சனி, 30 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 6



குகைக் கோவிலின் உள்ளே குனிந்து சென்றால் சிறிது தூரம் சென்றதும் 
நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு உயரம் உள்ள இடத்தில்,சேர்வராயப்பெருமாள் 
சிலையும் காவேரி அம்மன் சிலையும் ஒரு பீடத்தில் வைத்திருக்கிறார்கள். 
அந்த இடத்தில் மேலே உள்ள ஒரு துவாரத்தின் வழியாக வெளிச்சம் 
வருவதால், நின்று சௌகரியமாக தரிசனம் செய்ய முடிந்தது.

வருவோருக்கு அங்கு உள்ள தெய்வங்களைப் பற்றி சொல்லி, தீபாராதனை 
செய்ய ஒரு பூசாரியும் அங்கே இருந்தார். நாங்கள் நிறைய பேர் இருந்ததால், 
அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது! காரணம் 
சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

சேர்வராய மலைக்கும்,காவேரி ஆற்றுக்குமான அந்த தெய்வங்கள் 
காவல் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு, அந்த குகை இன்னும் நீண்டு செல்வதாகவும் அதன் வழியே சென்றால் காவேரி உற்பத்தியாகும் 
இடத்திற்கே செல்லலாம் என்றும் சொன்னார். அதை நம்புவதா 
வேண்டாமா எனத் தெரியவில்லை.

ஏனெனில் காவேரி உற்பத்தியாகும் இடமோ மேற்குத் தொடர்ச்சி மலையில், 
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலையில், பாகமண்டலா அருகே 
உள்ள தலைக்காவேரி என்ற இடத்தில்.இது கர்நாடகாவில் உள்ளது.ஏற்காடு 
இருப்பதோ கிழக்குத்தொடர்ச்சி மலையில். இரண்டுக்கும் இடையே 
சுமார் 400 அல்லது கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். 
நேராக சென்றால் (As the crow flies) கூட 200 கிலோ மீட்டர் தொலைவு 
இருக்கலாம். அவ்வளவு தொலைவிற்கு இந்த குகைப்பாதை செல்லுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் அவர் சொன்னதை நம்பினோம்!

கோவிலுள்ளே புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோ என்பதால் கையில் 
கேமரா இருந்தும் உள்ளே படம் எடுக்கவில்லை. அப்புறம்தான் 
கேள்விப்பட்டேன் புகைப்படம் எடுக்க தடை ஏதும் இல்லையென்று. 
அடடா! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே என நினைத்தாலும் 
கூகிளார் உதவுவார் என்பதால் கவலைப்படவில்லை. 

இதோ சேர்வராயப்பெருமாள் மற்றும் காவேரி அம்மன் இருக்கும் படத்தை உங்களுக்காக கீழே தந்திருக்கிறேன் கூகிளார் உதவியுடன்.





சேர்வராய பெருமாள் கோவிலின்  தோற்றம் அருகில் உள்ள உயரமான இடத்திலிருந்து. இதுவும் கூகிளார் உபயம்தான். 






திரும்பி வெளியே வந்ததும் சிறிது தூரம் நடந்தால் அருகில் சற்று 
உயரமான இடத்தில், சுற்றுலா பயணிகள் மலையையும், பள்ளத்தாக்கையும், 
ஏற்காடு நகரத்தையும் அருகில் உள்ள நாகலூர் என்ற இடத்தையும் கண்டு 
இரசிக்க வட்டவடிவில் பாதி திறந்த கூண்டு போன்ற அமைப்பில் 
View Tower கட்டியிருக்கிறார்கள். இதுபோல் இன்னொன்றும் சிறிது தூரத்தில் இருக்கிறது. இதில் நின்று பார்த்தால் ஏற்காடு மலையின் அழகை இரசிக்கலாம்.

இங்கு சில நண்பர்களை, நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே.





அந்த பார்வையாளர் கூண்டிலிருந்து நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த 
இன்னொரு புகைப்படம் கீழே




அந்த பார்வையாளர் கூண்டுக்கு அருகில் இருந்து நான் எடுத்த புகைப்படம் 
கீழே. தூரத்தில் தெரிவது ஏற்காடு நகரம் அருகே தெரிவது நாகலூர்.





திருமதி அய்யம்பெருமாள் எடுத்த ஒரு புகைப்படம் கீழே.





இங்குள்ள மலைகளில் பாக்ஸைட் தாது அதிகம் இருப்பதால் அருகில் 
உள்ள மலைகள் அந்த பாக்ஸைட் தாதுக்காக சுரண்டப்பட்டு பொலிவிழந்து வெறுமையாய் இருப்பதையும் காணமுடிந்தது. இன்னும் இந்த மலைகளை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. 

இப்படித்தான் கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள குதிரேமுக் என்ற மலையில் இரும்புத் தாது இருப்பதால் Kudremukh Iron Ore Company Ltd.,  
(KIOCL)  என்ற அரசு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக மலையைச் 
சுரண்டி மொட்டையடித்துக்கொண்டிருந்தது. 

சுற்றுசூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தீவிர முயற்சியின் காரணமாக, 
உச்ச நீதிமன்றம் அங்கு இரும்புத் தாதை வெட்டி எடுக்க தடை விதித்ததன் 
காரணமாக 2006 இல் அந்த அரசு நிறுவனம் தனது பணியை   
நிறுத்திக்கொண்டது. 

(அங்கு உள்ள மலை, தோற்றத்தில் குதிரையின் முகம் போன்றிருப்பதால்
அதை கன்னடத்தில் குதிரேமுக் என அழைக்கிறார்கள் 
நாம் மதுரை வேளாண்மை கல்லூரி அருகே உள்ள மலையை 
யானை மலை என அழைப்பதைப் போல.)

அந்த பார்வையாளர் கூண்டருகே சுமார் 20 மணித்துளிகள் இருந்து 
இயற்கை அழகை இரசித்து விட்டு, காலை 11.20 மணிக்கு ராஜராஜேஸ்வரி
கோவில் நோக்கி புறப்பட்டோம்.





தொடரும்








ஞாயிறு, 24 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 5



காலை 10.30 மணி அளவில் ஏற்காடு அடைந்ததும் ஏற்காடு ஏரிக்கு அருகே 
இருந்த ஒரு உணவகம் அருகே  எங்களது பேருந்துகள் நின்றன. சேலத்தில் கிளம்பும்போதே ஏற்காடு அடைந்ததும் அனைவரும் தேநீர் அருந்திவிட்டே 
எல்லா இடங்களையும் பார்க்க இருக்கிறோம் என சேலம் நண்பர்கள் 
முன்பே சொல்லியிருந்தார்கள்.

எனவே தேநீர் அருந்த நாங்கள் இறங்கி அருகே இருந்த உணவு விடுதிக்கு 
சென்றோம். அதை விடுதி என்று சொல்வதை விட விடுதியாக மாற்றப்பட்ட 
வீடு என சொல்லலாம். Ruchi என்ற பெயரில், இது போன்று சுற்றுலா 
வருபவர்களுக்கு அவர்களது தேவையான உணவை தயாரித்து தரும் 
பணியில் (Catering) நடத்தப்படும் உணவு விடுதி அது. அன்று மதிய மற்றும்  
இரவு உணவு அங்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.  

நாங்கள் எல்லோரும் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு, அனைவருக்கும்   
சுடச்சுட தரப்பட்ட  தேநீரும் பிஸ்கட்களும் கொடுத்தனர் அங்குள்ள 
ஊழியர்கள். காலையில் 7.30 மணிக்கே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு 
9.30 மணி வரை பேருந்துக்காக காத்திருந்து ஒரு மணி நேரம் பயணித்து 
வந்த எங்களுக்கு அந்த சூடான தேநீர் அமிர்தமாயிருந்தது என சொல்லவும் 
வேண்டுமா?

தேநீர் சாப்பிட்டுக்கொண்டே கிளம்பு முன் பார்த்து பேசாத நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தோம். அனைவரும் தேநீர் அருந்தியதும் நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடராமணனும், சேர்வராய பெருமாள் கோவில், 
ராஜராஜேஸ்வரி கோவில், லேடீஸ் சீட், அரசினர் ரோஜாத் தோட்டம், 
பகோடா முனை அண்ணா பூங்கா. அதன் அருகில் உள்ள ஏற்காடு ஏரி முதலியவைகளை பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாகவும்.நேரத்தை 
வீணாக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் பார்க்க இயலும் என்றும் 
சொன்னார்கள்.

தேநீர் அருந்திவிட்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்த சில நண்பர்களை,
நண்பர் அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே



இந்த சந்திப்பை நன்முறையில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் 
பாலசுப்ரமணியன், வெங்கடரமணன், பழனியப்பன் ஆகியோர் அவர் தம் துணைவியாருடன் இடமிருந்து வலமாக நிற்பதை, படமெடுத்தவரும் 
நண்பர் அய்யம்பெருமாள் தான்.






முதலில் சேர்வராய பெருமாள் கோவிலுக்கு செல்வதாக ஏற்பாடு 
செய்திருந்ததால் அங்கு செல்ல அனைவரும் பேருந்தில் எறினோம்.
அங்கிருந்து சுமார்  7 கிலோமீட்டர்  தொலைவில் தான் இருந்தது 
அந்த கோவில்.போகும் வழியில் இரண்டு கிலோ  மீட்டர் தாண்டியதும் 
இடது பக்கத்தில் இந்திய தாவர ஆய்வு நிறுவனத்தின் (Botanical Survey of India)  தாவரப்பூங்கா (Botanical Garden) இருந்தும் அங்கு நாங்கள் 
இறங்கவில்லை. மேலும் அங்கு இறங்கினால் எல்லாவற்றையும் பார்த்து 
திரும்ப நேரமாகும் என்பதால் தான் அதை எங்கள் பயண நிகழ்ச்சியில் 
சேர்க்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் நான் அங்கு இருமுறை சென்றிருக்கிறேன்.  

அந்த தாவர பூங்காவில் அரியவகை மரங்களும் ஆர்கிட் மலர்களும் 
இருந்தாலும், நாம் கண்டிராத ஒரு அதிசய தாவரம் இங்கு உண்டு.அதுதான் 
பூச்சியை உண்ணும் தாவரம் (Insectivorous Plant). இதை Pitcher Plant என்பார்கள்

பொதுவாக இவ்வகைத் தாவரங்கள் நம் நாட்டில் அதிகமாக மழை பெய்கின்ற 
வட கிழக்கு மாநிலங்களில் தான் இருக்கும். இந்த தாவரங்கள் நகரும் மற்றும் 
பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்பதற்காக கோப்பை வடிவில் இலைகளை கொண்டிருக்கும். அதனுடைய மேல் பக்கத்தில் மூடி போன்று ஒன்றும் இருக்கும்.அதனுடைய வண்ணம் மற்றும் பூந்தேன் (Nectar) ஆகியவைகளால் 
கவரப்பட்ட பூச்சிகள் அந்த திறந்த கோப்பைபோன்ற இலையில் அமர்ந்ததும், 
அதில் சுரந்திருக்கும் வழுவழுப்பான திரவத்தின் காரணமாக அவைகள் உள்ளே 
வழுக்கி விழுந்துவிடும். உடனே அந்த மூடி தானே மூடிக்கொள்ள, அந்த 
கோப்பையில் சுரக்கும் ஒரு திரவத்தில் அந்த பூச்சிகள் கரைந்துபோய் விடும்!

அந்த பூச்சி உண்ணும் தாவரத்தைப் பார்க்காதவர்களுக்காக கூகிளார் 
உபயத்தால் கீழே தந்திருக்கிறேன். 




எனவே ஏற்காடு செல்வோர் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பூங்கா இது.


நான் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, எங்கள் பேருந்து சேர்வராய பெருமாள் கோவிலை அடைந்தபோது மணி 11.20. முன்பைவிட இப்போது 
கோவிலுக்கு போகும் சாலைகளை விரிவாக்கி தார் போட்டு 
செப்பனிட்டிருப்பதால் பேருந்து விரைவாக செல்ல ஏதுவாக இருக்கிறது 
என எண்ணுகிறேன்.

இந்த சேர்வராய பெருமாள் கோவில் இருக்கும் இடம் தான் ஏற்காடு மலை சிகரத்திலேயே அதிக உயரமான இடம் என்கிறார்கள். அதாவது கடல் 
மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த கோவில். 

இது ஒரு குகைக்கோவில். சேர்வராய மலைக்கும்,காவேரி ஆற்றுக்குமான 
தெய்வங்கள் உள்ளே இருக்கும் சேர்வராய பெருமாளும் காவேரி அம்மனும் 
தான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். ஏற்காட்டை சுற்றியுள்ள 60 க்கும் 
மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த சேர்வராயன் தான் காக்கும் கடவுள் என்ற 
நம்பிக்கையும் உண்டு.

இங்கு சேர்வராய பெருமாளுக்கு ஆண்டுதோறும் மே திங்களில், 
கோலாகலமான விழா நடக்கும்போது ஆயிரக்கணக்கான மக்கள் 
கூடுவார்கள் என சொன்னார்கள்.

இந்த கோவில் பார்ப்பதற்கு ஒன்றும் பிரமாண்டமாக தெரியாது. 
சாதாரண கட்டிடம் போல் தான் இருக்கும்.

நான் சென்ற முறை வந்தபோது, முன்பக்கம் இப்போது உள்ளதுபோன்ற 
கட்டிடம் கூட இல்லை.பெருமாளை சேவிக்க சில படிகள் ஏறி சென்று  
இருண்ட சிறிய குகை வழியாக உள்ளே செல்லவேண்டும். இது ஒரு 
குகைக்கோவில் என்பதால்  குனிந்துக்கொண்டே இருட்டில் உள்ளே 
சிறிது தூரம் சென்றால் அங்கு ஒரு மேடையில் வைக்கப்பட்டுள்ள 
காவேரி அம்மனையும், பெருமாளையும்  சேவிக்கலாம்.

சில இடங்களில் பாறை அங்கும் இங்கும் ஒழுங்காக இல்லாமல் 
தொங்கிக்கொண்டு இருப்பதால் உள்ளே போகும்போது மேலே கையை 
வைத்து பாறையை தொட்டுக்கொண்டு செல்வது நல்லது. உடல் ஒல்லியாய் 
இருந்தால் இருவர் செல்லலாம். இல்லாவிடில் ஒருவர் பின் ஒருவர் 
செல்வதே சிறந்தது. 

நிமிர்ந்து நடந்துவிட்டு திடீரென குனிந்து சில மணித்துளிகள் நடக்க எனக்கு 
கடினமாய் இருந்தது.எல்லோரும் என்னைப்போலவே கஷ்டப்பட்டுத்தான் 
உள்ளே சென்றனர். ஒருவேளை நமது அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி 
இடங்களில் நடப்பது கடினமாய் இருக்காது என நினைக்கிறேன்!
 

சேர்வராயப்பெருமாள் கோவிலின் முகப்பை நான் எடுத்த புகைப்படம் கீழே




தொடரும்