வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து!

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.


நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்,பொங்கல் வாழ்த்து
அட்டை அனுப்புவதை 1961 ஆம் ஆண்டு திருச்சி
புனித வளவனார் கல்லூரியில்(St Joseph’s college)
படிக்கும்போது ஆரம்பித்தேன்.பின்பு 1970 ஆம் ஆண்டு
நாட்டுடைமை ஆக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில்
சேர்ந்த பிறகு நானே பொங்கல் வாழ்த்தை எழுதி
அட்டையில் அச்சிட்டு அனுப்பி வந்தேன்.முதலில்
ஒரு சிலருக்கே அனுப்பி வந்த நான்,நாளடைவில்
எனது நண்பர்கள் வட்டம் விரிவடைந்ததால்,
250 பேருக்கு மேல் வாழ்த்து அட்டையை
அனுப்பிவைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.

டிசம்பர் மாதம் வந்ததும்,வாழ்த்து அட்டைகளை
அச்சடிக்க கொடுத்துவிட்டு,நண்பர்களின்
புதிய முகவரிகளை சேகரிப்பேன்.டிசம்பர் 25
தேதிக்குப்பின் ஒவ்வொருவருக்கும் என் கைப்பட
முகவரி எழுதி அஞ்சலில் வாழ்த்து அட்டைகளை
சேர்ப்பது வழக்கம்.

ஆனால் 44 ஆண்டுகள் கடைப்பிடித்த இந்த வழக்கத்தை
2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றபின்
நிறுத்திக்கொண்டு, 2005 பொங்கல் முதல்
மிகநெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்
கைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

தற்போது இணைய தள நண்பர்களுக்கும்,
இந்த பதிவு மூலம்
எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொங்கல் விழா இந்துக்கள் பண்டிகையா என்பது பற்றி,
எனது கருத்துக்களை இந்த பொங்கல் திருநாளில்
பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

சமீபத்தில் தமிழக அரசு இந்த ஆண்டும்,
பொங்கல் பரிசாக அரிசி,வெல்லம் போன்றவைகளை
அரசின் நியாயவிலைக்கடை மூலம் ஒவ்வொரு குடும்ப
அட்டைதாரருக்கும் பரிசாக தர இருப்பதாக அறிவிப்பு
செய்தது.

(இது சரியா அல்லது தவறா என்ற விவாதத்திற்குள்
போக நான் விரும்பவில்லை)

இது குறித்து ஒரு நண்பர்,'இந்துக்களுக்கும் மட்டும்
பொங்கல் பரிசு தருவது போல் கிறிஸ்துமஸ் போன்ற
மற்ற மதத்தினர் கொண்டாடும் விழாக்களுக்கும்
பரிசு தரவேண்டும்.’என்று இணையத்தில் எழுதியிருந்தார்.

அவருடைய இந்த வேண்டுகோளை படித்து
நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் தமிழகத்தில்,
பொங்கல் விழா என்பது வேளாண் பெருமக்களால்
அறுவடை முடிந்ததும் நல்ல விளைச்சலை பெற
உதவிய இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி
தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

வேளாண் தொழிலை இந்துக்கள் மட்டுமல்லாமல்
மற்ற மதத்தினரும் செய்வதால், இந்த விழா
அனைவராலும் கொண்டாடப்படுவதாகும். அப்படி
இருக்கும்போது அவர் எப்படி இது இந்துக்களுக்கான
பண்டிகை என நினைத்தார் என்பது எனக்கு புரியவில்லை.

இந்த நேரத்தில் நான், நமது அண்டை மாநிலமான
கேரளாவை நினைத்துப்பார்க்கிறேன்.பணி நிமித்தம்
அங்கே 7 ஆண்டுகள் பணிபுரிந்தபோது அவர்கள்
‘ஓணம்’ பண்டிகை கொண்டாடுவதை பார்த்திருக்கிறேன்.

அங்கே சிங்கம்(ஆவணி) மாதம் பிறக்கும்போது
ஓணம் கொண்டாடுகிறார்கள்.அதுவும் ஒரு
அறுவடைத்திருநாள் தான்.

(ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் திருவோணம்
என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்பட்டதாகவும்,
பிற்காலத்தில் அந்த வழக்கம் வழக்கொழிந்து போயிற்று
என்றும் சொல்ல கேள்வி)

மலையாளிகள் அனைவரும்,எந்தவித பாகுபாடுமின்றி
ஓணத்தைக்கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மை.
ஓணத்திருநாள் அன்று‘செட்டு முண்டு’எனப்படும்
பாரம்பரிய உடையை எல்லா மதத்தினரும் அணிகிறார்கள்.

அன்று வீட்டில் அசைவம் சமைக்காமல்,
ஓண சத்யா’எனப்படும் சைவ விருந்துதான்
தயாரிக்கிறார்கள்.

வெளி நாட்டில் இருக்கும் மலையாளிகளில்
பெரும்பாலோர் ஓண விழாவின் போது
தங்கள் ஊருக்கு வருவதை வழக்கமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.

வங்கி மற்றும் மற்ற அலுவலகங்களில் பணிபுரிவோர்
ஓணம் வரும் வாரத்திற்கு முதல் வாரம் ஒருநாளில்
(வங்கிகளில் சனிக்கிழமையன்று)வழக்கமான
உடையணியாமல், ஒணத்திற்கு அணியும் உடையோடு
வந்து,சிறப்பு விருந்தினரை அழைத்து பேச சொல்லி,
தாங்களும் தங்களது கலைத்திறனை காண்பித்து
விழாவை கொண்டாடுகின்றனர்.

நாம்‘கோலப்போட்டி’நடத்துவது போல
‘மலையாள மனோரமா’’ போன்ற நாளிதழ்
நடத்தும் நிறுவனங்கள்‘அத்த பூக்களம்’ என
அழைக்கப்படுகின்ற பூக்கோல போட்டியை நடத்தி
வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள்.
நான் அங்கு இருந்த ஆண்டுகளில்,‘ஊரோடு ஒத்து வாழ்’
என்ற பழமொழிக்கு இணங்க,வங்கியில் ஓணம் விழா
கொண்டாடும் நாளன்று வேட்டி சட்டை அணிந்தே
சென்றிருக்கிறேன்.

ஆனால் நாமோ, இங்கே பொங்கலை ஒரு பொது
விழாவாகப் பார்க்காமல் ஒரு மதத்தினருடைய
விழாவாக நினைத்து அனைவரும் கொண்டாடாமல்
இருப்பது வருத்தத்துக்குரியது.


இனி இந்த ஆண்டிலிருந்தாவது, பொங்கலை,
அதாவது தமிழர் திருநாளை அனைவரும் கொண்டாடுவோமா?

9 கருத்துகள்:

  1. மற்ற மாநில மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும்,வேறிடம் சென்றால் ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் தமிழர்களிடம் இல்லை என்பது நீங்கள் அறிந்ததுதானே,ஐயா!அது போன்றதுதான் இதுவும்.
    இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பொங்கல் முற்றும் ஓணம் பற்றிய சுவையான செய்திகளை தந்தமைக்கு வாழ்த்துகளுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . அனைவரும் அனைத்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் வந்தால் பாகுபாடின்றி ..... வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. Very true. I enjoyed Onam during my Kerala service at Kannur. we had nice lunch and for that function, one Mr.Aby Becker Keyi presided the function.

    பதிலளிநீக்கு
  4. Very true. During my service in Kannur, we had Onam Sandhya in Branch and it was headed by a muslim Mr.Abu becker Keyi

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வரும் ஆண்டிலிருந்தாவது நாம் மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! அனைவரும் அனைத்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் வருவதற்கு முன்னோடியாகத்தான், பொங்கலை அனைவரும் கொண்டாடவேண்டும் என்கிறேன் நான்.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!தாங்களும் ஓணம் விழாவில் பங்கேற்றது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் நடன சபாபதி - பொங்கல் - ஓணம் பற்றிய பதிவு - பொங்கல் இந்துக்கள் பண்டிகை என்றே ஆகி விட்டது - தவறில்லை- உழவர் திருநாளாக அனைத்து உழவர்களும் லொண்டாடுவது இப்பண்டிகை. பெரும்பாலான உழவர்கள் இந்துக்களாக இருப்பதினால் அது இந்துக்கள் பண்டிகை ஆகி விட்டது - அவ்வளவுதான் - கிருத்தவ்ர்களோ இசுலாமியர்களோ உழவர்களாக இருப்பதில்லை. - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! தஞ்சை மாவட்டத்தில் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் வேளாண்மை செய்கின்றனர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன்.

      நீக்கு