திங்கள், 28 நவம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 3

Victoria Terminus இரயில் நிலையத்தை இரயில்
சென்றடைந்ததும்,நான் ஏதும் சொல்லுமுன்பே ஒரு
போர்ட்டர் வந்து எனது Hold All ஐ எடுத்துக்கொண்டார்.
அது தான் இறங்கவேண்டிய இடம் என்பதால்,அதை
எடுத்துக்கொண்டு அவர் நிலையத்திற்கு வெளியே
செல்ல,நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.

வெளியே வந்ததும் அவர் ஏதோ கேட்க,அவர் என்ன
கேட்கிறார் என்பதை புரிந்துகொண்டு நான்
‘டாக்ஸி ஸ்டாண்ட்’என்றேன்.அவர் ஒரு டாக்ஸியில்
எனது ஹோல்டாலை வைத்ததும் அவர் கேட்ட
பணத்தை கொடுத்துவிட்டு டாக்ஸியில் ஏறி
அமர்ந்தேன்.

டாக்ஸி ஓட்டுனர் கீழே இறங்கி மீட்டரை
போட்டுவிட்டு, என்னைப் பார்த்ததும்,நான்
‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்றேன்.அவர் ஒன்றும்
பேசாமல் வண்டியை ஓட்டினார்.

எனக்கு நான் எங்கிருக்கிறேன் என்றும் தெரியாது.
எங்குபோகிறேன் என்றும் தெரியாது. ஆனால் ஏதோ
பம்பாய் பழக்கப்பட்டது போல் வெளியே பார்த்துக்
கொண்டு இவர் நம்மை சரியான இடத்துக்கு அழைத்து
செல்லவேண்டுமே என நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இந்த நேரத்தில் நான் படித்த ஒரு அறிவுரையை
எழுதுவது சரி என நினைக்கிறேன்.நாம் ஒரு புதிய
இடத்திற்கு சென்றால் நாம் அங்கு புதியவர் என்பதைக்
காட்டிக் கொள்ளக்கூடாதாம்.நாம் அந்த இடத்தை
சேர்ந்தவர் போல் நடந்துகொள்ளவேண்டுமாம்.
அப்போதுதான் நாம் ஏமாறுவதிலிருந்து
தப்பிக்கலாமாம்.

மேலும் ஒருவரைத்தேடி ஒரு வீட்டில்
விசாரிக்கும்போது, இது இன்னாருடைய வீடுதானே
என்று கேட்கக்கூடாதாம்.நாம் தேடும் நபரின்
பெயரைச்சொல்லி அவர் இருக்கிறாரா எனக்
கேட்கவேண்டுமாம்.

எனவே நானும் ஊருக்கு புதியவன் என்பதை காட்டிக்
கொள்ளவில்லை.ஆனால் அந்த வாடகை கார்
ஓட்டுனர் என்னை ஏமாற்றாமல் பம்பாய் சென்ட்ரல்
ஸ்டேஷன் கொண்டுவிட்டார்.நான் மீட்டரைப் பார்த்து
பணம்கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
(நம் சென்னையில் அன்றும் இன்றும் ஏன் என்றுமே
நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று இது)

நான் அங்கேயும் ஒரு போர்ட்டர் மூலம் எனது
உடைமைகளை எடுத்து சென்று ‘Left luggage room’ல்
வைத்து இரசீது வாங்கிக்கொண்டு.பயணச்சீட்டு தரும்
counter க்கு சென்று எனது பயணச்சீட்டைக் காட்டி
அன்று இரவு கிளம்பும் தில்லி மெயிலில் இடம்
இருக்குமா எனக் கேட்டேன்.

நல்ல வேளையாக நான் ஆங்கிலத்தில் கேட்ட
கேள்விக்கு அங்கு இருந்த ஊழியர் ஆங்கிலத்திலேயே
பதிலளித்தார்.‘இரண்டாம் வகுப்புப்பெட்டியில்
தூங்கும் வசதி கொண்ட படுக்கைகள் முன்பே பதிவு
முடிந்து விட்டபடியால்,இடமில்லை.உங்களிடம்
பயணச்சீட்டு வைத்து இருந்தாலும் முன்பதிவு
இல்லாமல் பயணம் செய்வது கடினம். கூட்டம்
அதிகமாக இருக்கும்.எனவே எதற்கும் முதல் வகுப்பு
பெட்டிகளில் இடம் இருக்கிறதா என முயற்சி
செய்யுங்கள். ஆனால் அதற்கு நீங்கள் Churchgate
அலுவலகத்திற்கு செல்லவேண்டும்’ என்றார்.

அங்கு எப்படி செல்வது எனத்தெரியாததால்,அதற்கு
முன்பு நண்பர் அரங்கநாதனின் அண்ணன் வீட்டுக்கு
சென்று அவர்களால் உதவி செய்யமுடியுமா எனக்
கேட்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.

நண்பர் அரங்கநாதன் எனக்கு முன்பே
சொல்லியிருந்தார்.பம்பாயில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு
எதிரில் Maratha Mandir என்ற திரைப்பட அரங்கு ஒன்று
இருக்கும்.அதற்கு பக்கத்திலே RBI ஊழியர்கள்
குடியிருப்பு இருக்கும் என்று. (இப்போதும் ஏதாவது ஒரு
இடத்தை சொல்லவேண்டுமானால் அங்குள்ள திரைப்பட
அரங்கை சொன்னால் போதும் யாரும் சுலபமாக வழி
காட்டி விடுவார்கள்.) ஆனால் யாரையும் உதவி
கேட்காமல் சாலையைக் கடந்து அந்த திரைப்பட
அரங்குக்கு அருகே இருந்த RBI ஊழியர்கள்
குடியிருப்புக்குள் நுழைந்தேன்.

நனபர் கொடுத்திருந்த வீட்டு முகவரியை அடைந்து
கதவருக்கே இருந்த அழைப்பு மணியை அழுத்தியதும்
நான் நினைத்ததுபோல் உடனே கதவைத்
திறக்கவில்லை.‘யார் அது?’என இந்தியில்
கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தார்கள்.அதுவும்
முழுதாக அல்ல.கதவில் சங்கிலி பிணைத்து
இருந்ததால் முழுதாக திறக்கவில்லை.

உள்ளே இருந்தவர் திரு அரங்கநாதனின்
அண்ணியார் எனத் தெரிந்துகொண்டு தமிழில்
‘நான் தார்வாரிலிருந்து வருகிறேன்.
திரு அரங்கநாதனின் நண்பன்.அவர் என் வருகை
பற்றி கடிதம் உங்களுக்கு எழுதி இருந்தாரே.
கிடைத்ததா?’ என்றேன்.

அதற்கு அவர் ‘அப்படி ஏதும் வரவில்லை. நீங்கள்
வேண்டுமானால் 5 மணிக்கு மேல் வாருங்கள்.அவர்
வந்துவிடுவார்.அவரிடம் பேசுங்கள்.’என்றார்.

பம்பாய் போன்ற நகரங்களில் இதுபோல் அன்னியர்கள்
வந்து ஏதாவது சொல்லி உள்ளே வந்து கொள்ளை
அடிப்பது உண்டு என்பதால் அவர் அப்படி சொன்னார்
போலும்

அவருக்கு என் மேல் நம்பிக்கை வரவில்லை என்பதை
புரிந்துகொண்டு’சரிங்க அப்படியே 5 மணிக்கு வருகிறேன்.
அதற்கு முன்பு நான் Churchgate இரயில் நிலையம்
செல்லவேண்டும். எப்படி செல்வது?’ எனக்கேட்டேன்.

அதற்கு அவர், ‘நீங்கள் எதிரே உள்ள சென்ட்ரல் ஸ்டேஷன்
சென்று,Electric Train மூலம் போய் வரலாம் என்றார்.

சரி! நாமும் நேரத்தை வீணாக்காமல் போய் வரலாமே
என்று திரும்பவும் ஸ்டேஷன் வந்து மின் வண்டிக்கான
பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு, பிளாட்பாரத்தில்
காத்திருந்தேன்.அங்கிருந்த இரயில்வே ஊழியர் உதவி
செய்ய, Churchgate செல்லும் வண்டி வந்ததும் ஏறி
ஸ்டேஷனை அடைந்தேன்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. புதிய ஊரில் புதியவர்களைப் போல் காட்டிக்கொள்ளக்கூடாது என்பது ஒரு நல்ல கருத்துதான். ஆனால் நாம் என்ன பாவனை செய்தாலும் போர்ட்டர்கள், டாக்சி டிரைவர்கள், ஓட்டல்காரர்கள் புதியவர்களை சரியாக எடை போட்டு விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சுவாரஸ்யமாக் கொண்டு போறீங்க!

    பதிலளிநீக்கு
  3. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் P.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சில இடங்களில் சரி. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கும்போதும் நடப்பது வேறு. சென்னை ஆட்டோக்காரர்கள் சென்னையில் வசிக்கும் என்னை ஊருக்கு புதியவனாக நினைத்து, ஆட்டோ கட்டணமாக இரயிலில் நான் கொடுத்த தொகையை விட பல மடங்கு கேட்பதுதான் வேடிக்கை

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், தொடர்வதற்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே

    பதிலளிநீக்கு