புதன், 13 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 22

நான் முன்பே எழுதியிருந்தபடி 37 ஆண்டுகளுக்கு மேல், மாநில அரசில் வேளாண்மைத் துறையிலும்,மையஅரசின் கட்டுப்பாட்டின்
கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைக் கழகத்திலும்,பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியிலும் பணியாற்றியபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட மேலதிகாரிகளின் கீழ் பணிபுரிந்திருக்கிறேன்.

அனைத்து Boss களின் கீழ் பணி புரிந்த அனுபவங்கள் பற்றிஎழுத நினைத்தாலும்,பதிவு நீண்டுகொண்டு போகும் என்பதால்,மாதிரிக்கு
மூன்று பேர் பற்றி மட்டும் எழுத நினைத்தேன்.
அவர்களில் மாநில அரசில் நான் பணிபுரிந்தபொது எனக்கு
இருந்த Boss ஒருவரைப்பற்றியும், தேசிய விதைக்கழகத்தில் பணியாற்றியபோது எனக்கு Boss ஆக இருந்தவரைப் பற்றியும்,
வங்கியில் சேர்ந்தபோது இருந்த Boss ஒருவரைப்பற்றியும்
எழுத நினைத்து, இதுவரை இருவர் பற்றி எழுதிவிட்டேன்.

இப்போது வங்கியில் இருந்த எனது  Boss பற்றி இதோ.

மூன்று ஆண்டுகள் காலம் தேசிய விதைக் கழகத்தில்
பணிபுரிந்த பின் நாட்டுமையாக்கப்பட்ட வங்கியான
சிண்டிகேட்  வங்கியில் 02-01-1970 ல், அலுவலர் பயிற்சியர்
(Officer Trainee) ஆக பெங்களூரு ஜெயமஹால் விரிவாக்கம்
பகுதியில் இருந்த கிளையில் சேர்ந்தேன்.
(எப்படி சேர்ந்தேன் என்பதை பின் எழுதுவேன்)

இரண்டரை மாதங்கள் கழிந்த பின் மணிப்பாலில்(உடுப்பி அருகே)
உள்ள தலைமையகத்தில் இருந்த அலுவலர்கள் பயிற்சிக்
கல்லூரியில் வகுப்பறை பயிற்சி பெற அனுப்பட்டேன்.அங்கு
45 நாட்கள் பயிற்சியை முடித்தபின்,(அருமையான பயிற்சி அது.) தமிழகத்தில் இருந்த ஒரு கிளைக்கு என்னை மேலும் பயிற்சி
பெற அனுப்பின்னார்கள்.
எங்கள் வங்கியில் அப்போதிருந்த நடைமுறைப்படி, வகுப்பறை
பயிற்சி முடிந்து, மூன்று மாத காலம் ஒரு கிளையில் எழுத்தர்
பயிற்சி பெற்று, பின் மூன்று மாத காலம் மேற்பார்வையாளர்
பயிற்சி பெற்று, நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே,
தகுதிகாண் இளநிலை அலுவலராக (Probationary Junior Officer)
வங்கியில் நியமிப்பார்கள்.

நான் வேளாண் கள அலுவலராக சேர்ந்ததால் எனக்கு அந்த பயிற்சியெல்லாம் இருக்காது என நினைத்தேன்.ஆனால்
என்னைப் போன்றோருக்கும் அந்த பயிற்சியை கொடுத்தார்கள்.
அந்த பயிற்சி பின்னால் கிளை மேலாளராக பணியாற்றும்போது
மிகவும் உதவியது என்பது உண்மை.
பயிற்சி முடிந்த சனிக்கிழமை மாலை உடுப்பியிலிருந்து கிளம்பி
மங்களூர் வந்து இரயிலில் பயணித்து மறுநாள் ஞாயிறு காலை
நான் சேர இருந்த ஊரில் இருந்த ஒரு தங்கும் விடுதியில்
தங்கினேன் .

அதே விடுதியில் வில்லீஸ் மாத்யூஸ் என்ற கேரளாவை சேர்ந்த
நண்பர் ஒருவரும் தங்கியிருந்தார்.அவரும் எழுத்தர் பயிற்சிக்காக
அந்த கிளையில் இருப்பதாக சொன்னார்.

மறுநாள் திங்கள் அன்று காலை 9 மணிக்கு அவரே என்னை
கிளைக்கு அழைத்து சென்றார். வங்கியின் மேலாளர்,வங்கி
இருந்த கட்டிடத்திலேயே தங்கி இருந்ததால்,அங்கேயே என்னை
அழைத்து சென்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
அவர் என்னிடம் போய் கிளையில் இருங்கள் வருகிறேன்.
என்றார். 

அது போலவே அரை மணி நேரத்தில் வங்கி கிளைக்கு வந்து
சேர்ந்தார். அவர் தனது அறைக்கு சென்றதும், வங்கியில்
அப்போது நகை மதிப்பீட்டாளாராக இருந்த ஒரு பெரியவர்
உள்ளே சென்று அங்கிருந்த சாமி படங்களுக்கு தூப தீபங்கள்
காட்டி பூசை செய்ததும்,அந்த மேலாளர் சாமி கும்பிட்டுவிட்டு
என்னை உள்ளே வர சொன்னார்.

தயங்கியபடியே அவரது அறைக்கு சென்றேன். வீட்டில்
பார்த்தற்கும் அங்கே பார்ப்பதற்கும் அவரிடம் ஏதோ மாற்றம்
தெரிந்ததால் கூர்ந்து கவனித்தேன். வேறொன்றுமில்லை.
நெற்றியில் விபூதிப்பட்டையும் நடுவில் குங்குமப்பொட்டு வைத்து
அவர் சிவப்பழமாக காட்சியளித்ததால் ஏற்பட்ட மாற்றமே அது.

அவர் என்னை உட்கார சொல்லவில்லை. நானும் ஏற்கனவே மன்னார்குடியில் பட்ட அனுபவத்தால் உட்காரவில்லை.அவரது
நாற்காலிக்கு பின்னே சுவற்றில் பண்டித  ஜவஹர்லால் நேரு
அவர்களின் படமும் அந்த படத்திற்கு கீழே ‘I don’t want excuses,
I want results!’ என்று  எழுதப் பட்டிருப்பதையும், மேசை மேலிருந்த கண்ணடிக்கு கீழே “Ask what you have done for your country,
not what your country can do for you” என்ற John F. Kennedy அவர்கள் பதவியேற்கும்போது சொன்ன புகழ் பெற்ற சொற்றொடரும்,
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை
வேண்டும். என்ற வள்ளலார் இராமலிங்க அடிகளாரின்  
நல் வாக்கும் தட்டச்சு செய்யப்பட்டு வைத்திருப்பதை பார்த்ததும்
இந்த மேலாளர் ஒரு வித்தியாசமானவர்தான் என நினைத்துக்
கொண்டிருந்தபோது அவர் என்னைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.


தொடரும்

23 கருத்துகள்:

  1. சுயசரிதை என்றாலும் சொல்லும் நடையும சுவைபட உள்ளன!
    தொடருங்கள்! தொடர்வேன்.

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. ”யாரோ?அவர் யாரோ?என்ன பேரோ?” கத்திருக்கிறேன் தொடர1

    பதிலளிநீக்கு
  3. முதல் வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி புலவர் திரு இராமாநுசம் அவர்களே! தாங்கள் பாராட்டியது தமிழே பாராட்டியது போல மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!. ஊரைச்சொன்னாலும் பேரை சொல்லக்கூடாது என்பார்கள். இங்கே நான் ஊரைக்கூட சொல்லவில்லை. அவர் பெயர் ‘போனவர்’ என்பதால் பெயரைக் குறிப்பிடவில்லை. போகப்போக புரிந்துகொள்வீர்கள் அவர் யாரென்று.

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனைவியும்,
    நல்ல முதலாளியும் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    நல்ல பதிவு. தொடருங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நல்ல மனைவியும்,
    நல்ல முதலாளியும் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    நல்ல பதிவு. தொடருங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் நடராஜன் அவர்களே! நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இந்த மேலாளரிடம் உங்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. தொடரட்டும் அனுபவங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! இந்த மேலாளரிடம் எனக்கு கிடைத்த அனுபவம் புதுமை தான்.

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான மனிதரின் விசாரணை எப்படி இருக்குமோ என்ற பயமும் ஆவலும் கூடுகிறது .

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! இந்த அனுபவமும் ஒரு வித்தியாசமானதுதான்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. Congratulations’, to your 200th blog episode. Though I am late, my sincere wishes to your blog.
    Packirisamy N

    பதிலளிநீக்கு
  13. தங்களுடைய வாழ்த்துக்கும், பதிவுகளை தொடர்வதற்கும் மனமார்ந்த நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. 200வது பதிவிற்கு நல்வாழ்த்து. தொடருகிறேன்
    அனுபவம் பொன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
    சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  16. நான் ஒரு VERY STRICT BOSS இடம் 10.02.1981 முதல் 25.12.1983 வரை, சுமார் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாகவும் நேரிடையாகவும் வேலை பார்த்துள்ளேன். அதுவே 30 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளதற்கு சமமாகும்.

    அவர் ஒரு சர்வாதிகாரி போல. பொதுவாக அவரை யாருக்குமே பிடிக்காது. இருப்பினும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும்.

    அவரிடம் நான் கற்றுக்கொண்டவைகளும் ஏராளம். அவருடைய விசித்திரமான குணாதிசயங்களையும், சாமர்த்தியங்களையும், அஞ்சா நெஞ்சத்தையும், தைர்யத்தையும் பார்த்து நான் வியந்துள்ளேன்.

    ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமானால், எந்த லெவெலுக்கும் மேலே ஏறியோ அல்லது கீழே இறங்கியோ போய் முடித்துவிட்டு மட்டுமே உட்காருவார்.

    குரங்கு ஒருவரின் தலையில் பொறுமையாக பேன் பார்த்தாலும் பார்க்கும் அல்லது அவரின் காதைப் பிய்த்தாலும் பிய்க்கும் என்பார்களே .... அதுபோன்ற டைப் அவர்.

    தன் கீழே வேலை பார்ப்பவர்களுக்கு நல்லது செய்தாலும் செய்வார். ஒரேயடியாக (SPOIL) செய்ய நினைத்தாலும் செய்து விடுவார்.

    அவரைப்பற்றியும், அவருடனான என் அனுபவங்களையும் மட்டும் சொல்ல வேண்டுமானால், நான் தனியே ஒரு மிகப்பெரிய தொடரே எழுத வேண்டியிருக்கும். :)

    மிகவும் விசித்திரமான கேரக்டர் அவர்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களது Boss பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அவரைப்பற்றி ஒரு தொடரே எழுதலாமே.

      நீக்கு
  17. 25.12.1983 பணி ஓய்வுபெற்ற அவர் சுமார் 90 வயது வரை வாழ்ந்து சமீபத்தில் ஒரு 4 ஆண்டுகள் முன்புதான் காலமானார்.

    பணி ஓய்வுக்குப்பின்பும் என் தொடர்பு எல்லையில்தான் இருந்தார். அவரின் மரணம் பற்றிய செய்தி எனக்கு அவர்கள் வீட்டார் யாராலும் தெரிவிக்கப்படா விட்டாலும், அவரை சுடுகாட்டில் எரியூட்டும் நேரத்திற்கு ஓர் அரை மணி நேரம் முன்பு, சற்றும் எதிர்பாராத விதமாக எனக்கு சம்பந்தமில்லாத ஒருவர் என் காதில் போட உடனே ஓர் ஆட்டோ பிடித்து சுடுகாட்டுக்கு நேரில் சென்று அவரைக் கடைசியாகப் பார்த்து விட்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    வயதான காலத்தில் அவரின் பிள்ளைகள் அவரை சரிவர கவனிக்கவில்லை என்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்வார். என்னிடம் அவ்வப்போது உரிமையுடன் ஹார்லிக்ஸ், கதர் வேஷ்டி, சட்டை, பெரிய துண்டு, மூக்குப்பொடி, வறுத்த நிலக்கடலை போன்றவைகளை வாங்கி அனுப்பச் சொல்வார். நானும் வாங்கி யாரிடமாவது கொடுத்தனுப்புவது உண்டு.

    உடல்நிலை மிகவும் முடியாமல் இருந்த அவர் 05.12.2009 நடந்த என் சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்கு (60 ஆண்டுகள் நிறைவு) நேரில் வந்து கலந்துகொண்டு ஆசீர்வாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு ஓர் 85 வயது இருக்கும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களது Boss பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அவரது இறுதி கால நிலையை எண்ணி வருத்தப்பட்டேன். பரவாயில்லை. நீங்கள் அவருக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து உதவியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

      நீக்கு
  18. 25.12.1983 முதல் நான் வேறொருவரிடம் ஒரு 12 ஆண்டுகாலம் பணியாற்ற நேர்ந்தது. அவர் குணாதிசயங்களில் மேலே நான் சொல்லியுள்ளவருக்கு நேர் எதிரானவர். KIND & FRIENDLY APPROACH உள்ளவர். கிட்டத்தட்ட தாங்கள் சொல்லும் திரு. மோஹன் என்பவர் போன்றே குணாதிசயங்கள் உள்ளவர்.

    அதன் பின் அவரும் பணி ஓய்வு பெற்றார். அதன் பின் வேறு சில அதிகாரிகளின் கீழ் ஓர் 4 ஆண்டுகள், ஓர் 6 ஆண்டுகள் எனப் பணியாற்றி விட்டு, நான் பணி ஓய்வு பெறும்வரை நானே ஒரு குட்டியூண்டு அதிகாரியாக [SECTION HEAD] சொச்ச காலம் பணியாற்ற நேரிட்டது.

    1970-இல் வேலைக்குச் சேர்ந்த நான் 1981 முதல் 2009 வரை சுமார் 29 ஆண்டுகள் ஒரே செக்‌ஷனில் பணியாற்றி அங்கிருந்தே பணிஓய்வும் பெற்றுள்ளேன்.

    என் மொத்த சர்வீஸில் நானும் பல அதிகாரிகளைப் பார்த்து விட்டேன்.

    =====

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தங்களது மற்றொரு Boss பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! அவர் எனது Boss மோகன் போல இருந்தது அறிந்து மகிழ்ச்சி. தாங்கள் எவ்வாறு Boss ஆக செயல்பட்டீர்கள் என எழுதலாமே.

      நீக்கு
  19. புதிய இடம், புதிய பணிச் சூழ்நிலை, புதிய பாஸ் .... என்ன ஆச்சோ .... மேலும் படிக்க மிகுந்த ஆவலுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு