சனி, 22 ஜனவரி, 2011

நினைவோட்டம் 38

நண்பர் கிருஷ்ணனுக்கு சிவாஜி கணேசனுக்கு
அடுத்தபடியாக தமிழ்வாணனை மிகவும் பிடிக்கும்.
அப்போது தமிழ்வாணன் அவர்கள்,
‘கொள்ளைக்காரன் கெட்டிபோம்மு’ என்ற தலைப்பில்
வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சுதந்திர போராட்ட
வீரன் இல்லையென்றும், அவன் ஒரு கொள்ளைக்காரன்
என்றும் புலித்தேவன் தான் உண்மையான சுதந்திர
போராட்ட வீரன் என்றும் ஒரு தொடர் எழுதி வந்தார்.

அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை
என்றாலும், நண்பர் கிருஷ்ணன் விடாது
அந்த தொடர் வரும் ‘கல்கண்டு’ இதழை
எடுத்துவந்து அதை படித்து காண்பித்து என்னை
அவர் பக்கம் இழுக்க முயற்சிப்பார். அந்த முயற்சியில்
அவர் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.

அப்போதெல்லாம் வகுப்பில் உள்ள மாணவர்களை
பல குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும்
பெயர் இட்டு,அதற்கு ஒரு மாணவனை தலைவனாக
போடுவார்கள்.

கிருஷ்ணன் அப்படி ஒரு குழுவுக்கு தலைவனாக
இருந்தபோது ஆசிரியரிடம் வாதாடி அவரது குழுவுக்கு
’புலித்தேவன் குழு’ பெயரிட வைத்தார்.

அதற்கு போட்டியாக நாங்கள் இருந்த குழுவுக்கு,
’வீரபாண்டிய கட்டபொம்மன் குழு’ என பெயரிட்டது
இன்னும் நினைவில் இருக்கிறது.

எனக்கும் நண்பர் கிருஷ்ணனுக்கும் இது போல்
பல தடவை போட்டி வந்ததுண்டு, ஆனால்
அவை எல்லாம் ஆரோக்கியமான போட்டிகளே.

நான் முன்பே எழுதியிருந்தது போல எனது அண்ணன்
திரு சபாநாயகம் அவர்கள் பெண்ணாகடம் பள்ளியில்
படித்தபோது ‘ஒளி’ என்ற கையெழுத்து இதழ் நடத்தி
வந்தார்.அது அப்போது மாணவர்களிடையே
பிரபலமாக இருந்ததாம்.

அதுபோல் நானும் ஒரு இதழ் நடத்த விரும்பி,
எனது பெயரின் முதல் மற்றும் கடைசி எழுத்தை
சேர்த்து ‘நதி’ என்ற பெயரில் கையெழுத்து இதழை
தொடங்கினேன். அட்டைபடம் உட்பட எல்லா
படங்களையும் நானே வரைந்தேன்.

உடனே கிருஷ்ணனும் எனக்கு போட்டியாக
‘திங்கள்’ என்ற கையெழுத்து இதழை ஆரம்பித்தார்.

எங்கள் வகுப்பில் மிகவும் நன்றாக படம்
வரையக்கூடிய மாணவர் தம்புசாமி என்பவர்தான்
‘திங்கள்’ இதழின் ஆஸ்தான ஓவியர்.

நான் எனது அண்ணனுக்கு தெரியாமல் வீட்டில்
அவர் இல்லாதபோது முதல் இதழை தயாரித்திருந்தேன்.
நானும், கிருஷ்ணனும் எங்களது முதல் இதழை,
மாணவர்களிடையே வகுப்பு இடைவேளையில்
சுற்றுக்கு விட்டிருந்தோம்.

இடைவேளை முடிந்து, பாடம் நடத்த எண்கள் வகுப்பு
திரு A.K அவர்கள் வந்தபோது, அவர் வந்தது தெரியாமல்
எனது நண்பர்கள் அந்த இதழ்களை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அதை எங்கள் ஆசிரியர் பார்த்துவிட்டார்.

உடனே கோபத்தோடு‘ என்ன அது?’என்ற போது,
அதை படித்துக்கொண்டிருந்த நண்பர்கள்
‘சார்.கிருஷ்ணனும்,நடனசபாபதியும் கையெழுத்து பத்திரிக்கை
வெளியீட்டு இருக்கிறார்கள்’ என்று சொல்லிவிட்டார்கள்.

அவர் ‘எங்கே அதை கொண்டு வா பார்ப்போம்’
என்றதும், நாங்கள் நடுநடுங்கிவிட்டோம்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. சரியான இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்களே!என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நதி இதழ் (முதல் இதழ் ) இருந்தால் அதை பதிவில் ஏற்றலாமே .
    நிற்க கல்கண்டு இதழ் பற்றி படிக்கும் போது, அந்த நாள் என் நினைவிற்கு வந்தது .
    ஒரு காலத்தில் நானும் கல்கண்டு இதழின் ரசிகன் . அறுபதுகளில் விடாமல் குமுதம் மற்றும் கல்கண்டு இதழ் வாங்கி வாசித்தவன் நான் .அந்த காலத்தில் ஐந்து நயா பைசா என ஞாபகம் ! தமிழ் வாணன் எழுதிய ( ஒரு இதழில் ) "அர்த்தமில்லா தமிழ் சினிமா பாடல்கள் " ( அறுபதுகளில் ) என்ற கட்டுரை இன்னும் மறக்கவில்லை . எவ்வாறு அந்த காலத்தில் வெறும் எதுகை மோனைக்கு மற்றுமே முக்கியத்தும் வழங்கப்பட்டது என்பதை மிகவும் நகைச்சுவையுடன் எழுதி இருந்தார் .. இரண்டு உவமைகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
    ௧) ஏ, மாடி வீட்டு செல்வா . நீ
    மதியம் தின்றே அல்வா !
    ( இது ஒரு ஏழை ஒருவன் பணக்காரன் ஒருவனை பார்த்து பாடுவது .. )

    ௨) தொட்டு தொட்டு பேசாதே அத்தானே...
    கழண்டு கழண்டு போகுது ஜாக்கெட் பொத்தானே
    ( காதலி காதலனை நோக்கி பாடுவது)
    அர்த்தத்தை கவனியாமல் எதுகை மோனை மற்றுமே நோக்க வேண்டுகிறேன் . ஹாஸ்யத்தை ரசிக்க !

    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் உங்கள் ஆவலுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    'தொடரும்'என போட்டது உங்களைப்போன்றோரின் கவனத்தை ஈர்க்கத்தான்.பொறுத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    'நதி' முதல் இதழ் எங்கு உள்ளது எனத்தெரியவில்லை. கிடைத்தால் பதிவேற்றம் செய்கிறேன்.

    நானும் கல்கண்டு வாசகன்தான். ஆனால் ரசிகன் அல்ல. நீங்கள் கூறிய தமிழ்வாணனின் சினிமா பாடல்கள் பற்றிய துணுக்கை படித்திருக்கிறேன். அந்த முதல் பாட்டு 'மாடியில் இருக்கும் செல்வா, நீ மத்தியானம் தின்கிறாய் அல்வா' என்றிருக்கும்.

    என்ன சொன்னாலும் சரி, அவரது துணுக்கு செய்திகளை படிப்பதற்காகவே அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது உண்மை.

    பதிலளிநீக்கு