வெள்ளி, 18 நவம்பர், 2011

நினைவோட்டம் 59

நாங்கள் படித்தபோது இந்தி ஒரு விருப்பப் பாடமாக
இருந்தது.தேர்வு எழுதுவது கட்டாயமில்லை.
ஆறாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை இந்திக்கான
வகுப்புகளில் ஆசிரியர்கள் வந்தாலும் பாடம் நடத்த
மாட்டார்கள்.

மாணவர்கள் இந்தி கட்டாய பாடமாக இல்லாததால்,
இந்தி பாடத்தைக் கற்க ஈடுபாடு காட்ட மாட்டார்கள்.
அதனால் இந்தி ஆசிரியர் மாணவர்கள் பாடம் நடத்த
மாட்டார்கள்.இந்தி எழுத்துக்களை கரும்பலகையில்
எழுதிவிட்டு 'ஏதாவது படிங்கடா’ என்று சொல்லிவிட்டு
அமர்ந்துவிடுவார்கள்.

கால்,அரை மற்றும் இறுதித்தேர்வுகளில் இந்தி
எழுதத் தெரிந்தவர்கள் கேள்வித்தாளில் உள்ள
கேள்விகளையே திருப்பி எழுதிக்கொடுத்து வருவது
வழக்கம். விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள்
ஏதோ இந்த மட்டிலாவது இந்தியில் எழுதுகிறார்களே
என்று சில மதிப்பெண்கள் தருவது உண்டு.

நான் முன்பே நினைவோட்டம் 19 ல் எழுதியிருந்தபடி,
பெண்ணாடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது,மாலை
வேளைகளில் வகுப்புகள் முடிந்தவுடன்,தக்ஷிண இந்தி
பிரச்சார சபாவால் நடத்தப்பட்ட ‘பிராத்மிக்’தேர்வுக்காக,
எங்கள் வகுப்பு இந்தி ஆசிரியரால் நடத்தப்பட்ட
Tuition வகுப்புகளில் சேர்ந்து படித்து இருக்கிறேன்.
தேர்வில் வெற்றி பெற்றிருந்ததால் எனக்கு இந்தி எழுத
படிக்கத் தெரியும்.

ஆனால் பாடம் நடத்தப்படாததால் தேர்வுகளில்
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரியாததால்
நானும் கேட்கப்பட்ட கேள்விகளையே பதிலாக
எழுதிக்கொடுத்திருக்கிறேன்.

(அப்போதெல்லாம் 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி
வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில்
பதிந்து தருவார்கள். இப்போது போல் ஒற்றைத்தாளில்
அல்ல )

இந்திப்பாடங்கள் நடத்தப்படாததால் நிச்சயம் தேர்வை
எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறமுடியாது.அப்படியே
கேள்விகளைத்திருப்பி எழுதினாலும் ஒற்றைப்பட
இலக்கத்தில்தான் மதிப்பெண் கிடைக்கும்.

எங்களது S.S.L.C புத்தகத்தில், இந்தி பாடத்திற்கு
பெறப்போகும் ஒற்றைப்பட இலக்க மதிப்பெண்ணை
பதிய விரும்பாததால்,நாங்கள் இந்தி தேர்வைப்
புறக்கணிக்க முடிவு செய்தோம்.

தேர்வை எழுதாவிட்டால் Absent என எழுதுவார்கள்.
ஒற்றை இலக்க மதிப்பெண்ணை விட அதுவே தேவலாம்
என எண்ணினோம்.மேலும் அதைவிட தேர்வைப்
புறக்கணிக்க இன்னொரு காரணமும் இருந்தது.

அப்போதெல்லாம் S.S.L.C விடைத்தாளை திருத்தும்
ஆசிரியருக்கு ஒரு தாள் ஒன்றுக்கு 50 காசுகள்
தருவார்கள். நாமெல்லாம் ஒன்றும் எழுதாதபோது
இந்தி ஆசிரியருக்கு ஏன் பணம் போய் சேரவேண்டும்
என்ற ‘நல்ல எண்ண’மும் காரணம்!

எனவே தமிழ் மொழிபெயர்ப்புத் தேர்வை காலையில்
எழுதிவிட்டு மறுநாள் நடக்க இருந்த கணிதம்
மற்றும் அறிவியல்தேர்வுக்குப் படிக்க வீட்டுக்கு
வந்துவிட்டேன்.

மதியம் முழுதும் இரண்டு ஆண்டு அறிவியல்
பாடங்களைப் படித்துவிட்டு, பின் இரவு வரை
கணக்குப்போட்டுப் பார்த்தேன்.

மறுநாள் இரண்டு தேர்வுகளையும் நன்றாக
எழுதினேன்.முன்பே எழுதி இருந்தபடி
கணிதத்தில் 86 மதிப்பெண்கள் பெற்று
பள்ளியில் முதல் இடத்தையும், மாவட்டத்தில்
இரண்டாவது இடத்தையும் பெற்றேன்.

தேர்வு எழுதும் கடைசி நாளான வெள்ளியன்று
காலையில் நடந்த சமூகவியல் தேர்வையும்
நன்றாக எழுதிவிட்டு நண்பர்களிடம் பிரியாவிடை
பெற்று வீட்டுக்கு வந்தேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டதால், அன்று
இரவு திரைப்படம் பார்க்க அண்ணன் அனுமதி
தந்தார்.



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. டைரிக் குறிப்புகள் போலும் மலரும் நினைவுகள் மணம் வீசுகிறது. என் மாணவப் பருவத்தையும் நினைவுகூரச் செய்த உங்களுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! சொன்னால் நம்பமாட்டீர்கள். அப்போதெல்லாம் (1960 களில்) டைரி எழுதும் வழக்கம் இல்லை. இவை யெல்லாம் சூப்பர் கணினி என சொல்லப்படுகின்ற மூளையில் பதித்து வைத்தவைகள் தான். அதனால் தான் எனது வலைப்பதிவுக்கே ‘நினைத்துப்பார்க்கிறேன்’ எனத் தலைப்பிட்டுளேன்.

    பதிலளிநீக்கு
  3. உங்க ஐடியாவெல்லாம் எனக்கு வரவில்லை.படிக்காமல் ஏதோ எழுதி விட்டு வந்தேன்,கேள்வித்தாளையும் சேர்த்து!.26 மதிப்பெண்!நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. மலரும் நினைவுகள் தொடரும் பயணங்களாய். மிக அருமையாக..

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிதாயினி மலிக்கா அவர்களே.

    பதிலளிநீக்கு