செவ்வாய், 12 நவம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 3



அக்டோபர் 10 ஆம் நாள் காலை 5 மணிக்கே  எழுந்து குளித்து 
தயாராகிவிட்டோம். நண்பர் வெங்கடரமணன் சொன்னபடி காலை 
7 மணிக்கே கீழே வரவேற்பறைக்கு சென்று காத்திருந்தபோது, நண்பர் 
வெங்கடரமணன் நான்கு ஐந்து பெரிய பைகளுடன் காரில் வந்து 
இறங்கினார்.

அவைகள் என்னவென்று கேட்டதற்கு  பங்கேற்கும் நண்பர்கள்   
அனைவருக்கும் தர, ஒரு சிறிய குடையும், கை விளக்கும் (Torch Light), குறித்துக்கொள்ள ஒரு சிறிய நோட்டு புத்தகத்தோடு ஒரு Ballpoint  
பேனாவும் அடங்கிய பைகள் அவைகளில்  இருப்பதாகவும், அனைவரும் 
ஏற்காடு கிளம்புமுன் அந்த பைகளை பெற்று கொள்ளுமாறு 
கேட்டுக்கொண்டார். பிறகு அருகில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு 
செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அங்கே காத்திருந்த நண்பர்கள் அனைவரும் அவைகளை பெற்றுக்கொண்டு 
போய் அறையில் வைத்துவிட்டு வந்து,  சிற்றுண்டி சாப்பிட்ட 
தயாரானோம்.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருபுறமும் இருந்த 
சரவண பவன் உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் அவரவர்கள் 
விரும்பியதை சாப்பிடலாமென்றும், சாப்பிட்டதற்கான பில்லை வாங்கி 
நண்பர் பழனியப்பனிடம் கொடுத்துவிட்டால் அவர் அதற்கான பணத்தை கொடுத்துவிடுவார் என்றும் சொன்னார் நண்பர் வெங்கடரமணன்.

அனைவரும் அந்த நேரம் தற்காலிமாக துணைவியரைப் பிரிந்து, பழைய நண்பர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே அவரவர்கள் விரும்பியதை 
சாப்பிட்டோம். சாப்பிட்ட பில்லை அங்கு காத்திருந்த நண்பர் 
பழனியப்பனிடம் கொடுத்தபோது, அவர் எங்களிடம் உணவகத்துக்கு  
அருகில் உள்ள Empire Arcade என்ற கட்டிடம் அருகே காத்திருங்கள். 
ஏற்காடு செல்ல அமர்த்தப்பட்டிருக்கின்ற Mini பேருந்துகள் அங்கு தான் 
வரும். எல்லோரும் வந்தவுடன் கிளம்பலாம். என்றார்.

அதுபோலவே அங்கு சென்றபோது காலை சிற்றுண்டியை முடித்த 
நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர். நண்பர் திரு ஆர்.பாலசுப்ரமணியன் 
அவர்கள் அவரது துணைவியார், மகள், மருமகன் மற்றும் 
பேரப்பிள்ளைகளோடு வந்திருந்தார். 2011 ஆம் ஆண்டிலேயே 
பெரும்பான்மையான வகுப்புத் தோழர்களை அண்ணாமலை நகரில் 
சந்தித்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டுகொள்ள அப்போது 
போல் சிரமப்படவில்லை. எல்லோரிடமும் சென்று நான் 
பேசிக்கொண்டிருந்தேன்.

அண்ணாமலை பல்கலை கழகத்தில் நாங்கள் படித்து வெளியே 
வந்த பிறகு  அங்கு வேளாண் அறிவியல் படித்து பின்பு வேளாண்மைத்  
துறையில் துணை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்சமயம் 
சேலத்தில் வசித்துவரும் நண்பர் திரு ஜனகன் அவர்களும் எங்களைக் 
காண வந்திருந்தார்.

எல்லோரும் வந்துவிடவே, பேருந்து வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் அனைவரையும் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கலாம் என 
நண்பர்கள் சொன்னதால்,அனைவரும் குடும்பத்தோடும் நண்பர் 
ஜனகனோடும் அந்த கட்டிடத்தின் முன்னே நின்று புகைப்படம் 
எடுத்துக்கொண்டோம்.

