திங்கள், 27 மே, 2013

வாடிக்கையாளர்களும் நானும் 49



கையூட்டு தந்து காரியங்களை முடித்துக் கொள்வது என்பது மற்ற அரசுத் துறைகளில் இருப்பதுபோல் பொதுத்துறை வங்கிகளிலும் இருக்கிறது என்பது உண்மை.

அதற்காக பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் எல்லோரும் கையூட்டு பெறுகின்றனர் என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. ஆனால் வங்கிகளிலும் சில கருப்பு ஆடுகள் உண்டு என்பதை உரத்த குரலில் சொல்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.

வாடிக்கையாளர்கள் தாங்களே மனமுவந்து தரும் அன்பளிப்பு என்று அதை சிலர் சொல்லி சமாளித்தாலும், கையூட்டு என்பதை வெகுமதி, அன்பளிப்பு என எந்த பெயரிட்டு அழைத்தாலும் அது முறையாக ஈட்டாத வருவாய் என்பதை யாரும் மறைக்கமுடியாது.

பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிவோர்களுக்கு இன்றைய நிலையில் சம்பளம் அதிகம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் பெறுவது ஒன்றும் குறைந்த சம்பளம் அல்ல.

ஆனால் அவர்களில்  ஒரு சிலர் பேராசையால், தாங்கள் வங்கிகளில் ஊதியம் பெற்று செய்கின்ற பணிகளுக்குக் கூட, வாடிக்கையாளர்களும் ஏதாவது தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய ஒன்றே. அதற்கு காரணம் அதைத் தர சிலர் தயாராகவும்  இருக்கிறார்கள் என்பதும் தான்!  

அதனால் வங்கியில் கையூட்டை எதிர்பார்ப்போரை மட்டும் குறை சொல்வது தவறு. அதைத் தந்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்ள விரும்பும் சில வாடிக்கையாளர்களையும் குறை சொல்லத்தான் வேண்டும்.

கையூட்டு பெறுவோர் மற்றும் தருவோர் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். அது பற்றி பின்னர் எழுதுவேன் என்று வாடிக்கையாளர்களும்நானும் 11 இல் சொல்லியிருந்தேன். அதைப்பற்றி எழுதலாமென எண்ணுகிறேன்.

என்னுடைய பணிக்காலத்தில் என்னிடம் கையூட்டு தந்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்ள சிலர் முயற்சித்ததுண்டு. ஆனால் நான் அதற்கு இசையவில்லை. அந்த நிகழ்வுகளில் ஓரிரண்டை இங்கே பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். 

அதுவரை சார்பு மேலாளராக (Sub Manager) பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு மாவட்டத் தலைநகரில் இருந்த கிளையில் முதன் முதலாக மேலாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

புதிய பணியில் உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி என்னைப் பார்க்க வந்தார். அவரது பண்ணையை மேம்படுத்தவும், கிணறு வெட்டி பம்ப் செட் வைக்கவும் வேண்டியிருப்பதால் வங்கியில் கடன் கிடைக்குமா என விசாரிக்க வந்திருப்பதாக சொன்னார்.

அவரை அமர சொல்லி, அவரது இருப்பிடம்,பயிரிடப்படும் நிலத்தின் மொத்த பரப்பளவு, பயிரிடப்படும் பயிர்கள் போன்ற தகவல்களைக் கேட்டறிந்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் பெறும் கடனுக்குக்காக அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்ற மற்றும் கிணறு அமைய இருக்கின்ற நிலத்தை ஈடாக தர வேண்டியிருக்கும்.

எனவே முதலில் உங்கள் நிலத்தின் தாய் பத்திரத்தோடு, சிட்டா அடங்கல் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் பெற்று வாருங்கள். அவைகளை எங்கள்  வங்கியின் வழக்கறிஞரிடம் கொடுத்து அவரின்  சட்ட கருத்தை (Legal Opinion) அறிந்து, பின் மேற்கொண்டு ஆவன செய்வோம். என்றேன்.

அதற்கு அவர், சார்.இதோ தாய் பத்திரம் கொண்டு வந்திருக்கிறேன். பாருங்கள்.என்று சொல்லி ஒரு கட்டு ஆவணங்களை என்னிடம் கொடுக்க முற்பட்டார்.

உடனே நான் இவைகளை நான் பார்ப்பதைவிட எங்கள் வழக்கறிஞர் பார்ப்பது தான் நல்லது. எனவே . நான் சொன்ன ஆவணங்களோடு வாருங்கள். அவைகளை வழக்கறிஞருக்கு அனுப்பி ஆவன செய்கிறேன். என்றேன்.

அப்படி சொல்லியும் கேட்காமல் அவர் அவைகளை என்னிடம் வலுக் கட்டாயமாகக் கொடுத்தார். சரி அவர் திருப்திக்காக  அந்த ஆவணங்களைப் பார்ப்போமே என்ற எண்ணத்தோடு அதைப் பிரித்தேன்.


தொடரும்

13 கருத்துகள்:

  1. ஆவணங்கள் என்ற பெயரில் பணம் கொடுத்திருப்பாரோ ? பிறகு என்ன ஆச்சி அறியும் ஆவலில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! நீங்கள் யூகித்தது சரியா தவறா என்பது அடுத்த பதிவில்.

      நீக்கு
  2. ஆவணங்களில் இடையே "விசயம்" இருந்ததா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! திருமதி சசிகலா அவர்களுக்கு சொன்ன பதில் தான் தங்களுக்கும்!

      நீக்கு
  3. எல்லோரும் நினைப்பது சரியாகவே இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  4. வலுக் கட்டாயமாகக் கொடுத்தால்
    அது கையூட்டாகத்தான் இருக்க வேண்டும் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. In today’s education there is no room for moral values. Openly we hear our adults proudly saying, I just gave the money and got the things done. So, from childhood we are grown to think that bribing is the way of life. It is not a crime and nothing to be ashamed of. Still there are odd ones around, that is why we still get rain some times. Waiting to see how you overcome the temptations.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! கொடுப்பார் இல்லையேல் வாங்குவோர் இருக்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வேலை சீக்கிரம் முடிய கையூட்டு தர தயாராக இருப்பது தான் வேதனைப்படவேண்டிய விஷயம்.இது ஒழிய குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இது நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. நான் எப்படி இந்த ‘பொறி’யிலிருந்து தப்பித்தேன் என்பது அடுத்தடுத்த பதிவுகளில்.

      நீக்கு

  6. தொடக்கத்தின் முடிவை தெரிந்து கொள்ள, அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. வருகைக்கு நன்றி!. விரைவில் எனது பதிவுகளை உங்கள் திரட்டியில் இணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு