சனி, 18 டிசம்பர், 2010

நினைவோட்டம் 31

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில்
எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களைப்பற்றி
எழுதும்போது,அடுத்து என்னால் மறக்க இயலாதவர்
எங்களது கணித ஆசான் திரு இராஜகோபால் ஆவார்கள்.


அப்போதெல்லாம் கணித வகுப்பை இரண்டாக
பிரித்திருப்பார்கள்.General mathematics என்றும்
Composite Mathematics என்றும் பிரித்திருப்பார்கள்.
அல்ஜீப்ரா, தேற்றம்(Theoram)போன்றவைகளை
Composite Mathematics ல் நடத்துவார்கள்.


பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம்(S.S.L.C) வகுப்பில்
நடத்தும் பாடங்கள் இரண்டிலிருந்தும் S.S.L.C தேர்வில்
கேள்விகள் வரும். எனவே ஒரே ஆசிரியர் நடத்தினால்
ஒரு தொடர்ச்சி இருக்கும் என்பதால்
பத்தாம் வகுப்பில் கணிதம் எடுக்கும் ஆசிரியரே
பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போதே பாடம்
நடத்துவார்.அதனால்தான் திரு இராஜகோபால்
அவர்கள் எங்களுக்கு இரண்டு ஆண்டுகள்
கணிதம்(Composite Mathematics )
சொல்லிக்கொடுத்தார்.


எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் இன்னொரு
கணித ஆசிரியர். அவர் General mathematics
எடுத்திருந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
பத்தாம் வகுப்பில் திரு இராஜகோபால் அவர்கள்
Composite Mathematics நடத்தியபோது எனது அண்ணன்
S.S.L.C மாணவர்களுக்குComposite Mathematics நடத்தினார்.


இதை எதற்காக எழுதுகிறேன் என்றால்,எனது அண்ணன்
எங்களுக்கு கணக்கு வகுப்பு எடுக்கவில்லை என்பதற்காக.
ஆனால் வீட்டில் அவர் மாணவர்களுக்கு டியூஷன்
சொல்லிக்கொடுக்கும்போது அவரிடம் படித்திருக்கிறேன்.
அது பற்றி பின் எழுதுகிறேன்.


திரு இராஜகோபால் அவர்கள் தி.மு.க அனுதாபி.
(அப்போதெல்லாம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
படித்தவர்களில் பெரும்பாலோர் தி.மு.க வை
ஆதரித்தார்கள் என்பது உண்மை.) அவர் பாடம்
நடத்தும்போதே தி.மு.க பற்றி ஏதாவது சொல்லுவார்.



அதோடல்லாமல் கணக்கு போடும்போது அதன்
குறியீட்டுக்களை கூட தி.மு.க தலைவர்களின்
பெயர்களின் முதல் எழுத்துக்களை உபயோகித்தே
போடுவார்.அதாவது திரு அண்ணாதுரை மற்றும்
திரு கருணாநிதி அவர்கள் பெயர்களின் முதல்
எழுத்துக்களை உபயோகித்து,(a+b)2என்பதை
(அ+க)2 என்றே எழுதுவார்.



ஆனாலும் பாடங்களை மாணவர்கள் விரும்பும் விதம்
நடத்தினார். மாணவர்களிடையே நட்புரிமையுடன்
பழகினார். அதே நேரம் தவறு செய்தால் கண்டிக்கவும்
தயங்கமாட்டார்.


எனது வகுப்பு நண்பர் திரு துரைராஜ் அவர்கள்
(அப்போது 'கரிகாலன்' என்ற புனைப்பெயரில் கவிதை
எழுதுவார்.) கவிஞர் கண்ணதாசன் நடத்திவந்த
'தென்றல்' இதழில் வந்த ஒரு போட்டிக்கு அனுப்ப
எழுதிய ஒரு'வெண்பா'வை மறந்து போய் கணக்கு
நோட்டில் எழுதிவிட்டார்.


எங்கள் ஆசிரியர் அதைப்பார்த்ததும் அடிப்பாரோ என
நாங்கள் எண்ணியபோது,அவர் 'தம்பி!கவிதை
எழுத கணக்கு நோட்டை உபயோகிக்காதே.
வேறு நோட்டில்எழுதிப்பழகு' என சொல்லி
அவரை ஊக்கப்படுத்தியது எங்களுக்கெல்லாம்
ஆச்சரியத்தை தந்தது.


(தற்சமயம் முருகடிமை துரைராஜ் என்ற பெயரில்
திருவல்லிக்கேணியில் சோதிட நிலையம் நடத்திவருபவர்
எனது பள்ளி நண்பர் துரைராஜ் அவர்கள்தான்.)


அதே போல் பள்ளி இறுதியாண்டு முடிய ஒரு மாதம்
இருக்கும்போது ஒரு நாள் பாடம் நடத்தாமல் எங்கள்
அனைவரையும் ஒவ்வொருவரும் மேற்கொண்டு
என்ன படிக்கபோகிறோம் என்பதையும், என்னவாக
விரும்புகிறோம் என்பதையும் சொல்லச்சொன்னார்.


1960 களில், இன்று போல எந்த மாணவரும்
எதிர்காலத்தை பற்றி சிந்தித்தது இல்லை.
அதனால் எங்களில் அநேகம் பேர் 'தெரியவில்லை'
என்றதும், அவர் உரிமையோடு கடிந்துகொண்டு,
'நீங்கள் என்னவாக வேண்டும் என சிந்தித்தால்தான்,
அந்த இலக்கை அடைய முயற்சி செய்யமுடியும்'
எனச்சொல்லி, அப்போதே எங்களை எதிர்காலம்
பற்றி சிந்திக்க வைத்ததை இன்னும்
என்னால் மறக்க இயலவில்லை.


பள்ளியின் கடைசி நாளன்று அவரிடம் நான்
எனது 'ஆட்டோகிராப்' நோட்டில் கையொப்பம்
கேட்டபோது அவர் இவ்வாறு எழுதி
கையொப்பம் இட்டார்


"வாழ்கின்றார் முப்பத்து கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அவ்வளவு இருக்கும். அதை போக்க
நீ பாடுபடு'
என்று.


இப்போது நம் மக்கள் தொகை நூறு
கோடியைத்தாண்டிவிட்டது.
ஆனால் நம்மிடையே பேதங்கள் ?



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. //வாழ்கின்றார் முப்பத்து கோடி மக்கள் என்றால்
    சூழ்கின்ற பேதமும் அவ்வளவு இருக்கும். அதை போக்க
    நீ பாடுபடு' என்று.


    இப்போது நம் மக்கள் தொகை நூறு
    கோடியைத்தாண்டிவிட்டது.
    ஆனால் நம்மிடையே பேதங்கள் ? //
    அருமையான வாசகங்கள் ... மக்கட் தொகை நூறு கோடியை தாண்டியாகிவிட்டது .. பேதங்களும், கணித ரீதியாக கூறவேண்டுமென்றால் Geometric proportion ஆக பெருகி விட்டன . பேதங்களை மறந்து வாழும் நாள் வரும் என நம்புவோம் ... வாசுதேவன்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
    நம்பிக்கை தான் வாழ்க்கை! அந்த நாள் வரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  3. நினைவோட்டம் ஓட ஆரம்பித்து விட்டதா? லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துவிட்டேன்.இனிமையான பள்ளி நாட்கள்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நினைவோட்டம் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. பதிவைப்படிப்பவர்களுக்கு ஒரு மாறுதல் இருக்கட்டுமே என்றுதான் இடையிடையே வேறு பதிவுகளையும் இடுகின்றேன். தங்களது பாராட்டுகள் காலம் தாழ்ந்து வந்தாலும் எனக்கு அவை மென்மேலும் எழுதத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு