செவ்வாய், 6 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 1

“பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”
என்பார்கள். ஆனால் நாங்கள் பேசினோம்!
ஆம். மணிக்கணக்கில்!!!

நாங்கள் என்றால்,
1962 ஜூன் முதல் 1966 மே வரை,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,
வேளாண் புலத்தில் (Faculty of Agriculture)
வேளாண் இளம் அறிவியல் (B.SC(Agriculture))
படித்த மாணவர்கள்.

(முதலாமாண்டு 75 பேராக இருந்த நாங்கள்,
இரண்டாம் ஆண்டிலே இருவர் மருத்துவம் படிக்க
சென்று விட்டதாலும், மூவர் படிப்பை
தொடராததாலும், படிப்பை முடித்து வெளியே
வரும்போது 70 பேராக இருந்தோம்.)

படித்து முடித்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு
நாங்கள் படித்த இடத்தில் குடும்பத்தினரோடு
ஆகஸ்ட் 13 & 14 தேதிகளில் சந்தித்த போது,
பேசாமல் இருக்கமுடியுமா?

1966 மே மாதம் நடந்த பிரிவு உபசார
விழாவில் இரத்த திலகம் திரைப்படத்தில்
வரும் பாடலான ‘பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடித்திரிந்த பறவைகளே, பழகிக் கழித்த
தோழர்களே,பறந்து செல்கின்றோம்’ என்ற பாடலை
வகுப்புத் தோழர்களான திரு முகம்மது உஸ்மானும்,
திரு நாச்சியப்பனும் பாடியபோது, எல்லோருடைய
மனத்திலும் ஒரு இனம் புரியா சோகம்
எழுந்தது உண்மை.

நான்காண்டு காலம் ஒன்றாக தங்கி,உண்டு,
உறங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு,
சிலசமயம் சண்டை போட்டுக்கொண்டு வாழ்ந்த
நாட்கள் இனி வராது என்பதால் ஏற்பட்ட
சோகம் அது.

அதிலே வரும் ‘எந்த ஊரில் எந்த நாட்டில் என்று
காண்போமோ?’
என்ற வரிக்கான பொருளை இந்த
ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தான்
புரிந்துகொண்டோம்.

நாம் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு
சந்திக்கவேண்டும் என்று எங்களில் சிலர்
(என்னையும் சேர்த்து) பிரியும்போது
சொல்லிக்கொண்டோம்.என்னவோ
தெரியவில்லை.படித்துமுடித்து மேல்படிப்புக்கு
சென்றவர் சிலர்,வேலைக்கு சென்றவர் சிலர்,
என நெல்லிக்காய் சிதறியதுபோல் திசைக்கு
ஒருவராக பிரிந்துவிட்டோம்.யாருமே 25 ஆண்டு
முடிந்த போது சந்திக்க முயற்சிக்கவில்லை.

ஆனால் 30 ஆண்டுகள் முடிந்தபின்,அதாவது
1996 ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
வேளாண் வேதியல் பேராசிரியராக பணிபுரிந்த
எங்கள் வகுப்பு நண்பர் முனைவர்.ஆர்.கோவிந்தசாமி
அவர்கள்,நாம் அனைவரும், நாம் படித்த இடத்தில்
சந்திக்கலாம் என்றும், அவரவர்களுக்கு தெரிந்த
நண்பர்களின் முகவரியை தருக என எங்களில்
சிலருக்கு அஞ்சல் அனுப்பியிருந்தார். வகுப்பு
நண்பர்கள் அனைவருடைய முகவரிகளும்
அப்போது கிடைக்காததால் அந்த முயற்சி
பலன் இல்லாமல் போயிற்று.

பின்பு 41 வருடங்கள் கழித்து அதாவது
2007 ல் நண்பர்கள் திரு சி. முருகானந்தம்,
திரு ஆர். பாலசுப்ரமணியன்,திரு முருகையன்
மற்றும் திரு கலியபெருமாள் ஆகியோரின்
முயற்சியால் புதுவையில் கூடினோம்.ஆனால்
பாதிபேருக்கு மேல் வரவில்லை.வந்தவர்களில்
சிலர் குடும்பத்தோடு வரவில்லை.

தங்கும் வசதி மற்றும் ஏனைய ஏற்பாடுகள் நன்றாக
இருந்தும் நாங்கள் படித்த இடத்தில் சந்திக்காமல்
வேறு இடத்தில் சந்தித்ததில், எங்களுக்கு
ஏமாற்றமே.திரும்ப மறு ஆண்டு சிலர் மட்டும்
கோடைக்கானலில் சந்தித்தனர்.

திடீரென 12/07/2011 அன்று ஒரு அஞ்சல் எனக்கு
வந்தது. பிரித்து பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி.
அண்ணாமலை நகரிலிருந்து,எனது வகுப்பு
தோழர்களான பேராசிரியர் முனைவர்
ஆர்.கோவிந்தசாமியும்,பேராசிரியர் முனைவர்
இராம.நாச்சியப்பனும் கூட்டாக ஒரு வேண்டுகோளை,
சுற்றறிக்கையாக அனுப்பியிருந்தார்கள்.

1966 Agri Batch மாணவர்களின் சந்திப்பு, அண்ணாமலை
நகரில் ஆகஸ்ட் 13, மற்றும் 14 தேதிகளில் நடத்த
திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது எங்களுக்கு
பாடம் நடத்திய பேராசிரியர்களை அழைத்து
கௌரவிக்க இருப்பதாகவும்,மேலும் இந்த சந்திப்பை
நடத்த எங்களது வகுப்பு நண்பர்கள்
முனைவர் ச.அந்தோணி ராஜ், திரு சி.முருகானந்தம்,
திரு ஆர். பாலசுப்ரமணியன் ஆகியோருடன் கலந்து
ஆலோசித்து முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து
இருந்தார்கள்.

எங்கள் வகுப்பு நண்பர்களில் 19 பேரின் தற்போதைய
முகவரி தெரியாததால் அவர்களுடைய முகவரியை
தெரிந்தவர்கள் தந்து உதவுமாறும் கேட்டிருந்தார்கள்.
இந்த சந்திப்பை வெற்றிகரமாக நடத்த அனைவருடைய
ஒத்துழைப்பையும் கோரி இருந்தார்கள்.

அந்த சுற்றறிக்கை மிக்க மகிழ்ச்சியை
கொடுத்தாலும்,எங்களது வகுப்பு தோழர்களில்
17 பேர் இயற்கை எய்திவிட்டனர் என்று அதில்
தெரிவித்து இருந்த செய்தி வருத்தத்தை தந்தது.

அந்த அஞ்சல் கிடைத்த உடனே நண்பர்
முனைவர் கோவிந்தசாமியை தொலை பேசியில்
அழைத்து எனது மகிழ்ச்சியை தெரிவித்ததோடு,
நான் என் மனைவியோடு அந்த சந்திப்பில் பங்கு
பெறுவதையும் உறுதி செய்தேன்.என்னிடம் உள்ள
நண்பர்கள் சிலரது முகவரியையும் தந்தேன்.

பின்பு முனைவர் நாச்சியப்பனும் என்னை தொடர்பு
கொண்டு நான் வருவது அறிந்து தனது
மகிழ்ச்சியை தெரிவித்தார்.(திரு நாச்சிப்பன்
இரு ஆண்டுகள் என்னுடைய அறைத்தோழராகவும்,
இரண்டு ஆண்டுகள் பக்கத்து அறை தோழராகவும்
இருந்தவர்)

பின் என்னோடு தொடர்புகொண்டு இருக்கும்
நண்பர்களிடம் பேசி அவர்கள் வருவதை
பற்றியும் அறிந்து கொண்டேன்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி சிதம்பரம் செல்ல
‘ரதி மீனா’ பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டு
அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.


தொடரும்

8 கருத்துகள்:

  1. 45 ஆண்டுகளுக்குப் பின் நண்பர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஒரு ’வாழ்விலே ஒரு நாள்’ அனுபவம்தான். தொடருங்கள்.காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!.

    உண்மையில் அந்த நிகழ்ச்சி வாழ்வில் ஒரு வசந்தமான நிகழ்வுதான்.

    பதிலளிநீக்கு
  3. இம்மாதிரி ஒரு வாய்ப்பு எவ்வளவு பேருக்கு கிடைக்கும் . அதிர்ஷ்டசாலி தான் நீங்கள் . படிக்கும் பொது ஏதோ நாங்களே பங்கெடுத்து போல உள்ளது ..
    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே!இந்த மாதிரி வாய்ப்புக்கள் அநேகம் பேருக்கு கிடைத்திருக்கும்.
    ஆனால் அவர்கள அதை வெளியே சொல்வதில்லை. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் மகிழ்ச்சியான நினைவலைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு