வெள்ளி, 10 ஏப்ரல், 2015

கடவுளின் நாடும் கடையடைப்பும்!


வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவரின் மகளின் திருமணம் ஏப்ரல் 8 ஆம் நாள் (அதாவது நேற்று முன் தினம் ) கோழிக்கோட்டில் நடக்க இருந்ததால் அங்கு செல்லவேண்டியிருந்தது. நண்பர் முன்பே திருமண நாளை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், இரயிலில் போகவும் திரும்பி வரவும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன்.



இரண்டு நாட்களுக்கு முன் அந்த நண்பர் திடீரென என்னைக் கூப்பிட்டு, ‘சார், இங்கு கேரளாவில் என் மகளின் திருமண நடக்க இருக்கின்ற நாளன்று ‘பந்த்’ அறிவித்திருக்கிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ‘பந்த்’ அனுசரிக்கப்பட இருக்கிறது. நீங்கள் தான் இந்த மாநிலத்தில் பணிபுரிந்தவர் ஆயிற்றே. எனவே கவலைப்படவேண்டாம். உங்களது இரயில் காலை 4.30 மணிக்கே கோழிக்கோடு வந்துவிடுவதால் நீங்கள் தங்குவதற்கு நான் முன்பதிவு செய்திருக்கிற விடுதிக்கு வர தடை எதும் இருக்காது. இரயில் நிலையத்திற்கு எனது மகனே வந்து உங்களை அழைத்து வந்து விடுதியில் விட்டுவிடுவார்.’ என்றார்.

கடவுளின் நாடு (God’s own country) என சொல்லப்படுகின்ற கேரளாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்பதால் இந்த ‘பந்த்’ எந்த விதத்தில் ஒரு சாமானியனை பாதிக்கும் என்று அறிந்தவன் நான். அப்போது எனது குடும்பம் சென்னையில் இருக்க நான் மட்டும் பணிபுரிந்த இடத்தில் தங்கி உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

‘பந்த்’ அன்று உணவு கிடைக்காமல் எப்படி கஷ்டப்பட்டேன் என்பதையும் பின்னர் நண்பர்கள் (இந்த நண்பரும் அதில் அடக்கம்) உதவியால் எப்படி ‘ஜீவித்தேன்’ என்பதையும் கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய ஊர்களில் பணிபுரிந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.

ஏப்ரல் 7 ஆம் நாள் மாலை 5 மணி இரயிலில் புறப்பட ஆயத்தமானபோது என் மனைவி கூட கேட்டார் “ அங்கு ‘பந்த்’ இருக்கும்போது அவசியம் போய் கஷ்டப்படவேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ‘ ஏழு ஆண்டுகள் ‘பந்த்’ களோடு பழக்கப்பட்டு அங்கு பணியாற்றிய நான், இந்த ஒரு நாளைக்காக பயப்படுவதா?’ என வீறாப்பாய் பேசிவிட்டு, போருக்குப் புறப்படும் வீரன் போல் பயணத்தை தொடங்கிவிட்டேன்!

கேரளாவில் பணிபுரியாதவர்கள் இதைப் படித்துவிட்டு “ ‘பந்த்’ எனப்படும் கடையடைப்புக்கு ஏன் கவலைப்படவேண்டும்?” என நினைக்கலாம். கேரளாவில் கடையடைப்பு என்பதை அரசியல் கட்சிகள் அறிவித்த பிறகு அன்று எந்த கடையையும் திறக்க யாருக்கும் துணிவு இருக்காது.

பேருந்துகள், தானிக்கள் (Auto) முதலியவை சுத்தமாக தங்களது சேவையை நிறுத்திக்கொள்ளும். உணவகங்கள் ஒன்று கூட திறந்திருக்காது. வங்கிகளில் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகையே இருக்காது. வாகனங்கள் எதுவும் ஓடாதபோது அவர்கள் எப்படி அலுவலகம் வரமுடியும்.

வங்கி மேலாளர்கள் மட்டும் நடந்து வந்து வங்கியைத் திறந்து வைப்பார்கள். சரியாக 10 மணிக்கு சொல்லி வைத்தாற்போல் தொலைபேசி மூலம் மிரட்டும் குரலில் ‘என்ன கடையடைப்பு எனத் தெரிந்தும் வங்கியைத் திறந்து வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் உடனே மூடுகிறீர்களா அல்லது நாங்கள் அங்கு வரவா?’ என மிரட்டல் வரும். சிலசமயம் கூட்டமாக வந்து மூட சொல்வதும் உண்டும். உடனே வட்டார/தலைமை அலுவகத்திற்கு தொலை அச்சு (Telex) அல்லது தொலைபேசி மூலம் விவரத்தை அறிவித்துவிட்டு வங்கியை மூடிவிட்டு திரும்புவர்.

காவல் துறை உட்பட அரசு இயந்திரம் கைகட்டி வேடிக்கை பார்க்கும். அரசு உதவிக்கு வராதபோது கடையை அல்லது அலுவலகத்தைத் திறந்து வைத்து வீணே வம்பை விலைக்கு வாங்க யாருக்கும்  தைரியம் இருக்காது.

உணவகத்தையே நம்பி இருப்பவர்கள் முதல் நாளே ரொட்டி, பழம் போன்றவைகள் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். நண்பர்கள் உள்ளோர் ஒரு நாள் முதல்வர் போல், அவர்களுடைய நண்பர்களின் ஒரு நாள் (ஏன் பல நாட்கள் கூட) விருந்தினராக மாறிக்கொள்ளவேண்டியதுதான். இல்லாவிடில் அந்த நாளில் உண்ணா நோன்பு இருக்கவேண்டியதுதான்!

இந்த கடையடைப்பை யார் எப்போது அறிவிப்பார்கள் என சொல்லமுடியாது. அது எந்த காரணத்திற்கும் இருக்கும். சிலசமயம் இந்த கடையடைப்பு மாநிலம் முழுதும் இருக்கும். சிலசமயம் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் இருக்கும். சிலசமயம் வட்ட (Taluk) அளவில் இருக்கும்.அவை 12 மணி நேரமோ அல்லது 24 மணி நேரமோ இருக்கும். பெரும்பாலும் இந்த கடையடைப்புக்கள் ஆளும் கட்சியை எதிர்த்து நடக்கும் ஆதலால் இவைகளை அறிவிப்போர் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளாய் இருப்பர்.போன மாதம் 14 ஆம் நாள் கூட கேரளாவில் கடையடைப்பு இருந்தது.

சில சமயம் பெயர் வெளியே தெரியாத கட்சிகள் கூட ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி குறிப்பிட்ட நாளில் கடையடைப்பு இருக்கும் என்பார்கள். பொதுமக்களும் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கடையடைப்பு முழுமையாய் வெற்றி பெற ஒத்துழைப்பார்கள்.

கடையடைப்புக்கு முதல் நாள் மறு நாளைக்குத் தேவையான ’சோம பானங்களை’ வாங்க மக்களின் கூட்டம் அவை விற்பனையாகும் கடை முன்னால் அலை மோதும். ‘பந்த்’ அன்றைக்கு மாநிலமே முடங்கிப்போய் இருக்கும்.

இந்த கடையடைப்பு எத்தனை தினக் கூலிக்காரர்களின் வருமானத்தை பாதிக்கும் என்றோ அரசுக்கும் மக்களுக்கும் எவ்வளவு இழப்பும் சங்கடமும் நேரும் என்றோ கடையடைப்புக்கு அறைகூவல் விடுவோர் யோசிப்பார்களா எனத் தெரியவில்லை.

கல்வியறிவு உடைய மாநிலமான கேரளாவில் எல்லோரும் ஏன் இதை எதிர்க்க தயங்குகிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் கேரள உயர் நீதி மன்றத்தில் இந்த கடையடைப்பை தடை செய்ய சிலர் அணுகியபோது கேரள உயர் நீதிமன்றமும் ‘ஹர்த்தால்’ செய்யக்கூடாது என தடை செய்தது. உடனே அங்குள்ள அரசியல் வாதிகள் அந்த பெயரை மாற்றி ‘பந்த்’ என அறிவித்து இன்னும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் நினைத்துக்கொண்டே 8 ஆம் நாள் காலை 4.30 மணிக்கு கோழிக்கோடு போய் சேர்ந்தேன். என் நண்பரின் மகன் சொன்னதுபோல் வந்து என்னை அழைத்து சென்று தங்கும் விடுதியில் விட்டுவிட்டு திரும்ப வந்து திருமண நேரத்திற்கு அழைத்து செல்வதாக கூறி சென்றுவிட்டார். காலை 6 மணி ஆகவில்லையாதலால் ‘பந்த்’ ஆரம்பமாகவில்லை.

