ஞாயிறு, 10 மே, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 27





இந்த தொடர் பதிவின் 22 ஆம் பதிவில் பொன்ஃஜி திட்டம் பற்றி சொல்லும்போது அதுபோன்ற இன்னொரு திட்டமான கூம்பக (Pyramid) திட்டம் பற்றி பின்னர் பார்க்கலாம் என சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்.



இந்த திட்டமும் பொன்ஃஜி திட்டம் திட்டம் போன்ற ஒரு ஏமாற்றுத் திட்டம் தான். அதிக வருவாய் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையை உண்டாக்கி, இல்லாத நிதி ஆதாரத்தை சார்ந்திருப்பதே இதனுடைய சிறப்பியல்பு.

இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும், இந்த திட்டத்தின் சிறப்பியல்புகள் பொன்ஃஜி திட்டத்திலிருந்து மாறுபட்டது. பொன்ஃஜி திட்டத்தில் திட்டத்தை தொடங்குவோர் அந்த திட்டத்திற்கு மய்யப் புள்ளியாக செயல்படுவார்கள். அதாவது பயனாளிகள்(!) அவரோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள்.

ஆனால் இந்த கூம்பக (Pyramid) திட்டத்திலோ அதில் சேரும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் கூடுதல் பங்கேற்பாளர்களை சேர்க்கவேண்டும். எனவே புதிதாய் சேருபவர்களுக்கும், திட்டத்தை தொடங்கியவருக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் புதிய உறுப்பினரை சேர்க்காவிட்டால் தாங்கள் முதலில் முதலீடு செய்த பணத்திற்கு வருவாய் கிடைக்காது.

பொன்ஃஜி திட்டம் முதலீட்டார்கள் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத முதலீட்டு அணுகுமுறையை கொண்டதாய் இருக்கும். ஆனால் கூம்பக திட்டமோ புதியாய் சேருவோரின் முதலீடுதான் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு வருமானமாக இருக்கும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கும். எனவே ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களுடைய முதலீட்டை அதிக இலாபத்தோடு பெற புதிய பங்கேற்பாளர்களை சேர்க்க முயலவேண்டும்.

இந்த கூம்பக திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஒருவர் பின் ஒருவர் சங்கிலித்தொடர்போல் புதிய பங்கேற்பாளர்களை சேர்க்காவிடில் அந்த தொடர் சங்கிலி அறுந்து மிக விரைவில் நிலைகுலைந்து நொறுங்கிவிடும்.

ஆனால் பொன்ஃஜி திட்டமோ ஏற்கனவே இருக்கின்ற முதலீட்டார்களை, அவர்களது முதலீடு முதிர்வு அடையும் தருணத்தில் திரும்பவும் மறுமுதலீடு செய்ய இணங்கச் செய்வதன் மூலமும், மிகச் சிறிய அளவில் புதிய முதலீட்டார்களை சேர்ப்பதன் மூலமும் நீடித்திருக்கமுடியும்.

இந்த கூம்பக திட்டம் என்பது சேவை சார்ந்தும் அல்ல எந்த பொருட்களும் உற்பத்தி செய்து விற்பனை செய்வதும் அல்ல. வெறுமனே உறுப்பினர்களிடம் தொகையை வாங்கி எந்த வித ஆக்க வளமுடைய செயல்களை (Productive Activities) செய்யாமல் அதை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே இந்த திட்டதின் முக்கிய செயல்பாடு.

இதில் சேரும் பங்கேற்பாளர்களுக்கு தாங்கள் சேர்க்கும் உறுப்பினர்கள் தரும் தொகையிலிருந்து ஒரு பகுதி ஊக்கத்தொகை போல கிடைக்கும். இது போன்று ஒவ்வொரு உறுப்பினர்களும் மேலும் பல உறுப்பினர்களை சேர்க்கும்போது முதலில் சேர்ந்தவர்களுக்கு தொடர்ச்சியாய் ஊக்கத்தொகை கிடைத்துக் கொண்டிருக்கும்.

எனவே இந்த திட்டத்தில் முதலில் சேருபவர்கள் முதலீடு செய்த பணத்தை இலாபத்தோடு பெற இயலும்.. திட்டத்தை ஆரம்பித்தவரோ எந்தவித முதலீடும் செய்யாமல் கடைசிவரை, அதாவது அந்த திட்டம் தகர்ந்து போகும் வரை இலாபம் பெற்றுக்கொண்டு இருப்பார்.

ஆனால் உறுப்பினர்கள் சேருவது குறையும்போது இந்த திட்டம் அப்படியே சீட்டுக்கட்டு சரிவதுபோல் விழுந்துவிடும். அப்போது கூம்பின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் (இறுதியில் சேர்ந்தவர்கள்) தாங்கள் போட்ட முதலீட்டை தொலைத்து நஷ்டமடைவது திண்ணம்.

இது போன்ற திட்டங்களில் சேர்ந்தவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் பணத்தை இழந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. எனவே இது போன்ற திட்டத்தை யாரேனும் அறிமுகப்படுத்த வந்தால் அதை காது கொடுத்து கேட்காமல் இருபதே நல்லது.

இப்போது எல்லோருக்கும் அறிமுகமாகி, பிரபலமாக இருக்கும் பல்முனை விற்பனை (Multi Level Marketing) என்ற ஒரு திட்டமும் ஒரு கூம்பக (Pyramid) திட்டம் தான். ஆனால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் MLM திட்டத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு உறுப்பினர்கள் சேர்ப்பதில்லை.

இதில் உறுப்பினர்களாக சேருபவர்கள் அந்த நிறுவனம் தயாரித்த அல்லது சந்தைப்படுத்தும் பொருட்களை, தாங்கள் வாங்கி மக்களுக்கும் விற்பனை செய்வதோடு புதிய உறுப்பினர்களையும் சேர்க்கவேண்டும்.

இதில் உள்ள உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களை சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ தாங்கள் சேர்ந்துள்ள நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்று கழிவுத்தொகையை (Commission) பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தாங்கள் சேர்த்துள்ள உறுப்பினர்களை விட பொருட்களை விற்பதன் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும். மேலும் இது கூம்பக திட்டம் போல் இருந்தாலும் நல்ல தரமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்தால் அவைகள் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனமாகவே கருதப்படும்.

இருந்தாலும் சமீபகாலமாக இது போன்ற நிறுவனங்கள் தரமற்ற பொருட்களை அதிக விலையில் விற்று பொது மக்களை ஏமாற்றுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. விவரம் தெரியாமல் தரமற்ற பொருட்களை விற்கும் (பொதுமக்கள் தலையில் கட்டும்) நிறுவனத்தின் முகவர்களாகி பின்னர் சட்ட சிக்கலிலும் பொது மக்களின் கோபத்திற்கும் ஆளாகாமல் இருப்பதை விட இவைகளை விட்டு ஒதுங்கியிருப்பதே சாலச் சிறந்தது.

இதுபோன்ற திட்டங்களில் நம்மை சேர அழைப்பவர்கள் பிடியிலிருந்து எவ்வாறு தப்புவது என்பதை அடுத்து பார்ப்போம்.



தொடரும்






23 கருத்துகள்:

  1. ஐயா
    வணக்கம்.
    சில பதிவுகளைத் தொடரவிட்டுவிட்டேன் பார்க்கிறேன்.
    உண்மையில் இதுபோன்ற விடயத்தில் எனது அறிவு பூச்சியம்தான்.
    இல்லை அதற்கும் கீழே...!
    உங்களின் பதிவு ஆச்சரியப்படுத்துகிறது.
    இவ்வளவுவிடயங்களை அறியாமல் போய்விட்டோமே என.

    எவ்வளவு பேருக்குப் பயன்படும்...!!!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! இந்த பதிவில் உள்ள விவரங்கள் படிப்பவர்களுக்கு உபயோக இருக்குமானால் மகிழ்ச்சியே. முடிந்தால் விட்டுப்போன தொடரின் பதிவுகளை படிக்கவும். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  2. தங்களுடைய இந்த தொடர் பதிவுகள் மூலமாக பல நல்ல செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். நாங்கள் எச்சரிக்கையாக இருக்க இவை போன்ற பதிவுகள் உதவுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  3. சென்ற பதிவுக்கும் இந்த பதிவுக்கும் இடையில் நிறையவே இடைவெளி. இந்த பதிவினில் நீங்கள் சொல்லும் கூம்பக (Pyramid) முறை பற்றி எனக்கு எது என்று விளங்கவில்லை. ரியல் எஸ்டேட் வணிகத்தில் உள்ளதா? ஒரு உதாரணம் மட்டும் கொடுக்கவும்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! மடிக்கணினி மிகவும் மெதுவாக இயங்க ஆரம்பித்ததால் ஒருங்கமைப்பு (Format) செய்யும்படி ஆகிவிட்டது. அதனால் பதிவு எழுதுவதில் இடைவெளி. மேலும் சில சொந்த அலுவல்களும் குறிக்கிட்டதால் எழுத தாமதமாகிவிட்டது.
      கூம்பக திட்டம் நில உடைமைகள் துறையை (Real Estate) சேர்ந்தது அல்ல. பணம் கட்டி இந்த திட்டத்தில் சேரும் நாம், நமது பணத்தை பெற புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் பணம் கட்டினால் தான் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. ஆரம்பத்தில் சேருவோருக்கு போட்ட பணமும் அதற்கு மேலேயும் கிடைக்கும். ஆனால் பின்னால் சேருவோரில் பெரும்பான்மையோர் பணத்தை இழப்பது நிச்சயம்.

      நீக்கு
    2. திரு G.M பாலசுப்ரமணியம் அவர்கள்
      சிறு பொறி காட்டுத் தீ’ என்ற தலைப்பில் தனது பதிவில் (http://gmbat1649.blogspot.in/2013/02/blog-post_8.html) இது பற்றி விவரமாக எழுதியுள்ளார். கணக்குப் போட்டுப் பார்த்தால் பணம் வருவதுபோல் இருக்கும் ஆனால் வராது என்பதே உண்மை.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    தங்களின் தொடர் பதிவில் நல்ல செய்திகளை சொல்லியுள்ளீர்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உகந்தவை... பகிர்வுக்கு நன்றி
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் .த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் ,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! அன்னையர் நாள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. தனிநபர் நேர்மை என்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. எல்லோரையும் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி. கந்தசாமி அவர்களே! இன்றைய நிலையில் யாரையும் நம்பமுடிவதில்லை என்பது சரியே.

      நீக்கு
  6. Multi Level Marketing-ல் சேர்ந்து அலைந்து நொந்து போனவர்கள் பல பேர்... இப்போது "பட்டு" திருந்தி விட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! எல்லா MLM களும் மோசமானவை அல்ல. ஆனால் எவை நல்லவை என அறிவது கடினமே!

      நீக்கு
  7. அனைவருக்கும் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தரும் மிகவும் பயனுள்ள பகிர்வு. இவைகளை விட்டு ஒதுங்கியிருப்பதே சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எனது கருத்தை ஆமோதிப்பதற்கு நன்றி!

      நீக்கு
  8. பயனுள்ள தகவல் களஞ்சியம் தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  9. சிறு பொறி காட்டுத்தீ என்னும் பதிவு எழுதி இருந்தேன். சுட்டி தருகிறேன் இந்த மாதிரி ஏமாற்று வழிகளுக்கு முன்னோடியாய் இருக்கலாமோ என்னும் சந்தேகம் எழுகிறது
    http://gmbat1649.blogspot.in/2013/02/blog-post_8.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களது பதிவையும் படித்தேன்.இந்த திட்டங்களில் பணம் வருவதுபோல் இருக்கும் ஆனால் வராது என்பதே உண்மை.

      நீக்கு
  10. எத்தனை எத்தனை வழிகளில் ஏமாற்றுகிறார்கள்.

    இந்த multi level marketing சம்பந்தமாக நிறைய பேர் பேசினாலும் இது வரை மாட்டிக்கொண்டதில்லை. சில நட்புகளை இழந்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நட்பை இழந்தாலும் பரவாயில்லை. நிம்மதியையும் பணத்தையும் இழக்காமல் இருப்பதே சிறந்தது.

      நீக்கு
  11. பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே குறிக்கோள் என்றால் அது பெரிய காரியமே இல்லை. மக்களின் ஆசைகளை வைத்தே இத்தகைய திட்டங்கள் வெற்றியடைகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! மக்களின் ஆசை என்பதைவிட அவர்களின் பேராசையே இது போன்ற திட்டங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என்பதே உண்மை.

      நீக்கு