செவ்வாய், 3 மே, 2011

எங்கே மனிதாபிமானம்?

இன்று காலை மின் கட்டணத்தை செலுத்தலாம் என
எண்ணி மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலகத்திற்கு
காலை சுமார் 8.30 மணிக்கு சென்றேன்.

மின் வாரியத்தின் புதிய முறைப்படி மின் அளவீட்டார்கள்
வீட்டிற்கு வந்து மின் உபயோகத்தை கணக்கிட்டு
நமது மின் அட்டையில் பதிவு செய்த நாளிலிருந்து,
இருபது நாட்களுக்குள் கட்டணம் கட்டினால் போதும்.
இருந்தாலும் அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என
எண்ணி மின் பயன் கணக்கிட்ட நான்காம் நாளே
கட்டணம் செலுத்த கிளம்பிவிட்டேன்.

இன்றைய நாளை தேர்ந்தெடுத்ததன் காரணம் இன்று
செவ்வாய் கிழமை என்பதால் தான்.சென்னையில்
செவ்வாயன்று பலர் பணம் செலவழிக்க தயங்குவார்கள்
என்பதால், கட்டணம் செலுத்தும் இடத்தில் கூட்டம்
இருக்காது என நினைத்து அங்கு சென்றால்,மிக நீண்ட
வரிசையில் பயனாளிகள் பணம் செலுத்த நின்றிருந்தனர்.

எல்லோரும் என்னைப்போல் நினைத்து வந்திருப்பார்கள்
போலும்!

மின் வாரிய அலுவலகத்துக்கு வெளியே
போடப்பட்டிருந்த பந்தல் வரை ‘கியூ’
இருந்ததால் நான் வெளியே வெயிலில்
நிற்கவேண்டியதாயிற்று.அப்போது பந்தலின்
உள்ளே,பணம் கட்டுவோர் வரிசைக்கு அருகே
நின்றுகொண்டிருந்த ஒரு பெண் (வயது சுமார் 25
இருக்கலாம்) என்னிடம் சைகை காண்பித்து தான்
எனக்கு முன்பு இருப்பதை உறுதி படுத்தினார்.
காலை 8.30 மணி வெயிலில் கூட நிற்கமுடியாமல்
உள்ளே நின்றுகொண்டிருந்தார்.

பணம் வாங்கும் ஊழியர் ஒவ்வொருவரிடமும்
சில்லறை கேட்டு இல்லை, என்போரிடம் வாதம்
செய்து கொண்டிருந்ததால் வரிசை மெல்ல நகர்ந்து
கொண்டு இருந்தது.எனக்கு முன்பு நிற்க வேண்டிய
பெண்ணுக்கு முன்னால் இருந்தவர் பணம் கட்ட
தொடங்கியவுடன் அந்த பெண் வந்து கியூவில்
சேர்ந்துகொண்டார்.

அப்போது சுமார் 80 வயது இருக்கும் மூதாட்டி ஒருவர்
கட்டணம் செலுத்த வந்தார். வெகு தூரம் நடந்து
வந்து இருப்பார் போலும். வியர்வை முகத்தில் வழிய,
மிகவும் களைப்போடும், அலுப்போடும் வந்து எங்கள்
அருகே இருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டார். அவர்
பெரு மூச்சு விடுவதை பார்க்கவே கஷ்டமாயிருந்தது.

அப்போது எங்கள் வரிசையில் இருந்த ஒரு பெண்
(அவருக்கு தெரிந்தவர் போலும்) ‘ஏன் ஆயா,
இந்த வெயிலில் நீ வரணுமா? என்னிடம்
கொடுத்திருந்தால் நான் கட்டியிருக்கமாட்டேனா?
ஆமாம் ஏன் உன் மருமகள் வந்து கட்டியிருக்கலாமே?’
என்றார். அதற்கு அந்த மூதாட்டி, என்ன செய்வது
எல்லாம் என் தலையெழுத்து. இந்த வேகாத வெயிலில்
வறுபடவேண்டும் என்று இருக்கிறது போலும்’ என்றார்.

உடனே அந்த பெண் ‘ ஆயா நீ கியூவில் நிற்காமல்
முன்னால் நிற்பவரிடம் சொல்லிவிட்டு, பணத்தை
கட்டு.’ என்றார். அந்த மூதாட்டியும் எனக்கு முன்னால்
பணம் கட்ட தயாராக இருந்த அந்த ‘இளைஞி’யிடம்,
'அம்மா. நான் உங்களுக்கு முன்னால் கட்ட
அனுமதிப்பீர்களா?’ என்றார். ஆனால் அந்த
பெண்ணோ கொஞ்சம் கூட வயதுக்கு மதிப்பு
தராமல் மிகவும் காட்டமாக,’பின்னால் இருப்பவர்களிடம்
கேட்டுவிட்டு கட்டு’ எனச்சொல்லிவிட்டு தன் முறை
வந்ததும் பணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

தன்னாலேயே வெயிலில் நிற்க முடியவில்லையே
அந்த வயதான மூதாட்டி எவ்வாறு நின்று கட்டுவார்
என்று கூட யோசிக்கவில்லை. உடனே நான்
‘அம்மா யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் எனக்கு முன்னால் பணம் கட்டுங்கள்.’
என்றேன். பின்னால் இருந்த ஒருவரும் அதை
எதிர்க்கவில்லை.

அந்த பெண் கட்டணத்தை கட்டிவிட்டு என்னை
ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தனது துப்பட்டாவை
தீவிரவாதிகள் முகத்தை மறைப்பதுபோல்
கட்டிக்கொண்டு அவரது வாகனத்தில் பறந்துவிட்டார்.
பின் அந்த மூதாட்டி கட்டணத்தைக் கட்டிவிட்டு
எனக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

நான் கட்டணத்தை கட்டிவிட்டு வீடு வரும் வரை
அந்த சம்பவத்தையே எண்ணி வந்தேன். அந்த
மூதாட்டிக்கு வழி விட்டிருந்தால் அந்த பெண்ணுக்கு
சில நிமிடங்கள்தான் தாமதமாயிருக்கும். அந்த
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட அவருக்கு
இல்லையே என நினைத்து வருந்தினேன்.

வயதானவர்களுக்கு இளையோர் கொடுக்கும்
மரியாதை குறைந்துவருகிறதா? அல்லது அது
இல்லவே இல்லையா?

நீங்களே சொல்லுங்கள்!

13 கருத்துகள்:

  1. எல்லாவற்றிற்கும் முந்தி நிற்க வேண்டும் , முதலில் கை தூக்குபவன்தான் வெற்றி பெறுவான் என்கிற MNC தத்துவங்கள் இளையவர்களை கெடுத்து வைத்திருக்கிறது. யாருக்கும் விட்டு கொடுக்காமல் , அனுசரித்து போகாமல் ஒரு இயந்திரமான சுயநல வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  2. பேருந்தில் கூட முதியவர்களுக்கு இளைஞர்கள் யாரும் இடம் கொடுப்பதில்லை.மனிதம் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதே உன்மை!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சாகம்பரி அவர்களே!
    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இப்போதுள்ள இளைஞர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நாளை அவர்களும் முதியோர் ஆவார்கள் என்பதை.

    பதிலளிநீக்கு
  5. வயசுக்கு மதிப்பு மரியாதை எல்லாம் போய் காலம் பல ஆச்சு:(

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி கோபால் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. ஒரு முக்கிய விடயத்தை கூடுதலாக இணையத்தைப் பயன் படுத்தும் நாம் கூட மறக்கலாமா? மின் வாரிய பில்களை ஆன லைனிலேயே டெபிட் கார்டு கொண்டு கூட கட்டிவிட முடிகிறது.நேரம் எவ்வளவு மிச்சம்? அதைவிட வேடிக்கை தொலைபேசி பில்கள் கட்ட கடைசி நாட்களில் நிற்கும் வரிசையைப் பார்த்தால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். தேவை என்றால் சொல்லுங்கள்- அதற்கான லிங்க்குகளை அனுப்புகிறேன்!!

    சொல்ல வருவது: நாமெல்லாம் ஆன்லைனில் கட்டினாலே, அவ்வசதி இல்லாதவர் குறைந்த நெரிசலில் எளிதாக செலுத்தலாமே!மேலும் இப்போது அரசு தொலைபேசி நிறுவனமே இதற்காக பணம் வசூலிக்க நம்பத் தகுந்த தனியார்களை நியமித்துள்ளதே!

    --sagamanithan

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சகமனிதன்அவர்களே!

    உண்மையில் எனது பதிவை எழுதும்போது இணையம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது என்பதைப்பற்றி எழுத மறந்துவிட்டேன். நான் நேரே கட்டணம் செலுத்தும் காரணம் மின் அலுவலகம் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் தான்! மேலும் இணையத்தில் மூலம் கட்டணம் செலுத்திய என் நண்பர் அதில் சில குறைபாடு இருப்பதாக கூறியதால் அதை நான் முயற்சிக்கவில்லை. எனினும் இனி வரும் மாதங்களில் அதையும் முயற்சிக்கிறேன். திரும்பவும் தங்களது மேலான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சகமனிதன்அவர்களே!

    உண்மையில் எனது பதிவை எழுதும்போது இணையம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது என்பதைப்பற்றி எழுத மறந்துவிட்டேன். நான் நேரே கட்டணம் செலுத்தும் காரணம் மின் அலுவலகம் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் தான்! மேலும் இணையத்தில் மூலம் கட்டணம் செலுத்திய என் நண்பர் அதில் சில குறைபாடு இருப்பதாக கூறியதால் அதை நான் முயற்சிக்கவில்லை. எனினும் இனி வரும் மாதங்களில் அதையும் முயற்சிக்கிறேன். திரும்பவும் தங்களது மேலான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இன்று அனைவரிடமும் விட்டு கொடுக்கும் தன்மையும் பொறுமையையும் இல்லாத காரணத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!. இந்த அவல நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  12. The incident just epitomizes the changing values which we are witnessing in this selfish and materialistic world . This degeneration can be attributed to some extent dis- integration of joint family system of the yore .Vasudevan

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    இக்கால இளைஞர்களின் சிந்தனையும் போக்கும் மாறும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு