புதன், 4 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 3


Boss is right என்பார்கள்.ஆனால் அந்த சொற்றொடரை
சிறிது மாற்றி Boss is right but not always! என
சொல்லலாம் என்பேன் நான்.

37 ஆண்டுகளுக்கு மேல் மாநில அரசிலும், மைய
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுத்துறை
நிறுவனத்திலும், பொதுத்துறை வங்கியிலும்
பணியாற்றியபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட
மேலதிகாரிகளின் கீழ் பணி புரிந்திருக்கிறேன்.

அவர்களுக்கு கீழே பணி ஆற்றியபோது ஒரு Boss
எப்படி இருக்கவேண்டும் என்பதை விட, ஒரு Boss
எப்படி இருக்கக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்.
அதனால் 21 ஆண்டுகள் நான் பலருக்கு Boss ஆக
இருந்தபோது Boss ஆக இல்லாமல், ஒரு மூத்த
சக ஊழியர் போல, ஒரு நல்ல நண்பன் போல
நடந்துகொண்டேன் என்பதே உண்மை. இதை நான்
சொல்வதைவிட என்னோடு பணியாற்றியவர்கள்
சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் பணிபுரிந்த போது எனக்கு இருந்த Boss களில்
சிலர் பற்றி மட்டுமே  இங்கு குறிப்பிடப்போகிறேன்.
அப்படி எழுதும்போது ஓரிருவர் பெயரை மட்டும்
எழுதலாமென இருக்கிறேன்.

நான் முன்பே எழுதி இருந்தது போல அக்டோபர் 5,1966
முதல் அக்டோபர் 16,1966 வரை மாநில அரசில்
வேளாண் துறையில் பணி புரிந்தபோது அப்போது
இருந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி
வட்டத்தில் இருந்த தலைஞாயிறு ஊராட்சி
ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலராக
(Agricultural Extension Officer) இருந்தேன்.

அப்போது இருந்த முறைப்படி, வேளாண்மை
விரிவாக்க அலுவலர்களுக்கு இரண்டு Boss கள் உண்டு.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின்(Commissioner, 
Panchayat Union) கீழ் ஆட்சிமுறை சார்ந்த கட்டுப்பாட்டிலும்
(Administrative Control), மாவட்ட வேளாண்மை
அலுவலரின் (District Agricultural Officer) கீழ்
தொழில் நுட்பக் கட்டுப்பாட்டிலும் (Technical Control)
பணி செய்யவேண்டும். (தற்போது மாவட்ட வேளாண்மை
அலுவலர்கள், உதவி வேளாண்மை இயக்குனர்கள்
(Assistant Director of Agriculture) என
அழைக்கப்படுகின்றனர்.)

நான் பணியில் சேர்ந்த மறுநாளே மன்னார்குடியில் இருந்த
மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை
விரிவாக்க அலுவலர்களின் கூட்டம் இருந்ததால் அதில்
கலந்து கொள்ள நண்பர் திரு வீராசாமி அவர்களுடன்,
மன்னார்குடி சென்றேன்.

மாவட்ட அலுவலகத்தை அடைந்ததும், நண்பர்
திரு வீராசாமி என்னிடம் ‘நீங்கள் பணியில் சேர்ந்த பிறகு
முதன்முதல் மாவட்ட அலுவலகம் வருவதால் கூட்டம்
ஆரம்பிக்கு முன் மாவட்ட வேளாண்மை அலுவலரை
மரியாதை நிமித்தம் பார்த்து வந்துவிடுங்கள். நான்
கூட்டம் நடக்கும் அரங்கில் காத்திருக்கிறேன்.’ எனக்கூறி
என்னை அலுவலகத்தில் இருந்த மேற்பார்வயாளரிடம்
அழைத்து சென்று அறிமுகப்படுத்தி, என்னை மாவட்ட
வேளாண்மை அலுவலரைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி
கேட்டுக்கொண்டார்.

அதற்கு அவர், ‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்களே
உள்ளே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.’
என்றார். நானும் மகிழ்ச்சியோடும் தயக்கத்தோடும்
மாவட்ட வேளாண்மை அலுவலரின் அறைக்குள் நுழைந்தேன்.

அறையின் உள்ளே ஒரு பெரிய மேஜையின் மேல் அநேக
கோப்புகள்(Files) இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன.
அந்த மேஜையின் பின்  நாற்காலியில் கதர் சட்டை அணிந்து
கோப்புகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவரிடம் ‘வணக்கம். சார்.‘
எனக்கூறிவிட்டு அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

எனது குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர், முகத்தை இறுக்கமாக
வைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில், ‘யாரப்பா நீ? எனது உத்திரவு
இல்லாமல் உள்ளே வந்ததும் அல்லாமல் நான் சொல்லாமல்
நாற்காலியில் உட்கார்ந்து விட்டாயே.’ என்று கேட்டபோது,
அதிர்ச்சியில் நான் உறைந்து போக. எனக்குள் இருந்த
மகிழ்ச்சி காணாமல் போயிருந்தது!


தொடரும்

23 கருத்துகள்:

  1. முதல் அனுபவமே இப்படியா?பல பாஸ்களிடம் பணியாற்றியதில் நிறையவே கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததே!நல்லவற்றை எடுத்துக் கொண்டு அல்லவற்றைத் தள்ளி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சில ‘பாஸ்‘கள் இப்படித்தான். நாம் தலைமைப் பதவியில் இருக்கிறோம் என்பதை மனதிலேயே சுமந்து கொண்டிருப்பார்கள். இன்னும் தொடர்ந்து நீங்கள் சந்தித்த வேறு வேறு ‘பாஸ்’களின் குணாதிசயங்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், தொடர்வதற்கும், நன்றி திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. அதிகாரக் குரல் சில நேரம் ஆட்டிப் படைக்கவே செய்கிறது . தங்கள் அனுபவம் பல படிப்பினைகளை தருகிறது .

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!. காட்சிகள் மாறினாலும்,ஆட்சிகள் மாறினாலும், அதிகார வர்க்கத்தின் மேலாதிக்க மனப்பான்மை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. An unpleasant virgin encounter. I can visualize the shock you must have felt at the rather brusque treatment. Please let us know how did you deal with this boss after this encounter. vasudevan

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! மாநில அரசில் உள்ள அநேக அதிகாரிகள் இன்றும் அதிகாரத் திமிரில் இருக்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய ஒன்று. காலம் தான் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும். நல்ல வேளை நான் அந்தப் பணியில் அதிக நாட்கள் இல்லை. எவ்வாறு அதை எதிர்கொண்டேன் என்பது அடுத்த பதிவில்.

    பதிலளிநீக்கு
  12. You were too ignorant, to enter in someone's room and sit without offer. Let us see what happens.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  13. You were too ignorant, to enter in someone's room and sit without offer. Let us see what happens.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!. நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் நான் கல்லூரியிலிருந்து நேரே பணியில் சேர்ந்தவன் என்பதால் நடைமுறை தெரியவில்லை என்பதையும், அலுவலக மேற்பார்வையாளர் புதியவன் என்று தெரிந்தும், உள்ளே சென்று அனுமதி பெற்றுத்தராமல், 'நீங்கள் உள்ளே போங்கள்.' என்று சொன்னதும், அந்த நிகழ்வுக்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  15. சகோதரா நலமா! நலம் பல நிறைக.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும்,விசாரிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  17. இந்தத்தங்களின் பகுதியைப் படித்ததும் எனக்கோர் நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. உடனே எனக்குள் பலமாகச் சிரித்துக்கொண்டேன். அதனைத் தனியாக பிறகு கீழே எழுதுகிறேன்.

    ”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்களே உள்ளே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்று சொன்னவருக்கு அந்த BOSS ஐப் பற்றி நிச்சயமாக நன்கு தெரிந்திருக்கும் ... வேண்டுமென்றே உங்களைச் சுத்திவிட்டு சிக்கலில் மாட்ட வைக்க எண்ணி, உள்ளே அனுப்பியுள்ளார் என நான் நினைக்கிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.

      நீக்கு
  18. 1970-1975 காலக்கட்டத்தில், நான் Mr. S. Rangarajan என்ற ஐயங்கார் BOSS இடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். 04.11.1970 நான் BHEL இல் சேர்ந்தபோது அவருக்கு சுமார் 34 அல்லது 35 வயது மட்டுமே இருக்கும்.

    He was an Assistant Engineer at that time. B.A., + AMIE படித்தவர். Southern Railway லிருந்து Deputation னில் BHEL இல் சேர்ந்திருந்தவர். இறுதியாக Senior Deputy General Manager Post வரை Promotions கிடைத்து BHEL லிருந்து பணி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு நிறைய வேதம், சாஸ்திரம், Philosophy போன்ற விஷயங்களெல்லாம்கூட படித்துள்ளார்.

