வியாழன், 7 ஏப்ரல், 2011

நம்பலாமா நாடி சோதிடத்தை? 4

அவர் படித்து சொன்ன பாடல்களின் படி,
திரு ஷெனாய் அவர்கள் ஒரு வாணிபம் செய்யும்
குடும்பத்தை சேர்ந்தவர்.ஆனால் அவர் இப்போது
இருப்பதோ நிதி சார்ந்த அரசுப்பணி.தற்சமயம்
பெற்றோர்கள் உயிருடன் இல்லை.துணைவியார்
திருமதி லலிதா.மனைவியின் உடல் நலம்
குன்றும்.ஆனால் கவலைப்படும்படியாக இருக்காது.

திரு ஷெனாயின் எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.
பதவி உயர்வு பெற்று மேன்மேலும் உயர வாய்ப்பு
உண்டு.70 வயதுக்கு மேல் ஓகோ என்று இருப்பார்.
திரும்பவும் குடும்பத்தொழிலான வாணிபத்தை
செய்வார். இரும்பு வியாபாரம் செய்வார்.
வெளி நாடு எல்லாம் சென்று வருவார்.
நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

இரண்டு பிள்ளைகளில் மூத்த பையன் சரியாக
படிக்காமல் நின்று விடுவார். சொன்ன பேச்சை
கேட்கமாட்டார். இளையவர் நன்றாக படிப்பவர்.
எனவே அவரைப்பற்றி கவலை வேண்டாம்.
மூத்தவர் எதிர்காலம் பற்றித்தான் கவலை
இருக்கும்.அதற்காக செய்யவேண்டிய சாந்திகளை
செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அந்த நோட்டில் உள்ள பாடல்களைப்படித்து
பொருள் சொன்னபோது எனது நண்பரின் முகம்
மலர்ந்தது உண்மை.

பாடல்கள் முடிந்தபின், அந்த சோதிடர் “என்ன
சார். திருப்திதானே.உங்கள் மூத்த மகனின்
நன்மைக்காக ஒரு சாந்தி செய்தால் எல்லாம்
நல்லபடியாக நடக்கும். என்ன சாந்தி
செய்யவேண்டும் என்று பார்க்க நீங்கள்
ரூபாய் 200 தரவேண்டும். என்ன பார்க்கலாமா?’
என்றார்.

திரு ஷெனாய் சம்மதம் சொல்லு முன்பே,
நான் அவரிடம் சைகை காட்டிவிட்டு,’வேண்டாங்க.
அப்புறம் பார்த்துக்கொள்ளுகிறோம்’
எனச்சொன்னேன். அவர் எவ்வளவோ சொல்லியும்
நான் வேண்டாமெனக்கூறி, திரு ஷெனாய்
அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே
வந்துவிட்டேன்.

நாங்கள் இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலிருந்து
சிதம்பரம் வரும் வரை எதுவும்
பேசிக்கொள்ளவில்லை. சிதம்பரம் வந்து கடலூர்
செல்லும் பேரூந்தில் ஏறி உட்கார்ந்ததும்
திரு ஷெனாய் என்னிடம், ’சபாபதி! அவர்
சொன்னது எல்லாமே சரியாய் இருந்தது.
பின் ஏன் சாந்தி பற்றி,நாடி பார்க்கவேண்டாமென்று
சொல்லிவிட்டீர்கள்?’ என்றார்.அவரது பேச்சில்,
நான் அவரை மேற்கொண்டு நாடி பார்க்க விடாது
குறித்த வருத்தமும் ஆதங்கமும் இருந்தது.

‘சார்.அவர் சொன்னது எல்லாம் சரியா?’என்றேன்.

ஆமாம். நடந்தது எல்லாம் சரியாகத்தானே
சொன்னார். என் மனைவியின் பெயரைக்கூட
சரியாகச்சொன்னார். மற்றும் என் பையன்கள்
பற்றியும் என் குடும்பத்தைப்பற்றியும் சொன்னது
எல்லாம் சரி.அவர் சொன்னபடி செய்யவேண்டிய
சாந்தி பற்றி நாடி பார்த்திருக்கலாமே?’ என்றார்.

நான் சொன்னேன்.‘அவர் எங்கு சார் சொன்னார்?
நீங்கள்தான் எல்லாவற்றையும்,கேட்டது,கேட்காதது
எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள்.உங்கள்
குடும்பத்தைப்பற்றி இதைவிட விவரமாக
சொல்லமுடியாது. அதை வைத்து பாட்டாக
எழுதி வந்து படித்துவிட்டார்.

முதலில் நாம் நுழையும்போது நம்மோடு பேச
வந்தவரை பேசவிடாமல் தடுத்ததுமே எனக்கு
சின்ன சந்தேகம். பின்பு நீங்கள் மட்டும் தான்
வரலாம் என்றதும் அது இன்னும் அதிகமாயிற்று.
உள்ளே சென்று அவர் கேட்ட கேள்விகள்,எனக்கு
அவை Leading Questions போல தெரிந்ததால்,
அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக
கவனித்தேன். நீங்கள் அவருக்கு பதில் சொல்லும்
நிலையில் இருந்ததால் அவரது செய்கைகளை
கவனிக்கவில்லை.

அவர் உங்களிடம் கேட்ட கேள்விகள் அந்த
ஓலையில் இருப்பதாகத்தெரியவில்லை.
அதைப்பார்த்து படிப்பதுபோல் பாசாங்கு செய்து,
அவருக்குத்தேவையான பதில்களை
உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டார்.ஒன்று மட்டும்
நிச்சயம் அவரது பேச்சுத்திறமையால்
மாஜிக் நிபுணர்கள் போல் உங்கள் போன்றோரை,
தன்வயப்படுத்தி பதில்களைப் பெற்றுக்கொள்கிறார்
என்பதே.

வழக்கமாக மூன்றாவது நபரை அனுமதிப்பது
இல்லையாதலால், உங்களைப்போல் வருவோருக்கு
அவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க
நேரமிருக்காது.

ஒரு விஷயத்தை நாம் பாராட்ட வேண்டும்.
வரும் வாடிக்கையாளர்கள் சொல்லும் விவரங்களை
மறக்காமல் மனதில் இருத்தி, உள்ளே சென்றதும்
அவைகளை ஒன்று விடாமல் பாட்டாக
எழுதி வருகிறார்களே அதற்காக.

நான் நினைக்கிறேன் அவர்கள் மாதிரி பாடல்
வடிவம் ஒன்றை ஏற்கனவே வைத்திருக்கிறார்கள்.
சேகரித்த விவரங்களை ஆங்காங்கே நிரப்பி
பாடல்போல் ஆக்கி வந்து படிக்கிறார்கள்.

ஒன்று கவனித்து இருப்பீர்கள் அனைவரையும்
சாந்தி செய்ய சொன்னதையும்,அதற்கான
நாடியைப்பார்க்கலாமா எனக்கேட்டதையும்.
நீங்கள் சரி என்று சொல்லியிருந்தால்,முன்பே
என்ன சாந்தி, எவ்வாறு செய்யவேண்டும் என
எழுதியுள்ள ஓலையைப்படித்து உங்களிடமிருந்து
பணத்தைக்கறந்து இருப்பார்கள்.பின்பு
சாந்திக்கான செலவுக்கும் நீங்கள் பணம்
தரவேண்டியிருந்திருக்கும்.

இங்கே நாடி சோதிடத்திற்கு பணம் பறிப்பதை
விட சாந்தி செலவுக்கு அதிகம்
பிடுங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
அதனால் தான் நான் ஒன்றும் வேண்டாம்
எனக்கூறிவிட்டேன்.’

‘சபாபதி நீங்கள் சொன்னது சரி என்றாலும்
கூட, அவர் எவ்வாறு என் மனைவியின்
பெயரை சரியாக சொன்னார்? நான்தான்
அதை சொல்லவில்லையே.’ என்றார்.

