வியாழன், 27 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 5



அந்த விவசாயியோடு அவரது தோட்டத்திற்கு சென்றபோது,
அவரது மனைவியே அங்கு வரப்பில் நின்றுகொண்டு,வேலை
செய்பவர்களை மேற்பார்வை செய்து கொண்டு இருந்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களில்
எல்லாவற்றிலும்  குடும்பத் தலைவர் மட்டுமல்ல குடும்பத்
தலைவியும் கணவர் இல்லாதபோது தானே நேரில் நின்று
விவசாய பணிகளை கண்காணிப்பது என்பது இன்றும் உள்ள
நடைமுறை.

அவரோடு பண்ணையை சுற்றிப்பார்த்துவிட்டு அவரது வீட்டிற்கு
சென்றேன். ஒருபக்கம் பெரிய தென்னந்தோப்பும்,மறுபக்கம்
நிலக்கடலை பயிரிடப்பட்டிருந்த வயல்களுக்கிடையே அவரது
பண்ணை வீடு இருந்தது.

கடனுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வயலையோ
அல்லது தொழிற்கூடத்தையோ பார்வையிட செல்லும்போது
அவர்களது வீட்டையும் பார்க்கவேண்டுமென்று என்பது பணியில் சேர்ந்தபோது கொடுத்த பயிற்சியில், கற்றுக்கொண்ட பாடம்.

ஏனெனில் ஒருவரது வீட்டின் வரவேற்பு அறை எவ்வாறு
பராமரிக்கப்படுகிறது எனப் பார்த்தாலே அவரது குணாதிசயத்தை
அறிந்து கொள்ளமுடியுமாம். வரவேற்பு அறை என்றால்
அங்கே அழகான இருக்கைகளோ அல்லது தரைக்கம்பளங்களோ இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஏழையாக இருந்து, சிறிய வீடாக இருந்தாலும்,அது சுத்தமாக வைக்கப்பட்டிருந்தாலே,அந்த வீட்டில் வசிப்போரின்
பழக்கவழக்கங்கள் பற்றிய மதிப்பீடு குறித்து நம்மால் எடைபோட
முடியும்.

(ஆனால் இது ஒரு தோராய மதிப்பீடாகத்தான் இருக்கமுடியும்
என்பது என் கருத்து. இது பற்றி பின் எழுதுவேன்.)

கோவை மாவட்டத்திற்கே உரிய விருந்தோம்பல் குணத்தோடு
என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று அவரும் அவரது துணைவியாரும்
கேட்டதற்கு,  நான் 'ஒன்றும் வேண்டாம்.' என்று சொல்லியும்,
வற்புறுத்தி 'இளநீராவது சாப்பிடுங்கள்.' என்று கூறி சுவையான
இளநீர் கொடுத்தார்கள்.

பின் அவரிடம் கடலை பயிரிடப்பட்டிருக்கும் பரப்பளவு பற்றிய  
விவரம் மற்றும் அதனுடைய வயது முதலியவைகளைக்
கேட்டுவிட்டு,’என்ன இரக (Variety) கடலை பயிரிட்டு 
இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார் எந்த இரகம் பயிரிட்டு இருந்தால்
உங்களுக்கு என்ன? கடலை பயிரிட்டு இருக்கிறேன். அதற்கு
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தருவீர்கள்? நிலத்தை அடமானம்
(Mortgage of Landed Property) கேட்காமல் அதிகபட்சம் உங்கள்
வங்கியால் எவ்வளவு தரமுடியும்? அதைச் சொல்லுங்கள்.
நிச்சயம் உங்கள் வங்கியின் விதியின் படி குறித்த நேரத்தில்
வாங்கிய பணத்தைக் கட்டிவிடுவேன். என்றார்.

எங்கள் வங்கியில் அப்போது (1970) இருந்த விதிகள் படி  
ரூபாய் 5000 வரைதான், பயிர் அடமானத்தின் (Hypothecation 
of Crops)மேல் தரமுடியும். அதை சொன்னதும் அது போதும் 
எனக்கு.என்றார் அவர்.

மேலும் அவர் சொன்னார். என்னால் இந்த பணத்தை இங்கேயே
புரட்ட முடியும்.ஆனால் வட்டிதான் எச்சா (அதிகம்) இருக்கும்.
வங்கியில் கடன் வாங்கினால் வட்டி குறைவு என்பதால்தான்
உங்கள் வங்கிக்கு வந்தேன். என்றார்.

(அப்போது பயிர் கடனுக்கு, எங்கள் வங்கியில் ஆண்டுக்கு 9 சதம்
தான் வட்டி வசூலிக்கப்பட்டது. அதை முக்கால் வட்டி என்று 
கிராமங்களில் சொல்வதுண்டு. ஆனால் அப்போதோ
கிராமங்களில் தனியார் தரும் கடனுக்கு 5 வட்டி தரவேண்டும்.
அதாவது ஆண்டுக்கு 60 சதம்(!).

வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படாதிருந்தால்
விவசாயிகள் நிலை என்னவாகியிருக்கும் என யோசித்துப்
பாருங்கள்.இப்போது அவர்கள் நிலை நன்றாக இருப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால் அரசு வங்கிகள் இல்லாதிருந்தால்
அவர்கள் நிலை இன்னும் மோசமாக இருந்திருக்கும்
என்பதுதான் உண்மை,)

நான் திரும்பவும் அவரிடம், சார். நீங்கள் கேட்டபடியே கடன்
தருகிறோம். இருந்தாலும் நீங்கள் உயர்ரக அதிக விளைச்சல்
தரக்கூடிய கடலையைப் பயிரிட்டால் அதிக இலாபம் பெறலாமே என்பதால்தான் என்ன இரகம் பயிரிடுகிறீர்கள் எனக் கேட்டேன்.
மேலும் தற்சமயம் மாநில அரசு சூரியகாந்தி பயிரிடுவோருக்கு
மானியம் தருகிறது. நீங்கள் அதைப் பயிரிட்டு பயன் பெறலாம்.
என்றேன்.
  
அதற்கு அவர், சார். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. புதிய இரக
பயிர்களைப் பற்றிய விவரங்களோ  அல்லது வீரிய விதைகளோ
வேண்டும் என்றால் வேளாண்மைத் துறையை அணுகி
பெற்றுக்கொள்கிறேன். நீங்கள் கடன் கிடைக்க மட்டும் வழி
செய்யுங்கள்.அது போதும். என்றார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. என்னை அவர் ஒரு
வங்கியாளனாகத்தான் பார்த்தாரே ஒழிய, புதிய வேளாண்மையை
சொல்லித்தருபவராகப் பார்க்கவில்லை என்பதை 
புரிந்துகொண்டேன்.

இனி அதைப்பற்றி அவரிடம் பேசவேண்டாம் என் தீர்மானித்து,
சரி. நான் வரேங்க. உங்களுடைய விண்ணப்பத்தை இன்றைக்கே
எங்கள் மேலாளர் சிபாரிசோடு எங்கள் தலைமையகத்திற்கு அனுப்பிவிடுவோம். ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து கடன் 
அனுமதி கடிதம் வந்துவிடும். வந்தவுடன் தெரிவிக்கிறோம்.
அப்போது நீங்கள் வந்து பத்திரங்களில் கையொப்பமிட்டு 
கடன்தொகை பெற்றுக்கொள்ளலாங்க எனக்கூறி விடை 
பெற்றேன். 

அவரிடம் நான் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம் யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited advice) தரக் கூடாது 
என்பதுதான்.


 

தொடரும்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 4



அந்த விவசாயி நான் எந்த ஊரைச்சேர்ந்தவன் எனக் கேட்டதற்கு,
நான் சென்னைக்கு அருகே உள்ள ஊரைசேர்ந்தவன் என 
சொன்னேன். என்று சொன்னேன் அல்லவா, அதற்கு அவர் சொன்னார்.அதாங்க. நீங்க மரியாதை இல்லாமல் பேசுறீங்க. 
என்று.

அதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்துவிட்டேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.அப்படி என்ன மரியாதை இல்லாமல் பேசிவிட்டேன் நான். வந்தவரை அன்போடு வரவேற்று உட்காரச்சொல்லியிருக்கிறேன்.அவர் கேட்ட 
கேள்விகளுக்கு விடை அளித்து அவருக்கு உதவியிருக்கிறேன்.
அப்படி இருந்தும் நான் மரியாதை தரவில்லை என்கிறாரே என
குழப்பதோடு இருந்தபோது, அவர், நீங்கள் சொன்ன
ஆவணங்களோடு வந்து பார்க்கிறேங்க. என்று கூறி 
விடைபெற்று சென்றார்.

அவர் சென்ற பிறகு நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு 
நின்றிருந்த வங்கி ஊழியர் ஒருவர் (உள்ளூரைச்சேர்ந்தவர்) 
என் அருகில் வந்தார். அவரிடம் நான் என்ன இவர் இப்படி 
சொல்லிவிட்டு செல்கிறார்?நான் மரியாதையோடு தானே 
அவரிடம் நடந்துகொண்டேன்.என்றேன். 

அதற்கு அவர் சொன்னார். சார். நீங்கள் பேச்சை 
முடிக்கும்போது மரியாதையோடு பேசவில்லை என அவர் 
நினைக்கிறார். என்றார்.

சரி. பிறகு பார்க்கலாம். நல்லது. என்றுதானே சொன்னேன்
இதில் மரியாதை குறைவு எங்கே இருக்கிறது எனக் கேட்டதற்கு
அவர் சொன்னார். இல்லை சார். நீங்கள் அவரிடம் சரிங்க.பிறகு
பார்க்கலாங்க. என சொல்லியிருக்கவேண்டும். இங்கேயெல்லாம் அப்படித்தான் சொல்வார்கள். நீங்கள் அப்படி சொல்லாமல், 
சரி.பிறகு பார்க்கலாம் என சொன்னதால் அவர் அதை மரியாதை
குறைவாக பேசியதாக நினைக்கிறார். என்றார்.

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் மரியாதை
கொடுத்து பேசுவதாக நினைத்துப் பேசியது இங்கே மரியாதை
குறைவாய் தோன்றுவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

எங்கள் ஊர் பக்கத்தில் பேச ஆரம்பிக்கும்போது மரியாதை
கொடுத்துத்தான் பேசுவோம்.ஆனால் பிறகு பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த ங்க என்பதை சேர்த்து சொல்வதில்லை.
காரணம் ஆரம்பிக்கும்போதே மரியாதை கொடுத்துவிட்டதால்
பின்னால் பேசும் வார்த்தைகளுக்கும் அவை பொருந்தும் என்ற
எண்ணத்தால் அவ்வாறு பேசுவதில்லை என நினைக்கிறேன்.
(தொக்கி நிற்கிறது என்று சொல்வது போல!)

அப்புறம்தான் தெரிந்தது கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார
வழக்கு தனித்தன்மை வாய்ந்தது என்றும் அதை கோயம்புத்தூர்
பாஷை என்றும் சொல்வார்கள் என்று.

நமக்குத்தான் எல்லாம் தெரியும் நினைத்தது தவறு என அந்த
நிகழ்வின் மூலம் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு மிகவும்
கஷ்டப்பட்டு அந்த கோவை வட்டார பேச்சு முறையைக் கற்றுக்
கொண்டேன். கஷ்டப்பட்டு என சொல்வதன் காரணம் 25 ஆண்டுகள் பேசியமுறையை  உடனே மாற்றுவது கடினம் என்பதால்.

(சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 23 ஆண்டுகள் கழித்து
அதாவது 1993 ல் சென்னை அமைந்தகரையில் இருந்த எங்களது
வங்கியின் கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் என்னிடம் பேச எனது  அறைக்கு வந்தார்.

பேசிமுடித்து கிளம்பும்போது, சார். ஏனுங்க.நீங்க 
கோயம்புத்தூருங்களா?’ என்று கேட்டார், ஏனுங்க, அப்படி 
கேட்கிறீங்க?’ என்றதற்கு அவர்உங்கள் பேச்சை வைத்து 
கேட்டேனுங்க. என்றபோது நான் கோயம்புத்தூர் பாஷையில் 
பட்டம் பெற்றது போன்ற உணர்வைப் பெற்றேன்!)

சொன்னது போலவே, அந்த விவசாயி இரண்டு நாட்கள் கழித்து
நான் சொல்லியிருந்த சிட்டா மற்றும் அடங்கல் 
ஆகியவைகளோடு வந்தார். அவருக்கு அந்த கடன் விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது எனத் தெரியாததால் அதை பூர்த்தி 
செய்ய உதவினேன். முன்பு நான் பெற்ற அனுபவத்தால், மிகவும் ஜாக்கிரதையாக (மரியாதையோடு) அவரிடம் பேசினேன்.

பிறகு அவரது தோட்டத்தைப் பார்க்க என்னை அழைத்து செல்ல
ஒரு டாக்ஸியையும் ஏற்பாடு செய்து வந்திருந்தார்.
(அப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 
ஒரு ரூபாய் 10 காசுகள் தான்!) கிளை மேலாளரிடம் அனுமதி 
பெற்று அவரோடு அவரது தோட்டத்திற்கு சென்றேன்.

தொடரும்