ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெண்பாவும் நானும்



இந்த ஆண்டு பொங்கலன்று எனது பொங்கல் வாழ்த்தை வெண்பா வடிவில் வெளியிடவேண்டுமென்று என்று எண்ணினேன். ஆனாலும் பள்ளி இறுதி ஆண்டில் கற்ற (?) வெண்பா எழுதும் இலக்கணம் மறந்து போனதால் யாராவது வெண்பா எழுதுவது பற்றி பதிவில் எழுதி உதவமாட்டார்களா என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.



பதிவுலகில் காலடி எடுத்து வைக்க வழி தெரியாமல் இருந்தபோது பதிவிடுவது எப்படி என்று எனக்கு வழி காட்டியவர் திரு அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்கள். அவர் வழி காட்டியது போல் நிச்சயம் வெண்பா எழுத யாரேனும் உதவிக்கு வருவார்கள் எனக் காத்திருந்தபோது, திரு தமிழ் இளங்கோ அவர்களின் பதிவின் மூலம் ஊமைக்கனவுகள் என்ற வலைப்பதிவர் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களின் யாப்புச்சூக்குமம் என்ற பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதைப் படித்து புரிந்து கொண்டு நானும் ஒரு வெண்பா எழுதி வெளியிட்டேன். இருப்பினும் ஆசான் அருகில் இருந்து கற்றுக்கொள்ளாமல்,பதிவின் மூலம் கற்றுக்கொண்டது, தொலை தூர கல்வியில் படித்தது போல் இருந்ததால் எனது புரிதலில் தவறுகள் இருக்கக்கூடும் என எண்ணினேன்.

அதனால் அந்த பொங்கல் வாழ்த்துடன் தெரிவித்திருந்த கருத்தில், எனது வெண்பா இலக்கணப்படி இல்லை என்பது தெரியும் என்றும், அடுத்த முறை அந்த குறையைத் தவிர்ப்பதாகவும், ஒருவேளை எனது வெண்பா இலக்கண விதிக்கு உட்பட்டு இருந்தால் எல்லா பெருமையும் திரு ஜோசப் விஜூ அவர்களையே சாரும் என்றும் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

பதிவுலக நண்பர் திரு தி. தமிழ் இளங்கோ மூலமாக எனது பதிவு பற்றி அறிந்த திரு ஜோசப் விஜூ அவர்கள் எனது வெண்பாவை படித்து பாராட்டியும் அதிலிருந்த இரு தவறுகளை சுட்டிக் காட்டியும் என்னை ஊக்குவித்திருந்தார். அவரின் அஞ்சல் கொடுத்த உற்சாகத்தால் வெண்பா எழுதிப் பார்ப்பது என முடிவெடுத்து பொங்கல் வாழ்த்திற்குப் பிறகு இந்த பஃறொடை வெண்பாவை எழுதியுள்ளேன். இது எனக்கு வெண்பா எழுத சொல்லிக் கொடுத்த ஆசிரியரை வாழ்த்தும் பா.


வெண்பா எழுத வெகுநாளாய் காத்திருந்தேன்
நண்பா உனக்குதவ நானுண்டு என்பதுபோல்
எண்ணங்கள் ஈடேற சூக்குமத்தை கற்பித்த
பண்பாளர் சூசையவர் பல்லாண்டு வாழ்கவென
பன்முறை வாழ்த்துவேன் நான்


குறிப்பு : சூசை- ஜோசப் (இங்கே ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களை சூசை என குறிப்பிட்டுள்ளேன் )

இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலிவெண்பா ஆகியவகைகளையும் எழுதிப் பார்க்க இருக்கிறேன். மீண்டும் ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன்.







26 கருத்துகள்:

  1. பட்டிமன்ற புலவர் வரிசைக்கு ஒரு நல்ல பாவலர் கிடைத்து விட்டார். வாழ்த்துக்கள். தொடை தட்டிப் பாடிய உங்கள் பஃறொடை வெண்பாவில் தொடை தட்டுகிறதா இல்லையா என்பதனை ஜோசப் விஜூ அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,வாழ்த்தியமைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! பட்டிமன்ற புலவர் வரிசைக்கு ஒரு பாவலர் கிடைத்துவிட்டார் என சொல்லியுள்ளீர்கள். இது எனது ஆரம்ப முயற்சிதான். அந்த நிலையை அடையும் தகுதியை நான் இன்னும் பெறவில்லை என எண்ணுகிறேன்

      நீக்கு
  2. சபாபதி சார் ஒரு கலக்கு கலக்குங்கள்
    பொதுவாக ஐந்து அடிகள் உள்ள வெண்பாவை அதிகமாகக் காண முடியாது. அந்த வகையில் தொடக்கம் அபாரம்.
    நானும் பள்ளியில் கற்றவற்றை வைத்து வெண்பா என்ற பெயரில் எழுதி இருக்கிறேன். பின்புதான் தெரிந்தது அதில் உள்ள தவறுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி திரு டி.என். முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  3. இன்னும் ரசிக்க காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கவிதைகளை இரசிக்க காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. தங்களின் வெண்பா திறன் வியக்க வைக்கிறது ஐயா
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! வெண்பா எழுதுவதில் இது கன்னி முயற்சிதான். வெண்பா எழுதும் திறனை அடைய இன்னும் பல பயிற்சிகள் தேவை என நினைக்கிறேன்.

      நீக்கு
  5. அய்யா,
    அன்பு வணக்கம்.
    உங்களைப் போன்ற எழுத்தாளுமைகளுக்கு முன்பு நானெல்லாம் ஒன்றுமே இல்லை. உங்கள் இந்த எழுத்து , அதன் நடை, சொற்கோவை இதற்கெல்லாம் காரணம் தங்களின் பள்ளிப் பருவ தமிழாசிரியர்களும், பரந்துபட்ட தங்களின் வாசிப்பும், ஆர்வமும் முயற்சியும் தான்.
    வெண்பா ஒரு வாய்பாடு. அதன் மூலம் கட்டமைக்கப்படும் ஒரு வடிவம் அவ்வளவுதான். ஏற்கனவே உங்களுக்கு அதன் சட்டகம் தெரிந்திருக்கிறது.
    நான் செய்தது ராமருக்கு அணில் செய்ததுபோல் ஆன உதவியாயிருக்கும். அல்லது நந்தாவிளக்கில் செய்த சிறு தூண்டலாயிருக்கும்.
    மரபில் வெண்பாவின் ஆதிக்கம் பெரிது.
    அதுதான் பிற மரபுப் பாடல்களைக் கட்டமைக்க இடப்படும் பிள்ளையார் சுழி.
    தங்களின் வெண்பா மிக மிக அருமையாக வடிவம் கொண்டுள்ளது.
    என் பெயர் இன்றி, இன்னும் உங்கள் மனங்கவர்ந்த பாதித்த விடயங்களைப் பற்றி எழுதி இருந்தீர்களானால் நிச்சயம் மிகச் சிறப்பான உள்ளீடு இந்த வெண்பாவிற்குக் கிடைத்திருக்கும்.
    இலக்கணத்திலோ ஓசையிலோ எப்பிழையும் இல்லை.
    தன்வயமற்று வாசிப்போரை அதன் போக்கில் இழுத்துச்செல்லும் தங்கள் எழுத்துக்களைப் போலவே தாங்கள் இயற்றும் மரபுக்கவிதைகளும் ஆகவேண்டும் என்கிற ஆசை எனக்கிருக்கிறது. நிச்சயம் அது பேராசையல்ல. நான் பேராசைப்படுவதும் இல்லை.
    உங்களின் பரந்து பட்ட அறிவும், அனுபவமும், ஆர்வமும் விடாமுயற்சியும் நிச்சயம் கவிதைக் களத்தில் பயன்பட்டால், அழிந்து வருகின்ற மரபில் நம்பிக்கையின் கீற்று எழும்.
    யானையை அடக்கி விட்டீர்கள்.
    இனி அதன் மேல் சவாரி செய்யும் சுகம் அலாதியானது என்பதை அறிந்து கொள்வீர்கள்.
    மற்ற மற்ற மரபின் வகைகளிலும் முயன்று பார்க்க வேண்டுகிறேன்.
    நீங்கள் எனக்குச் செய்யும் உதவி, அது என்னை எங்கும் முன்னிறுத்தாமல் இருப்பதுதான்.
    மரபில் இருள் கிழித்து வரும் ஒற்றைக் கதிர் இதென்றால் அதன் பின்னிருக்கும் பேரொளிப் பிழம்பை என்னால் அனுமானிக்க முடிகிறது.
    விடியல் வரட்டும்.
    இன்னும் எழுதுங்கள்.
    காத்திருக்கிறேன்.
    நன்றி.
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!. நீங்கள் சொல்வதுபோல் யானையை அடக்கிவிட்டேன். ஆனால் அதில் ஏறி சவாரி செய்ய அங்குசம் கொடுத்தவர் நீங்கள் அல்லவா? அதை மறை(று)க்க முடியுமா? வெண்பா எழுத தங்களின் பதிவு உதவியதால்தான் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் இந்த வெண்பாவை எழுதினேன். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி நன்றி தெரிவித்திருக்கிறேன் அவ்வளவே. தங்களைப்போல் தமிழில் புலமை பெற்றவன் அல்லன். எனவே தங்களின் பாராட்டை ஊக்குதலாக எண்ணி, என்னைப்பற்றி தாங்கள் கூறியவைகளை அடைய நான் இன்னும் முயற்சிப்பேன். தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என எண்ணுகிறேன். தங்களுக்கு மீண்டும் நன்றி!

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    சொல்லெடுத்து உயிர் கொடுத்தாய் உத்தமனே
    உந்தன் பாக்கள் எல்லாம் சொல்லெந்தி
    நிக்குது சுகமான இராகமாய் சூக்குமங்கள் நிறைந்து
    ஓதிய வரிகள் எல்லாம் உகந்து கழித்ததுமனம்.

    தங்களின் முயற்சசிக்கு வாழ்த்துக்கள் ஐயா...தொடருங்கள் இரசிக்க காத்திருக்கேன் த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!. கவிஞர் அல்லவா? கவிதை மூலமே பாராட்டிவிட்டீர்கள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும், கவிதையை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  8. பெறுவார் பெறுகவே வெண் பாசெல்வம்
    தருவார் எவருளர் இருள் உலகில்?
    அறிந்தே அலையென தவழ்ந்து வந்து
    புரிந்தார் மலைபோல் ஓர் உதவி!
    விரியும் விழியில் அருள் விளக்காய்
    ஓளிர்க! ஜோசப்விஜூ ஓங்குபுகழ்!
    புதுவை வேலு

    அய்யா!
    நன்றி சொல்லும் நற்பண்பு போற்றுகிறோம்
    அருங்கவிதை தரும் அழகு ஆனந்தமே!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை கவிதையாய் தந்தமைக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  9. அருமை நண்பரே தயக்கம் ஏன் தொடருங்கள் நாங்கள் இருக்கின்றோம்
    தமிழ் மணத்தில் நுளைவதற்காக 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தெம்பூட்டும் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  10. நன்றியுடன் இட்டபாநின் றொளிரும் குவலயத்தில்
    குன்றில் விளக்காகத் தான்!

    அருமை அருமை !முயற்சி திருவினையாக்கும். மேலும் பல வெண்பாக்கள் புனைய என் மனமார்ந்த, வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. குன்றில் விளக்காகும் என்கவிதை என்றதற்கு
      நன்றியுடன் வாழ்த்துவேன் உம்மை

      வருகைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி ‘காவியக்கவி’ இனியா அவர்களே!

      நீக்கு
  11. வெண்பா பற்றி அறிந்தேன். முயற்சிக்குப் பாராட்டுக்கள். எனக்கு, முயன்றாலும் முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B,ஜம்புலிங்கம் அவர்களே! முயன்றால் முடியாததொன்றுமில்லை என்பதை அறியாதவரல்லர் நீங்கள். முயற்சியுங்கள். உங்களால் முடியும்.

      நீக்கு
  12. I am not very familiar with the nuances of VENBA , but that did not act as a barrier in enjoying your maiden attempt and the second attempt in composing VENBAs. I too like all who have appreciated your skill in this area, wish you all success in your future endeavors . Vasudevan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

      நீக்கு
  13. ஃபேஸ்புக் நினைவூட்டலால், இன்று மீண்டும் படித்தேன் இந்த பதிவையும், இதன் பின்னூட்டங்களையும். நாட்கள்தான் எவ்வளவு கேகமாக நகருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! காலமும் கடலலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை என்பது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு