திங்கள், 12 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 2

ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து
துணைவியாருடன் மதியம் 12.30 மணிக்கு கிளம்பி,
கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்துகள்
நிலையத்திற்கு ஆட்டோவில் சென்று 1.30 மணிக்கு
புறப்படும் பேருந்துக்காக காத்திருந்தேன்.

1.15 மணிக்கு பேருந்து வந்தாலும், புறப்பட்டது
என்னவோ 1.45 மணிக்குத்தான்.பேருந்து
திருவான்மியூரை அடையவே மணி 3.00 ஆகிவிட்டது.
புதுவைக்கு 20 கிலோ மீட்டர் முன்பே உள்ள
சாலை ஒர தேநீர் விடுதியில் நின்றுவிட்டு
புதுவையை அடைந்தபோது மணி 4.45.

அன்று ஆடி வெள்ளி ஆதலால் புதுவை - கடலூர்
சாலையில் இரண்டு மூன்று இடங்களில் சாலையை
மறித்து பந்தல் போட்டு இருந்ததால்,பேருந்து
நேர் வழியில் செல்லாமல் பாகூர் வழியே
சென்றதால், 20 கிலோ மீட்டரில் உள்ள கடலூரை
அடைந்தபோது மாலை மணி 6.15 ஆகிவிட்டது.

அப்போது நாங்கள் சிதம்பரத்தை
அடைந்திருக்கவேண்டும்.கடலூரை விட்டு கிளம்பி
பேருந்து சிதம்பரம் அடைந்த போது இரவு மணி 7.30.

சிதம்பரம் அடைந்தவுடன்,நண்பர்கள் நாச்சியப்பன்,
மற்றும் கோவிந்தசாமியை தொடர்பு கொண்டு,
நாங்கள் வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தியதும்,
அவர்கள் எங்களுக்காக பல்கலைக்கழக விருந்தினர்
விடுதியில் அறை ஒதுக்கியிருப்பதாகவும், அங்கு
வகுப்பு நண்பர்கள் முனைவர் கோவிந்தராஜன்
மற்றும் திரு ஜெயராமன் இருந்து வருவோருக்கு
உதவி செய்துகொண்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

நல்ல வேளையாக எனது அண்ணன் மகன்
திரு ஞானவேலன் பணி நிமித்தம் சிதம்பரத்தில்
தங்கியிருந்தார்.அவர் வந்து எங்களை அண்ணாமலை
நகரில் அஞ்சலகம் அருகே அமைந்திருந்த
பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு
அழைத்து சென்றார்.

நாங்கள் படித்தபோது இருந்த விருந்தினர் விடுதி
தற்போது புதிய தோற்றத்துடன் காணப்பட்டது.விடுதியை
விரிவாக்கம் செய்து பக்கத்தில் குளிர்சாதன வசதிகள்
உள்ள பல புதிய அறைகள் கட்டியிருந்தார்கள்.

இந்த சந்திப்புக்கு வருபவர்களை நல்ல முறையில்
வரவேற்று அறைகள் ஒதுக்கும் பணியில் இருந்த
திரு ஜெயராமன் எங்களுக்கான அறையின்
திறவுகோலை தந்தார். பின்பு வெளியே சென்றிருந்த
நண்பர் கோவிந்தராஜனும் வந்து சந்தித்தார்.

பேருந்து நிலயத்தின் அருகில் இருந்த உணவகத்தில்
இரவு உணவை முடித்துவிட்டதால், பயண அசதியின்
காரணமாக உடனே படுக்க சென்றுவிட்டோம்.

மறுநாள் (13/08/2011) காலை வழக்கம்போல்
5.30 மணிக்கே எழுந்து குளித்து தயாரானபோது,
தங்கியிருந்த அறைக்கே காபி வந்துவிட்டது.

8 மணிக்கு சிற்றுண்டி அருந்த சென்றபோது,வகுப்புத்
தோழர்களை,அவர்தம் குடும்பத்தோடு சந்தித்தேன்.
சிலர் பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள்.

முடி துறந்தவர்கள் சிலர்,முடி வெளுத்தவர்கள் சிலர்,
என எல்லோரிடமும் முதுமை ஊஞ்சலாடியதால்
அநேகம் பேரை அடையாளமே கண்டுபிடிக்கமுடியவில்லை.

45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பதால்,அன்னியோன்யமாக
இருந்த நண்பர்கள், இப்போது அன்னியராக தெரிந்தார்கள்.
பழைய முகங்கள் ‘புதிய’ முகங்களாக தெரிந்தன.

டேய்,வா,போ என அழைத்த நெருங்கிய நண்பர்களை,
வாங்க,போங்க என மரியாதையோடு அழைத்தது
விசித்திரமாகவும் வியப்பாகவும் இருந்தது.

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டு,
குடும்பத்தினரை அறிமுகம் செய்துகொண்டோம்.
என் வகுப்பில் எல்லோரோடும் பழகியது நானாகத்தான்
இருக்கும்.அப்படி இருந்தும் நண்பர் திரு மாணிக்கவேல்,
என்னைப்பார்த்து, 'உங்கள் பெயர்...?'எனக்கேட்டபோது,
எனக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.

எங்களை வகுப்பில் அகர வரிசைப்படி தான் உட்கார
சொல்வார்கள்.எனவே நான் எனக்கு முன்பு உள்ள
நண்பர்களின் பெயரைச்சொல்லி அவர்களுக்கு
அடுத்த பெயர் என் பெயர் என்ற போதும்.
அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆனால்,இரண்டு ஆண்டுகாலம் அறைத்தோழனாகவும்,
இரண்டு ஆண்டு காலம் பக்கத்து அறையிலும்
இருந்த எனது நெருங்கிய நண்பன்
திரு தருவை முத்து கிருஷ்ணனைப் பார்த்ததும்,
நேரே அவனி(ரி)டம் சென்று ‘என்னைத்தெரிகிறதா?’
என்றதும் ‘டேய் நடனசபாபதிதானே!’ என
என்னை அடையாளம் கண்டுகொண்டதால்
ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது.

பிறகு எல்லோரும் சிற்றுண்டி அருந்த சென்றோம்.
காலை சிற்றுண்டி வழங்க, விடுதியில் உள்ள
சாப்பிடும் அறையில் அருமையாக ஏற்பாடு
செய்திருந்தார்கள் நண்பர்கள் கோவிந்தசாமியும்
நாச்சியப்பனும்.

திருமண வீட்டில் உபசரிப்பதுபோல் இருவரும்
அங்கும் இங்கும் சென்று,அனைவரையும்
கவனித்துக்கொண்டார்கள்.

எங்களை, நாங்கள் படித்த இடத்திற்கு அழைத்து
செல்ல வேளாண் புலத்தின் பேருந்தையும் ஏற்பாடு
செய்து இருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் பேருந்தில் கிளம்பி செல்லும்போது,
பல்கலைக் கழகத்தின் நடுவே உள்ள திருவேட்களம்
என்ற சிற்றூர் மாறியிருப்பதையும், வயல்கள் இருந்த
இடத்தில் அநேக கட்டிடங்கள் எழும்பி இருப்பதையும்
பார்த்துக்கொண்டே,வேளாண் புலத்தின் அரங்கத்தை
அடைந்தோம்.


தொடரும்

15 கருத்துகள்:

  1. //45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பதால்,அன்னியோன்யமாக
    இருந்த நண்பர்கள், இப்போது அன்னியராக தெரிந்தார்கள்.
    பழைய முகங்கள் ‘புதிய’ முகங்களாக தெரிந்தன.

    டேய்,வா,போ என அழைத்த நெருங்கிய நண்பர்களை,
    வாங்க,போங்க என மரியாதையோடு அழைத்தது
    விசித்திரமாகவும் வியப்பாகவும் இருந்தது.//

    வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் போது ஏற்படும் உணர்வுகளை நன்றாக விவரித்து உள்ளீர்கள் . இது சகஜம் . out of sight out of mind என்று கூறுவார்களே ..... சகஜ நிலை திரும்ப சிறுது நேரம் பிடிக்கும் .... தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன் ... வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், உணர்வுகளைப் புரிந்து கொண்டமைக்கும், நன்றி
    திரு வாசுதேவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. காலம் நம்மை எவ்வளவு மாற்றிவிடுகிறது.

    காலத்தின் கையில் பொம்மைகள் நாம்.

    காலத்தைத் தாலாட்டுவதாக எண்ணி நாம் தான் தூங்கிப்போகிறோம்.

    காலம் என்றும் தூங்குவதே இல்லை.

    தொடருங்கள் அன்பரே.

    பதிலளிநீக்கு
  4. காலம் நம்மை எவ்வளவு மாற்றிவிடுகிறது.

    காலத்தின் கையில் பொம்மைகள் நாம்.

    காலத்தைத் தாலாட்டுவதாக எண்ணி நாம் தான் தூங்கிப்போகிறோம்.

    காலம் என்றும் தூங்குவதே இல்லை.

    தொடருங்கள் அன்பரே.

    பதிலளிநீக்கு
  5. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில், நிகழ்வுகளை அருமையாக விவரித்துள்ளீர்கள்.இது போன்ற ஒரு சந்திப்பை எண்ணிப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கிறதே!

    பதிலளிநீக்கு
  6. //காலம் என்றும் தூங்குவதே இல்லை.//
    உண்மைதான்.
    முனைவர் இரா.குணசீலன் அவர்களே! வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு PTR அவர்களே!
    சந்திப்பு பற்றி இது இரண்டாவது இடுகை என்பதால்,இனி மூன்றாவது இடுகையை இன்னும் ஓரிரு நாளில் பதிவேற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
    ‘பூவோடு சேர்ந்த நார் போல’
    உங்களைப் போன்றோரின் பதிவுகளைப் படிப்பதாலேயே இது போன்று எழுத வருகிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
    திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. நல்ல அனுபவம். 40 ஆண்டுகாலத்திற்கு ஒருவரை ஒருவர் சந்திப்பவை மிக அபூர்வமான நிகழ்வுகள்

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி திரு கோவி.கண்ணன் அவர்களே! அது அபூர்வமான சந்திப்பு மட்டுமல்ல. உணர்ச்சிபூர்வமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே! எனது கருத்தை உங்கள் வலைப்பூவில், பதிவு செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு