புதன், 4 ஜனவரி, 2012

படித்தால் மட்டும் போதுமா? 14

Andrews Ganj ல் உள்ள எனது மாமா மகன்
திரு வேணுகோபாலன் அவர்கள் வீட்டுக்கு
போனதும்,என்னை வரவேற்று பின்,
‘நீ ஏன் தில்லி வருவது பற்றி எனக்கு
தெரிவிக்கவில்லை. தெரிந்திருந்தால் நானே
இரயில் நிலையம் வந்து அழைத்து
வந்திருப்பேனே.’என்றார்.

அதற்கு நான்,‘என்னிடம் உங்கள் முகவரி
இல்லை.திடீரென வரும்படி ஆகிவிட்டதால்
உங்களது முகவரியை ஊருக்கு எழுதிக்கேட்டு
அறிந்து பின் உங்களுக்கு தகவல் தெரிவிக்க
நேரம் இல்லை.’என்றேன்.

பிறகு எனது பணி மற்றும் மற்றும் குடும்ப
விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு
இருந்தோம்.காஃபி சாப்பிடவுடன்,‘வா.வெளியே
போய் அருகில் உள்ள சில இடங்களைப் பார்த்து
வரலாம் என்று சொல்லி, அவரது Vespa Scooter ல்
என்னையும் விஸ்வநாத் என்கிற அவரது மூன்று
வயது மகனையும், அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

(இப்போது பொறியாளராக உள்ள திரு விஸ்வநாத்,இந்திய
கப்பல் படையில், Captain ஆக கோவாவில்
பணிபுரிந்துகொண்டு இருக்கிறார்.)

முதலில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள
Himayun’s Tomb க்கு அழைத்து சென்றார். முகலாயப்
பேரரசர் உமாயூனின்(பேரரசர் பாபரின் மகன்) பூத உடல்
அடக்கம் செய்யப்பட்டஇடம் இது.

உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம்
அவர்களால்,உமாயூன் இறந்து ஒன்பது வருடங்களுக்கு
பிறகு,அதாவது கிபி 1565 ஆம் கட்ட ஆரம்பித்து
கிபி 1572 ல்,அப்போதைய மதிப்பில் ரூபாய் 15
இலட்சத்திற்கு காட்டி முடிக்கப்பட்டதாம்.

இந்தியாவிலேயே முதன் முதல் சிவப்பு மணற்
கற்பாறை (Red Sandstone) கொண்டு பாராசீக கட்டிடக்
கலைப்பாணியில் கட்டப்பட்ட அழகிய கல்லறை
இது. இதன் உள்ளே தற்போது நூறுக்கும் மேற்பட்ட
கல்லறைகள் உள்ளனவாம்.

இந்த கட்டிடத்தின் புறத்தோற்றத்தின் அமைப்பை
மாதிரியாக கொண்டுதான் ஆக்ராவில் தாஜ் மகால்
கட்டினார்களாம்.

தில்லி செல்வோர் அவசியம் பார்க்கவேண்டிய இடம்
இது.இந்த இடம் எவ்வாறு இருக்கிறது என்பதை
பார்த்துதான் இரசிக்கவேண்டும்.பிறர் சொல்லி அல்ல!

தற்போது இது இந்திய அரசின் தொல்பொருள் துறையின்
கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.(புகைப்படம் கீழே)





பின் ராஜ்பாத் என அழைக்கப்படும் இராஜ பாட்டையில்
அமைந்துள்ள,India Gate க்கு அழைத்து சென்றார்.
முதலாம் உலகப்போரில் உயிர் துறந்த 90,000 க்கும்
மேற்பட்ட இராணுவ வீரர்களின் நினைவாக
கட்டப்பட்ட போர் நினைவுச்சின்னம் இது.

இது வழியாகத்தான் இன்றும் ஜனவரி 26 ஆம்
நாள் குடியரசு தினத்தன்று குடியரசுத்தலைவர்
மாளிகையிலிருந்து செங்கோட்டை வரை
அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு நேர்
எதிரே உள்ள விதானத்தில்(Canopy),நான்
சென்றபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை
வைக்கப்பட்டிருந்தது.

இப்போது அதை எடுத்து சென்று Coronation Park ல்
வைத்துவிட்டார்கள். இப்போது அது காலியாகத்தான்
இருக்கிறது.அங்கே எங்களை நிற்கவைத்து எனது
மாமா மகன் எடுத்த படங்கள் கீழே.

India Gate அருகே எடுத்த புகைப்படம்






கீழே உள்ள படம் அபூர்வமானது.படத்தில் எங்கள்
பின்னால் உள்ள விதானத்தில் தெரிவதுதான்
ஜார்ஜ் மன்னரின் சிலை.இப்போது அது இல்லை.





பின் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில்
அவரது மகனுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு
வீடு திரும்பினோம். வீட்டிற்கு வந்ததும் எனது
இரயில் பயணம் பற்றிய அனுபவங்களைப்
சொன்னதும் அவர் முன்பதிவு செய்யாமல்
பயணம் செய்தால் அப்படித்தான்
எனக்கூறிவிட்டு ஊருக்கு திரும்ப தான்
வேண்டுமானால் முன்பதிவு செய்து
தருவதாக கூறினார்.

அவரிடம் எனக்கு பம்பாய்(மும்பை) திரும்ப
25/11/67 அன்று காலை புறப்படும் Frontier Mail ல்
மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு வாங்கித்தரக்
கேட்டுக்கொண்டேன்.பின் மதிய உணவருந்தி,
ஓய்வெடுத்துவிட்டு,மாலை அங்கிருந்து கிளம்பி
கரோல் பாக் வந்து சேர்ந்தேன்.

இரண்டொரு நாளில் எனது மாமா மகன்
அவரது நண்பர் மூலம் பயண சீட்டை வாங்கி
அனுப்பிவிட்டார்.வழக்கம்போல நண்பர்களுடன்
பயிற்சிக்கு போய் வந்தேன்.

நாற்பது நாட்கள் பயிற்சியின் இடையே இருந்த
விடுமுறை நாட்களில் டாக்டர்.அமர் சிங் அவர்கள்
எங்களையெல்லாம் டில்லியில் உள்ள குதூப் மினார்,
ஆக்ரா மற்றும் ‘ஃபதேப்பூர் சிக்ரி’க்கு அழைத்து
சென்றார். பின்பு பயிற்சி நிமித்தம் லூதியானா
சென்றபோது பக்ரா நங்கல் அணையையும் பார்த்து
வந்தோம்.(இது பற்றி பின் எழுதுவேன்)

பயிற்சி முடிந்த கடைசி நாளில் (24/11/1967)
புகைப்படம் எடுத்துக்கொண்டு பயிற்சி
பெற்றதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொண்டு
அறைக்குத் திரும்பினேன்.

தொடரும்

12 கருத்துகள்:

  1. பழைய புகைப்படங்களை இப்போது பார்க்க ரசனையாக இருக்கிறது. முன்பு இருந்தது சிலை, இப்போது அது இல்லை... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. தலைநகரம் பற்றிய விவரங்கள் அருமை ! அங்கே படித்து வளர்ந்த எனக்கே சுவாரஸ்யமாக இருந்தது . மிக பழைய படங்கள் . பழைய நினைவுகள் இனிமையாக இருக்கும் .. நிற்க உங்கள் படம் ஏறத்தாழ 45 வருடங்கள் பழையது .. அச்சு உங்கள் மகன் போலவே உள்ளது .! ! ( அவரை பார்த்தவர்கள் அறிவர் ) . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  3. நிறைந்த தகவல்கள். தாஜ்மகாலுக்கு மாதிரியாக கட்டிடம் நல்லது. வாழ்த்துகள். சகோதரா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். தொடர்ந்து ஒருவருக் கொருவர் கருத்திடலாமே. வாருங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே! Old is Gold உண்மைதானே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். நினைவுகள் எப்போதும் சுகமானவைதான். எனது பழைய தோற்றம் எனது மகனை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளீர்கள். உண்மை. அதனால்தான் Chip of the Old Block என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    நிச்சயம் உங்கள் பதிவுக்கு வருவேன் எனது கருத்துக்களோடு.

    பதிலளிநீக்கு
  7. படத்தில் இருப்பது நீங்களா?
    பணிக்கர் ட்ராவலில் சென்று சுற்றிப் பார்த்தது போல் இருக்கிறது.ஆனால் அதை விட அதிக விவரங்கள்!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! படத்தில் இருப்பது நானேதான்.பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நிறைய தகவல்கள். 93 இல் தில்லி சென்ற நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சிவகுமாரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்..என் முதல் வருகை..நீங்கள் நினைத்து பார்த்ததை நான் படித்துப் பார்த்தேன்..படங்களை ரசித்துப் பார்த்தேன்..தளத்தில் இணைந்துகொள்கிறேன்..தங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் திரு மதுமதி அவர்களே! முதல் வருகைக்கும், பாராட்டுக்கும், தளத்தில் இணைந்தமைக்கும், நன்றி !

    பதிலளிநீக்கு