புதன், 10 ஜூலை, 2013

அரசு நிறுவனங்கள் உண்மையிலேயே மக்களுக்கு உதவியாக இருக்கின்றனவா?




நேற்று (08-07-2013) காலை சென்னை முகப்பேரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation) சார்நிலை  வட்டார அலுவலகத்திற்கு (Sub Regional Office) செல்ல வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

ஒரு தனியார் நிறுவனத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றிய எனது மகள், தனது வேலையை பணிதுறப்பு (Resignation) செய்துவிட்டு வெளி நாடு செல்லுமுன் அவளுக்கு வரவேண்டிய சேமிப்பு வைப்புத் தொகையையும், ஓய்வூதியத்தொகையையும் பெற, அவள் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒரு விண்ணப்பம் கொடுத்து சென்றிருந்தாள்.

அந்த நிறுவனம்,அந்த விண்ணப்பத்தை சரி பார்த்து, தங்களின் சான்றொப்பத்துடன் (Attestation) என் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அதோடு அவர்களது பணி தீர்ந்தது. சேமித்த பணத்தை திரும்பப்பெற நாம் தான் EPF அலுவலகத்தில் ஒப்புவிக்கவேண்டும். எனவே,என் மகளின் சார்பாக அதை கொடுக்க அந்த அலுவலகம் செல்லவேண்டியதாயிற்று.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மய்ய அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் ஒரு அரசு நிறுவனம். அரசு நிறுவனங்கள் எப்படி இயங்கும் என்பது தெரியும் ஆதலால், எப்படி இந்த விண்ணப்பத்தை சேர்ப்பது, சேர்த்தால் எவ்வளவு நாட்களில்/மாதங்களில் வரவேண்டிய பணத்தைத் தருவார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது.

எங்கள் வங்கியில் முது நிலை மேலாளராக பணிபுரியும் நண்பர் திரு இரவீந்தரன் அவர்களிடம் சொன்னபோது, அவர் தானும் என்னுடன் வருவதாக கூறினார்.

இருவரும் காலை 10 மணிக்கு முன்பு அங்கு சென்றதும், அங்கு வாயிலில் நின்றுகொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்முகத்தோடு வரவேற்று என்ன வேண்டும் என்று கேட்டார். அரசு அலுவலகத்தில் தந்த, அந்த வரவேற்பே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

நாங்கள் காரணத்தை சொன்னதும் அங்குள்ள இருக்கையில் அமர 
சொல்லிவிட்டு,  10 மணிக்கு விண்ணப்பத்தை தரலாம் என்றார். அதற்குள் என் நண்பர், ,நாம் இங்கு காத்திருப்பதை விட வட்டார வருங்கால வைப்பு நிதி 
ஆணையர் (Regional Provident Fund commissioner) அவர்களை சந்திக்கலாமே?’ என்றார்.

சரி. அப்படியே செய்வோம். என்றேன்.பிறகு அவர் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அவரது அவரை சந்திக்க சென்றோம். அவரது தனி உதவியாளர் எதற்காக வந்திருக்கிறோம் என கேட்டுவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தார்.

உள்ளே சென்றதும் எங்களை இன்முகத்தோடு வரவேற்று உட்கார சொல்லிவிட்டு என்ன வேண்டும்?’ கேட்டார் அந்த இளம் வயது ஆணையாளர். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்தை சொன்னதும் எங்கே அந்த விண்ணப்பத்தை கொடுங்கள் பார்ப்போம்?’ என்றார்.

விண்ணப்பத்தை கொடுத்ததும், எல்லா தகவல்களும் சரியாக தரப்பட்டு இருக்கிறதா என பார்த்துவிட்டு, பின் அவரது மடிக்கணினியிலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த எனது மகளின் கணக்கையும் சரி பார்த்தார்.

பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறது. எனக் கூறி, அவரது உதவியாளரைக் கூப்பிட்டு, இதை சம்பந்தப்பட்ட பிரிவில் கொடுத்து, இவர்களுக்கு பெறுகை ஒப்பம் (Acknowledgement) பெற்று கொடுங்கள். என்றார். அதையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தோம் நானும் என் நண்பரும்.

பின்பு பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார். அவரது அலுவலகத்தில் வரும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு எல்லாம் சரியாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், ஒரு சில விண்ணப்பங்களுக்கு மட்டும் பட்டுவாடா செய்ய 10 நாட்கள் ஆவதாக சொன்னார். அது கூட விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரியாக இல்லாததன் காரணத்தால்தான் என்று சொன்னபோது நாங்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டோம்.

அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி சொல்லி, வெளியே வந்தபோது அவரது உதவியாளர் என்னிடம் பெறுகைஒப்பம் அட்டையைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு அவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, வெளியே வந்தோம்.

வரும் வழியில் அந்த ஆணையர் தானே விண்ணப்பத்தை சரிபார்த்து ஆவன செய்தது பற்றியும், அந்த அலுவலகம் செயல்படுவது பற்றியும் பேசிக்கொண்டே வந்தோம்.

இது போன்று ஒவ்வொரு அலுவலகத்திலும் அலுவல்கள் செயல் பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்ற எண்ணம் அப்போது வந்தது உண்மை. .

சொன்னால் நம்பமாட்டீர்கள். மதியம் 12 மணிக்கு அந்த அலுவலகத்திலிருந்து எனக்கு வந்த தொலை பேசி செய்தியில் எனது மகளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணத்தைத் திருப்பித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும்,நாளை (அதாவது இன்று) அல்லது மறுநாளுக்குள் என் மகளின் வங்கிக் கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும் என்று அவர்கள் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் போன்று மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணி துரித சேவை செய்யும் அரசு நிறுவனங்கள் இன்னும் பல இருக்கலாம். அவைகளின் எண்ணிக்கை அதிகமாகவேண்டும் என்பதுதான் எனது ஆசை.

இந்த நிகழ்வுக்குப் பின் ஒன்றை தெரிந்து கொண்டேன்.
நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது.

அப்படி நினைக்க காரணம் ஏற்கனவே BSNL லிலும் தென்னக இரயில்வேயிலும் பெற்ற அனுபவம் தான்!
     
பி.கு: வழக்கில் நாம் உபயோகப்படுத்தும் சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ்ச்சொல் தெரியாதவர்களுக்கு அவை தெரியட்டுமே என்பதால் சில இடங்களில் அவைகளை கொடுத்திருக்கிறேன்.தெரிந்தவர்கள் பொறுத்தருள்க.



24 கருத்துகள்:

  1. உங்கள் அனுபவம் ஒரு புது அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. தங்கள் பதிவைப் படித்ததும் ,நான் மிகவும் வியந்து போனேன்!வாழ்க அவர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! தங்களது பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.

      நீக்கு
  3. அன்பரே! இது ஒரு கனவு நிகழ்வல்லவே? நீங்கள் கூறியது போல இதன் எண்ணிக்கை அதிகமாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சந்தர் அவர்களே! நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன் அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது.

      நீக்கு
  4. நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது.


    வியக்கவைத்த பகிர்வுகள்..1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  5. அரசு நிறுவனங்கள் தரும் சேவை என்பது, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளின் சேவை எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்த கருத்தினை விளக்கும் தங்கள் அனுபவ பதிவினைத் தந்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சேவை புரியும் எண்ணத்தைப் பொறுத்தே வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

      நீக்கு
  6. சார் சத்தியமாக நம்பமுடியவில்லை ! எந்த கிம்பளமும் கிடைக்காத தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்தில் கூட வேலை நடப்பதில்லை .ஆனால் காசு புழங்கும் பி எப் அலுவலகத்தில் எப்படி?நெவெர் சாத்தியமேயில்லை உங்கள் வங்கித்துறை மட்டுமென்ன ? ஆனால் உங்கள் அனுபவமென்று சொல்கிறீர்கள் நம்புகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மின்னல் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வங்கிகளில் கூட இவ்வளவு விரைவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை தருவதில்லை என்பது உண்மைதான். இந்த நிகழ்வை என்னாலும் நம்பமுடியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் வட்டார வருங்கால வைப்பு நிதி ஆணையர் போன்றோர் இருக்கும்போது இது சாத்தியமே!

      நீக்கு
  7. பதில்கள்
    1. எனக்கும் தான்!
      வருகைக்கும நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  8. // நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை //

    உண்மைதான்.இது போன்ற அனுபவங்கள் எல்லா அலுவலகங்களிலும் கிடைத்தால்......?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இது போன்ற அனுபவங்கள் இன்னும் கிடைக்கும் என நம்புவோம்.

      நீக்கு
  9. ஆச்சர்யமாக இருக்கிறது?! இப்படிக்கூட அரசு அலுவலகங்கள் இருக்கின்றனவா? அந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு கவிப்ரியன் அவர்களே!உங்களின் வாழ்த்துக்களுக்கு அவர்கள் தகுதியானவர்களே!

      நீக்கு
  10. // நாம் நினைப்பதுபோல் எல்லா அரசு அலுவலகங்களும் இல்லை என்பதுதான் அது. //

    அலுவலகங்களில் அங்கு மேல்பதவி வகிப்பவர்களாலேயே, எந்தவித மாற்றங்களும் நடைபெறுகின்றன. அந்த அலுவலக மேலாளருக்கு தாங்கள் கடிதமாகவும் நன்றியைத் தெரிவித்திருந்தால் மிகவும் திருப்தியடைந்திருப்பார்கள். நான் வெளிநாடு வந்தபொழுது நான் வேலைபார்த்த அலுவலகத்திலேயே வைப்புநிதி முழுமையும் கொடுத்துவிட்டார்கள். நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் அந்த நிறுவன ஆணையருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவிக்காத குறையை, எனது பதிவு செய்துவிட்டது. எனது பதிவைப் படித்த ஒரு வெளி நாட்டு அன்பர் அதை அப்படியே மின்னஞ்சல் மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். உடனே அந்த உயர் அலுவலர், யார் அந்த கணக்கை விரைவாக (3 மணி நேரத்திற்குள்) முடிக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களை பாராட்டி கடிதம் தந்திருக்கிறார். இந்த நிகழ்வை எனது நண்பர் மூலம் அறிந்த நான் ஆணையர் அவர்களிடமும் அவரது உதவியாளரிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர்கள் எனது செயலுக்கு நன்றியை தெரிவித்தார்கள்.

      நீக்கு
  11. தாங்களும் தங்களது மகளும் ஏதோ புண்ணியம் செய்து இருப்பீர்கள்.அதனால் தங்களுக்கு நல்லதே நடந்துவிட்டது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தேவதாஸ் SNR அவர்களே! இதுபோல் எல்லா துறைகளிலும் நடக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

      நீக்கு
  12. Just unbelievable; I had to struggle to get my PF dues from Calcutta in the year 2007 following my retirement from The Peerless Gen Finance and Investment Co Ltd .The employees at the PFO at Chennai deserve all praise for the quick disposal of claims. The Regional Provident Fund Commissioner deserves special mention for as captain of the branch he has motivated the staff to render excellent service.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! இது நம்பமுடியாத நிகழ்வுதான். ஆனாலும் அத்திப்பூத்தாற்போல் இதுபோல் சில துறைகளில் பணிபுரிவோர் இருப்பது நாம் அதிர்ஷ்டமே. உண்மையில் சென்னை முகப்பேரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரையும், அவர்களை வழி நடத்தி செல்லும் வட்டார வருங்கால வைப்பு நிதி ஆணையர் அவர்களையும், எத்தனை முறை புகழ்ந்தாலும் தகும்.

      நீக்கு