புதன், 16 அக்டோபர், 2013

நினைவோட்டம் 73



வகுப்பறையில் 10 மணிக்கு இருக்கவேண்டுமே என்ற எண்ணத்தில், 
சைக்கிளை வகுப்பறை இருந்த கட்டிடம் அருகே நிறுத்திப் பூட்டிவிட்டு 
வகுப்புக்கு சென்ற நான், உணவு இடைவேளையின்போது சைக்கிளை 
எடுத்துக்கொண்டு போய் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கலாம் என 
கீழே வந்தால், சைக்கிள் அங்கே இல்லை என்றதும் பகீர் என்றது எனக்கு.

சைக்கிளை யாரோ திருடிக்கொண்டு போய் விட்டார்கள் போலிருக்கிறதே 
என நினைத்தபோது அழுகையே வந்துவிட்டது. மேற்கொண்டு 
என்ன செய்வது, யாரிடம் இதைப்பற்றிக் கேட்பது என்று யோசித்துக் 
கொண்டு நின்றபோது, கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அந்தோணி 
என்பவர் என் அருகில் வந்தார். என்ன சார்?  என்ன தேடுகிறீர்கள்?’ என்றார்.

காலையில் வகுப்புக்கு நேரமாகிவிட்டபடியால், இங்கு தான் எனது 
சைக்கிளை வைத்து பூட்டிவிட்டுப் போனேன். இடைவேளையில் சைக்கிள் 
நிறுத்தும் இடத்தில் அதை வைக்கலாம் என்று வந்தால் அதைக் காணவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’ என்று தயங்கியபடியே கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, உங்கள்  சைக்கிள் எங்கும் 
போய்விடவில்லை. சைக்கிளை அதை நிறுத்தும் இடம் தவிர வேறு 
எங்கும் நிறுத்தக்கூடாது என உங்களுக்குத் தெரியாதா? கல்லூரி 
துணை முதல்வர் அவர்களின் ஆணைப்படி நான் தான் உங்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் அருட் தந்தைகள் வசிப்பிடத்தில் (Fathers’ Lodge) 
 உள்ள அவரது அறையில் வைத்திருக்கிறேன். மாலையில் வகுப்பு 
விட்டதும் அவரது அறைக்கு சென்று அவரைப் பார்த்துவிட்டு நீங்கள் 
உங்கள் சைக்கிளை எடுத்து செல்லலாம். என்றார்.

அப்போது துணை முதல்வராக இருந்தவர்   மதிப்பிற்குரிய அருட் தந்தை 
இருதயம் (Rev Fr Irudhayam SJ)  அவர்கள்.

சைக்கிள் திருடு போகவில்லை என அறிந்ததும் சந்தோஷம் அடைந்தாலும் 
மாலையில் துணை முதல்வரைப் போய் பார்க்கவேண்டுமே என நினத்தபோது
சிறிது கலக்கமாகவே இருந்தது.அதுவரை அவரை நான் பார்த்ததில்லை. 
அவர் என்ன சொல்வாரோ என்று கவலைப்பட்டுக்கொண்டே வகுப்பில்
இருந்தேன்.  

மாலையில் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் வீட்டிற்கும், விடுதிக்கும் 
செல்ல நான் மட்டும் பலி ஆடு போல Fathers’ Lodge க்கு போனேன்.   

அங்கே கீழ் தளத்தில், மதியம் பார்த்த ஊழியர் திரு அந்தோணி நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், உங்கள் அதிர்ஷ்டம் ஃபாதர் 
வந்து விட்டார். நான்காவது தளத்தில் உள்ள அவரது அறையில் போய் 
பாருங்கள் என்றார்.

தயக்கத்தோடும், பயத்தோடும்  படியேறி, துணை முதல்வர் அவர்களின் 
அறையை அடைந்து கதவை மெதுவாக தட்டினேன். யாரது? எனக் 
கேட்டுக் கொண்டே அவர்  கதவைத் திறந்தும் முதலில் எனது கண்ணில் 
பட்டது பத்திரமாக அவரது அறையின் மூலையில் வைக்கப் பட்டிருந்த 
எனது சைக்கிள் தான்.

Good evening Father! எனது சைக்கிளை காலையில் வகுப்பறைக்கு வெளியே விட்டுவிட்டு சென்றுவிட்டேன். மதியம் அதை எடுத்து சைக்கிள் நிறுத்தும் 
இடத்தில் வைக்க சென்றபோது, அது இங்கு இருப்பதாக சொன்னார்கள்.
அதனால் தங்கள் அனுமதிபெற்று எடுத்து செல்ல வந்தேன். என்று 
தட்டுத்தடுமாறி தமிழில் சொன்னேன். அவர் தமிழர் என்றாலும் தமிழில் 
பேசக்கூட அப்போது வாய் வரவில்லை.

நான் நினைத்தது போல் இல்லை அவர் . சிரித்த முகமாகவே இருந்தார். 
ஆனால் கண்டிப்பாக பேசினார். கல்லூரியில் கண்ட இடங்களில் சைக்கிளை வைக்கக்கூடாது எனத் தெரியாதா? ஏன் வகுப்பறைக்கு அருகில் வைத்தீர்கள்?’ 
என்றார்.

 ஃபாதர். காலையில் NCC (Rifles) முடிய 8.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
அதற்குப் பிறகு மிளகுப்பாறை அருகே உள்ள வீட்டிற்கு போய் குளித்து 
உடை மாற்றி திரும்பி வரும்போது நேரம் ஆகிவிட்டபடியால், சைக்கிளை 
அங்கு வைத்து சென்றேன். அங்கு வைத்தது தவறுதான். இனி வைக்க 
மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் ஃபாதர். என்றேன்.

அதற்கு அவர், இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்பது இருக்கட்டும். 
இப்போது செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அதனால் நீங்கள் 
நாளை காலை வகுப்புக்குப் போகுமுன் கல்லூரி அலுவலகத்தில் ஐம்பது 
பைசாவை அபராதத் தொகையாகக் கட்டிவிட்டு வகுப்புக்கு செல்லலாம்.

எனக்குத் தெரியும் நீங்கள் கட்டும் இந்த அபராத தொகை உங்களது பெற்றோருடையதுதான் என்று. நீங்கள் செய்த தவறால் உங்கள் 
பெற்றோர்களுக்கு வீண் செலவு. என்ன செய்ய. அப்போதுதானே அடுத்த 
முறை இந்தத் தவறை செய்யமாட்டீர்கள். என்றார்.

பிறகு என்னுடைய பெயரையும் D.No யும் குறித்துக்கொண்டு எனது 
சைக்கிளை எடுத்துப் போகச்‌ சொன்னார்.

நன்றி ஃபாதர். என சொல்லிவிட்டு, எனது சைக்கிளை மிகவும் சிரமப்பட்டு 
நான்காவது தளத்தில் இருந்து இறக்கி எடுத்துவந்தேன். அவர் சொன்ன 
அபராதத் தொகையை  கட்டுவதை விட, அந்த சைக்கிளை, நான்காவது 
தளத்திலிருந்து, படிகள் வழியாக கீழே கொண்டு வருவதே எனக்கு 
பெரிய தண்டனை போல் இருந்தது.

மறுநாள் முதல் வேலையாக காலையில் கல்லூரிக்கு சீக்கிரம் சென்று 
அலுவலகத்தில் ஐம்பது பைசா அபராதத் தொகையை கட்டி இரசீதைப் பெற்றுக்கொண்டு வகுப்புக்கு சென்றேன்.

அன்று காலை வழக்கம்போல் ஆங்கில வகுப்பு ஆசிரியர் திரு பானுமூர்த்தி 
அவர்கள் உள்ளே நுழைந்து, வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் வருகையை 
குறிக்கு முன்பு D.No. 2292, நீங்கள் அபராதத் தொகையைக் கட்டிவிட்டீர்களா? அப்படியென்றால் அந்த இரசீதைக் கொடுங்கள். என்றார்.


அவர் குறிப்பிட்ட எண் என்னுடையது என்பதால் எனக்கு ஆச்சரியமாக 
இருந்தது  நான் அபராதம் கட்டவேண்டுமென்று இவருக்கு எப்படித் 
தெரியுமென்று.

முதல் நாள் எனது பெயரையும் D.No யும் குறித்துக்கொண்ட 
துணை முதல்வர்  அதை அன்றே அலுவலகம் அனுப்பியிருக்கிறார். 
மறுநாள் காலை முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியரிடம் அந்த தகவலை 
அலுவலகத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பதை பின்னர் 
தெரிந்துகொண்டேன்.

நான் எழுந்து சென்று அந்த இரசீதைக் கொடுத்துவந்தேன்.அதுவே நான் 
கல்லூரியில் கட்டிய முதலும் கடைசியுமான அபராதத் தொகை. 
அதற்குப் பிறகு அபராதம் கட்டும்படி நான் நடந்துகொள்ளவில்லை. 
பின்னர் கேள்விப்பட்டேன். இதுபோல் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட 
அபராதத் தொகை கல்லூரியில் ஒரு கட்டிடம் கட்ட உபயோகப்படுத்தப் 
பட்டதென்று. இந்த தகவல் உண்மையா பொய்யா எனத் தெரியவில்லை!

நினைவுகள் தொடரும்    

வே.நடனசபாபதி


24 கருத்துகள்:

  1. அன்று எப்படியெல்லாம் கண்டிப்பு, கட்டுப்பாடு...! ஒழுக்கம் என்பது நம்மையும் அறியாமல் வந்து ஒட்டிக் கொள்ளுமே...!

    இன்றைய நிலையை நினைத்தால்.............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அந்த மாதிரியான சூழ்நிலை இனி வர வாய்ப்பில்லை என்பது வருத்ததிற்குரியதே

      நீக்கு
  2. அந்தக் காலத்தில் கல்லூரிகளில் ஒழுங்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இன்று நடப்பதோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரை கொலை செய்கிறார்கள். மாலத்தின் கோலம்தான் என்னே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! அந்த காலத்தில் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறவேண்டும் என்று வெகு சிரத்தையாய் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கண்டிக்க ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாய் ஆகிவிட்டது. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் கல்வி கற்பிப்பதை ஒரு தொழில்போல் நினைக்கிறார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிப்பதை விரும்பவதில்லை. அதனால் மாணவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் ஒழுங்கீனமாக நடந்துகொள்கிறார்கள். அதனால்தான் தூத்துக்குடியில் நடந்ததுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது தாங்கள் சொன்னதுபோல் காலத்தின் கோலம்தான்.

      நீக்கு
  3. ஆம், பல கல்லூரிகளில் அபராதத் தொகை மூலம் கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அது அந்தக் காலம். இப்போதெல்லாம் கல்லூரி நடத்துபவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள அந்த அபராதம் பயன்படுவதாகக் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு செல்லப்பா யக்யசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். இப்போதெல்லாம் கல்லூரிகள் நடத்தப்படுவதே தங்களின் சுய தேவையை பூர்த்தி செய்துகொள்ளவே.

      நீக்கு
  4. அதெல்லாம் காமராஜர் காலம்..அரசன் எவ்வழியோ ஆண்டியும் அவ்வழியே.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! உண்மைதான் அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதான்.

      நீக்கு
  5. அந்த காலத்தில் மாணவர்களுக்கு ஒரு ஒழுங்கு, ஒரு பயம் வேண்டும் என்பதற்காக அபராதம் விதித்தார்கள். இப்போதோ எல்லாமே தலைகீழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வரலாற்றுப் பாடத்தில் ‘குப்தர்களின் காலம் பொற்காலம்’ என்பார்கள். அதுபோல் கல்விக் கூடங்களுக்கும் பொற்காலம் இருந்தது ஒரு காலத்தில். இப்போதோ.....?

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா

    பதிவு அருமை வாழ்த்துக்கள்..ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  7. அபராதத் தொகையில் கல்லூரிக் கட்டிடம் கட்டுவது அந்தக் காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  8. I too heared that there is builging called FINE BUILDING , but don`t know it mention whether for appearance or for fund source for the building

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்களே! அந்த கட்டிடத்தின் பெயர் அதனுடைய தோற்றத்திற்காக பெயரிடப்படவில்லை என்பதே எனது யூகம். அதனால் தான் பதிவில் அதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

      நீக்கு
  9. நிறைய சேவைகள் இன்று வியாபாரங்களாகிவிட்டன. அரசியல் முதல் ஆசிரியர் வரை. உலகத்தோடு ஒத்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை. தவறு செய்வது, சாமர்த்தியமாகப் போற்றப்படுகின்றது. ஒரு காலத்தைவிட அதற்கு முந்திய காலம் நல்லகாலமாக நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் காலத்திலும், கஷ்டப்படுபவர்களும் இருந்திருக்கிறார்கள் . எப்படியோ, உங்களுக்கு சைக்கிள் கிடைத்தாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அன்று சைக்கிளையும் திரும்பப் பெற்றேன், அதோடு எப்படி விதிகளை மதிக்கவேண்டும் என்ற பாடத்தையும் கற்றேன்!

      நீக்கு
  10. என்றோ நடந்தவைகைளை ஒரு கதை போன்று சொல்லும் நடை . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்,ஜோசப் அவர்களே!

      நீக்கு
  11. Sir, the way you described how you have brought down the cycle from the fourth floor is very interesting. I could feel the difficulty in bringing down the cycle from the top.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. So your contribution also there in the FINE BUILDING.
    அருமையான நினைவலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு Viya Pathy அவர்களே! உண்மைதான். அந்த கட்டிடம் எழும்பியதில் எனது பங்களிப்பும் உண்டு! பாராட்டுக்கு நன்றி!

      நீக்கு