புதன், 30 ஜூன், 2010

நினைவோட்டம் 24

விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபோது எதிர்பார்த்தது போலவே, நான் மூன்றாம் படிவத்தில்(எட்டாம் வகுப்பில் ) தேர்ச்சி பெற்றிருந்தேன்.

முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.

பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.

ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.

எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.

முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.

ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. பதினாறு கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று படித்தீர்களா?படிப்புக்காக அக்காலத்தில் நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறோம்?சாத்தூரின் கரிசல் மண்ணில் கால் புதைய(செருப்பின்றி) நான் நடந்து சென்ற அந்தக்காலம் “ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே”
    பழைய நினைவுகளில் தோய்வதே ஒரு சுகம்தான்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னைப்பித்தன் அவர்களே! கஷ்டப்பட்டு படித்ததால்தான் நம்மால் மற்றவர்களின் கஷ்டத்தை அறிய முடிந்ததது என எண்ணுகிறேன்.
    'பழைய நினைவுகளில் தோய்வதே ஒரு சுகம்தான்'.
    நூற்றுக்கு நூறு உண்மை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    கற்றலில் ஆர்வம் இருப்பின் யாவும் சுகமே!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! கற்கவேண்டும் என்ற ஆசை இருப்பின் கஷ்டங்கள் தெரிவதில்லை என்பது உண்மைதான்.

      நீக்கு