தங்கும் விடுதியில் காலை சிற்றுண்டி செலவில்லாமல் (Complimentary) கிடைத்ததால்(?) பசியோடு இருக்கவேண்டியிருக்கவில்லை. காலை 8 மணிக்கு எனது நண்பரே நேரில் வந்து ‘பயணம் சுகமாக இருந்ததா?” என விசாரித்துவிட்டு, திருமணம் அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடக்க இருப்பதாகவும் தனது சிற்றூந்து ஓட்டுனரை காலை 10 மணிக்கு என்னை அழைத்து செல்ல அனுப்புவதாகவும் சொன்னார்.

“இன்று ‘பந்த்’ ஆயிற்றே வாகனத்தை செல்ல அனுமதிப்பார்களா? அல்லது ஏதேனும் சிக்கல் இருக்குமா?” என கேட்டதற்கு ‘சார். இன்று பல திருமணங்கள் இங்கு நடக்க இருப்பதால், சிற்றூந்துகளில் ‘திருமணத்திற்கு’ என எழுதப்பட்ட தாட்கள் ஒட்டி சென்றால் ஒன்றும் செய்யமாட்டார்கள். எனவே கவலை வேண்டாம்.’ என சொல்லி சென்றார்.

அதுபோல் காலை 10 மணிக்கு என்னை அழைத்து செல்ல ஓட்டுனர் வந்தார். அவருடன் ‘தைரியமுடன்’ மண்டபத்திற்கு சென்றேன். ஊரே துடைத்துவிட்டதுபோல் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் நடந்து செல்வதை பார்க்க முடிந்தது. மண்டபத்தில் இருந்த வாகனங்கள் அனைத்திலும் ‘திருமணத்திற்கு’ என எழுதப்பட்ட தாட்கள் ஒட்டப்பட்டிருந்தன.

திருமணம் நல்லபடியாக முடிந்ததும் மணமக்களை வாழ்த்திவிட்டு வயிராற கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு நண்பரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன். நான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பவும் அந்த ஓட்டுனரே கொண்டுவந்து விட்டார்.இருப்பினும் திரும்ப பத்திரமாக அறை திரும்பும் வரை உள்ளுக்குள் லேசான நடுக்கம் தான்.

ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இதே கோழிக்கோட்டில் ஒரு மருத்துவர் ஒரு அவசர சிகிச்சை செய்ய ஒரு ‘பந்த்’ நாளன்று தனது சிற்றூந்தில் மருத்துவர் என எழுதிக்கொண்டு சென்றபோது, யாரோ ஒரு புண்ணியவான் ஒரு பெரிய கல்லை அவர் மேல் வீச அது அவரது தலையில் பட்டதால் அவர் ஆழ்மயக்க (Coma) நிலைக்கு சென்றது ஏனோ என் நினைவில் வந்து மிரட்டியது.

மாலை 5-15 மணிக்கு சென்னை திரும்பும் இரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். அதே ஓட்டுனரே வந்து என்னை இரயில் நிலையத்தில் விட்டு சென்றார். நல்ல வேளையாக இரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தது. அதில் ஏறி அமர்ந்தவுடன் தான் நிம்மதி வந்தது. மறுநாள் காலை அதாவது நேற்று சௌகரியமாக சென்னை வந்து சேர்ந்தேன்.

என்னுள் இருக்கும் கேள்வி இதுதான். எப்போது மக்கள் பொங்கி எழுந்து இந்த கட்டாய கடையடைப்பை நிறுத்தப்போகிறார்கள்? சீக்கிரம் அவர்கள் செய்வது நல்லது. இல்லையெனில் God will disown his own country!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

33 கருத்துகள்:

  1. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் இந்த மாதிரி பந்த் கடையடைப்புக்கள் கைவிட வேண்டிய ஒன்று! இதை அதிகம் படித்த மாநிலத்தவர்களே புரிந்து கொள்ளாமல் இருப்பது வேடிக்கைதான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  2. இந்த கலாச்சாரம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. ஆகவே யாரும் இதை எதிர்க்க மாட்டார்கள். பந்த் இல்லாவிட்டால் மலையாளி செத்துப் போய் விடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! இந்த தொன்று தொட்ட கலாசாரத்தை மாற்றவேண்டும் என்பதுதான் எனது கருத்து. நிச்சயம் ஒரு நாள் வருங்கால மலையாள இளைஞர்கள் இதை மாற்றுவார்கள் என்பது திண்ணம்.

