சனி, 19 மார்ச், 2011

கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (2)

என்னுடன்,என் மகனும் என் அண்ணியும் அவர்களது
Passport ஐபுதுப்பிக்க வேண்டி வந்திருந்தார்கள்.எங்களுக்கு
உதவியாக என் அண்ணன் மகன் ஞானவேலனும்
வந்திருந்தார்.

அவர்களுடன் அண்ணா சாலையிலிருந்த முகவரின்
அலுவலகத்திலிருந்து கிளம்பி,சாஸ்த்ரி பவனில் உள்ள
வட்டார கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு 15 நிமிடங்களில்
வந்துவிட்டேன்.

சாஸ்த்ரி பவனில் நுழைந்ததும் அங்கிருந்த கூட்டத்தை
பார்த்ததும் எனக்கு பகீர் என்றது.சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததுபோல் இருந்தது.
இந்த கூட்டத்தில் எவ்வாறு நமது வேலையை
முடிக்கபோகிறோம் என நினைத்தபோது என் அண்ணன்
மகன் சொன்னார் ’சித்தப்பா இவர்களெல்லாம் புதிய
Passport வேண்டி விண்ணப்பிக்க வந்திருப்பவர்கள்.
நாம் Thatkal ல் விண்ணப்பித்து,முன் கூட்டியே
இன்றைய தேதிக்கு பதிவு செய்து இருப்பதால்
கவலை வேண்டாம்.’ என்றதும் நிம்மதி வந்தது.

காரை நிறுத்த இடம் இல்லாமல்,திருவண்ணாமலையில்
கிரி வலம் வருவதுபோல் சாஸ்த்ரி பவனை சுற்றி
வந்தோம். கார்கள் நிறுத்தியுள்ள இடங்கள் போக
காலியான இடங்களில் கற்கள் வைத்து யாரோ ‘ரிசர்வ்’
செய்திருந்தார்கள்.

என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த போது
ஒருவர் வந்து‘சார்,கார் நிறுத்த இடம் இல்லை.
இவைகள் எல்லாம் ‘ரிசர்வ்’செய்யபட்டவை.’என்றார்.
எனது அண்ணன் மகன்,‘கொஞ்ச நேரம் தாம்பா.உடனே(!)
வந்துவிடுவோம்’என்றதும் அவர் ’சரி சார்,போகும்போது
என்னைக்கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள்’எனக்கூறி
‘ரிசர்வ்’செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திலிருந்த
கற்களை எடுத்து காரை நிறுத்த உதவி செய்தார்.

(பின்னால் தான் தெரிந்தது.அவர் தான் கார் நிறுத்தும்
இடங்களில் வாடகை வசூலிப்பவர் என்று.வழக்கமான
வாடகையுடன் அவரது‘சேவை’க்கான’கட்டணம்
வசூலிக்க அவரே கற்களை வைத்திருக்கிறார்.)

கீழ் தளத்தில் சரியான கூட்டம்.கட்டிடத்தை சுற்றி நீண்ட
‘க்யூ’அவர்களைத் தாண்டிக்கொண்டு உள்ளே
சென்றபோது,மூத்த குடிமக்களுக்கும்,
மாற்றுத்திறனாளிகளுக்கும், குழந்தையோடு
வருபவர்களுக்கும் இரண்டாம் தளத்தில்
தனி Counter ல்,Slip தருவதால் அங்கு
போக சொன்னார்கள்.

என் மகனுக்கு முதல் தளத்தில் Counter.
மாடிப்படியெல்லாம் மக்கள் பிதுங்கி வழிந்தார்கள்.
மிகுந்த சிரமத்திற்கிடையில் இரண்டாம் தளம்
சென்றபோது அங்கு நிற்க கூட இடம் இல்லை.
உட்கார சுமார் இருபது இருக்கைகள் மட்டும் இருந்தன.

அவைகள் ஒன்றும் காலியாக இல்லை.மிகவும்
வயதானவர்கள், கைக்குழந்தையோடு உள்ள
பெண்கள் அவர்களுக்கு உதவிக்காக வந்த
உறவினர்கள் என நிறைய பேர் நிற்க முடியாமல்
நின்றுகொண்டிருந்தார்கள்.

அங்கே சீருடையில் இருந்த கடை நிலை ஊழியர்
ஒருவர் எல்லோரையும் கம்பங்கொல்லையில் புகுந்த
கால்நடைகளை விரட்டுவதுபோல்,கொஞ்சம் கூட
வயதிற்கு மரியாதை தராமலும்,வந்திருப்பவர்களின்
கஷ்டங்களையும் உணராமலும்,‘இங்கே நிற்காதே.
கீழே போ’ என்று ஒருமையில் கத்திக்கொண்டிருந்தார்.

யாரும் வாய் திறந்து அவரிடம்‘ஏன் இப்படி எங்களை
நடத்துகிறாய்?’எனக்கேட்கவில்லை.ஒருவர் மட்டும்
அவரிடம் ‘என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறாய்?
நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை.’ரூபாய்
இரண்டாயிரம் பணம் கட்டித்தான் இங்கு
வந்திருக்கிறோம்’என சத்தம்போட்டதும்,அதுவே
வாய்ச்சண்டையாகி ஒருவரை ஒருவர் ஒருமையில்
திட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

உள்ளே இருந்த உயர்(?)அலுவலர்கள் யாரும் வெளியே
வந்து எட்டிப்பார்க்கவில்லை. ஒருவேளை அதெல்லாம்
அவர்கள் வேலை இல்லை என நினைத்துவிட்டார்களோ
என்னவோ.அவர்கள் வரவேண்டாம். அவர்கள் கீழே
வேலை செய்யும் இந்த கடை நிலை ஊழியர்கள்,
அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை, மாக்களாக
நடத்தக்கூடாது என சொல்லாக்கூடாதா? என்ன.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசின்
நிலைப்பாடு இதுதான் போலும் என நினைத்துக்கொண்டேன்.


அந்த ஊழியர் சத்தம் போடும்போது,நகர்வதும், பின்பு
நிற்பதுமாக வந்திருந்த கூட்டம் அலை
மோதிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த மிகவும்
வயதான மனிதர் ஒருவர் நிற்கமுடியாமல் படியில்
உட்கார்ந்து, கையில் கொண்டுவந்திருந்த தண்ணீர்
பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து முகத்தில்
தெளித்துக்கொண்டு பையிலிருந்து இரண்டு
பிஸ்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
வெயிலும் பசியும் அவரை வாட்டியதை அவர்
முகம் காட்டியது.

ஒரு வழியாக சரியாக காலை 10.30 மணிக்கு
இன்னொரு கடைநிலை ஊழியர் வந்து விண்ணப்பத்தில்
வரிசை எண் உள்ள Slip ஐ ஒட்டத்தொடங்கினார்.

என் அண்ணிக்கு E 47எண்ணும், எனக்கு E 48 எண்ணும்
கிடைத்தன. அங்குள்ள மின் தகவல் பலகையில்,அப்போது
E 13 வரிசை எண் உள்ளவரின் ஆவணங்கள் சரி
பார்ப்பதாககாட்டியதால், எங்களது வரிசை வர
குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால்
அங்கே நிற்காமல் கீழே வந்துவிட்டோம்.

என் மகனுக்கு முதல் தளத்தில் 11 மணிக்கு
A 65 என்ற வரிசை எண்ணை கொடுத்தார்கள்.
அவனும் எங்களைத்தேடி கீழே வந்துவிட்டான்.

கீழே வந்தபோது இதே அலுவலகத்தை சேர்ந்த
அலுவலர் ஒருவர் காரிலிருந்து இறங்கி
வந்துகொண்டிருந்தார்.அவருக்கு முன்னால்
ஒரு ஊழியர் கைகளை நீட்டி முன்னால்
நின்றுகொண்டு அல்லது சென்றுகொண்டிருக்கும்
பொதுமக்களை புறம்தள்ளி வழி
ஏற்படுத்திக்கொண்டிருந்த கொடுமையைக்கண்டேன்.

உடனே என் அண்ணன் மகன்‘வாருங்கள் இங்கே நிற்க
வேண்டாம்.போய் காபி சாப்பிட்டு வரலாம்’என்றதும்,
வெளியே போய் குளிர் பானம் அருந்திவிட்டு,
பின்பு 12.30 மணிக்கு திரும்பி வந்தோம்.


தொடரும்

7 கருத்துகள்:

  1. அய்யா...
    நான் புதிதாக பாஸ்போர்ட் வாங்க வேண்டும்.. சில டிராவல் ஏஜென்சிக்காரர்கள் வாங்கித் தருகிறேன் 3 மாதம் ஆகும் என்கிறார்கள்.. எனக்கு ஒரு வழி காட்டவும்

    பதிலளிநீக்கு
  2. இயல்பு மாறா அரசு அலுவலகம்!கடவுச் சீட்டு புதுப்பிக்க இத்துணை துன்பமா?
    தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு பத்ரிநாத் அவர்களே!. புதிய பாஸ்போர்ட் தத்கல் மூலம் வாங்குவதற்கே ஒரு மாதம் காத்திருக்கவேண்டியுள்ளது. நிச்சயம் சாதாரணமாக வாங்க 3 மாதம் ஆகலாம். நன்கு தெரிந்த முகவர்கள் மூலம் சென்றாலும், நாம்தான் நேரில் சென்று ஆவணங்களைக் கொடுக்கவேண்டும். எனவே இந்த கஷ்டங்களை அனுபவித்தே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.

    பதிலளிநீக்கு
  5. The difficulties experienced right from entering Sastri bhawan have been fluently narrated thus forewarning others intending to renew their passports. That the ordeal is not yet over makes one feel sick. Most of Govt institutions function in similar manner in utter disregard of peoples travails. That corruption has taken deep roots is evident by the manner in which the attendant has been fleecing money from hapless public by creating artificial scarcity of parking space is one such example. Not in the distant the Chief Passport officer ( I am not sure about the designation ) , a lady was arrested for indulging in corruption in the same office. Be that as it may, the travails when documented in full need to be sent tamil news paper like Dinamalar for publication and to draw the attention of the authorities concerned to the not too flattering conditions prevailing in the Passport office. Vasudevan

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!. அரசு ஊழியர்கள் நிலைமையை உணர்ந்து திருந்துவார்கள் நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  7. மாநிலத்தின் அனைத்து கடவுச் சீட்டு, பொது அலுவலக சேவை நிலையங்களில் நடக்கும் மாக்கல் விரட்டுதான் அங்கும்... அமெரிக்கன் சென்னை கன்சூலேட்டிலும் இதே அணுகு முறைதான். ஆனால், இப்பொழுது முறைப்படி தேதி கொடுத்து அரை மணி நேரத்திற்கு முன்னால் வந்தால் போதுமென்று ரூல்ஸ் கொண்டு வந்து விட்டார்கள் போல.

    ஆனால் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. மக்கட் தொகையும் மனித மதிப்பு குறைவதற்கான காரணமோ! :(

    பதிலளிநீக்கு