புதன், 11 ஜனவரி, 2012

என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

பெயரில் என்ன இருக்கிறது?என சிலர் நினைக்கலாம்.
William Shakespeare ரோமியோ & ஜூலியட்
நாடகத்தில் கூறுவார்.’ரோஜாவை என்ன பெயரிட்டு
அழைத்தாலும், அது அதே நறுமணத்தோடுதான்
மணக்கும்’ என்று.
(What's in a name? That which we call a rose
by any other name would smell as sweet;)


ஆனால் என்னைப் பொறுத்தவரை ரோஜாவை
வேறு பெயரிட்டு எவ்வாறு அழைக்கமுடியாதோ
அல்லது அழைக்கக்கூடாதோ அதுபோல் ஒரு
குறிப்பிட்ட பெயருள்ள ஒருவரையும் தவறான
பெயரில் அழைக்கக்கூடாது என்பதுதான்.ஏனென்றால்
பெயர் என்பது ஒரு அடையாளம். அது ஒரு
அங்கீகாரம்.

ஆனால் நம் நாட்டிலோ பெயரை சரியாக
சொல்லக்கூட சோம்பேறித்தனம் சிலருக்கு.
அதை அலட்சியம் என்று கூட சொல்வேன் நான்.

சிலர் பெயர்களை தப்புத்தப்பாக உச்சரிப்பதை
கேட்கும்போது கோபமும் வேதனையும் எனக்குள்
எழுகிறது என்பது உண்மை.ஆனால் அவர்களை
என்னால் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும்
முடியவில்லையே என்ற ஆதங்கமும் உண்டு.

ஒருநாள் ஒரு பேருந்தில்,அது போகுமிடம்
அம்தொபே என எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
இது எந்த இடம் என மூளையைக்
கசக்கிக்கொண்டதில், நமக்கு மிகவும் தெரிந்த,
ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான,
அம்பத்தூர் தொழிற் பேட்டை என்பதைத்தான்
சோம்பேறித்தனத்தாலோ அல்லது எழுத இடம்
இல்லாததாலோ அம்தொபே என
எழுதியிருக்கிறார்கள் என அறிந்துகொண்டேன்.

இவ்வாறு பெயர்களை சுருக்கி எழுத யார்
இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? யார் என்றால்,
இது பற்றி வாய் திறக்காத நாம் தான் என்பேன் நான்.

இந்த‘பெயர் சுருக்கும்’வியாதி,பேருந்துகளின்
பெயர் பலகைகளில் மட்டுமல்ல,நகர்கள்,
தெருக்களின் பெயர்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது
என்பதுதான் கவலைப்படவேண்டிய,அல்ல!அல்ல!
வெட்கப்படவேண்டிய விஷயம்.

நம்மிடையே வாழ்ந்த சில பெரியோர்கள் இந்த
சமுதாயத்திற்கு செய்த தொண்டினை போற்றும்
விதமாக,அவர்களுக்கு மரியாதை செலுத்தும்
நிமித்தம் சில தெருக்களுக்கு அவர்களது
பெயர்களை சூட்டுவது நம்முடைய
நல்ல(!)பழக்கம்.

ஆனால் அப்படி சூட்டப்பட்ட பெயரில் அவைகள்
அழைக்கப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே
சொல்வேன் நான்.அவ்வாறு சொல்வதன் காரணம்
ஒரு சாலையின் பெயரைப் பார்த்து
வேதனைப் பட்டதால் தான்.

சென்னையில் K.B.Dasan சாலை என்று ஒன்று
இருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

அண்ணா சாலையில்,நீதியரசர் பஷீர் அகமது
சயீத் அவர்கள் பெயரில் அமைந்திருக்கும்
பெண்கள் கல்லூரியை (பழைய பெயர்
S.I.E.T கல்லூரி) அடுத்து,ஆழ்வார்பேட்டை
செல்லும் சாலை தான் K.B.Dasan சாலை
என அழைக்கப்படுகிறது.ஏன் தெருவில் உள்ள
மாநகராட்சியின் பெயற் பலகையிலேயே
அவ்வாறுதான் எழுதப்பட்டு உள்ளது.

அவ்வளவு ஏன் அந்த பெண்கள் கல்லூரி கூட
அவர்களது வலைத்தளத்தின் முகவரியில்
K.B.Dasan சாலை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

K.B.Dasan என்ற பெயர் புதியதாக இருக்கிறதே.யார்
இவர் என ஆராய்ந்தபோது (?) தான் தெரிந்தது,

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேயர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்


என்ற புகழ்மிக்க(பெற்ற) பாடல்களை எழுதி,
தமிழர்களின் நாடி நரம்புகளை தட்டி எழுப்பி,
வீறு கொள்ள வைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அவர்களை நினைவு கூறும் முகத்தான்,
கவிஞர் பாரதிதாசன் சாலை என அந்த சாலைக்கு
அரசு பெயரிட்டிருக்கிறது.

ஆனால் நம்மவர்களோ அவரது அந்த பெயரை
சுருக்கி K.B.Dasan சாலை என்றாக்கி விட்டார்கள்.
நல்ல வேளை அதையும் சுருக்கி K.B.D சாலை என
மாற்றாமல் இருக்கிறார்களே என சந்தோஷப்படலாம்!!

இருந்த பெயரையும் சுருக்கிவிட்டதால்,இளைய
தலைமுறையினருக்கும்,எதிர்கால சந்ததியருக்கும்
அவர் யார் என்றே தெரியாமல் போக வாய்ப்பு உண்டு.

இல்லாவிட்டாலும் இன்றைய இயந்திரமயமான
வாழ்க்கையில்,அவர் யார் என இளைய
தலைமுறைக்குத் தெரியுமா என்ன என சிலர்
நினைக்கலாம்.முழுப்பெயர் இருந்தால் ஒரு
சிலராவது யார் இவர் எனத் தெரிந்துகொள்ள
ஆர்வம் காட்டலாம் அல்லவா? ஆனால் தமிழ்
அறிஞர்கள், அரசு இயந்திரம் உட்பட யாரும்
இதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை
என்பது வருந்தக்கூடிய விஷயமே.

இதுபோன்று இன்னொரு இடத்தின் பெயரும்
சுருக்கப்பட்டு இருப்பது அனேகருக்குத் தெரியும் என
நினைக்கிறேன்.கோயம்புத்தூரின் மய்யப்பகுதியான
R.S.புரம்தான் அது. நிறைய பேருக்கு R.S. இன்
விரிவாக்கம் என்ன வென்று தெரியுமா எனத்
தெரியவில்லை.

கோயம்புத்தூரின் நகராட்சியின் தலைவராக
இருந்த திரு இரத்தினசபாபதி என்பவரின்
பெயரால் இரத்தினசபாபதிபுரம் என
பெயரிடப்பட்ட அந்த இடம் தான் இப்போது
ஆர்.எஸ். புரம் ஆகிவிட்டது.

ஆங்கிலேயர்களின் பெயரையே முழுமையாக
உச்சரிப்பதில் பெருமை கொள்ளும் நமக்கு,
ஒரு தமிழனின் முழுப்பெயரை சொல்லக்கூட
நேரமில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இன்னொரு தகவலையும் இங்கே தரலாம் என
எண்ணுகிறேன்.தற்போதைய அண்ணா பல்கலைக்
கழகத்திற்கு முதலில்,பேரறிஞர் அண்ணா
தொழிநுட்பப் பல்கலைக் கழகம்(Perarignar Anna University
of Technology)
என்றுதான் பெயரிட்டிருந்தார்கள்.
நம்மவர்கள் சோம்பேறித்தனத்தாலோ அல்லது அந்த
பெயர் பிடிக்காததாலோ,வழக்கம்போல்(!)அதை
சுருக்கி PAUT என அழைக்க ஆரம்பித்தனர்.
நல்ல வேளை அரசு விழித்துக்கொண்டு அந்த
பெயரை Anna University என்று
அதிகாரபூர்வமாகவே சுருக்கிவிட்டனர்.

இதுபோல் கலைஞர் கருணாநிதி நகர் என்பதை
கே.கே.நகர் என்றும் ஜெ.ஜெயலலிதா நகர்
என்பதை ஜெ.ஜெ,நகர் என்றும் பெயர்
சுருக்கப்பட்டுள்ளஎத்தனையோ
எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே
போகலாம்.

நாம் வைக்கின்ற பெயர்களால்,நம்மால் அழைக்க
முடியாதென்றால், அல்லது அழைக்க விருப்பம்
இல்லாமல் போகும் எனத்தெரிந்தால், ‘பின் ஏன் அந்த
பெயர்களை வைத்து அந்த பெயர் கொண்டவர்களை
அவமரியாதை செய்யவேண்டும்?’
என்பதே எனது கேள்வி..

18 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவு..சிந்திக்க வேண்டிய பதிவைத் தந்திருக்கிறீர்கள்..பெயரைச் சுருக்கியவர்களிடம் கேட்டால்..
    "ஏன் ஈ.வெ.ரா என்று சொல்வதில்லையா..எம்.ஜி.ஆர் என்று சொல்வதில்லையா" என்றுதான் கேட்பார்கள்..அவர்களுக்கு வேறுபாடு தெரியாது..அவர்கள் சுருக்கப் பெயர்களால் தான் அறியப்பட்டார்கள் என்று..பாரதிதாசன் கே.பி.தாசன் என்று அழைப்பதை அறவே ஏற்றுக்கொள்ள முடியாதுதான்..அரசேதான் அதை செய்கிறது..எதிர்ப்புகள் பலமாக இருந்தால் ஒருவேளை அரசு மாற்றியமைக்கலாம்..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மதுமதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. நான் இதுபற்றி நிறைய தடவை மனவேதனைப்பட்டிருக்கிறேன். அந்த பகுதியில் சமூகசேவை செய்து பலரின் வாழ்க்கை மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றிக்கடனாக வைக்கப்பட்ட பெயர்கள் தற்போது சுருங்கி பெயர்சூட்டியதன் நோக்கமே சிதைந்து போனதை எண்ணி வருந்தியிருக்கிறேன். தற்போது உங்கள் பதிவைப்ப்டித்தபின் என்னைமாதிரி நீங்களும் வேதனைப்பட்டதை அறிந்துகொண்டேன். மதுரையிலும் S.S காலனி (சோமசுந்தரம் காலனி) எல்லீஸ் நகர் போன்றவற்றை பெயர் காரணம் கூட தெரியாமல் தவறாக உச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    கோயம்புத்தூர் R.S.puram நீங்க சொன்னபின்தான் முழுபெயரே தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  4. சரியாகக் கேட்டீர்கள்!பெயர் வைக்கப்பட்டதன் நோக்கத்தையே பயனற்றதாக்கும் செயல்.
    நன்று.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கடம்பவன குயில் அவர்களே!மதுரை S.S காலனியின் விரிவாக்கம் கூட உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் தான் தெரிந்துகொண்டேன்.இதுபோல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை பெயர்கள் சுருக்கப்பட்டிருகின்றவோ? நம்மைப் போன்றவர்கள் இனி இது போன்ற இடத்தில் உள்ளவர்களுக்கு முகவரியை எழுதும்போது சுருக்கப்பட்ட பெயருக்கு பின்னால் அடைப்புக் குறிக்குள் முழுப்பெயரையும் எழுதி ஒரு புதிய முயற்சியை தொடரலாம் என்பது விருப்பம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமை நண்பரே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்குக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தனசேகரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. சொல்வதை சுருங்க சொல் என்பதை தவறாக புரிந்த கொண்டதின் வினையே இது ! எதை எந்த நேரத்தில் சுருங்க சொல்ல வேண்டும் என்று தெரியாமல் இன்றைய சமுதாயம் SMS கலாச்சாரத்தில் மூழ்கி இருப்பதின் காரணம் என்றும் கூறலாம் ..SMS கலாச்சாரம் சமீபத்திய ஒரு நிகழ்வே ...ஆனால் நீங்கள் கூறிய பல உதாரணங்கள் கை பேசி வரும் முன்பே நிகழ்வில் இருந்தன .. வருந்த தக்க விடயமே ! குறைந்த பட்சம் முழு பெயரையும் கீழே பதிக்கலாம் ..இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ...வாசு

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. சுருக்கம் அவமானம் தான்...

    பெயரை வைத்து ஒரு பதிவு விரைவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கள் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  13. அன்பின் நடன சபாபதி - தவிர்க்க இயலாத சுருக்கங்கள் - நீண்ட பெயரினை எழுத சோம்பேறித்தனம் கொண்டு சுருக்கி எழுதுவது நடைமுறையாகி விட்டது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

      நீக்கு
  14. என்ன பெயர் வைத்தாலும், எப்படித்தான் அழைத்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதனை மறைக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வரலாற்றை மறைக்கமுடியாது. உண்மை ஒரு நாள் வெளிப்படும் என்பது உண்மைதான்.

      நீக்கு