தது. அதை அடிப்பதற்காக கழியைத்தேடியபோது திரும்பவும் அது மறைந்துவிட்டது. அன்று இரவும் தூக்கமில்லை.

மறு நாள் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, சார், எப்படி தைரியமாக அங்கு தங்கி இருக்கிறீர்கள். வேறு வீடு மாறிவிடுங்கள்' என்றார்கள். வேறு வீடு கிடப்பது கடினம் என்பது எனக்குத்தானே தெரியும்.நானும் விளையாட்டாக சொன்னேன். 'உங்களோடே இருக்கிறேனே, பாம்போடு இருப்பதா கஷ்டம்" என்று.

அவ்வாறு சொல்லிவிட்டேனே தவிர தினம் எனக்கு சிவராத்திரிதான். எங்கு பாம்பு வந்து கடித்துவிடுமோ என்ற பயம் தான். ஒரு மாதம் கழிந்து காலையில் எழுந்து பல் விளக்க குளியல் அறைக்கு சென்றேன். வலது கையில் பிரஷை எடுத்துக்கொண்டு இடது கையால் குளியல் அறையின் கதவில் இருந்த கொக்கியை தள்ளினேன். கையில் 'ரப்பர் பேண்ட்' (Rubber Band) போன்று ஒன்று நழுவி விழுவதை உணர்ந்ததால் விளக்கை போட்டேன்.
பார்த்தால் என்கையில் இருந்து நழுவியது வேறொன்றுமில்லை 'அந்த' கட்டுவிரியன் தான்.

கதாசிரியர்கள் பயத்தைப்பற்றி வர்ணிக்கும்போது 'வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன' என்றும் தொண்டையில் பந்து அடைத்ததுபோல் இருந்தது என்றும் எழுதுவார்கள். எனக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை எழுத்தில் எழுத இயலாது.

ஏதோ ஒரு சக்தி என்னை உந்த, உடனே அருகில் இருந்த ஒரு உடைந்த நாற்காலியின் கைப்பிடியை எடுத்து இடது கையாலேயே அந்த விரியனின் நடு முதுகில் எனது பலத்தையெல்லாம் கொடுத்து அழுத்தினேன். வலி தாங்காத அந்த விரியன் தனது உடலை அந்த குச்சியில் சுற்றி தப்பிக்க பார்த்தது. நான் எனது அழுத்தத்தை விடாததால் அதனுடைய முயற்சி பலிக்கவில்லை. அதற்கு உயிர் இல்லை என தெரிந்து கொண்டபிறகு அதே குச்சியால் எடுத்து வெளியே போட்டேன். பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைவிட கடுமையானது என்பதும், விரியன் கடித்தால் உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என்பதும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் இன்று கூட கிராமங்களில் கோபத்தில் திட்டும்போது 'உன்னை விரியன் புடுங்க' என்கிறார்கள்.

அந்த நேரத்தில் எனது அப்பா பல பேரை பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியதும் அவர்கள் வாழ்த்தியதும் எனது நினைவுக்கு வந்தது. மூன்று முறை அந்த விரியனால் கடிபட இருந்தும், உயிர் தப்பியதன் காரணம் அப்பாவின் பலனை எதிர்பாராத சேவைதான் என்பதில் இன்று வரை எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருவேளை சிலர் இதை நம்ப மறுக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை தர்மம் தலை காத்தது என்பது என் விஷயத்தில் சரியே.

எனவே பழமொழிகள் என்பவை வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல. அவை வாழ்ந்து அனுபவித்தவர்களின் வெளிப்பாடுகள் என்பதே நிஜம்!

பின்குறிப்பு:- நான் பாம்பைக்கொன்றது பற்றி எனது கோட்டயம் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, மகிழ்ந்தது மட்டுமல்லாமல், பெருங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் அரைத்து வீட்டின் சன்னல் மற்றும் கதவருகே வைக்க சொன்னார்கள். அப்படி வைத்தால் பாம்புகள் வராதாம். நானும் அவ்வாறே செய்ததில் பின்பு எந்த பாம்பும் வரவில்லை.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 1

"தர்மம் தலை காக்கும்!' 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.' போன்ற பழமொழிகளை கேட்கும்போது, இவை வெறும் அலங்கார சொற்கள்தானா அல்லது அனுபவத்தின் வெளிப்பாடா என்ற ஐயம் எனக்கு இருந்ததுண்டு.

ஆனால் எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டபோது அந்தபழமொழிகள் நூற்றுக்கு நூறு உண்மை எனத்தெரிந்துகொண்டேன்.

நான் முன்பே எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து பல பேர்களின் உயிரைக்காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக எந்த பணமும் வாங்கியதில்லை. அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் அப்பாவை பார்த்து, "அய்யா நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் நல்லா இருக்கணும்' என வாழ்த்தி செல்லும்போது நான் சிறுவனாக இருந்து வேடிக்கை பார்த்ததுண்டு. அந்த சொற்கள் வெறும் உபசார வார்த்தைகள் என்றும், அவைகளுக்கு எந்த பொருளும் இல்லை என நினைத்ததும் உண்டு. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னால் அந்த வாழ்த்துகள் தான்என்னைக்காப்பாற்றபோகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை.

1993 டிசம்பர் இறுதியில் எனக்கு பதவி உயர்வு காரணமாக கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊருக்கு மாற்றல் வந்த போது பிள்ளைகளை படிப்பின் காரணமாக நான் மட்டும் சென்று பணியில் அமர்ந்தேன். மிகவும் கஷ்டப்பட்டு (அதைப்பற்றி பின் எழுதுகிறேன்) ஓராண்டிற்குப்பின் வாடகைக்கு, நகரின் மையப்பகுதியில் உள்ள திருநக்கர கோவிலின் தெற்கு வாசலில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினேன். அந்த வீடு சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம். கேரள கட்டிட அமைப்பில் நான்கு பெரிய அறைகளும் பெரிய சமையல் அறையும் குளியல் அறையும் கொண்ட வீடு அது. வீட்டை சுற்றி பெரிய தோட்டமும் அதில் தென்னை மரங்களும், மாமரங்களும், வீட்டை யாரும் சரிவர பராமரிக்காததால் முழங்கால் உயரத்திற்கு செடிகொடிகளும் புதர்போல் இருந்தன நான் ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்ததால், அந்த வீட்டை முழுமையாக உபயோக்கிக்காமல் முன் அறையில் மட்டும் தங்கி அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.

காலையில் 7 மணிக்கு வீட்டைவிட்டு சென்றால் இரவு வீட்டிற்கு 8 மணிக்கு தான் திரும்புவேன். பகலில் யாரும் இல்லாததால் வீடு அரவம் இல்லாமலிருந்தது. இரவு திரும்பும்போது நான் வெகு ஜாக்கிரையாகத்தான் செடிகொடிகளை தாண்டி வீட்டைத்திறந்து நுழைவேன். ஒரு நாள் இரவு சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். திடீரென இருமல் வந்ததால் துப்புவதற்காக விளக்கை போட்டுவிட்டு எழுந்தபோது 'பொத்' என சப்தம் கேட்டது.

பொறுத்திருங்கள் !