வியாழன், 6 ஜனவரி, 2011

நினைவோட்டம் 36

அடுத்து என்னால் மறக்க முடியாதவர்கள்,
ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை என்னோடு
படித்த எனக்கு நெருக்கமான நண்பர்கள் கிருஷ்ணன்,
துரைராஜ், பழமலை, கண்ணன், கிருஷ்ணமூர்த்தி,
ராஜாமணி, பார்த்தசாரதி,சிகாமணி, இராஜசேகரன் ராஸ்,
மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர்.

இவர்களில் திரு கிருஷ்ணனை எவரும் மறக்க முடியாது.
பள்ளியில் படிக்கும் காலத்தில், ஓரு சில ஆசிரியர்கள்
பாடம் நடத்தும்போது இவர் செய்யாத குறும்பு இல்லை.
புதிய ஆசிரியர்கள் வந்ததும் அவர்களிடம் தனது
சேட்டையை ஆரம்பிப்பார். அவர்கள்
கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வளவுதான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது திரு வெங்கடராமன்
என்ற கணித ஆசிரியர் எங்களுக்கு சில மாதம்
பாடம் நடத்தினார்.அவர்இயல்பாகவே மிகவும் சாது.
மாணவர்கள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தாலும்
ஒன்றும் சொல்லமாட்டார்.

ஒரு நாள் அவர் பாடம் நடத்தும்போது,
நண்பர் கிருஷ்ணன், இலந்தப்பழங்களை
வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு,கொட்டைகளை
அடுத்த பெஞ்சில் அமர்ந்து இருக்கும் மாணவிகளின்
மேல் துப்பிவிட்டார்.

அந்த மாணவிகள் எழுந்து ஆசிரியரிடம் புகார்
கொடுத்தபோது கொஞ்சம் கூட அசராமல்
“சார், பழம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கும்
இலந்தைப்பழம் வேண்டுமா?’என கேட்டு
வகுப்பில் கலகலப்பை உண்டாக்கிவிட்டார்.

இன்னொரு தடவை, எங்கள் அறிவியல் ஆசிரியர்
திரு S.R. நடராஜன் அவர்கள் பாடம் நடத்தும்போது
கிருஷ்ணன் ஏதோ வாயில் போட்டு
அசைபோடுவதைப்பார்த்து ‘என்ன செய்து கொண்டு
இருக்கிறாய்?’ எனக்கேட்டார்.

உடனே கிருஷ்ணன், ‘சார், ரிங்க்டோன்
மிட்டாய் சாப்பிடுகிறேன். உங்களுக்கும்
வேண்டுமா?' என்றதும், ஆசிரியர் அவர்
இயல்புப்படி கோபப்படாமல் ‘சரி.சரி
உட்கார்’ என்று சொல்லிவிட்டார்.

நண்பர் கிருஷ்ணனின் இந்த குறும்புகளை
எல்லோரிடமும் செய்யமாட்டார். ஆள்
பார்த்துத்தான் அதை செய்வார். எனது
அண்ணன் பள்ளியில் சேர்ந்த அன்று,
அவரது ‘குழந்தை தெய்வம்’ என்ற கதை
‘ஆனந்த விகடன்’ நடத்திய மாணவர்
சிறுகதைப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டு,
அந்த வார விகடன் இதழில் அவரது
புகைப்படத்தோடு வெளியாகி இருந்தது.

எங்களது காலை கணித வகுப்புக்கு வழக்கமான
ஆசிரியர் விடுப்பில் இருந்ததால் எனது அண்ணன்
அந்த வகுப்பில் பாடம் நடத்த வந்தார்.

அவரைப்பார்த்தும் கிருஷ்ணன் எழுந்து கையில்
உள்ள விகடனைக்காட்டி‘சார்,இது நீங்கள்தானே
இது?” என்றார்.

ஒருவேளை எனது அண்ணன் ‘ஆமாம்’ என்று
சொல்லிஇருந்தால் கிருஷ்ணன் தனது
வேலையைத்தொடங்கி இருப்பார். ஆனால்
என் அண்ணனோ ‘டேய், பலூன்! காற்று
போய்விடும்.உட்கார்.’ என கடுமையாக சொன்னதும்
பேசாமல் உட்கார்ந்துவிட்டார். (அப்போது நண்பர்
கிருஷ்ணனின் உடல் வாகு சற்று பெரிதாக இருக்கும்.)

அதற்கு பிறகு அவர் என் அண்ணனின் பிரியமுள்ள
மாணவனாகி அவரிடம் S.S.L.C படிக்கும்போது
டியூஷன் படித்தது வேறு கதை.

உண்மையில் கிருஷ்ணன் வகுப்பில் தான்
விளையாட்டு பிள்ளை போல் இருப்பாரே தவிர
படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். ஆங்கில பாடம்
நடத்தும் ஆசிரியர்கள் தரும் கதை சுருக்கத்தை
மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்தமாக
தானே எழுதுவார். இன்றைக்கு சில பள்ளிகளில்
பிள்ளைகள் தானே சுயமாக சிந்திக்கவேண்டும்
என பயிற்சி தருகிறார்கள். ஆனால் கிருஷ்ணன்
அப்போதே அதை செய்தவர். ‘Readers Digest’ இதழ்
படித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டவர்.

நான் முன்பே சொல்லியபடி அப்போதெல்லாம்
தமிழில் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என
இரு பிரிவுகள் இருக்கும். பொதுத்தமிழை
அனைவரும் படித்தாகவேண்டும். சிறப்புதமிழ்
வேண்டாமென்பவர்கள் வடமொழி (சமஸ்கிருதம்)
படித்தாகவேண்டும்.

நண்பர் கிருஷ்ணன் எட்டாம் வகுப்பு வரை
வடமொழி எடுத்து படித்து வந்தார். அவருக்கும்
அந்த மொழி சொல்லித்தந்த ஆசிரியருக்கும்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒன்பதாம்
வகுப்பில் காலாண்டுத்தேர்வுக்கு முன்பு
சிறப்புத்தமிழ் வகுப்புக்கு தலைமை ஆசிரியர்
அனுமதி பெற்று மாறிவிட்டார்.

சிறப்புத்தமிழில் இலக்கண பாடங்கள் கடினமாக
இருக்கும். திடீரென ஒன்பதாம் வகுப்பில் சிறப்புத்தமிழை
எடுத்ததும் தமிழாசிரியர் கூப்பிட்டு ‘அடிப்படை
இலக்கணம் புரிந்துகொள்ளாமல் எப்படி மேற்கொண்டு
படிக்கபோகிறாய்?’ என்றதும் கொஞ்சம் கூட
அச்சம் கொள்ளாமல் ‘நான் அவைகளையும்
படித்துவிடுகிறேன் சார்.’எனக்கூறி ஆறாம் வகுப்பிலிருந்து
எட்டாம் வகுப்பு வரை இருந்த இலக்கண பாட
புத்தகங்களை வாங்கி தானே படித்து புரிந்துகொண்டு
எங்களோடு ஒன்பதாம் வகுப்பில் சிறப்புத்தமிழ்
தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றார்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள்
கிருஷ்ணன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தோம்.
அப்போது தான் எங்களது நட்பு மேலும் வலுவடைந்தது.
அது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதில் பெரு மகிழ்ச்சி.

நண்பர் கிருஷ்ணன் பற்றிய ‘புராணம்’ இன்னும் உண்டு.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான நினைவுகள்தான்! தொடர்ந்து ஓட விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ண புராணம் நன்றாக உள்ளது. இது போல் நண்பர்கள் எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு சிவகுமாரன் அவர்களே!. எல்லோருக்கும் இதுபோன்று பள்ளியில் நடந்திருக்க வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  5. திரு கிருஷ்ணன் லீலை புரிவது மட்டுமில்லாமல் படிப்பிலும் சுட்டி யாக இருந்து உள்ளார் .சில குறும்புகள் என்னை என் கல்லூரி பருவத்திற்கே அழைத்து சென்றது . நான் செய்த பல குறும்புகள் என் நினைவிற்கு வந்து ஒரு புன்னகையை வர வழைத்தது. ( படிப்பில் நானும் கெட்டி . என் பெயரும் ஒரு விதத்தில் கிருஷ்ணனே !) vasudevan

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும்,கருத்துக்கும், உண்மையை ஒத்துக்கொண்டதற்கும் நன்றி திரு வாசு அவர்களே!. தாங்களும், தங்களது
    கிருஷ்ண (பள்ளி) லீலைகளை எழுதலாமே!.

    பதிலளிநீக்கு