      நீக்கு
  3. பொதுமக்களைப் பொறுத்தவரை இந்த பந்த் ஒரு தொல்லைதான். உங்கள் அனுபவத்தை நன்றாகவே சொன்னீர்கள்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  4. வணக்கம் நண்பரே இந்த பந்த் எனப்படுவது சாதாரண குடி மக்களின் வாழ்வைத்தான் பாதிக்கிறது இதை அரசாங்கம்தான் தலையிட்டு சுமூக தீர்வு காணவேண்டும். என்னப்பொருத்தவரை இதை களையப்பட வேண்டிய விடயமே....
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  5. //பல ஆண்டுகளுக்கு முன்னால் இதே கோழிக்கோட்டில் ஒரு மருத்துவர் ஒரு அவசர சிகிச்சை செய்ய ஒரு ‘பந்த்’ நாளன்று தனது சிற்றூந்தில் மருத்துவர் என எழுதிக்கொண்டு சென்றபோது, யாரோ ஒரு புண்ணியவான் ஒரு பெரிய கல்லை அவர் மேல் வீச அது அவரது தலையில் பட்டதால் அவர் ஆழ்மயக்க (Coma) நிலைக்கு சென்றது ஏனோ என் நினைவில் வந்து மிரட்டியது. //

    மிகவும் கொடுமையாக உள்ளது. ‘பந்த்’ எங்கு நடந்தாலும் சாதாரண அப்பாவிப் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    எங்கும் எதற்கும் ‘பந்த்’ என்ற கடை அடைப்போ, போக்குவரத்து பாதிப்புகளோ நடைபெற, அரசாங்கம் ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! ஏழு ஆண்டுகள் இந்த கொடுமையை அனுபவித்ததால் இந்த பதிவை எழுதியிருக்கிறேன். ஆனால் நமது மலையாள நண்பர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.

      நீக்கு
    2. கேரளா + மலையாளிகள் என்று மட்டுமல்ல.

      இது நம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து நகரங்களிலும், அடிக்கடி நடப்பது தான்.

      எங்கு திரும்பினாலும், வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், கடை அடைப்புகள், போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்பது, அது தொடர்பான வன்முறைகள் என தொடர்கதையாகவே உள்ளன.

      பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்குக்காரணமாகவே அமைந்து விடுகின்றன என்பதும், சமூக விரோதிகளைத் தூண்டிவிட்டு, பல காரியங்கள் நடைபெறுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

      இது போன்ற செயல்களே நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் தடையாகவும் உள்ளன.

      ஒருவேளை கேரளாவில் இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கலாம்.

      அபுதாபியிலுள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையில் வேலைபார்க்கும், மலையாள நண்பருடன் நான் நேரில் அங்கு சென்றிருந்தபோது, பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் இதையேதான் சொன்னார். ஒப்புக்கொண்டார்.

      அதுபோன்ற தொல்லைகள் [Strike, Traffic Jam etc.,] ஏதும் இங்கு UAE யில் கிடையாது என்றும், நிம்மதியாக வாழ்வதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுச் சொன்னார்.

      நீக்கு
    3. வருகைக்கும் புதிய கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எல்லா மாநிலங்களிலும் இந்த கடையடைப்பு நடந்தாலும் கேரளா போல் எதற்கெடுத்தாலும் கடையடைப்பு நடத்தப்படுவதில்லை. மேலும் கடையடைப்பு என்று அறிவித்ததும், அதை அங்குள்ள மக்கள் ஒரு விதி போல் பாவித்து நடப்பதுதான் ஆச்சரியம்.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா

    பாதிக்க படுவது அடித்தட்டு மக்கள்.... அனுபத்தின் வாயில் எழுதிய பதிவு நன்றாக உள்ளது
    பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன்அவர்களே!

      நீக்கு
  7. ஹை கோர்ட் தடை செய்தது பந்தை தான், அது பெயர் மற்றம் செய்யப்பட்டு தற்போது ஹர்தால் ஆகிவிட்டது. இது எல்லோருக்கும் ஒரு நாள் லீவு போலத்தான். பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    கேரளத்தில் அடித்தட்டு மக்கள் என்பவர் கிடையாது. சாதாரண வேலைக்கு ஒரு நாள் கூலி 750 Rs. ஹர்தால் என்பதும் அவர்களுக்கு ஒரு நாள் லீவு, மேலும் கட்சிக்காக ஒரு நாள் கல் எறிந்து விளையாடலாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. தவறுதலாக ‘பந்த் என்பதையும் ஹர்த்தால் என்பதையும் இடம் மாற்றிப் போட்டுவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
      நான் அங்கு பணிபுரிந்த நாட்களில் எல்லோரோடும் இது பற்றி விவாதித்தில் தனிப்பட்ட முறையில் யாரும் கடையடைப்பை ஆதரிப்பதாக தெரியவில்லை. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழியை கடைப்பிடிக்கிறார்கள் என்பதே உண்மை.

      நீக்கு
  8. பாதிக்கப் படுவது என்னவோ மக்கள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  9. எதற்கும் ஒரு காலம் வரும்... மாற்றம் வரும்... வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! காலமும் வரும் மாற்றமும் வரும். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான்.

      நீக்கு
  10. அந்தக் காலத்தில் மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. இப்பொழுது எல்லோரும் மன்னர்கள். உண்மையில் பந்த் அன்று பிரச்சனை இல்லாதவர்கள் தவிர அனைவரும், பந்த் குறித்து மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பந்த்-ஐ ஆதரிக்காவிட்டாலும், அன்று கிடைக்கும் விடுமுறையை மக்கள் ஆதரிப்பதாலேயே பந்த் வெற்றி பெற முடிகிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! திரு ஜெயக்குமார் அவர்களும் உங்கள் கருத்தையே ஆமோதிக்கிறார். மக்கள் முழு ‘ஒத்துழைப்பு’ கொடுப்பதால் தான் கடையடைப்பு செய்ய சாத்தியமாகிறது. என்றைக்கு மக்கள் கொதித்தெழுந்து எதிர்க்கிறார்களோ அன்றே இது மறைந்து போகும்.

      நீக்கு
  11. இம்மாதிரியான போராட்டங்களுக்குஅடிப்படைக் காரணம் வாழ்க்கையில் மக்கள் எதிர் கொள்ளும் ஏற்ற தாழ்வுகளே. இந்தப் போராட்டக் கலாச்சாரம் எல்லா மாநிலங்களிலும் நடை பெறுவதுதான் இது பற்றி விரைவில் விரிவாக எழுதுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! நீங்கள் என்னைவிட கேரளா பற்றி அதிகம் அறிந்தவர் என்பதால் தங்களிடமிருந்து விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். கேரளாவில் நடத்தப்படும் ‘பந்த்’, மற்ற மாநிலங்களில் நடத்தப்படுவதிலிருந்து வேறுபட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

      நீக்கு
  12. God will disown his own country! என்ற முத்தாய்ப்பான வரிகள் மூலம் பதிவினை நிறைவு செய்துள்ளீர்கள். இதன்மூலமாக எந்த அளவு தாங்கள் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருப்பீர்கள் என்பதை அறியமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான்.

      நீக்கு
  13. சோதனை மேல் சோதனை
    போதுமடா சாமி!
    கடையடைப்புக்கு (பந்த்) விடை கொடுக்கும்
    காலம் கனிய வேண்டுவோம்!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  14. பந்த் நாட்களில் அங்கே இருப்பது மிகவும் கடினம். உங்கள் நண்பர் அங்கே இருந்து உங்களுக்கு வாகன வசதிகள் செய்து தந்ததால் பிழைத்தீர்கள். இல்லையெனில் நீங்கள் ரயில் நிலையத்திலேயே இருந்திருக்க நேர்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே!

      நீக்கு
  15. Observing bandh is like breathing for keralites...! You have rightly observed that God will disown his country if this cancerous attitude is not halted. Vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! பூனைக்கு யாரேனும் மணி கட்டுவார்கள் என நம்புவோம்!

      நீக்கு
  16. தங்கள் பதிவினைப் படித்து எனது கருத்தினைத் தந்திருக்கிறேன் திரு புதுவை வேலு அவர்களே!

    பதிலளிநீக்கு