செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 4

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து,Dr.இராமலிங்கம்
பேசியபின் அறிமுகப்படுத்திக்கொள்ள முதன்
முதலில் மேடை ஏறியவர் முனைவர்
ச.அந்தோணி ராஜ் அவர்கள்.அவர் திருச்சி
வேளாண் கல்லூரியில் முதல்வராக (Dean)
பணியாற்றி ஓய்வு பெற்றதாக சொன்னார்.

இவரைப்பற்றி கொஞ்சம் சொல்லலாம் என
எண்ணுகிறேன்.மிகவும் சூட்டிகையானவர்.
புகுமுக வகுப்பிலிருந்து மூன்றாம் ஆண்டு
வேளாண் இளம் அறிவியல் வரை தேர்வுகளில்
முதல் இடத்தைப் பிடித்தவர்.

எங்களோடு படிக்கும்போதே தினம் நூலகம்
சென்று மறு நாள் நடக்க இருக்கும் பாடம் பற்றிய
புதிய தகவல்களை படித்துவந்து,ஆசிரியர்களிடம்
கேள்விகள் கேட்டு திக்குமுக்காட வைப்பார்.

அப்போதே படித்து பட்டம் பெற்ற பின் தன் பெயருக்கு
பின்னால் N.L என்று போட ஆசை என்று சொன்னவர்.
அது என்ன என்று தெரியாமல், நாங்கள் கேட்டபோது
N.L என்றால் Nobel Laureate என விளக்கம்
சொன்னவர்.

அவரது தன்னம்பிக்கையை எண்ணி நாங்கள்
வியப்புற்றது உண்மை.

‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’


என்ற திருவள்ளுவர் சொன்னதுபோல்
நினைத்ததால் தான் முனைவர் பட்டம் பெற்று
கல்லூரி முதல்வராக வந்தார் என எண்ணுகிறேன்.
என்னைப்பொருத்தவரை அவர் எப்போதும் ஒரு NL தான்.
அதாவது Noble Laureate!

எனக்கும் இவருக்கும் எண்ண அலை (Wave Length)
ஒன்றாக இருந்ததால் நண்பராக இருந்தோம். ஆனால்
இறுதி ஆண்டில் ஏதோ ஒரு சிறிய காரணத்திற்காக
கருத்து வேறுபாடு கொண்டு பேசாமல் இருந்தோம்.
(மற்ற நண்பர்கள் பற்றி ‘நினைவோட்டம்‘ தொடரில்
விரிவாக எழுத இருக்கிறேன்)

நண்பர் அந்தோணி ராஜை தொடர்ந்து,
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தோடு மேடை
ஏறி தங்களையும் தங்கள் குடும்பத்தையும்
அறிமுகப்படுத்திக்கொண்டு,தாங்கள் பணி ஆற்றிய
இடம் வகித்த பதவியின் பெயர் முதலியவைகளை
சொன்னார்கள்.

நண்பர்கள் ஒவ்வொருவரும் மேடை ஏறும்போதும்
ஒரே கலாட்டாதான்.கல்லூரியில் படிக்கும்போது
அவர்களுக்கு வைத்த புனைப்பெயரை சொல்லி,
அவர்கள் படிக்கும்போது அடித்த ‘லூட்டியை’
நினைவூட்டி, அரங்கத்தில் கலகலப்பூட்டியபோது,
நாங்கள் 45 வயது குறைந்து,படித்த அந்த
காலத்திற்கே போனதுபோல் உணர்ந்தோம்.

அந்த நேரத்தில் நண்பர் திரு மீனாட்சி சுந்தரம்
அந்த சந்திப்புக்கு வரவில்லையே என
வருத்தப்பட்டேன்.அவர் வந்திருந்திருந்தால்,
எல்லோரையும் இன்னும் கலாட்டா செய்து
எங்களது சந்திப்பை மேலும்
கலகலப்பாக்கியிருப்பார்.

நண்பர்களை கலாட்டா செய்யும்போது,நாங்கள்
குடும்பத்தோடு வந்திருக்கிறோம் என்பதோ,
உயர்ந்த பதவியில் இருந்து பணியாற்றி ஓய்வு
பெற்று மூத்த குடிமகன்களாக,ஏன்
பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாக இருக்கிறோம்
என்பதோ அந்த கணத்தில் நினைவுக்கு
வரவில்லை!

ஒவ்வொரு நண்பரும் பேசி முடித்ததும்
அவருக்கும் அவர் துணைவியாருக்கும்,
அனைவர் சார்பிலும் ஒரு நினைவுப்பரிசு
கொடுக்க, நண்பர்கள் நாச்சியப்பனும்,
கோவிந்தசாமியும் ஏற்பாடு செய்து
இருந்தார்கள்.

எங்கள் வகுப்புத்தோழர் திரு சரவணன் அவர்கள்
(தேசிய பஞ்சாலைக் கழகத்தில் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குனராக,(CMD)பதவி வகித்து
ஒய்வு பெற்றவர்) எல்லோருக்கும் தன் செலவில்
நினைவுப்பரிசாக நான்கு சிறிய மேசை விரிப்பையும்,
சிறிய துண்டுகளையும் கொடுத்து எங்களை
வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

நண்பர் திரு முருகானந்தம்(அகில இந்திய
வானொலியில் நிலைய இயக்குனராக இருந்தவர்)
தான் தலைவராக இருக்கும் வானொலி உழவர்
சங்கம் வெளியிடும் வானொலி உழவர் சங்க
செய்திக்கதிர் இதழ் ஒன்றை அனைவருக்கும்
வழங்கினார்.

இந்த அறிமுகப்படலம் தேநீர் இடைவேளைக்குப்
பிறகும் மதியம் ஒரு மணி வரை தொடர்ந்தது.
இன்னும் மேடை ஏறவேண்டியவர்கள் 5 பேர்
இருந்ததால் மதிய உணவுக்கு பிறகு அறிமுகத்தை
தொடரலாம் என முடிவெடுத்து மதிய உணவு
ஏற்பாடு செய்து இருந்த விருந்தினர் விடுதிக்கே
பேருந்தில் திரும்பினோம்.


தொடரும்

4 கருத்துகள்: