செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 26

நான் விருத்தாசலத்தில் மூன்று ஆண்டுகள் அதாவது 1957 ஜூன் முதல் 1960 பிப்ரவரி வரை படித்தேன்.

(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)

நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.

என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!

இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.

திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.

இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!

இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.

இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.

இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.

இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. நான் முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்
    http://ta.indli.com/ ----> http://mathavaraj.blogspot.com/2010/08/blog-post_14.html --> http://puthur-vns.blogspot.com/

    என்ன ஆச்சரியம்! நீங்கள் என் ஊரான விருத்தாசலம் பற்றி எழுதி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு கிள்ளிவளவன் அவர்களே! தாங்களும் விருத்தாசலத்தை சேர்ந்தவர் என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    பின்னால் இருந்து வருவதால் நீங்கள் அடுத்தடுத்த பகுதிகளில் கூறியுள்ள செய்திகளை அறியாமல் பின்னூட்டம் இட்டுப் போகிறேன்.

    எ.கா. முதுகுன்றம்.

    பொறுத்தருள்க.

    வன்னி இலை பொற்காசு பற்றி சொன்ன கதை அறியாதது.

    குறித்துக் கொண்டேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

    பதிலளிநீக்கு