அப்போது காலை மணி 8.15 தான் என்பதால், அந்த கட்டிடம் 
திறக்கப்படாததால் கட்டிடத்தின் படிகளில் நின்று படம் 
எடுத்துக்கொண்டோம். ஏதோ நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள 
வசதியாக எங்களுக்காவே அந்த கட்டிடத்தின் படிகள் கட்டப்பட்டிருந்தது 
போல் இருந்தது.  

முதலில் திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் தான் 
எங்களையெல்லாம் தனது IPad இல் படம் எடுத்தார். பின்பு அவரையும் 
நிற்க சொல்லி எடுத்த புகைப்படம் கீழே 




ஏற்காடு மலையில் பெரிய பேருந்துகள் செல்லாது என்பதால் சிறிய 
பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர் நண்பர்கள். அதுவும் மூன்று 
பேருந்துகள். காரணம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 
50 ஐ தாண்டிவிட்டதுதான்.

8.30 மணிக்கு இரண்டு பேருந்துகள் வந்துவிட்டன. மூன்றாவது பின்னால் 
வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள் முதலில் வந்த பேருந்துகளின் 
ஓட்டுனர்கள்.

நண்பர்கள் முத்துகிருஷ்ணன், நாச்சியப்பன் மற்றும் மீனாட்சி சுந்தரம் 
ஆகியோர் என்னை அவர்களோடு பயணிக்க அழைத்தபோது நான் 
ஏறுவதற்குள் இரண்டு பெருந்துகளிலும் முக்கால்வாசி பேர்கள் ஏறி 
அமர்ந்துவிட்டதால் இடம் இல்லை. .

எனவே நானும் என் துணைவியும் நண்பர் பாலு அவர் தம் குடும்பத்தாரும்
நண்பர் அய்யம்பெருமாள் மற்றும் அவரது துணைவியாரும்,மற்றவர்களும் 
மூன்றாவது பேருந்துக்காக காத்திருந்தோம்.எங்கள் பேருந்துவராததால் 
மற்ற இரண்டு பேருந்துகளும் எங்கள் பேருந்துக்காக காத்திருந்தன.

மணி 8.45 ஐ தாண்டியும் பேருந்து வருவதற்கான அறிகுறியே 
தெரியவில்லை.எப்போது வரும்?’ என மற்ற ஓட்டுனர்களிடம் கேட்டதற்கு, 
அவர்கள் யாரையோ கைபேசியில் அழைத்து பேசிவிட்டு பேருந்து 5 ரோடு 
சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிற்பதாகவும் சில 
விநாடிகளில் வந்துவிடும் என்றார்கள்.

அவர்கள் சொல்லி 20 மணித்துளிகள் ஆகியும் வரவில்லை. எனக்கு 
சந்தேகம் அந்த பேருந்து இன்னும் அவர்கள் சொல்லும் இடத்திற்கு 
வரவில்லை என்று. ஏனெனில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து 5 ரோடு 
சந்திப்பு மிக அருகில் தான். நடந்தால் 5 மணித்துளிகளில் 
அடைந்துவிடலாம். 

நான் அந்த ஒட்டுனர்களிடம் சென்று, நானும் இந்த ஊரில் ஐந்து 
ஆண்டுகள் இருந்தவன் தான். 5 ரோடிலிருந்து பேருந்து இங்கு வர 
இவ்வளவு நேரம் ஆகாது. உண்மையை சொல்லுங்கள் வண்டி 
கிளம்பிவிட்டதா இல்லையா என்று?’  என்றேன். அவர்கள் இல்லை 
சார். கிளம்பிவிட்டது. இதோ வந்துவிடும் என்றார்களே தவிர
நேரடியான பதிலை சொல்லவில்லை.

எங்களின் நச்சரிப்பு தாளாமல் சிறிது தூரம் தள்ளி நின்று 
கொண்டார்கள் இருவரும். ஒரு வழியாக காலை 9.30 மணிக்குத்தான்   
அந்த பேருந்து ஆடி அசைந்து வந்தது. பாக்கி இருந்த அனைவரும் 
அதில் ஏறிக்கொண்டதும், மூன்று பேருந்துகளும் 30 கிலோ மீட்டர் 
தொலைவில் இருந்த ஏற்காடு மலையை நோக்கி புறப்பட்டன.



தொடரும்






16 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்! தங்கள் ஏற்காடு பயணம் பற்றிய அனுபவங்களையும் ஆவலோடு படிக்க காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஏற்காடு பயணம் பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  2. அதுவும் மூன்று
    பேருந்துகள். காரணம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை
    50 ஐ தாண்டிவிட்டதுதான்.//

    நான் ஏதோ நான்கைந்து நண்பர்கள் தங்கள் இல்லத்தரசிகளுடன் சென்று வந்த பயணம் என்று எண்ணியிருந்தேன். இவ்வளவு பேரையும் அழைத்துச் செல்ல எவ்வளவு சிரமப்பட்டு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.... நானும் உங்களுடனேயே பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! எங்கள் வகுப்புத் தோழர்கள் அனைவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்றுதான் சேலம் நண்பர்கள் முயற்சித்தனர். அவர்கள் கடந்த ஆறு திங்களாக இதே வேலையில் இருந்தனர். அனைவரும் வராவிடினும் இந்த அளவுக்கு நண்பர்கள் வந்ததே பெரிதுதான். அடுத்த சந்திப்பை இதைவிட பெரிதாக நடத்த எண்ணியுள்ளோம். அதுபற்றி பதிவின் இறுதியில் தெரிவிப்பேன்.

      நீக்கு
  3. எதிர் பார்ப்போடு , காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  4. நடந்த சம்பவங்களை நினைவில் வைத்து எழுதுவதே சிரமமான காரியம். அதிலும் பலருடைய பெயர்களை வேறு குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள். (சம்பவங்களை பெயர்களை குறித்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டோ?) அருமையான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு Viya Pathy அவர்களே! வகுப்பு நண்பர்களோடு அதிகம் பழகியவன் என்பதால் எல்லோருடைய பெயரும் (மொத்தம் 75 பேர்) எனக்கு நினைவில் உள்ளது.

      நீக்கு
  5. ரசித்தேன். ஜனகன் அண்ணாமலையில் படித்தவரா? எனது மாணவர் ஒருவர் இதே பெயரில் இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! திரு ஜனகன் அவர்கள் B.Sc(Ag)., ஐ அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், Plant Protection பாடத்தில் M.Sc(Ag)., ஐ கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்திலும் படித்தவர்.

      நீக்கு
  6. பயண விவரம் அருமை. தொடருங்கள் ஐயா. படிக்கக் காத்திருக்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  7. நான் கல்லூரி முடித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சக கல்லூரி நண்பன், என்னை ஒரு ரயில் நிலையத்தில், திடீரென்று சந்தித்து பேசிக்கொண்டே இருந்தார். அப்பொழுது எனக்கு அவர் பெயர் சுத்தமாக நினைவில் இல்லை. உன் கார்டைக் கொடு என்று, கார்டை வாங்கி, பெயரைப் பார்த்துக்கொண்டு எப்படியோ சமாளித்தேன். தாங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் இப்பொழுதுதான் நடந்ததுபோல் சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

    //இதோ வந்துவிடும்’ என்றார்களே தவிர நேரடியான பதிலை சொல்லவில்லை. //

    இந்தியன் பங்ச்சுவாலிட்டி தெரிந்த விஷயம்தானே. இதைப் போன்ற கம்பெனிகளை நம்பி எப்படித் திட்டமிடுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் முன்பே எழுதியுள்ளது போல், படிக்கும்போது எல்லோரிடமும் நெருங்கிப் பழகியதால் எல்லோருடைய பெயரையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.

      இந்தியர்களுக்கு சகிப்புத்தன்மை பிறக்கும்போதே(?) வந்துவிடுவதால் இதுபோன்ற நேரம் தவறி வருபவர்களை பொறுத்துக்கொள்ள முடிகிறது என நினைக்கிறேன். என்ன செய்ய?

      நீக்கு
  8. என்ன அருமையான ஒரு சந்திப்பு;மனதை விட்டு என்றும் நீங்காதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு