திங்கள், 18 ஜூலை, 2011

எல்லா உயிரும் தொழும்! எப்போது? 1

அது 1966 ஆம் ஆண்டு மே மாதம். அப்போதுதான்
வேளாண் அறிவியல்(B.Sc(Agriculture)) இறுதியாண்டு
தேர்வு எழுதி விட்டு,ஊருக்கு வந்திருந்தேன்.எனது
இளைய அண்ணன் டாக்டர் வே. ஞானப்பிரகாசம்
அப்போது தூத்துக்குடியில் அரசு கால் நடை மருத்துவ
மனையில் மருத்துவராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

விடுமுறையைக் கழிக்க இங்கு வாயேன்.திருச்செந்தூர்,
திருக்குற்றாலம் எல்லாம் பார்க்கலாம் என்று கடிதம்
எழுதியிருந்தார்.

நானும் சரி எனப் புறப்பட்டு காலையில்
விருத்தாசலத்திலிருந்து கிளம்பும் விரைவுப் பேருந்தில்
கிளம்பி திருச்சி சென்று,அங்கிருந்து அரசின் இன்னொரு
விரைவுப் பேருந்தில் பயணித்து மாலை சுமார்
6 மணிக்கு தூத்துக்குடியை அடைந்தேன்.என் அண்ணன்
பேருந்து நிலையம் வந்து அழைத்து சென்றார்.

மறுநாள் மாலை அவருடன் திருச்செந்தூர் சென்று,
முருகனை வழிபட்டு வந்தேன். இரண்டாம் நாள்
என் அண்ணன் வரமுடியாததால் நான் மட்டும் தனியாக
கிளம்பி பேருந்து மூலம் திருநெல்வேலி போய்
அங்கிருந்து திருக்குற்றாலம் போய் வந்தேன்.

மூன்றாம் நாள் காலையில்,என் அண்ணன்
‘இறைச்சியை வெட்டும் கூடம்(Slaughter House)
செல்கிறேன். நீயும் வருகிறாயா?’என்றார்.

ஆடுகளை மட்டும் இறைச்சிக்காக வெட்டும் அந்த
கூடம் தூத்துக்குடி நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டு
வந்தது. வெட்டப்பட்ட ஆட்டிறைச்சி, உண்ணும்
தகுதியில்,(நோய் தாக்காமல்) உள்ளதா என
கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற பின்
தான் நுகர்வோர்கள் பயன்பாட்டுக்கு
அனுப்பப்படவேண்டும் என்பது விதி.
கட்டாயமும் கூட.

அதற்கான சான்றிதழ் தரும் பணியை,வழக்கமாக
அரசின் கால்நடை மருத்துவ மனையில் பணிபுரியும்
மருத்துவர் தான் செய்வார்கள்.

என் அண்ணன் டாக்டர் வே. ஞானப்பிரகாசம்
அப்போது தூத்துக்குடி அரசு கால்நடை மருத்துவ
மனையில் மருத்துவராக இருந்ததால்,அவர் அந்த
பணியையும் செய்து வந்தார். தினம் காலையில்
6 மணிக்கு சென்று அந்த பணியை முடித்துவிட்டு
மருத்துவ மனைக்கு செல்வார்.

எனக்கும் இறைச்சியை வெட்டும் கூடம் எப்படி
இருக்கிறது என பார்க்கும் ஆவல்(?) இருந்ததால்
‘சரி.வருகிறேன்’எனக் கூறி அவருடன் சென்றேன்.

நாங்கள் சென்றபோது,அந்த கூடத்தின் அருகே,
அநேகம் பேர் தங்களது ஆடுகளோடு நின்றிருந்தனர்.
கால்நடை மருத்துவருக்கான அறையில் என் அண்ணன்
சென்று அமர்ந்ததும், அந்த அறையில் இருந்த
பார்வையாளருக்கான நாற்காலியில் நானும் சென்று
அமர்ந்தேன்.

என் அண்ணனுடைய உதவியாளர்,அவருடைய
அனுமதி பெற்று வெட்டப்பட இருக்கின்ற ஆடுகளை,
ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே கொண்டுவர
அனுமதித்தார்.

அப்போதுதான் கவனித்தேன்.குழந்தைகள் முதன்
முதல் பள்ளிக்கு அனுப்பும்போது, போக
விருப்பமில்லாமல் அடம் பிடித்து நகர மறுக்குமே,
அதுபோல் அந்த ஆடுகள் உள்ளே வர மறுத்து
திமிறியதை.

அவைகளின் கண்களில் ஒரு பயம் இருந்ததையும்,
அப்போது கவனித்தேன். அவைகளுக்கு தாங்கள்
எதற்காக அங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம்
எனத் தெரிந்திருக்கும் போல.

ஆனாலும் ஆடுகளின் உரிமையாளர்கள் அவைகளை
இழுத்தும், தள்ளியும் கொண்டுவந்து மருத்துவ
ஆய்வுக்காக நிறுத்தினார்கள்.

என் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசம் அவர்கள்
ஒவ்வொரு ஆட்டின் கண்ணையும்,
காது மடல்களையும்(Ear Lobes) கூர்ந்து கவனித்து,
நோய் தாக்கப்படாத ஆடுகளை, இறைச்சிக்காக
வெட்டஉள்ளே அனுப்ப அனுமதித்தார்.

(விலங்குகளின் கண்களையும் காது மடல்களையும்
பார்த்தே ஒரு கைதேர்ந்த கால்நடை மருத்துவர்
அவைகள் நோயுற்றுள்ளனவா எனக் கண்டுபிடிக்க
முடியும் என் அண்ணன் பின் சொன்னார்.)

இறைச்சியாக தகுதியில்லாத ஆடுகளை நிராகரித்து
திருப்பி அழைத்து செல்ல அனுமதித்தார்.அவ்வளவுதான்
அந்த ஆடுகள் (அதிர்ஷ்டசாலி ஆடுகள்!) சந்தோஷத்தோடு
துள்ளிக்குதித்து வெளியே ஓடின.

இவ்வாறு ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே
உதவியாளரை அழைத்து கடைசியில் இரண்டு ஆடுகளை
வெட்டாமல் வைத்திருக்கும்படியும், தான் உள்ளே
வந்தபிறகு வெட்டலாம் எனவும் சொன்னார்.

கொண்டுவரப்பட்ட எல்லா ஆடுகளையும் ஆய்வு
செய்தபின், ஆடுகள் வெட்டப்படும் அந்த கூடத்திற்கு
என்னை அழைத்து சென்றார்.


தொடரும்

4 கருத்துகள்:

  1. என்ன ஐயா ’தொடரும்’ போட்டு விட்டீர்கள்!குறளுக்கு எப்போது வரப் போகிறீர்கள்?காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆடுகளை பள்ளி செல்லும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு காட்டியது நல்ல கற்பனை .. இறைச்சி உண்ணும் பழக்கத்தை மேல் நாட்டில் உள்ளவர்களே சிறிது சிறிதாக விட்டு வருகிறார்கள் .. இரண்டு ஆட்டினை மட்டும் ஏன் விட்டு வைத்தார்கள் ...? அறிய ஆவலாக உள்ளேன் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் தங்கள் காத்திருப்புக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் தங்கள்கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!. தங்களது கேள்விக்கு விடை அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு