திங்கள், 4 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 1



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை  
1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள்  2011 ஆம் ஆண்டு 
ஆகஸ்ட் திங்கள் 13, 14 ஆகிய இரண்டு நாட்களில் அண்ணாமலை நகரில் 
சந்தித்தோம் என்பதை பிரிந்தவர் கூடினால் .....???????? 1 என்ற தலைப்பில் 
6 செப்டம்பர் 2011 இல் எழுதியிருந்தேன்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் முடியும்போது மறுபடி எங்கு சந்திப்பது, 
யார் அதற்கான ஏற்பாடுகள் செய்வது எனக் கூடி பேசியபோது, அடுத்த 
சந்திப்பை 2013 ஆண்டில் நடத்த சேலம் வாழ் நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் முன் வந்ததால் அதை சேலத்திலேயே  நடத்துவது  
என முடிவாயிற்று என்று பிரிந்தவர் கூடினால் .....???????? 10 நிறைவுப் 
பகுதியில் 14,அக்டோபர் 2011 இல் எழுதியிருந்தேன்.

கடந்த சந்திப்புகளில் எங்களைப்பற்றிய அறிமுக நிகழ்ச்சியே 
ஒரு நாளை எடுத்துக் கொண்டதால் சேலம் சந்திப்பில் அதை 
செய்யவேண்டாம் என தீர்மானித்து அதற்கு பதில் இரண்டு நாட்களும் 
அருகில் உள்ள இடங்களுக்கு இன்பச்சுற்றலா செல்லலாம் என 
நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

நண்பர் திரு R.பழனியப்பன்  தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் 
இணை இயக்குனராக (Joint Director of Agriculture) பணியாற்றி ஓய்வு 
பெற்றவர். நண்பர் திரு A.K.வெங்கடரமணன் அரசுடைமையாக்கப்பட்ட 
கார்ப்பரேஷன் வங்கியில் மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு 
பெற்றவர். நண்பர்கள் இருவருமே கல்லூரி  நாட்களைப் போலவே 
இப்போதும் சுறுசுறுப்போடு இருப்பவர்கள் என்பதால், நிச்சயம் 
சேலம் சந்திப்பும் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கும் 
என்பதில் எங்கள் யாருக்கும் ஐயம் இருக்கவில்லை.

அதுபோலவே கடந்த ஓராண்டு காலமாகவே நண்பர்கள் இருவரும் 
சேலத்தில் எங்களது சந்திப்பை இரண்டு நாட்கள் சிறப்பாக 
கொண்டாடவேண்டும் என தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை 
மும்முரமாக செய்து வந்தனர். அவர்களுக்கு உதவியாக 
தஞ்சையிலிருந்து திரு R.பாலசுப்ரமணியன் அவர்களும் அடிக்கடி 
சேலம் வந்து அவர்களுக்கு உதவியுள்ளார். அது பற்றி பின் எழுதுவேன்.

எங்கள் திட்டப்படி சுற்றலா எங்கு செல்லலாம் என்று யோசித்தபோது, 
சேலம் அருகில் உள்ள ஏற்காடு மலைக்கும் தர்மபுரி மாவட்டத்தில் 
உள்ள ஹோகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம் என்றும், அந்த 
சந்திப்பை ஏப்ரல் அல்லது மே திங்களில் வைத்துக்கொள்ளலாம் என 
அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.  

நாங்கள் அனைவரும் அந்த நாளுக்காகக் காத்திருந்தபோது, இந்த 
ஆண்டு சனவரி 1 ஆம் நாள் நண்பர் திரு முருகானந்தம் அவர்கள் 
என்னை தொலைபேசியில் கூப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து 
சொல்லிவிட்டு, இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் சொன்னார். 
எங்களது வகுப்பு நண்பர் திரு அய்யம்பெருமாள் அவர்கள் அவர் 
தம் துணைவியாரோடு கனடாவிலிருந்து வந்திருப்பதாகவும் 
கோவையில் இருப்பதாகவும் தெரிவித்து, அவரது தொலைபேசி 
எண்ணையும் கொடுத்தார்.  

(நண்பர் அய்யம்பெருமாள் எங்களோடு இளநிலை வேளாண் அறிவியல் 
படித்துவிட்டு பின்பு எங்கள் பல்கலைக் கழகத்திலேயே முது நிலை 
வேளாண் அறிவியலில் நுண்ணுயிரியல் (Microbiology) படிப்பை 
படித்தவர். பின்னர் கனடா சென்று அங்கு காடு வளர்க்கும் 
கலையில்(Forestry) முனைவர் பட்டம் பெற்று, கனடா அரசில் 
பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் கனடாவில் ஒட்டாவாவில்
(Ottawa) குடியிருப்பவர்.)

உடனே அந்த தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு பேசினேன். 
47 ஆண்டுகள் கழித்து வகுப்பு நண்பரோடு பேசியது மட்டற்ற 
மகிழ்ச்சியைத் தந்தது. அவரும் என்னோடு பேசியதில் சந்தோஷப்பட்டார். 
சென்னை வரும்போது  நேரில் வந்து பார்ப்பதாகவும் சொன்னார். 
பின்பு அனுப்பிய மின்னஞ்சலில் என்னோடும் மற்ற நண்பர்களோடும் 
பேசிய பிறகு திடீரென தான் 40 ஆண்டுகள் இளமையானது போல் 
உணர்வதாக எழுதியிருந்தார்.

இரண்டொரு நாளில் எனது வீட்டிற்கு அவரது துணைவியாரோடு 
வந்தார். அப்போது தான் அவசியம் சேலம் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவதாகவும், ஆனால் திரும்பி கனடாவுக்கு பிப்ரவரியில் 
செல்வதால் உடனே ஏப்ரல் அல்லது மே திங்களில் வரமுடியாதென்றும், 
அக்டோபர் திங்களில் வைத்தால் அவசியம் வருவதாகவும் தெரிவித்தார்.

நானும் நண்பர்கள் பழனியப்பனையும்,  வெங்கடரமணனையும் 
தொடர்புகொண்டு மற்ற நண்பர்களையும் கலந்தாலோசித்து, சேலம் 
சந்திப்பை நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் திங்களில் 
வைக்கலாம் என்று சொன்னேன். எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டதால், 
சந்திப்பை அக்டோபர் திங்களில் வைக்க முடிவு செய்திருப்பதாக நண்பர் அய்யம்பெருமாளுக்கு தெரிவித்தோம்.  

நண்பர் அய்யம்பெருமாள் இன்னொரு யோசனையையும் சொன்னார். 
எல்லோரும் பார்த்திருக்கும் ஏற்காடு மலைக்கு செல்வதை விட 
அநேகம் பேர் பார்த்திராத கொல்லிமலைக்கு செல்லலாம் என்துதான் அது. 
உடனே நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் அப்படியே 
செய்யலாமே. எனக் கூறி ஆனால் ஒரே நாளில் அங்கு சென்று 
வர முடியாது. அங்கு ஒரு இரவு தங்கி மறுநாள் தான் வரமுடியும். 
எதற்கும் நாம் எல்லோரும் குடும்பத்தோடு சென்று அங்கு தங்க வசதி 
உண்டா என விசாரித்து முடிவு செய்கிறோம். என்றார்கள்.

அப்படியே அவர்கள் விசாரித்ததில் அனைவரும் தங்க வசதி 
இல்லாததால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, முன் திட்டமிட்டபடி 
ஏற்காடு செல்வதேன்றே முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 10 மற்றும் 
11 தேதிகளில் சந்திப்பை வைத்துக்கொள்வது என்றும் 9 ஆம் தேதி 
மாலையே எல்லோரும் சேலம் வந்துவிடவேண்டும் என்றும் 
சேலம் நண்பர்கள் சொன்னார்கள். 10 ஆம் தேதி ஏற்காடு பயணம் என்றும் 
11 ஆம் தேதி ஹோகேனக்கல் பயணம் என்றும் சொன்னார்கள். உடனே 
நான் அந்த செய்தியை மின்னஞ்சலில் திரு அய்யம்பெருமாளுக்கு 
தெரிவிக்க, அவரும் இந்தியா வர பயண சீட்டை வாங்கிவிட்டார்.

ஓரிரு நாளில் சேலம் சந்திப்பு பற்றிய விரிவான அஞ்சல் நண்பர்கள் 
பழனியப்பன் மற்றும் வெங்கடரமணனிடமிருந்து வந்தது. நண்பர்கள் 
எல்லோரும் சந்திப்பு பற்றிய விவரத்தை அஞ்சலில் அனுப்பியிருந்தாலும், 
நானும் என் பங்குக்கு அதை உடனே Scan செய்து என்னிடம் உள்ள 
நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டேன்.

மறுநாளே நானும் என் துணைவியும் சென்னையிலிருந்து சேலம் 
செல்ல அக்டோபர் 9 ஆம் நாள் காலை வெஸ்ட் கோஸ்ட் விரைவு 
இரயிலிலும், அங்கிருந்து திரும்ப 11 ஆம் நாள் இரவு ஏற்காடு 
விரைவு இரயிலிலும் முன் பதிவு செய்துவிட்டேன்.

நண்பர் அய்யம்பெருமாளும் இடையிடையே என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சேலம் சந்திப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். 
நான் பயணச்சீட்டு முன் பதிவு செய்ததைப் பற்றி சொன்னதும் தனக்கும் 
தன் துணைவியாருக்கும் இரயிலில் பயணச்சீட்டை முன் பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். அப்படியே செய்தேன்.

முதலில் என் துணைவியார் சேலம் வர இசையவில்லை. இருப்பினும் 
அவரும் வருவார் என்கிற நம்பிக்கை இருந்ததால் அவருக்கும் சேர்த்து 
பயணச்சீட்டு வாங்கிவிட்டு காத்திருந்தேன் அக்டோபர் 9 ஆம் நாளுக்கு!



தொடரும்


18 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    மீண்டும் சந்தித்தோம் என்ற தொடர் மிக அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  2. சுவாரஸ்யமாக உள்ளது ஐயா... ஆவலுடன் தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. ஆகா!இரண்டு நாட்கள் இயற்கைச் சூழலில் பழைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!உண்மைதான்.பழைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கழிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காதுதான்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே!

      நீக்கு
  5. Not many have opportunity to have a get together. You people are lucky to have the enthusiasm to arrange a get together. Hope you all had a wonderful time.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! எங்கள் வகுப்பு மாணவர்கள் படிக்கும்போதே சூட்டிகையானவர்கள் என பெயர் பெற்றதுண்டு. பணி ஓய்வு பெற்றும் எல்லோரும் இன்னும் ஒவ்வொருவரோடும் தொடர்பில் இருப்பதால்தான், இது போன்ற சந்திப்புகளை நிகழ்த்தமுடிகிறது. அடுத்து எங்கே சந்திக்க இருக்கிறோம் என்பதை இந்த தொடரின் முடிவில் அறிவீர்கள்!

      நீக்கு
  6. அப்படியே எங்களை அழைத்துச் செல்கிறது உங்களுடைய அழகான சரளமான நடை..... நான் இதுவரை ஏற்காடு சென்றதில்லை..... உங்களுடந்தான் செல்ல வேண்டும். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வரு!வருக!! உங்களை எங்களுடன் ஏற்காடுக்கும் ஹொகனகல்லுக்கும் அழைத்து செல்ல தயாராக இருக்கிறேன்.

      நீக்கு
  7. Eagerly looking for your next edition sir..... Hope your enjoyment would have been double at Yercaud and Hoganekkal with old dear friends. I wish to enjoy the coool breeze of yercaud in your cool Tamil...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  8. இப்பொழுதுதான் இந்த பதிவை படித்தேன். அடுத்த பதிவிற்குச் செல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  9. 47 ஆண்டுகளுக்குப்பிறகு நண்பரின் குரல் தொலைபேசியில் கேட்கும் பொழுது உங்களது உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னாலும் உணர முடிகின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! உண்மைதான், நம்மோடு பழகியவர்/படித்தவர் 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும்போது ஏற்படும் அந்த உணர்வை வெறும் சொற்களில் வெளிப்படுத்த முடியாதுதான்.

      நீக்கு