    சமீபத்தில் 16.10.2016 அன்று அவருக்கு சதாபிஷேகம் (80 ஆண்டு நிறைவு) சென்னை திருவல்லிக்கேணியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. என்னையும் அழைத்திருந்தார். என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை. பிறகு 05.11.2016 அவரும் அவர் மனைவியும் என்னைப் பார்த்து ஆசீர்வதிக்க திருச்சியில் உள்ள என் வீட்டுக்கே நேரில் வந்து போனார்கள். இருவருக்குமாக நான் வாங்கி வைத்திருந்த புது வேஷ்டி + புதுப் புடவை + Other items களைக் கொடுத்து, நானும் என் மனைவியும் அவர்களை நமஸ்கரித்து, மரியாதைகள் செய்து அனுப்பி வைத்தோம்.

    வேலையில் அவர் கொஞ்சம் Strict ஆனவர்தான். தொணதொணப்புகளும் அதிகம்தான். யாரையும் கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவோ, ஓய்வெடுத்துக்கொள்ளவோ விடவும் மாட்டார். அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார். இருப்பினும் ஓரளவு நல்லவர்.

    என்னிடம் ஓர் தனி பிரியமும் மரியாதையும் இன்று வரை அவருக்கு உண்டு.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களின் வீட்டிற்கே வந்து தங்களுக்கு ஆசீர்வாதம் செய்த தங்களின் Boss உண்மையிலே ஒரு அற்புத மனிதர் தான். எப்போதும் கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அவர் பணியின் போது கடுமையாக நடந்துகொண்டாலும் அவருள் ஒரு மென்மையான உள்ளம் இருந்திருக்கிறது. கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.

      நீக்கு
  19. எங்களின் ஆபீஸ் ரூமில் அப்போது சுமார் 10 பேர்கள் இருந்தோம். அங்கு Internal Local Official Phones மொத்தம் இரண்டு மட்டுமே.

    இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டும் Parallel Phones. தொலைபேசி அழைப்பு வந்தால் இருக்கையைவிட்டு அதிக தூரம் நடந்து செல்லாமல் யாராவது அருகில் உள்ள ஒருவர் எடுக்கட்டும் என அவ்வாறு வைத்திருந்தார்கள்.

    நான் அவரிடம் Lower Division Clerk ஆகப் பணியில் சேர்ந்தபிறகு, சுமார் 7-8 மாதங்கள் கழித்து சபாபதி என்ற பெயரில் இஞ்சினீரிங் டிப்ளோமா படித்த, கருத்த பையன் ஒருவன் புதிதாக வேலையில் Chargeman ஆகச் சேர்ந்திருந்தான். அவன் மிகவும் ஸாது. பேசவே பயப்படுவான். அவன் அதிர்ந்து உரக்கப் பேசி இன்றுவரை நான் பார்த்ததே இல்லை.

    அவனுக்கு அருகில் அந்த மற்றொரு தொலைபேசி அமைந்திருந்தது. யாரோ அழைத்திருந்தார்கள். அவன் வேலையில் சேர்ந்த முதல் வாரத்தின் ஏதோவொரு நாள் என நினைக்கிறேன். அந்தத் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசினான், அந்த சபாபதி.

    அதன்பின் அவன் தன் சீட்டில் அமர்ந்தவாறே “ரங்கராஜன் .... உங்களுக்குத்தான் போன் .... எடுத்துப் பேசுங்கள்” என்று சொல்லி விட்டான்.

    அவரும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, தன் அருகில் இருந்த மற்றொரு போனை எடுத்துப் பேசினார்.

    அதன் பிறகு அவனை தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் அவனுக்கு மிக நன்றாகப் பாட்டு விட்டார். அவன் நடுங்கிப்போய் விட்டான்.

    “நீ எங்கு படித்தாய்? என்ன படித்தாய்? அங்குள்ள பிரின்ஸிபாலை நீ எப்படி அழைப்பாய்? என ஆரம்பித்து .... மிகப்பெரிய லெக்சர் கொடுத்து .... You should know how to behave with others. You must have to give respect to others .... etc., etc.,

    நான் இதுபோலெல்லாம் நடக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். அதுபோலவே நடந்தும் விட்டது.

    ஏனோ இந்தப்பதிவின் இறுதிப் பாராவைப் படித்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. உங்கள் பெயர் திரு. நடனசபாபதி அவர்கள். அவன் பெயர் உங்களில் பாதியான சபாபதி மட்டுமே என்பதில் எனக்குக் கூடுதல் வியப்பாகவும் உள்ளது. :)

    -=-=-=-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும், வேறொரு சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு சபாபதி அவரை Mr.ரங்கராஜன் என்று கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படி கூப்பிட்டிருந்தாலும் அவர் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பியிருக்கமாட்டார். Sir என்று கூப்பிடவேண்டும் என்று தான் நினைத்திருப்பார்.

      நீக்கு