வியாழன், 3 பிப்ரவரி, 2011

கல்பனாதாசனின் “சில தீவிர இதழ்கள்”

நினைவோட்டம் 35 ல் எனக்கு ஓராண்டு
மூத்த மாணவரான நண்பர் திரு பார்த்தசாரதி
பற்றிஎழுதியபோது,அவரோடு தொடர்பு மறுபடியும்
ஏற்படும் என நினைக்கவில்லை.




எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் மூலம்
எனது ‘நினைத்துப்பார்க்கிறேன்’ தொடர் பற்றி
கேள்விப்பட்டு என்னை சென்ற மாதம் 3 ந்தேதி
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,
நான் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.

52 வருடத்திற்கு முந்தைய நட்பு புதுப்பிக்கப்பட்டதும்,
மறுநாளே அவரது படைப்பான ‘சில தீவிர இதழ்கள்”
என்ற நூலை அவர் அனுப்பியதும் எனக்கு இன்னும்
கனவுபோலவே உள்ளது.

அவரது நூல் கிடைத்ததும் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் படித்து இரசித்த அந்த நூல்பற்றி....

கல்பனாதாசன் அவர்களின் (திரு பார்த்தசாரதி
அவர்களின் புனைப்பெயர் கல்பனாதாசன் என்பதை
நான் முன்பே எழுதியிருக்கிறேன்.) “சில தீவிர இதழ்கள்”
என்ற தலைப்பில் உள்ள இந்த நூல், ‘புதிய பார்வை’
இதழில் ‘நினைவில் நிற்கும் இதழ்கள்’ என்ற அவர்
எழுதிய தொடரின் விரிவாக்கம் ஆகும்.

பொருளடக்கத்துக்கும், முன்னுரைக்கும் போகு முன்பு
நம்மை வரவேற்பது, “விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
விலை போகாத நிகில் சக்ரவர்த்தி போன்ற
இதழாளர்களுக்கும் ரொமிலோ தாப்பர் போன்ற
ஆய்வாளர்களுக்கும்’
என்ற நூலாசிரியரின்
ஒரு வித்தியாசமான அறிவிப்பு, இந்த நூல் எந்த
வகையைச்சேர்ந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

இந்த நூலை வாசித்து முடித்ததும், இதை எழுத எவ்வளவு
முயற்சி செய்து, தேவையான விபரங்களை சேகரித்து,
ஆய்வு செய்து இருப்பார் என நினைத்தபோது பிரமிப்பாக இருந்தது.

இந்த நூலில் தென்றல் முதல் மன ஓசை வரை மொத்தம்
32 இதழ்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.

இந்த இதழ்களில் பெரும்பாலானவை திராவிட இதழ்கள்.
அவைகளை நூலாசிரியர் எடுத்துக்கொண்ட காரணம்
அவரது உயர் நிலைப்பள்ளி , கல்லூரிக் காலங்களில்
அவரை ஆக்கிரமித்து இன்றும் அவரது இதயத்தின்
ஆழத்தில் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு விடாப்பிடியாக
வீற்றிருப்பது திராவிட இயக்கம் என்பதால்தான் என்று
அவரே சொல்கிறார்.

மேலும் தனது முன்னரையில் தான் ஒரு ஆய்வு
மாணவனில்லை என்றும் இந்த தொடர்களில்
தான் செய்திருப்பதெல்லாம் தொட்டுத் தெளிக்கிற
வேலைதான் என்று சொல்லி இருந்தாலும்,
நூலைப் படித்து முடித்ததும் அவர் சொல்லி
இருப்பது தன்னடக்கம் என்பதை படிக்கும்
வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

இந்த ஆய்வு நூல் அவசியம் இதழியில்
இளங்கலை, மற்றும் முதுகலை மாணவர்களுக்கு
பாடமாக வைக்கப்படவேண்டும் என்பதில்
யாருக்கும் மாற்று கருத்து இருக்காது
என்பது எனது நம்பிக்கை.

இந்த ஆய்வுக்கட்டுரை மிக நன்றாக
இருக்கிறது என சொல்வது ஒரு வெறும்
சம்பிரதாய பாராட்டு என நினைக்கிறேன்.

இந்த நூலை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு
இல்லை என்றாலும்,எனது கருத்துக்கள் சிலவற்றை
சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’
நாவலைப்படிக்கும்போது எனக்கு எந்த
அளவு ஈர்ப்பு இருந்ததோ, அந்த அளவு இந்த
நூலைப்படிக்கும்போதும் இருந்தது என்பது உண்மை.
இவரது எழுத்து நடை, வெறும் வரலாற்று செய்திகளை
பதிவு செய்வது போல் இல்லாமல்,
தேவையான இடங்களில் நகைச்சுவையையும்,
சில இடங்களில் ஆதங்கத்தையும் தன்னோடு
கொண்டிருப்பதால், இது மற்ற ஆய்வு நூல்களிருந்து
தனித்திருக்கிறது
என்பது உண்மை.

இந்த நூலைப்படித்தவுடன், எனக்கு இதுவரை தெரியாத
பல வரலாற்று செய்திகளை தெரிந்துகொண்டேன்.
எனக்கு தெரிந்தது என நான் நினைத்துக்கொண்டிருந்த
சில செய்திகள் தவறு எனவும் புரிந்துகொண்டேன்.

திராவிட இயக்க இதழ்கள் பற்றி இதைவிட
வேறு யாரும் திறனாய்வு செய்யமுடியாது
என்பது எனது கருத்து.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு இருக்கும்
இந்த நூல் ஒவ்வொருவருடைய நூலகத்திலும்
இருக்கவேண்டிய ஒன்று
.

2 கருத்துகள்:

  1. முதலில் வாழ்த்துகள்,பழைய நட்பு புதுப்பிக்கப் பட்டதற்கு!
    தாங்கள் எழுதியதைப் படித்தவுடன் நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது,ஆய்வு செய்யப்பட்ட இதழ்கள் பெரும்பாலும் திராவிட இதழ்களாய் இருப்பினும்!
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    இந்த ஆய்வு நூலில் திராவிட இயக்கத்தை சேராத இதழ்களும் உண்டு. அவசியம் அனைவரும் படித்து இன்புறவேண்டும் என்பதே எனது அவா.

    பதிலளிநீக்கு