‘சார். உங்கள் மனைவியின் பெயரில்
உள்ள எழுத்தைக்கேட்டு, உங்கள் பதில்
மூலமே அவர் அதை கண்டுபிடித்துவிட்டார்.
அப்படி கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால்
அதை சொல்லியே இருக்கமாட்டார்.

இன்னொன்றையும் கவனித்து இருப்பீர்கள்.
அவர் சொன்னது எல்லாம்
எதிர்காலத்தைப்பற்றியே. கடந்த காலத்தில்
நடந்தவைகளை எல்லாம் அவர்
சொல்லவில்லை. காரணம் நீங்கள் அதை
சொல்லவில்லை!’என்றேன்.

திரு ஷெனாய் அவர்கள் முகத்தில் சுரத்தே
இல்லை. ஏமாந்துவிட்டோமே என்ற நினத்தார்
போலும். அதற்கு பிறகு கடலூர் வரும்
வரையில் அவர் பேசவே இல்லை. கடலூர்
பேரூந்து நிலையத்தில் இறங்கி வருகிறேன்
எனச்சொல்லி சென்றுவிட்டார்.

நான் இதன் மூலம் சோதிடமே ஏமாற்று
எனச்சொல்லவிரும்பவில்லை.

எங்களது வேளாண் படிப்பில் சொல்வார்கள்.
Agriculture is an Art and Science என்று.
அதுபோல சோதிடமும் ஒரு அறிவியல் கலைதான்.
ஆனால் இப்போதோ நம்மிடையே போலிகள்
அதிகம் உள்ளதால் உண்மையாக சோதிடம்
பார்ப்பவர்களை நம்மால் கண்டறியமுடியவில்லை,
என நினைக்கிறேன்.

திரும்பவும் தலைப்புக் கேள்விக்கே வருகிறேன்.

நம்பலாமா நாடி சோதிடத்தை?

‘ஏமாறாதே,ஏமாறாதே, ஏமாற்றாதே,ஏமாற்றாதே,’
என்று அடிமைப்பெண் திரைப்படத்தில்
திரு TMS பாடும் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது
!

16 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை. ‘பாயிண்டை’ பிடித்து விட்டீர்கள். ஆனால் ஒருவர் தன்னைப் பற்றி ஏதும் கூறாமலேயே அவரது இறந்த காலத்தைப் பற்றி, நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நாடி சோதிடர்களால் கூற முடியும். ஓலைச்சுவடியைப் படிப்பதன் மூலம் அல்ல.

    நமது எண்ணவோட்டங்களை படிப்பதன் மூலமும் (Mind Reading)’கர்ண யக்ஷிணி’ என்ற தேவதை மூலமும் இத்தகைய பலன்களை, ஏன் சமீபத்தில் நிகழ இருக்கும் எதிர்காலப் பலன்கள் ஓரளவைக் கூட சொல்ல இயலும்.இதைத் தான் 95% ஜோதிடர்கள் பயன்படுத்துகின்றனர்.

    உண்மையான ’நாடி ஜோதிடர்கள்’ தற்போது மிக மிக மிகக் குறைவு.

    மேலும் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள்.

    http://ramanans.wordpress.com/ - இந்தத் தளத்தில் ”நாடி ஜோதிடம்”, “ஜோதிடம்” பற்றிய கட்டுரைகளையும் பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் இந்தியப் பாரம்பரிய சோதிடத்தை விரும்பிக் கற்கும் ஒரு மாணவன்! சோதிடம் ஒரு வேதாங்கம்.ஆனால் நாடி சோதிடத்தில் எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை.தகவல்களை நம்மிடமிருந்தே கறப்பதுடன் அவர்கள் ஓரளவுக்கு,mindreading உம் உபயோகப் படுத்துகிறாரகளோ என்றசந்தேகம் எனக்கு உண்டு.இதில் எனக்கு நேரடி அனுபவம் இல்லை!

    விளக்கமான,தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
    திரு Ramanansஅவர்களே!.

    ‘உண்மையைத்தேடி அலைகின்ற’ வர்களுக்கு உங்களது வலைத்தளம் வழிகாட்டியாய் இருக்கும் என எண்ணுகிறேன். நிச்சயம் உங்களது பதிவில் உள்ள ‘நாடி சோதிடம்’ பற்றிய காட்டுரையை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    ‘நாடி சோதிடம்’ என்ற பெயரில் மக்களை சிலர் ஏமாற்றுகிறார்களே என்ற ஆதங்கத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியுள்ளேன். ஊக்குவித்தற்கு நன்றி பல.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.
    இங்கு அருள் வாக்கு சொல்வார்கள். மக்களை குழுமியிருக்க சொல்வார்கள். அவர்களது ஆட்களும் கூட உட்கார்ந்திருப்பார்கள். இங்கு ஒருவருக்கொருவர் பேசுவதை வைத்து 'செய்தி' உள்ளே போய்விடும். பின்பு அதை வைத்து ஒட்டி அடித்து விடுவார்கள்.
    You have created awareness.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே! நம்மில் பல பேர் நாம் ஏமாற்றப்படுகிறோம் எனத்தெரியாமலேயே ஏமாந்துவிடுகிறோம்.அதற்காகவே இந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  7. ஜோதிட கலையை தவறாக பயன் படுத்துபவர்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் நாம் தான் கவனமாக இருக்கவேண்டும் . சமீப காலமாக விமான ஓட்டிகளை பற்றிய செய்திகளை நோக்கும்போது எங்கும் எந்த துறையிலும் போலிகள் இருப்பது புலப்படும் . போலி மருத்தவர்கள் பற்றிய செய்திகளும் இந்த நேரம் நினைவிற்கு வருகிறது .. அனைவரையும் போலிகள் என்று ஒதுக்கிவிட முடியாது .. நன்கு ஜோதிட கலையை பயின்றவர்கள் கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை கூறி ஜாதகம் சரியாக கணிக்க பட்டுள்ளதா என்று சோதித்த பிறகே எதிர்காலத்தை பற்றி கூற முயல்வார்கள் . இது நான் அனுபவத்தில் கண்டது . நீங்கள் சரியாக கூறியபடி ஜோதிடம் என்பது ஒரு Science தான் .. ஜோதிடம் என்பது வேதங்களின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது ... கலையை குறை முடியாது.. சரியாக கலையை பயிலாமல் குறுக்கு வழியில் பணம் ஈட்ட முயல்பவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உங்கள் பதிவு உணர்த்துகிறது . vasudevan

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உங்களது கருத்துக்கு நான் உடன்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  9. "ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே.....,ஏமாறாதே"
    இன்று வரை சுமார் 45 வருடங்களுக்கு பிறகும் நீங்கள் இந்த பாடலை நினைவு வைத்து இருக்கிறீர்கள் என்றால் அதற்க்கு காரணம் அது எம்.ஜி.ஆர். பாட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சந்துரு கிருஷ்ணா அவர்களே! இந்த திரைப்படம் வெளியான நாள் 01/05/1969. அதில் வந்துள்ள இந்த பாடலை நான் நினைவு கூர்ந்த நாள் 07/04/2011. அதாவது 42 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவில் இருக்கிறதென்றால் அது திரு எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படம் என்பதால் மட்டுமல்ல, திரு K.V மகாதேவன் அவர்கள் அருமையாய் இசையமைத்து திரு T.M.S அவர்கள் அழகாய் பாடியது என்பதால்தான். அதனால் தான் அந்த பாட்டை பாடிய திரு TMS அவர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி வேறு காரணமில்லை. ஒரு தடவை திரு TMS அவர்கள் கச்சேரி செய்ய பெங்களூரு வந்திருந்தபோது இரசிகர்கள் ‘எம்‌.ஜி‌.ஆர் பாட்டு பாடுங்கள். சிவாஜி பாட்டு பாடுங்கள் ‘என்றபோது, அவர் ‘நான் பாடிய பாட்டை பாடுகிறேன்.’ என்று கூறி தன் பாட்டு என்று யாரும் சொல்லமாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனாலும் அவர் பெயரைக் குறிப்பிட்டேன். இன்னும் சொல்லப்போனால் எனது பதிவுகளில் நான் அனேகமாக குறிப்பிடும் பாடல்கள் திரு எம்‌.ஜி‌.ஆர் நடித்த படங்களில் உள்ள பாடல்கள் தான்.

      நீக்கு
  10. மிக அருமையான பதிவு. இந்த நாடி ஜோதிடத்தில் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஆனால் எனக்குப் பார்த்துக் கொண்டதில்லை. எதிர்காலம் குறித்து அறியும் ஆர்வம் எப்போதுமே இல்லை. ஆனால் சொந்தக்காரர்களுக்குப்பார்க்கக் கூடச் சென்றதன் மூலம் ஓரளவுக்கு இதைக் குறித்து அறிந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே!

      நீக்கு
  11. நான்கு பகுதிகளையும் ஆவலுடன் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

    நான், தங்கள் நண்பர் திரு. ஷெனாய் அவர்களைப் போன்றே இந்த நாடி ஜோஸ்யர்கள் குறிப்பிட்டுச்சொன்ன என் பெற்றோர்கள் பெயர்கள் முதலியவற்றால் முதலில் ஏமாறித்தான் போனேன்.

    பிறகு தங்களைப் போன்று சற்று விபரமான (ஜாதகங்களின் அடிப்படை அறிவும், பிறரிடம் லேஸில் ஏமாறாத உஷாரான முன்னெச்சரிக்கைப் பேர்வழியுமான) ஆசாமியான என் நீண்ட நாள் நெருங்கிய நண்பரும், பிறகு எனக்கே பெரிய சம்பந்தியுமாக நேர்ந்த திரு. பாலசுப்ரமணியன் என்பவரால் இவையெல்லாமே ஏமாற்று வேலைகள் என்பதை அறியலானேன்.

    தங்களைப் போன்றே பாய்ண்ட் பாய்ண்ட் ஆக எனக்கு எடுத்துச் சொல்லி நிரூபித்துப் புரிய வைத்தார். இதையெல்லாம் எனக்கு நிரூபிக்க வேண்டியே, அவர் தனக்காக நாடி ஜோதிடம் பார்க்கப்போனார். அப்போது திரு. ஷெனாய் அவர்களுடன் தாங்கள் போனதுபோலவே, என்னையும் தன்னுடன் அழைத்துப் போய், கடைசிவரை இவரும் என்னுடன் தான் இருப்பார் என்ற கண்டிஷன் போட்டுவிட்டே, நாடி ஜோதிடம் பார்க்கலானார்.

    தங்களின் பதிவினில் சொல்லியுள்ளது எல்லாமே உண்மையே. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
      மறைந்த எனது தந்தையார் (அவருக்கு சோதிடம் பார்க்க தெரியும்) வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி சோதிடம் பார்ப்பது பற்றி ஒரு முறை சொல்லும்போது உண்மையான நாடி (ஓலைச்சுவடி) ஒன்று இருந்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பலபேரிடம் அது எவ்வாறு இருக்கமுடியும் என்ற ஐயம் வெகு நாட்களாக எனக்குள் இருந்ததுண்டு.
      அந்த சோதிடத்தின் பெயரில் நடக்கின்ற புரட்டுக்களை அறிய என் நண்பர் உதவினார். அங்கு நடப்பதை எல்லோரும் அறியவேண்டும் என்பதற்காகவே இந்த தொடர் பதிவை வெளியிட்டேன். தங்களின் பாராட்டுக்கு மீண்டும் நன்றி!

      நீக்கு
  12. நான்கு பகுதிகளையும் ஆவலுடன் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.


    நான் அடிப்படையிலேயே ஒரு sceptic ..அவ்வளவு easy - யாக ஏமாறமாட்டேன் ! தங்கள் இந்தப்பதிவுகள் என் உறுதியை இன்னும் பலப்படுத்தியது ...நன்றி ..
    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர் முழுவதையும் படித்து கருத்து தந்தமைக்கும் நன்றி திரு மாலி அவர்களே! ‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்பது உண்மையே!

      நீக்கு