வியாழன், 10 ஜூன், 2010

நினைவோட்டம் 22

தமிழ் ஆசிரியரும்இந்தி ஆசிரியரும் வகுப்பில் தேர்தலை பற்றி சொல்லச்சொல்ல எனக்கு அதில் நாட்டம் வந்ததென்னவோ உண்மை. எனவே தினம் தேர்தல் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அப்போதெல்லாம் வாக்கு சீட்டில் முத்திரை இடும் முறை பின்பற்றப்படவில்லை.ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவைகள் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் விரும்பும்(?) வேட்பாளர்களின் பெட்டியில் போடவேண்டும்.

விவரம் தெரியாதவர்கள் பெட்டியின் மேலேயே சீட்டை வைத்து வருவதுண்டு. அவர்களுக்கு பின்னால் செல்பவர் அதை எடுத்து தாங்கள் விரும்பும் பெட்டியில் போடுவதும் உண்டு. (ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் தருவதற்கு பதிலாக வண்ணம் கொடுத்திருந்தார்கள். எனவே வாக்கு பேட்டிகள் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்திலேயே இருக்கும். )

1957 பொது தேர்தல், தமிழ் நாட்டு மக்களை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அண்ணா மற்றும் தி மு க முன்னணி பேச்சாளர்களின் மேடைப்பேச்சும், தி மு க வெளியிட்ட விளம்பர சுவரொட்டிகளும்அவற்றுள் சில.

அப்போது பெண்ணாடம் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் சார்பில் திரு ராஜவேல் படையாட்சி அவர்களும், தி மு க சார்பில் திரு செல்வராஜ் அவர்களும் ,கம்யுனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளராக திரு வீராசாமி படையாட்சி அவர்களும் போட்டியிட்டது நினைவுக்கு வருகிறது.காங்கிரசுக்கு இரட்டை காளைகள் சின்னமும் தி மு க விற்கு உதய சூரியன் சின்னமும் இருந்தது.

தேர்தல் சமயத்தில் தினம் ஒவ்வொரு கட்சி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கும் அதன் பின் நடக்கும் தேர்தல் நாடகத்தையும் பார்க்க நாங்கள் கூட்டமாக சென்றது உண்டு.

அந்த தேர்தலில் தான் தி மு க, அதுவரை அபேட்சகர் என அழைக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாகவும், ஓட்டுகளை வாக்குகள் எனவும் அழைக்கும் முறையை கொண்டுவந்தது.

தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தி மு க வை சேர்ந்த திரு செல்வராஜ் வெற்றிபெற்றபோது பெண்ணாடம் விழாக்கோலம் பூண்டது உண்மை.

அவர் வெற்றி பெற்றது, எங்கள் எல்லோருக்கும் நாங்களே தேர்வில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு பெற்றோம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. வாக்களிக்கும் பெட்டி பற்றிய செய்தி இதுவரை அறியாதது.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு
  2. ஒவ்வொரு முறையும்,


    நான் ஒரு ரோபோ இல்லையென நிரூபித்தல் கடினமாக உள்ளது ”


    அருள் கூர்ந்து இம்முறையை நீக்க வேண்டுகிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! இந்த சரிபார்க்கும் முறை தானாகவே வந்துள்ளது. தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் இது போல் வருமாம். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.

      நீக்கு