திங்கள், 1 மார்ச், 2010

காலத்தினால் செய்த நன்றி 3

அந்த பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரில், பழுது நீக்கும் பணியில் தீவிரமாக இரு பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

பக்கத்தில் ஒருநாற்காலியில் ஒருவர் அமர்ந்துகொண்டு என்ன செய்யவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்.


அவர் என்னைப்பார்த்ததும் தமிழன் என தெரிந்துகொண்டு 'என்ன வேண்டும்சார்?' என்றார். அப்போதுதான் கவனித்தேன் அவருக்கு ஒருகால் ஊனம்

என்பதை. 'மோட்டார் சைக்கிளில் 'கிளட்ச் கம்பி' அறுந்துவிட்டது. சரி செய்து தரவேண்டும்' என்றேன்.


'சார் இங்கே கார்களுக்கு மட்டும்தான் சர்வீஸ் செய்யப்படும்.

மோட்டார்சைக்கிள்,ஸ்கூட்டர் சர்வீசுக்கு நீங்கள் ஹரிநகர்

போகவேண்டும்.இருந்தாலும் இந்தநேரத்தில் நீங்கள் அம்மாவுடன் அங்கு போகவேண்டாம். இங்கேயே உட்காருங்கள்.நான் மெக்கானிக்கை இங்குஅழைத்துவர ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த ஒரு பணியாளரிடம் 'நீ ஹரி நகர் போய் மெக்கானிக்கை அழைத்துவா.வரும்போது புதிய கிளட்ச் கம்பி ஒன்றையும் வாங்கி வா' என சொன்னார்.


பிறகு எங்களிடம் ' ரொம்பவும் குளிராயிருக்கிறது. கொஞ்சம் டீ சாப்பிடுங்கள்.' என வற்புறுத்தி டீ வாங்கி கொடுத்தார்.


ஹரி நகரிலிருந்து மெக்கானிக் வந்து கிளட்சை சரி செய்து கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

'சார், நீங்கள்எந்தஊர்?என்றதும் நான்'விருத்தாசலம் அருகில் உள்ள தெ..புத்தூர்' என்றேன்.


உடனே அவர், 'சார் நீங்க நம்ம ஊர்காரர் ஆகிட்டீங்க. என் ஊர் கூட விருத்தாசலத்தைஅடுத்த முகசாபரூர்தான்.

நான்கூடவிருத்தாசலத்தில் காமாட்சி மோட்டார் சர்வீசில்மெக்கானிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன்.

ஒருவிபத்தில் காலை இழந்ததால் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து இந்த பணிமனையை ஆரம்பித்து நடத்திவருகிறேன்' என்றார்.


அவர் பெயர் கேசவன் என்றும் சொன்னார்.


மெக்கானிக் 'வேலை முடிந்துவிட்டது' என்றவுடன், நான் அவரிடம் 'எவ்வளவு தரவேண்டும்?' எனக்கேட்டதற்கு, 'இதற்கெல்லாம் ஒன்றும் வேண்டாம்சார்,நீங்கள்பத்திரமாக அம்மாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க' என்றார்.


நான் 'மெக்கானிக்கு தரவேண்டும் அல்லவா?' என்றதும்

'மெக்கானிக்கு மெக்கானிக் ஒன்றும் வாங்க மாட்டார்கள். நீங்கள் போய்வாருங்கள்' என்றார்.

'சரி, கிளட்சுக்கான பணத்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள்' என்றதும்

'அது ஒன்றும் அதிக விலையில்லை.நேரம் ஆகிவிட்டது, நீங்கள் போய் வாருங்கள்' என்றார்.


எவ்வளவோ சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.


முன் பின் அறியாமல் இருந்தும், எந்தவித சேவைக்கட்டணமும் பெறாமல், அந்த நேரத்தில் அவர் செய்த உதவிக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்கு வந்து அவர் செய்த உதவியைப்பற்றி எண்ணியபோது,



காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.


என்ற குறட்பாக்கள்தான் நினைவுக்கு வந்தன.


இன்றைக்கும் கூட திரு கேசவன் அவர்கள், பலனை எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன்.


அவர் எனக்கு உதவி செய்தது அவருள் இருந்த மனிதாபிமானமா?

அல்லது ஒரே ஊரைச்சேர்ந்தவன் என்பதால் ஏற்பட்ட பாசமா?

அல்லது தமிழன் என்ற உணர்வா?


என யோசிக்கும்போது மூன்றும்தான் என்பதே எனது எண்ணம்.

8 கருத்துகள்:

  1. "காலதினாற் செய்த உதவி" என்று தான் குறள் சொல்கிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு அழகன். ஆனால் அறத்துப்பாலில், செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் 102 ஆவது குறள் 'காலத்தி னாற்செய்த நன்றி' என்றே தொடங்குகிறது.

    பதிலளிநீக்கு
  3. நண்பர் அழகன் குறிப்பிட்டது போல் நானும் இதுவரை “காலத்தினாற் செய்த உதவி“ என்று தான் நினைத்திருந்தேன். நல்லதொரு குறளை நினைவூட்டியமைக்கு றன்றி.
    சகோதரர் கேசவன் தங்களுக்கு செய்த உதவி தாங்கள் குறிப்பிட்டது போல் மூன்று காரணங்களுக்காகவும் தான்.
    தங்களின் வரிசைக்கிரமத்தில் ஒரு மாற்றம். முதலாவது மனிதாபிமானம் அடுத்து தமிழன் என்ற உணர்வு அதற்கடுத்தது தான் ஊர்ப்பாசம். ஏனென்றால் தாங்கள் எந்த ஊர் என்பதை அறியுமுன்னரே தமிழன் என்பதைப் புரிந்து கொண்டு தமிழில் கேட்டார் அல்லவா?
    எந்த சேவைக் கட்டணமும் பெறாத சகோதரர் கேசவனும் சரி, இன்றளவும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் தாங்களும் சரி எம் பார்வையில் உயர்ந்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே!. நீங்கள் கூறியது சரியே. தங்களது கருத்துக்கு நானும் உடன்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. மனித நேயம் இன்னும் மறைந்து விடவில்லை என்பதை திரு கேசன் செயல் உணர்த்துகின்றது . மற்றும் அதனை மறவாமல் இத்தனை காலத்திற்கு பிறகு வலைப்பதிவின் மூலம் உலகிற்கு பறைசாற்றியதின் மூலம் நன்றி மறவா தங்கள் குணம் தெரிகின்றந்து ... வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு." என்ற வள்ளுவரின் வாக்கின் பொருளை அறிந்ததால், திரு கேசவன் செய்த உதவியை இன்னும் மறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஆம்.

    அயல் மாநிலங்களி்ல் தமிழைக் கேட்பதன் அருமையை உணர்ந்து ஆனந்தித்த தருணம் எனக்கும் வாய்த்திருக்கிறது.

    நீங்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் உண்மை

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
      அயல் மாநிலங்களில் தமிழ் பேசுவதை (அதுவும் நெருக்கடியான நேரத்தில்) கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தைகள் இல்லை என்பது உண்மையே!

      நீக்கு