வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 4

பேருந்து குளத்தில் இறங்க ஆரம்பித்ததும்,பேருந்தில்
இருந்த அனைவரும் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டோம்.
எல்லோருடைய குரலிலும் மரண ஓலம் இருந்தது
உண்மை.ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை
அந்த குளத்தில் சகதி இருந்த இடத்தில்
செலுத்தி விட்டார்.

பேருந்து குளத்தில் மூழ்கப்போகிறது,நாம் எல்லாம்
தண்ணீரில் மூழ்கப்போகிறாம் என நினைத்தபோது,
எங்களது அதிர்ஷ்டம் அது நேரே சென்று சகதியில்
சிக்கிக்கொண்டது.

குளத்தின் சரிவான பகுதியில் சென்றதால்,பேருந்தின்
முன்பகுதி தண்ணீரிலும் சகதியிலும் இருக்க,பின் பகுதி
அப்படியே தூக்கிக்கொண்டு 45 டிகிரி கோணத்தில்
நின்றது.நாங்கள் எல்லாம் அந்தரத்தில்,சறுக்கு மரத்தில்
இருப்பதுபோல் இருந்தோம்.

தண்ணீருக்குள் சென்ற இன்ஜின் வேலை செய்வதை
நிறுத்தியதும்,உடனே அந்த பேருந்தின் ஓட்டுனர்
அநாசயமாக எழுந்து,‘யாரும் பயப்படவேண்டாம்.
பேருந்தின் நடத்துனர் முதலில் பின்புறம் உள்ள
Emergency கதவைத் திறப்பார். நான் உள்ளே இருந்து
ஒருவர் பின் ஒருவராக உங்கள் அனைவரையும்
பத்திரமாக இறக்கிவிடுகிறேன்.அவசரப்படாமல்
பொறுமையாய் இருங்கள்.’என்றார்.

ஆனால் அவர் பேச்சை யாரும் கேட்பதாக இல்லை.
எங்கே பேருந்து இன்னும் தண்ணீருக்குள்
சென்றுவிடுமோ என எண்ணி,Emergency கதவை
நோக்கி எல்லோரும் பாய்ந்தனர்.

கதவருக்கே செல்வதற்காக எழுந்த அனைவரும்
பேருந்து சம நிலையில் இல்லாமல் சரிவு நிலையில்
இருந்ததால்,எழுந்து வெளியே வர முயற்சித்தபோது
நிலை தடுமாறி, கீழே விழுந்து,உருண்டு கை
கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டனர்.

நான் மட்டும்,பேருந்து இனி தண்ணீருக்குள்
செல்லாது என்பதால்,இந்த களேபரத்தில் எல்லோரும்
இறங்கியபின் இறங்கலாம் என்று,அமைதியாய்
உட்கார்ந்திருந்தேன்.

முதலில் நடத்துனர் இருக்கைகளின் கைப்பிடியை
பிடித்துக்கொண்டு மெதுவாக Emergency கதவைத்
திறந்து,முழங்கால் அளவு சேறுடன் கூடிய
தண்ணீரில் குதித்தார்.

அதற்குள் ஒட்டுனர் வந்து மிகவும் பொறுமையாய்
ஒவ்வொருவராக பிடித்து கதவருகே கொண்டுசென்று
குதிக்க சொன்னார்.கீழே நடத்துனர் இருந்து
ஒவ்வொருவரையும் தாங்கிப்பிடித்து இறக்கினார்.

கையிலும் காலிலும் காயமாதலால்
அந்த இடத்தில் ஒரே அழுகையும் சப்தமுமாய்
இருந்தது. எல்லோரும் இறங்கிய பின்
என்னைப்பார்த்து,‘சாப்.நீங்களும்
இறங்கலாம்.’என்றார்.

அதுவரை எல்லோரும் எழும்போது விழுவதைப் பார்த்த
நான், விழாமல் கவனமாக எழவேண்டும் என
நினைத்திருந்தேன்.ஆனால் நானும் மறந்துபோய்
கைப்பிடியை பிடிக்காமல் எழுந்தபோது, தடுமாறி கீழே
விழுந்து இரண்டு முழங்கால்களிலும் சிராய்ப்பு
ஏற்படுத்திக்கொண்டேன்.

அந்த ஓட்டுனர் என்னையும் பிடித்து தூக்கி
சன்னலருகே அழைத்து சென்று குதிக்கவைத்தார்.
பின் அவரும் எனக்கு பின் குதித்து வந்தார்.

அவரைக்கண்டதும் பேருந்தில் பயணம் செய்த
பயணிகள் அனைவரும் தங்களது காயத்தையும்,
வலியையும் மறந்து கோபத்தோடு‘ஏன் பேருந்தை
குளத்தில் இறக்கி எங்களைக் கொல்லப்பார்த்தாய்?
என சண்டை போட்டனர்.

அவர் மிக சாவதானமாக ‘நான் அவ்வாறு செய்யாது
இருந்தால் நாம் அனைவரும் உயிரோடு இருந்திருக்க
மாட்டோம்.காரணம் பேருந்தில் Brake திடீரென
வேலை செய்யவில்லை.அதை நான் Palwal தாண்டியதும்
கவனித்தேன். இந்த தில்லி மதுரா சாலையில்
Brake இல்லாமல் ஓட்டினால், இன்னும் சிறிது தூரத்தில்
இருக்கும் Bamni Khera கிராமத்தில் விபத்து ஏற்படுவது
நிச்சயம்.

அப்படி ஒருவேளை இங்கு இல்லாவிட்டாலும்,நெருக்கடி
மிகுந்த இந்த சாலையில் எதிரே வரும் வண்டியில்
மோத நேரிடலாம்.அதனால்தான் திரும்பி திரும்பி
பார்த்து பின்னாலும் முன்னாலும் யாரும் வரவில்லை
என்பதை உறுதி செய்துகொண்டு,இந்த குளத்தில்
இறக்கினேன். இங்கு தண்ணீரைவிட சேறு அதிகம்
இருக்கும் என எனக்குத் தெரியும் ஆதலால் இங்கே
இறக்கினேன்.’என்றார்.

அதுவரை கோபத்தொடு பேசிய பயணிகள் உண்மை
நிலை தெரிந்ததும் அந்த ஓட்டுனரின் கையைப் பிடித்து
குலுக்கியும் கையில்,முத்தம் கொடுத்தும் தங்களது
நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.நானும் அவருக்கு
என் நன்றியைத் தெரிவித்தேன்.

நல்ல வேளையாக அந்த பேருந்தில் இருந்த ஒரு
பயணியிடம் Dettol இருந்ததால் அதை எல்லோருக்கும்
கொடுத்து முதல் உதவி செய்தார்.

பின் நடத்துனர் எங்களை சாலைக்கு அழைத்து வந்து
மதுரா நோக்கி செல்லும் ஹரியானா அரசுப்பேருந்தில்
ஏற்றிவிட்டார்.

நான் Hodal வந்ததும் இறங்கி எங்களது வங்கி கிளைக்கு
சென்றேன்.எனது கோலத்தைப் பார்த்த மேலாளர்
அதிர்ந்து‘என்ன ஆயிற்று?’என்றதும் நடந்ததை
விளக்கியதும்.’நல்ல வேளை.நீங்கள் உயிர் பிழைத்து
வந்தீர்களே!அதுவே போதும்.’என்றார்.
பணி முடித்து வந்து டில்லியில் நண்பர்களிடம்
சொன்னபோது அடுத்த வாரம் ஊருக்கு செல்ல
இருக்கையில் ஏன் இந்த வேலை?’என்றனர்.
ஆனால் இந்த நிகழ்வை மறு வாரம் திருமணத்திற்கு
ஊர் சென்றபோது வீட்டில் சொல்லவில்லை.

நான்காவது தடவையாக நான் மரணத்தின் பிடியில்
இருந்து தப்பியது 2001 ஆம் ஆண்டில்.அப்போது
நான் கேரள மாநிலம் கண்ணூரில் எங்கள் வங்கியால்
Sponsor செய்யப்பட்ட North Malabar Gramin Bank ல்
தலைவராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

எனது நெருங்கிய நண்பரும் எங்கள் வங்கியின்
தில்லி வட்டார அலுவலகத்தில் துணைப்
பொதுமேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த
திரு சந்தானகிருட்டினன் அவர்களின் மகள்
திருமணம் சென்னையில் ஜூன் 24 ஆம் நாள்
(ஞாயிறு) நடக்க இருந்தது.

அவர் என்னை திருமணத்திற்கு முதல் நாளே
வரவேண்டும் என சொல்லியிருந்ததால்,
ஜூன் 22(வெள்ளி)அன்று மதியம் கண்ணூரிலிருந்து
புறப்பட்டேன். மதியம் 2.45 மணிக்கு மங்களூரில்
இருந்து சென்னை செல்லும் சென்னை மெயிலில்
சென்னைக்கு புறப்பட்டேன்.

நான் முன் பதிவு செய்தபோது,மூன்றடுக்கு பெட்டியில்
கீழே உள்ள படுக்கை கிடைத்ததால்,சன்னலோரம்
அமர்ந்து தென்னை மரங்களையும், இடையே ஓடும்
ஆறுகளையும், சில இடங்களில் தெரிந்த அரபிக்
கடலையும் இரசித்துக்கொண்டிருந்தேன்.

சுமார் 4.30 மணிக்கு கோழிக்கோடு இரயில்
நிலையத்தை அடைந்த இரயில், சுமார் கால் மணி
நின்றுவிட்டு 4.45 மணிக்கு கிளம்பியது. அடுத்து
11 கி.மீ தூரத்தில் இருந்த பரூக் என்ற நிலையத்தில்
நின்றுவிட்டு கிளம்பியது.

அதற்கு அடுத்த இரயில் நிலையமான கடலுண்டி
என்ற இடத்தை கடந்தபோது மணி சுமார் 5 இருக்கும்.
(அங்கே அந்த மெயில் நிற்காது) அந்த இரயில்
நிலையத்திற்கு அருகே ஓடிய ஒரு பெரிய ஆறு,
அருகில் உள்ள அரபிக் கடலில் கலப்பது இரயில்
இருந்து பார்க்கும்போது நன்றாகத்தெரியும்.

அன்று அந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடி
ஓடியதால்,தண்ணீர் இரயில் பாலத்தை தொட்டுக்
கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

இரயில் அந்த பாலத்தைகிக் கடக்கும்போது,‘ஐயோ
வெள்ளம் இப்படி கரை கொள்ளாமல் ஓடுகிறதே
என நினத்துக்கொண்டு இருந்தேன்.

நான் இருந்த இரயில் பெட்டி கரையைத்
தொட்டபோது ‘அது’ நடந்தது.


தொடரும்

13 கருத்துகள்:

 1. எது நடந்தது?சீக்கிரம் சொல்லுங்க!
  உங்களுக்கு சரியான ஒரு பாட்டு---நான் செத்துப் பிழைச்சவண்டா,எமனைப் பார்த்துச் சிரிச்சவண்டா!

  பதிலளிநீக்கு
 2. சில அற்புதங்கள்.
  கடவுள் கிருபை தான்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.
  நான் இந்த பதிவின் முடிவில் எழுத இருந்த பாடலை நீங்களே கூறிவிட்டீர்கள்!.நன்றி.
  என்ன நடந்தது என்பது அடுத்த பதிவில்!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!
  நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

  பதிலளிநீக்கு
 5. ONCE AGAIN SWELLING RIVER SEEMS TO BE THE CAUSE ... HOWEVER I AM AWARE OF THIS INCIDENT. PAST KARMAS SEEM TO SAVE U AGAIN AND AGAIN. VASUDEVAN

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

  நீங்கள் சொன்னது சரி என்றாலும், என் பெற்றோர்கள் செய்த நற்செயல்கள் தான் என்னைக் காப்பாற்றியதாக எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. நானும் மறுபிறவி எடுத்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது தங்கள் இடுகை.

  பதிலளிநீக்கு
 8. என்னைக் கேட்டால் மறுபிறவு உண்டு என்று தான் சொல்வேன்.

  ஏனென்றால்..

  கண் மூடி விழித்தலும்
  வெளிச் சென்ற காற்று மீண்டும் நுரையீரல் நிறைப்பதும் கூட மறுபிறவி போன்றதுதான் என்று கருதுகிறேன்.

  இருந்தாலும் மரணத்தின் அருகே சென்று வருவது என்பது மறக்க முடியாத வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான் அன்பரே.

  பதிலளிநீக்கு
 9. வருகைக்கும்,தங்களது மேலான கருத்துக்கும் நன்றி
  முனைவர் இரா.குணசீலன் அவர்களே!.
  தங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கு நன்றி திருமதி மாலதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 11. //நான் இந்த பதிவின் முடிவில் எழுத இருந்த பாடலை நீங்களே கூறிவிட்டீர்கள்//

  Dear Sir

  Don't thinking of laughing at "Yama Dharuman". If he ignores us we all will die (!). He has to do his duty at appropriate time and proper way for us to live happily.

  Packirisamy. N

  பதிலளிநீக்கு
 12. //He has to do his duty at appropriate time and proper way for us to live happily.//

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?’ என்ற கவிஞரின் பாடலை மறந்தவனல்ல நான்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு