திங்கள், 30 செப்டம்பர், 2013

எனது ஓவியங்கள் 14


நான் பொழுதுபோக்கிற்காக வரைந்த ஓவியங்களை, அக்டோபர் 2010 இல் எனது ஓவியங்கள் என்ற தலைப்பில் 13 பதிவுகளாக வெளியிட்டிருந்தேன்.


அந்த ஓவியங்களைப் பார்க்காதவர்கள், கீழே தந்துள்ள இணைப்புகளை சொடுக்கிப் பார்க்கலாம்.

எனது ஓவியங்கள்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13


நான் வரைந்த படங்கள் அநேகம் இருந்தாலும், அவைகள் அனைத்தையும்  
பதிவேற்றிஎனது வலைப்பக்கத்திற்கு வருபவர்களை 'துன்புறுத்த'  
விரும்பாததால் ஓரிரு பதிவுகளோடு தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீண்டும் 'நினைவோட்ட'த்தை தொடர எண்ணியுள்ளதாக அப்போது குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு திரு சென்னை பித்தன் அவர்கள், நான் வரைந்த படங்களில் எனக்குப் 
பிடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடலாமே? என்று கருத்து தெரிவித்திருந்தார். அதனால் எனக்குப் பிடித்த ஒரு படத்தை இங்கே வெளியிடுகின்றேன். 

இந்த படம் மாயா சித்ராலயாவில் நான் அஞ்சல் வழியில் ஓவியத்தை  
முறைப்படி வரைய கற்றபோது, அவர்கள் கொடுத்த ஒரு மாதிரி படத்தைப் 
பார்த்து பென்சிலால் வரைந்தேன். இந்த படம் வரையப்பட்ட தாள்  A 4 
அளவைப்போல் நான்கு மடங்காக அதாவது A 3 அளவில் இருந்ததால், 
என்னால் வீட்டில் உள்ள அலகிடல் கருவியில் (Scanner) அலகிட 
முடியாததால் Friends Xerox நிறுவனத்திற்கு எடுத்து சென்று படத்தின் 
அளவை சுருக்கி எடுத்து வந்து இங்கே வெளியிட்டிருக்கிறேன். 







எனக்கு மிகவும் பிடித்த இந்த படத்திற்கு மிக நன்று எனக் குறிப்பிட்டு படத்தை Indian Ink இல் வரையச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்னும் அதை செய்யவில்லை.

வேறு சில  படங்கள் பின்னர் பதிவுகளில் வெளியிடுவேன்.  

புதன், 25 செப்டம்பர், 2013

நினைவோட்டம் 71



திருச்சி புனித வளவனார் கல்லூரி மிகவும் கண்டிப்புக்கு பெயர் போனது 
என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கு படித்த 
மாணவர்கள் மற்ற கல்லூரி மாணவர்கள் போல தங்களால் இருக்க 
முடியவில்லையே என கல்லூரியில் படிக்கும்போது நினைத்திருந்தாலும், 
பின்னால் படித்து முடித்து வெளியே வந்தவுடன், தங்கள் கல்லூரியின் 
கண்டிப்பால் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை எந்த அளவிற்கு 
தங்களை முன்னேற்ற உதவின என்பதை உணர்ந்திருப்பார்கள்.

அரியலூரில் என் மாமா வீட்டில் தங்கி படித்தபோதும்,பெண்ணாடத்தில் 
பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோதும்,விருத்தாசலத்தில் என் அண்ணன் 
திரு வே.சபாநாயகம் அவர்களோடு தங்கி படித்தபோதும் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்ததால், புனித வளவனார் கல்லூரியில் இருந்த கட்டுப்பாடு எனக்கு 
கஷ்டமாகத் தோன்றவில்லை.

எங்கள் கல்லூரி மாணவர்களை மற்ற கல்லூரி மாணவர்கள்  
Slaves of St.Josephs என சொல்லி கலாட்டா செய்வதுண்டு. அதைக் கேட்டு 
அப்போது நானும் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் பள்ளியில் பெற்றோரின் கண்காணிப்பில் படித்துவிட்டு கல்லூரி வாழ்க்கையில் கட்டுப்பாடு இல்லாததால்,மாணவர்களில் சிலர் தடம் மாறிப்போனதைப் பார்த்தபோது, 
அந்த பதின்ம வயதில் (Teen age) கொஞ்சமாவது கட்டுப்பாடு அவசியம் 
தேவை என்பதை பின்பு உணர்ந்தேன்.  

என்னுடைய இந்த கருத்தை சிலர் ஒத்துக்கொள்ள மறுக்கலாம். 
ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் பெற்றோர்களாகும்போது தங்கள் 
பிள்ளைகள் கட்டுப்பாடுடன் வளரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள் 
என்பது உண்மை.

எங்கள் கல்லூரியில் சரியான நேரத்திற்கு வகுப்பில் இருக்கவேண்டும் 
என்பது எழுதப்படாத விதி. அப்படி யாராவது கல்லூரி தொடக்க மணி 
அடித்த பின் வந்தால் வகுப்பு ஆசிரியர் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டார். அவர்கள் கல்லூரி முதல்வரிடம் போய், தாமதமாக 
வந்ததன் காரணத்தை சொல்லி அனுமதி சீட்டு பெற்று வந்தால் தான் 
வகுப்பில் நுழைய அனுமதி கிடைக்கும்.

கல்லூரி முதல்வரான மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் அவர்களும் 
சும்மா அனுமதி சீட்டு கொடுக்கமாட்டார். சரியான நேரத்திற்கு வராததற்கான காரணத்தைக் கேட்டறிந்து பின்னர் அந்த மாணவர் அபராதக் கட்டணமான எட்டணாவை (50 காசுகள்) கட்டினால் தான் அனுமதி சீட்டு தருவார். 

அப்போது கையில் பணம் இல்லையென்றால் முதல்வரிடம் அனுமதி 
பெற்று வகுப்பிற்கு செல்லலாம். ஆனால் மறு நாள் அபராதத் தொகையை அலுவலகத்தில் கட்டி, பணம்  கட்டியதற்கான இரசீதை காலையில் 
முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியரிடம் கொடுத்துவிடவேண்டும். நாம் கொடுக்கவில்லையென்றாலும், முதல் வகுப்பிற்கு வரும் ஆசிரியருக்கு 
யார் யார் அபராதத்தொகை கட்டவேண்டும் என்ற விவரம் கல்லூரி அலுவலகத்திலிருந்து வந்துவிடும்.  

(கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் ஏதாவதொரு
காரணத்திற்காக நிச்சயம் அபராதம் கட்டியிருப்பார்கள்.)  

முதல் வகுப்பை நடத்தும் ஆசிரியர் வருகைப் பதிவேட்டை படித்து 
வந்திருப்போரின் வருகையை குறித்துக்கொள்ளுமுன்பு அலுவலகம் 
குறிப்பிட்டுள்ள மாணவர்களிடமிருந்து பணம் கட்டிய இரசீதை 
பெற்றுக்கொண்டபின் தான் பணியையே தொடங்குவார்கள்.

முதல்வர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட்  (Rev Fr Ehrhart SJ) 
அவர்களை சந்திப்பதையும், அபராதம் கட்டுவதையும்  தவிர்க்க, 
எல்லோரும் குறித்த நேரத்தில் வகுப்புக்கு வந்துவிடுவார்கள். இப்படி 
குறித்த நேரத்தில் இருப்பிடத்தில் இருக்கும் பழக்கத்தை கல்லூரியில் 
(கட்டாயத்தின் பேரில்) கற்றுக்கொண்டதால், பிற்காலத்தில் 
அரசுப் பணியிலும் வங்கிப் பணியிலும்  இருக்கும்போது ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு நேரம் கடந்து சென்றதில்லை.

இன்னும் சொல்லப்போனால், பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் 
வரை வங்கிக்கு மற்ற ஊழியர்கள் வருமுன் முதலில் சென்றது நான் தான் 
என்பதை இப்போதும் பெருமையாய் சொல்லுவேன். எந்த இடத்திலும் 
On time இல் இருப்பதைவிட in time இல் இருப்பதையே விரும்பியவன் நான். 
பணி ஓய்வுக்குப்பின்னும் இந்த வழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். 
நேரத்திற்கு செல்லும் இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்த புனித வளவனார் 
கல்லூரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

(வங்கியில் வட்டார மேலாளராக இருக்கும்போது வங்கி விழா ஒன்றில் 
நேரத்தை கடைப்பிடித்ததால் ஏற்பட்ட நிகழ்வு பற்றி  பின்னர் எழுதுவேன்.)

எங்களுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமை மதியமும், ஆங்கிலக் கட்டுரை 
(Composition) எழுதும் வகுப்பு நடக்கும். இந்த வகுப்பு எல்லா புகுமுக வகுப்பு மாணவர்களுக்கும் பொது என்பதால், அந்த வகுப்பு கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் (Lawley Hall) தான் நடக்கும். அந்த வகுப்புக்கு  வரும் 
ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் கையடக்க Concise Oxford English 
Dictionary யை கொண்டுவரவேண்டும். அது இல்லாத மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஆங்கில அகராதியை (Dictionary) பார்த்து, பொருள் தெரியாத/புரியாத 
சொற்களுக்கு பொருள் தெரிந்து கட்டுரை எழுதவேண்டும் என்பதற்காகத்தான் 
அந்த கட்டுப்பாடு. இதைக் கட்டுப்பாடு என்பதை விட ஒரு நல்ல பழக்கம் 
என்றே சொல்லலாம்.

இன்றைக்கும் ஆங்கில நாளேடுகளைப் படிக்கும்போது, சில சொற்களைப் 
பற்றிய ஐயம் வரும்போது ஆங்கில அகராதியைப் பார்க்காமல் நான் 
மேற்கொண்டு தொடர்வதில்லை புனித வளவனார் கல்லூரியில் 
கற்றுக்கொண்ட நல்ல பழக்கத்தால்.

கட்டுரை வகுப்பு மட்டுமல்ல காலாண்டு, அரையாண்டு மற்றும் 
பல்கலைக் கழகத் தேர்வுகளை Lawley Hall இல்  எழுதவேண்டும். 
அதுவுமல்லாமல் கல்லூரி விழாக் கூட்டமும் அங்குதான் நடக்கும்.

அவ்வாறு தேர்வோ அல்லது கூட்டமோ நடக்கும்போது கல்லூரி 
முதல்வர் அவர்கள் திடீரென  முதல் தளத்தில் உள்ள ஏதாவது ஒரு 
அறையில் நுழைந்து அங்குள்ள சன்னல் வழியாக கீழே நடப்பதைப் 
பார்ப்பதுண்டு. யாராவது குறும்பு செய்தாலோ அல்லது தேர்வில் 
பார்த்து எழுதினாலோ அவரது கண்ணிலிருந்தும், அதற்கான 
தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது.

காலாண்டு அரையாண்டு மற்ற எந்த தேர்வானலும் தேர்வு எழுதும் 
மாணவர்கள் சீக்கிரம் தேர்வை எழுதி முடித்தாலும், உடனே வெளியே 
வரமுடியாது. அப்படியே வெளியே வந்தாலும் வாசல் அருகே, முதல்வர் 
மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் அவர்கள் நின்றுகொண்டிருப்பார். அவர் 
வெளியே வரும் மாணவனின் தோளில் அன்புடன் கையைப் போட்டு 
உள்ளே அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்துவிட்டு, எழுதியதை 
திரும்ப படித்துப் பார்க்க சொல்லிவிட்டு செல்வார்.

அதனால் சீக்கிரம் தேர்வை எழுதினாலும், தேர்வுக்கான நேரம் முடியும் 
வரை இருக்கையிலேயே அமர்ந்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் சும்மா உட்கார்ந்திருக்காமல் எழுதியதை திரும்பப் படித்துப் பார்க்கத் தோன்றும். 
அப்படி படிக்கும்போது அவசரத்தில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தது 
தெரிந்தால் அதை திருத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே அந்த ஏற்பாடு.  

இந்த கட்டுப்பாடு எங்களுக்கு மட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நடக்கும் 
பல்கலைக்கழக தேர்வு எழுதவரும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் தான். 
அதாவது புனித வளவனார் கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுதுவோர், 
தேர்வு நேரம் முடியும் வரை வெளியே வர இயலாது.

ஆரம்பத்தில் என்ன இது. நாம் தான் தேர்வை எழுதி முடித்துவிட்டோமே 
பின் ஏன் நம்மை சிறை பிடித்து வைக்கிறார்கள். என நினைத்தாலும், 
பின்பு நடந்த தேர்வுகளில் எழுதியதை திரும்பப் படிக்கும் பழக்கம், 
அவசரத்தில் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவியதால் அது 
ஒரு நல்ல பழக்கம் என்பதை போகப்போகத் தெரிந்துகொண்டேன்.

எங்கள் கல்லூரியில் நான் கற்றுக்கொண்ட இந்த நல்ல பழக்கம், 
பின்னால் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் 
பட்டப் படிப்பு படித்தபோதும், வங்கியில் சேர்ந்த பிறகு C.A.I.I.B தேர்வு 
எழுதியபோதும் உதவியது என்பதை சொல்லவும் வேண்டுமா?



நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

வியாழன், 19 செப்டம்பர், 2013

நினைக்காதது நடந்தது!




அதிசயம்! ஆனால் உண்மை. சென்னை வாழ் மக்கள் தங்கள் சந்ததியர்களாவது அவர்களது காலத்தில், பேரம் பேசாமல் அல்லது தானி (Auto) ஓட்டுனர் கேட்கும் கட்டணத்தைக் கொடுக்காமல்,அளவி (Meter) காட்டும் தொகையை கொடுத்து 
தானியில்பயணிப்பார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்த
அதிசயம் அவர்களது காலத்திலேயே நடந்துவிட்டது!

ஆம். செப்டம்பர் 16, 2013 க்குப் பிறகு தானி ஒட்டுனர்கள் அவசியம் புதிய கட்டணப்படித்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும்.என்றும் அவர்கள்
அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டையை வைத்திருக்காவிட்டால்,
அதாவது அந்த அட்டை தானியில் பயணம் செய்பவர்களுக்குகத் தெரியும்
விதமாக ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களது தானி பறிமுதல் செய்யப்படும் என அரசு  அறிவித்திருந்தது. மேலும் திருத்திய புதிய கட்டணம் கொண்டுள்ள அளவிகளை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தானிகளில் பொறுத்தவேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் உள்ள 72000 தானிகளில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை
52000 தானி உரிமையார்கள் மட்டுமே அரசு வெளியிட்டிருந்த புதிய கட்டண அட்டையை  வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்
கொண்டதாகவும், மீதமுள்ள 20000 தானி உரிமையார்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதற்காக  போக்குவரத்து அதிகாரிகள்
40 பேர் தனித் தனி குழுக்களாக 16 ஆம் தேதி முதல் சென்னை முழுதும்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடப் போவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.

அதே நேரத்தில் வழக்கம்போல் தானி ஓட்டுனர்கள் அரசின் ஆணையை
நிறைவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என்றும் அதுவரை நடவடிக்கை
எதுவும் எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதாகாவும்
இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

கடந்த கால அனுபவத்தால், நிச்சயம் நமது சென்னையில் உள்ள தானி
ஓட்டுனர்கள் இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்த விடமாட்டார்கள்.
அரசும் நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன். நீ அழுவதுபோல் அழு. என்று
சொல்வது போல் வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடும் என
நினைத்திருந்தேன்.

ஆனால் எனது நினைப்பு தவறாகிவிட்டது. சொன்னதோடு நிற்காமல் அரசு அலுவலர்கள் நேரடியாக களத்தில் இறங்கியதால் 16 ஆம் தேதியே அரசின் 
ஆணைப்படி இயங்காத 100 தானிகளுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டன
என்றும் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

அதே நேரத்தில் சில தானி ஓட்டுனர்கள் புதிய கட்டணப்படி தான் கட்டணம் 
தருவோம் என்ற பயணிகளை வசை மாரி பொழிந்ததாகவும் நாளேடுகளில்
வந்த செய்திகளை படித்தபோது, போக்குவரத்துஅலுவளர்களின்  இந்த
தைரியமான நடவடிக்கை தொடரவேண்டும் என எல்லோரையும் போல
நானும் விரும்பினேன்.

புதிய கட்டணப்படி தானி ஓட்டுனர்கள் வசூலிக்கிறார்களா என சரிபார்க்க
எனக்கு நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது வீடு இருக்கும் அண்ணாநகர்
மேற்கு முனை குடியிருப்பிலிருந்து (DAV பள்ளி அருகே)
கோடம்பாக்கத்திலிருக்கும் Best Hospital போக  நேற்று அந்த பள்ளி அருகே, 
தானிக்காக எனது துணைவியாருடன் காத்திருந்தேன். முதலில் வந்த தானியை
கை காட்டி நிறுத்தியதும் தான் கவனித்தேன். அதில் அளவி பொருத்தப்பட்டிருக்கவில்லையென்று.

ஒட்டுனர் என்னிடம் எங்கு போகவேண்டும் எனக் கேட்டதற்கு பதில்
சொல்லாமல் அளவி இல்லையா?’ என்றேன் அதற்கு அவர் புதிய கட்டணத்தை  திருத்த கொடுத்திருக்கிறேன். எங்கு போகவேண்டும்? சொல்லுங்கள். என்றார்.

இடத்தை சொன்னதும் எவ்வளவு கொடுப்பீர்கள்?’ என்று ஆரம்பித்தார். நான்
ஏன் உங்களிடம்  புதிய கட்டண அட்டை இல்லையா?’ என்றேன். அதற்கு அவர் இன்னும் வாங்கவில்லை. என்று சொன்னதும். அதனாலென்ன என்னிடம் புதிய கட்டண அட்டை உள்ளது. என்றேன்.

வீட்டைவிட்டு கிளம்பும்போதே நாளேட்டில் வந்திருந்த கட்டண விவரம் கொண்ட பக்கத்தை எடுத்து பையில் வைத்திருந்தேன். அவ்வளவுதான், எதுவும் பேசாமல் விருட்டென்று தானியை கிளப்பி சென்றுவிட்டார்.

சற்று நேரம் கழித்து வந்த மற்றொரு தானியை நிறுத்தினேன். அதில் அளவி 
இருந்தது. தானியின் முகப்பிலும் புதிய கட்டண முறைப்படி அளவி திருத்தப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கோடம்பாக்கம் போகவேண்டும் 
என்று சொல்லி புதிய கட்டணம் தானே. என்றேன். ஆமாம்.என்றார். 
சந்தோஷம் பொங்க ஏறி உட்கார்ந்தோம்.

போகும்போது அவர் நிறைய பேசிக்கொண்டிருந்தார். அரசைச் சாடினார். பின்பு
Share Auto க்களையும் சாடினார். பிறகு மெதுவாக சார். பல ஆண்டுகள் 
உபயோகத்தில் இல்லாததால் இந்த தானி சரியாக வேலை செய்ய இன்னும்
சில மாதங்கள் ஆகலாம்.பாருங்கள் நேற்று இப்படித்தான் அடையாறிலிருந்து
கிண்டி வந்தேன். அளவி சரியாக வேலை செய்யவில்லை. பயணி தான்
பார்த்துப் போட்டுக் கொடுத்தார். என்றார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இவர் எதற்கு அடி போடுகிறார் என்று. உடனே.
நான் கவலை வேண்டாம். என்னுடைய இடத்திலிருந்து அந்த மருத்துவ 
மனை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் உள்ளது.என்னிடம் புதிய கட்டண 
விவரம் கொண்ட நாளேடு உள்ளது. அதைப் பார்த்து சரியான கட்டணத்தைத் தருகிறேன்.என்றேன். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த
பேச்சும் இல்லை.

சிறிது தூரம் சென்றதும் வண்டி நின்றுவிட்டது(!) அந்த ஒட்டுனர், இரண்டு
மூன்று தடவை தானியை கிளப்ப முயற்சித்துவிட்டு,  பின்னர் என்னிடம்
சார்.ஏதோ 'ப்ராப்ளம்'. என்னவென்று தெரியவில்லை. வேறு வண்டியில்
செல்லுங்கள். என்று சொல்லிவிட்டார். ஒருவேளை இறங்கும் இடத்தில
அதிகம் கேட்டால் தரமாட்டேன் என நினைத்தாரோ என்னவோ! அளவி
காட்டிய தொகையைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் வேறு வாகனம்
வர வாய்பில்லையாதலால் நடக்க ஆரம்பித்தோம்.

சிறிது தூரம் சென்றதும் வந்த Share Auto வில் ஏறி மருத்துவமனை அருகே இறங்கிக்கொண்டோம். பின் மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது  வெளியே நின்றிருந்த தானியின் ஒட்டுனரிடம்,’அண்ணா நகர் போகவேண்டும் வருக்கிறீர்களா?’ என்றேன். 

சரி. என்றதும், புதிய கட்டணம் தானே?’ என்றேன். ஆமாம் சார். திருத்தப்பட்ட 
அளவி உள்ளது. வாருங்கள். போகலாம். சரி. இவர் வழியில் என்ன சொல்லப்போகிராரோ என நினைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தோம். திரும்பும் 
வழியில் அவர் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்ததும் அளவியைப் பார்த்தேன்.ரூ.113 தான் காட்டியது.

சில்லறை இல்லாததால் சந்தோஷத்தோடு ரூ.120 ஐக் கொடுத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். இதே மருத்துவ மனைக்கு சென்ற மாதம் வந்தபோது ரூ 200 கேட்ட ஓட்டுனருக்கு ரூ 180 ஐ கொடுத்திருக்கிறேன்.

அப்போது கேட்டேன். இந்த புதிய கட்டண முறை வந்ததும் நிறைய  வாடிக்கையாளர்கள்  வருகிறார்களா?’ என்று. அதற்கு அவர் முன்பை விட
அதிகம் பேர் வருகிறார்கள். என்றார். எனக்கு கேட்க சந்தோஷமாக இருந்தது.

இன்றைக்குக் கூட நாளேடுகள் தரும் தகவல்கள் படி, இதுவரை பறிமுதல் 
செய்யப்பட தானிக்கள் 400 க்கும் மேலாம். சில ஓட்டுனர்கள் காவல் துறைக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கும் பயந்து, தானிக்களை ஒட்டாமல்
நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மேலும் தானி நிறுத்துமிடங்களில் உள்ள 
ஓட்டுனர்கள் இன்னும் பழைய முறையைத்தான் கடைபிடிக்கிறார்களாம்.

எனவே காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் எல்லா தானி நிறுத்துமிடங்களிலும் ஆய்வு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த
திட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்
செய்யாமல் புறக்கணிப்போம்.

இந்த சமயத்தில்  Times Of India நாளேட்டிற்கு நாம் நன்றி சொல்லத்தான்
வேண்டும். ஓராண்டிற்கு முன்னால் மீட்டர் எங்கே? என்று அவர்கள்
ஆரம்பித்த வைத்த அந்த பொது நல கேள்விதான் பொது மக்களிடையே
ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி எல்லோரும் ஒருமித்து குரல் எழுப்பவும், தயங்கிக்கொண்டிருந்த அரசு இயந்திரமும் விழித்துக்கொண்டு நடவடிக்கை
எடுக்கவும் காரணமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சும்மாவா சொன்னார்கள் எழுதுகோலின் முனை வாள் முனையை விட
வலியது என்று.