செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 12



வங்கியில் கள அலுவலராக பணியாற்றியபோது
வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் எனக்கு நிறைய
பாடத்தைக் கற்றுத்தந்தது என்றாலும், கிளையின் மேலாளராக பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவம் அதைவிட அதிகமான
அளவுக்கு பாடத்தை சொல்லிக்கொடுத்தது என்பதுதான் உண்மை.  

அப்போது நான் சென்னையில் உள்ள ஒரு கிளையில்
சார்பு மேலாளராக (Sub Manager) பணியாற்றிக்கொண்டு இருந்தேன்.
ஒரு நாள் எங்கள் மண்டலத்தின் உதவிப் பொது மேலாளர்
தொலைபேசியில் என்னை கூப்பிட்டு, உங்களை ஒரு மாவட்டத்
தலைநகரில் உள்ள ஒரு கிளைக்கு மேலாளராக மாற்றல் செய்ய இருக்கிறோம். மேலாளராக செல்ல விருப்பமா?’ எனக் கேட்டார்.
வங்கிக் கிளைக்கு, அதுவும் மாவட்டத் தலைநகரில் உள்ள கிளை
என்றதும் சற்றும் யோசிக்காமல் உடனே சரி.என சொல்லிவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து எனக்கு தலைமை அலுவலகத்திலிருந்து
மாற்றல் ஆணை வந்தபோதுதான் தெரிந்தது. நான்
பணியாற்றவேண்டியை கிளை, எனது மாவட்டத்தின் தலைநகரில்
தான் என்று. படித்து முடித்து 14 ஆண்டுகள் வேறு மாநிலங்களிலும், தமிழகத்தின் வேறு மாவட்டங்களிலும் பணியாற்றிய பின், நான் கேட்காமலேயே எனது மாவட்டத்தில் பணி ஆற்ற வாய்ப்பு
கிடைத்ததால் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

வங்கி குறிப்பிட்ட கடைசி நாளுக்கு முன்பாகவே சென்று அந்த
கிளையில் சேர்ந்து, அங்கிருந்த மேலாளரை விடுவித்தேன். அந்த
கிளை ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆறுமாதங்கள் தான் ஆகி இருந்தது.
அந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கிளையும் அதுதான்.
மாவட்டத்தில் வேறு கிளைகள் இல்லாததால் அருகில் உள்ள 
கிளைகள் என்றால் திருச்சிக்கும் சென்னைக்கும் தான் 
செல்லவேண்டும்.

பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் வங்கியின் பெயரே புதிதாய் இருந்ததால் வங்கியை அறிமுகப்படுத்தவே எனக்கு முன்பு இருந்த
மேலாளர் சிரமப்பட்டிருந்தார்.அவர் கேரளாவை சேர்ந்தவரானாலும்  
அவரால் முடிந்த அளவுக்கு கிளையை பிரபலப்படுத்தி  நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வந்திருந்தார்.

இருந்தாலும் செய்யவேண்டிய பணிகள் அதிகம் என்பது அங்கு
சென்றதும் தான் தெரிந்தது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் வங்கி வாடிக்கையாளர்களை சந்தித்து 
அறிமுகப்படுத்திக்கொண்டேன். 

நானும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் 
அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதற்குப் பிறகு 
ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் வங்கியில் 
வாடிக்கையாளராக இல்லாதவர்களையும் சந்தித்து எங்கள் 
வங்கி பற்றி எடுத்துச் சொல்லி எங்களிடமும் கணக்கு 
துவங்க கேட்டுக்கொண்டேன்.

எனது முயற்சியால் மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள் 
வங்கிக்கு கிடைத்தனர். அவர்களது மாவட்டத்தை சேர்ந்தவன் 
என்பதாலும் தமிழில் தயக்கமின்றி பேசலாமே என்பதாலும் 
கிளைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்  எனது அறைக்கு 
வந்து செல்லாமல் இருப்பதில்லை.  

நானும் இன்முகத்தோடு எல்லோரிடமும் பேசி எனக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் 
இல்லாதவாறு பார்த்துக் கொண்டேன்.

நான் பணியில் சேர்ந்து ஆறு மாதங்களில் வங்கியின் 
வருடாந்திர ஆய்வுக்காக சென்னையிலிருந்து வங்கி 
ஆய்வாளர்கள் வந்திருந்தனர். கிளையில் ஆய்வு நடக்கும்போது 
கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களில் சிலரை அவர்கள் 
விருப்பப்படி (at random)தேர்ந்தெடுத்து அவர்கள் இருப்பிடம் 
சென்று அவர்கள் வாங்கிய கடனை சரியாக பயன்படுத்தி 
இருக்கிறார்களா என ஆய்வு செய்வார்கள்.

பண்டங்கள் (Goods) மேல் மிகைப்பற்று (Overdraft) பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கிட்டங்கி (Godown) க்கு சென்று வாங்கிய
தொகையின் மதிப்புக்குமேல் இருப்பு உள்ளதா என ஆய்வு
செய்வதுண்டு.

அவ்வாறு ஆய்வு செய்ய, உரங்களை சில்லறை விற்பனை
(Retail) செய்துவந்த ஒரு வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து
அவரது அங்காடிக்கு செல்ல விரும்பினார் வங்கிக்கு வந்திருந்த
அந்த ஆய்வுக்குழுவின் தலைவர். அவர் தேர்ந்தெடுத்த அந்த
வாடிக்கையாளர் அவரது கிட்டங்கியில் உள்ள உரங்கள் இருப்பின்
மேல் எங்கள் கிளையில் மிகைப்பற்று பெற்றிருந்தார். அவருடன்
நானும் சென்றிருந்தேன்.

நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அந்த
வாடிக்கையாளர் என்னையும், வங்கி ஆய்வாளரையும் மகிழ்வோடு
வரவேற்று அவரது கிட்டங்கிக்கு அழைத்து சென்று அங்குள்ள
இருப்பை சரிபார்க்க உதவினார்.

இருப்பை சரி பார்த்துக்கொண்டே ஆய்வுக்கு வந்திருந்த அலுவலர்
அந்த வாடிக்கையாளர் பற்றியும் அவர் எவ்வளவு மிகைப்பற்று
பெற்றுள்ளார் என்பது போன்ற விவரங்களை பற்றிக் கேட்க 
நானும் பதில்சொன்னேன்.

ஆய்வுக்கு வந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் எங்களது
உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்தது.அதைக் கேட்டுக்கொண்டு
இருந்த அந்த வாடிக்கையாளரின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு,
என்னவோ தெரியவில்லை திடீரென மறைந்து போய்விட்டது.

நாங்கள் அங்கு சென்றபோது இருந்த கலகலப்பாக பேசிய அவர்,
விடைபெற்றபோது முகத்தில் எந்த வித உணர்ச்சியுமில்லாமல்
தலையை ஆட்டி விடைகொடுத்தார். அதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் நானும் திரும்பினேன்.

தொடரும்

புதன், 24 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 11



நான் ஊருக்கு செல்லும் சமயம் பேருந்து நிலையத்திற்கு வந்து  
என்னை சந்திப்பதாக அந்த வாடிக்கையாளர் சொன்னதும், அங்கு
எதற்காக சந்திக்கவேண்டும் எனக் கேட்டேன் என்று சொன்னேன்
அல்லவா?

அதற்கு அவர் தயங்கிக்கொண்டே, தப்பாக எடுத்துக் கொள்ளவில்லையென்றால் பொங்கலுக்கு ஊருக்குப் போகும்,
உங்களுக்கு எங்கள் தோட்டத்தில் தயாரான அச்சு வெல்லம்
மூன்று கிலோ தரலாமென்று நினைக்கிறேன்.அதைக்கொண்டு
வந்து கொடுப்பதற்குத்தான் உங்களை வந்து சந்திக்க
நினைத்தேன். என்றார்.

அதைக் கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது. அதே
நேரத்தில் வருத்தமும் வந்தது. கோபம் வந்த காரணம் நான்
எதையும் எதிர்பாராது, எனது கடமையை செய்ததற்கு 'விலை'
தர நினைக்கிறாரே என்பதால். வருத்தம் வந்த காரணம்,
அதைக் கொடுத்தால் நான் வாங்கிக்கொள்வேன் என
நினைத்துவிட்டாரே என்பதால்.

(அந்த நேரத்தில் பம்ப் செட் டை ஆய்வு செய்ய சென்றபோது
காபி குடிக்க 5 ரூபாய் கொடுத்த அந்த மூதாட்டியை நினைத்துப்
பார்த்தேன். அவர் பணம் கொடுத்தது விருந்தினரை உபசரிக்கும்
நோக்கத்தில். ஆனால் படித்த அதுவும் வளரும் வழக்கறிஞரான
இவர் கொடுக்க நினைப்பதோ காரியம் நடக்க!) 

நான் வெல்லம் வேண்டும் எனக் கேட்கவில்லையே.பின் எதற்கு
சார் தரவேண்டும்? ஒருவேளை அதைக் கொடுத்தால்தான் உங்கள்
கடன் ஒப்பளிப்பு ஆகும் என நினைத்துவிட்டீர்களா? உங்களுக்கு வேண்டுமென்றால், ஊரிலிருந்து வரும்போது எங்கள் பக்கத்தில்
தயாராகும் உருண்டை வெல்லத்தை வாங்கி வரட்டுமா?’ என்றேன்
எனது கோபத்தை வெளிக்காட்டாமல்.

நான் கோபத்தில் பேசுகிறேன் என்பதை புரிந்துகொண்டு, சார்.
என்னை மன்னிக்கவேண்டும்.நீங்கள் எனக்கு கடன் பரிந்துரை
செய்ததற்காக கைமாறு செய்வதாக எண்ணி அதைத் தரவில்லை. பொங்கலுக்கு ஊருக்கு போகிறீர்களே.பண்டிகைக்கு உபயோகமாக
இருக்குமே என்ற எண்ணத்தில் தர நினைத்தேன்.மற்றபடி தவறாக எண்ணாதீர்கள். என்றார்.

நான் கேட்காதபோது, நீங்கள் கொடுப்பதை வேறெந்த விதத்தில் எடுத்துக்கொள்வது? உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்வேன்.
நீங்களும் வளரும் வழக்கறிஞர். நானும் வங்கியில் புதிதாய்
பணியைத் தொடங்கியவன். என் போன்ற இளைஞர்களை
உங்களுக்கு பணி விரைவாக நடக்கவேண்டும் என்ற உங்கள்
சுய நலத்திற்காக இதுபோல் ஏதேனும் கொடுத்து,
கெடுத்துவிடாதீர்கள்.

இன்றைக்கு நீங்கள் அன்போடு தரும் வெல்லத்தை இப்போது
நான் வாங்கிக்கொண்டால், வரும் நாட்களில் கடன் பரிந்துரை
செய்யும்போது உங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் வேறு
ஏதாவது தரமாட்டார்களா என்ற நினைப்பு எனக்கு வரலாம்.

அந்த நினைப்பே பின்னால் ஏதாவது கொடுத்தால்தான் கடன்
பரிந்துரை செய்யமுடியும் என்ற நிபந்தனை விதிக்கும் அளவுக்கு
என்னை மாற்றிவிடலாம். எங்கள் வங்கியில் நான் செய்கின்ற
பணிக்கு எனக்கு தகுந்த சம்பளம் தருவதால், அவ்வாறு மாற
நான் விரும்பவில்லை.எனவே நீங்கள் தயை செய்து என்னை
பேருந்து நிலையத்தில் வந்து சந்திக்கவேண்டாம்.தங்களுடைய
அன்புக்கு நன்றி. என்று சற்று காட்டமாகவே சொன்னேன்.

அவருக்கு முகம் சிறுத்து என்னவோ போல் ஆகிவிட்டது. உடனே
நான் வருகிறேன் சார். எனக்கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.
நான் கூட எனது மறுப்பை வேறுவிதமாக காட்டியிருக்கலாமோ
என நினைத்தேன். இருந்தாலும் இதை முளையிலேயே
கிள்ளியதுதான் சரி என எண்ணி இருந்துவிட்டேன்.

நான் நினைத்தபடி அவர் அதை கொடுக்க நினைத்தது அவருடைய
கடனை பரிந்துரை செய்ததற்கு, கைமாறாகத்தான் என்பது பிற்பாடு ஊருக்குபோய் வந்ததும் தெரிந்தது. என்னிடம் பேச வருமுன்பே,
அவர் அந்த இன்னொரு கிளையின் மேலாளர் வீட்டுக்கும் சென்று வெல்லத்தை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் என்று. மேலாளருக்கு கொடுத்திருக்கிறோமே கள அலுவலருக்கும் தராவிட்டால் பணி
நடக்காது என நினைத்திருப்பார் போல.

வங்கியில் பின்னாட்களில் மேலாளராகவும், வட்டார மேலாளராகவும் பணியாற்றியபோது இது போன்ற சோதனைகள் ஏற்பட்டதுண்டு.
நல்லவேளையாக அந்த மாயவலையில் நான் சிக்கிக்கொள்ளவில்லை.
கையூட்டு பெறுவோர் மற்றும் தருவோர் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். அது பற்றி பின்னர் எழுதுவேன். 


தொடரும்


வெள்ளி, 19 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 10




அப்போதெல்லாம் எங்கள் வங்கியில் கள அலுவலர்கள் குறைவாக
இருந்ததால், ஒரு அலுவலரே ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளில்
உள்ள வேளாண்மைக்கடன் அலுவல்களை பார்த்துக்கொள்ளப்
பணிப்பது வழக்கம்.

அதுபோல எனக்கும், நான் வேலை பார்த்த கிளையிலிருந்து
29 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எங்களது வங்கியின்
இன்னொரு கிளையில் உள்ள வேளாண்மைக் கடன்களையும்
பார்த்துக்கொள்ள பணிக்கப்பட்டிருந்தது.

எனக்காவது பரவாயில்லை.கூடுதலாக ஒருகிளைதான்
ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் கர்நாடகாவில் உள்ள தென் கன்னட
மாவட்டத்தில் பணி ஆற்றிய என் போன்ற கள அலுவலர்களுக்கு 
5 முதல் 6 கிளைகள் தரப்பட்டிருந்தன.

நான் எனது பணித்தலைமையிடத்தில் (Head Quarters) 
வார நாட்களில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் 
கிளைக்கு வரும் விவசாயிகளுக்கு கடன் தரும் பணியைக் கவனித்துக்கொண்டும்,செவ்வாய்க்கிழமை மட்டும் இன்னொரு 
கிளைக்கு சென்று அங்கு வரும் விவசாயிகளுக்கு கடன் தரும் 
பணியை செய்து கொண்டு இருந்தேன்.

அப்படி ஒரு நாள் அடுத்த கிளைக்கு  சென்றபோது, அங்கு 
எனக்காக காத்துக்கொண்டு இருந்த இளைஞரை சந்தித்தேன்.
அவரை அந்த கிளையின் மேலாளர் அவரை ஒரு இளம் 
வழக்கறிஞர் என்றும்  அதே நேரத்தில் வேளாண்மையும் 
செய்பவர்  என்றும் அறிமுகப்படுத்தினார். 

அவருக்கு கரும்பு பயிரிட கடன் வேண்டும் என்றும், 
அதற்காக அவரதுபண்ணையை பார்வை இட வேண்டும் 
எனக் கேட்டுக்கொண்டார். என்னென்ன ஆவணங்கள்
கொண்டுவரவேண்டும் என முன்பே வந்து மேலாளரிடம் 
கேட்டு சென்றிருந்ததால் அவைகளைக் கொண்டு வந்திருந்தார்.

அவரிடம் தேவையான விவரங்களை கேட்டறிந்து விட்டு, 
அவரோடுஅவரது பண்ணையைப் பார்வையிட மேலாளருடன் 
சென்றேன். அந்த பண்ணைக்கு சென்றபோது வயலில் முன்பு 
பயிரிட்டு இருந்த கரும்பு வெட்டப்பட்டு அடிக்கட்டையில் 
புதுத் தளிர் விட்டிருந்தது.

அவர் கடன் கேட்டது மறுதாம்பு (Ratoon) பயிருக்கு. (கரும்பை
வெட்டும்போது, திரும்பவும் புதிதாய் கரும்புப் புள்ளுகளை
(Sugarcane setts)  நடவு செய்வதால் ஏற்படும் செலவைக்
குறைப்பதற்கு அடியில் கொஞ்சம் விட்டு வெட்டுவார்கள். 
அதில் துளிர்த்து வரும் பயிரைத்தான் மறுதாம்பு என்பார்கள்.
அது பற்றி எழுதி உங்களை சலிப்பூட்ட விரும்பவில்லை. )

மொத்தம் எவ்வளவு ஏக்கரில் மறுதாம்பு இருக்கிறது என்பதை
உறுதி செய்து கொண்டு திரும்பும்போது, அந்த வயலில் வெட்டிய
கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் அங்கேயே பாகு 
காய்ச்சி அச்சு வெல்லம் தயார் செய்துகொண்டு இருந்ததைப் 
பார்த்தேன்.

ஏன் சர்க்கரை ஆலைக்கு அனுப்பாமல் வெல்லம் தயாரிக்கிறீகள்?’
எனக் கேட்டதற்கு அப்போது வெல்லத்திற்கு கூடுதல் விலை
கிடைத்ததால் சர்க்கரை ஆலையில் கரும்பைத் தர பதிவு
செய்யவில்லை என்று சொன்னார்.

என்னோடு வந்த அந்த கிளை மேலாளர் அச்சுவெல்லம் தயாரிப்பதை அதுவரை பார்த்ததில்லையாம்.ஆதலால் அதைப்பார்த்து 
ஆச்சரியப்பட்டு அதிக நேரம் அது பற்றி விசாரித்துக்கொண்டு 
இருந்தார்.

கிளைக்கு திரும்பும்போது, அந்த வழக்கறிஞர்/விவசாயி கடன் 
எப்போதுகிடைக்கும்?’ எனக் கேட்டார்.அதற்கு நான் பொங்கல் விடுமுறைக்குஊருக்கு போக இருப்பதால் இன்றே எனது 
பரிந்துரையை மேலாளரிடம் கொடுத்துவிடுவேன். அவரது 
பரிந்துரையுடன் தலைமை அலுவலகம் அனுப்பினால் இன்னும் 
ஒரு வாரத்தில் ஒப்பளிப்பு (Sanction) வந்துவிடும்.’என்றேன்.

அவரும் சரி என்று திரும்பிவிட்டார்.எனது பரிந்துரையை எழுதி
மேலாளரிடம் கொடுத்துவிட்டு, நானும் எனது தலைமையகம்
திரும்பிவிட்டேன்.மறு நாள் மதியம் எனது பணியிடத்தில் 
அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அந்த 
வழக்கறிஞர் வந்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். அவரது கடன் விண்ணப்பத்திற்கான 
எனதுபரிந்துரையை, ஆய்வு செய்த அன்றே கொடுத்துவிட்டதால் திரும்பவும்எதற்காக வருகிறார் என்று எனக்கு புரியவைல்லை.

அவரைப் பார்த்ததும். ஏது சார் இந்த பக்கம்? நான் நேற்றே எனது
ஆய்வு அறிக்கையைக் கொடுத்துவிட்டேனே.வேறு ஏதாவது பிரச்சினையா?’என்று கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை சார். அதெல்லாம் ஒன்றுமில்லை.
இங்குள்ள நீதிமனறத்தில் ஒரு வழக்குக்காக வாதாட வந்தேன்.
அப்படியே உங்களையும் பார்த்துப் போகலாம் என வந்தேன். 
என்றார்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பொங்கல் 
விடுமுறைக்காகஉங்கள் ஊருக்கு பேருந்தில்எங்கள் ஊர் 
வழியாகத்தானே செல்லவேண்டும். நீங்கள் எப்போது எந்த 
பேருந்தில் செல்வதாக இருக்கிறீர்கள்?’ என்றார்.

எதற்காக கேட்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு நீங்கள் வரும் 
சமயம் தெரிந்தால் உங்களை எங்கள் ஊர் பேருந்து 
நிறுத்தத்தில் சந்திக்கலாம் என்பதற்காகத்தான் கேட்டேன். 
என்றார்.

இங்குதான் பார்த்துவிட்டீர்களே.அங்கு எதற்குப் 
பார்க்கவேண்டும்?’ என்றேன்.


தொடரும்