ஞாயிறு, 28 ஜூன், 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 31




தேக்குமர திட்டத்தில் சேராமல் தப்பித்த நான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு திட்டத்தை சந்தைப்படுத்தும் முகவரை அண்டை மாநிலத்தில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அப்போது நான் மாற்றல் ஆகி கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊரில் எங்கள் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.



ஒரு நாள் மதியம் 2 மணி உணவு இடைவேளையில் நான் எனது அறையில் இருந்தபோது, ஒருவர் ‘உள்ளே வரலாமா?’ எனக் கேட்டுக்கொண்டே வந்தார். வந்தவரை அமர சொல்லி ‘என்ன வேண்டும்?’ என ஆங்கிலத்தில் கேட்டதும் அவர் என் பெயரையும் எனது உச்சரிப்பையும் பார்த்து புரிந்துகொண்டார் நான் மலையாளி அல்ல ‘பாண்டி’ என்று!

(மலையாள நண்பர்கள் தமிழர்களுக்கு வைத்திருக்கும் ‘செல்ல’ப் பெயர் ‘பாண்டி’ என்பதாகும். அதுபற்றி பின்னர் எழுதுவேன்.)

‘சாருக்கு எந்த ஊர்?’ என்றதும் நான் ‘சென்னை.’ என்று பதில் சொன்னேன். உடனே அவர் ‘சென்னைக்கு நான் பல முறை வந்திருக்கிறேன் சார்.’ என்றார். இது என்னை மகிழ்ச்சிப்படுத்த சொன்ன சொற்கள் என்பதை அறிந்துகொண்டு, அதில் மயங்காமல், ‘ரொம்ப சந்தோஷம். நீங்கள் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என சொல்லவில்லையே?’ என்றேன்.

அதற்கு அவர் ‘சார். Timeshare எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபற்றி உங்களிடம் பேசலாம் என்று வந்திருக்கிறேன்.‘ என்றார். எனக்கு அது என்ன என்று தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு, ’கேள்விப்பட்டதில்லை. சொல்லுங்கள்.’என்றேன்.

(Timeshare திட்டமும் ஒருவகையில் ஏமாற்றுத்திட்டம் தான் என்பதும் இதில் சேருவதால் நடுத்தர மக்களுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்பது தான் என் கருத்து. இந்த திட்டம் பற்றி அனேகருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் அது பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவின் முடிவில் சொல்ல இருக்கிறேன்.)

உடனே அந்த முகவர் உற்சாகத்தோடு, ‘சார் நீங்கள் சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி அருவியைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்றார்.

எங்கள் வங்கி கிளையில் செயல்பட்டு வந்த ஊழியர்கள் மனமகிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுப் பயணத்தின்போது அந்த அருவியைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

அப்போது அந்த அருவிக்கு அருகே நின்று நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் கீழே.



அதிரப்பள்ளி அருவி என அழைக்கப்படும் இந்த அருவி (இதை ‘அதிரப்பள்ளி வெள்ளச்சாட்டம்’ என மலையாளத்தில் அழைப்பார்கள்.) கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி என்ற ஊரிலிருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலக்குடி ஆற்றில் அமைந்துள்ள இந்த அருவி 80 அடி உயரத்திலிருந்து விழுவதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.

இந்த அருவியைப் பார்க்காதவர்களுக்காக வேறொரு கோணத்தில் அதனுடைய புகைப்படத்தை கூகிளார் உபயத்துடன் கீழே தந்திருக்கிறேன்.





இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய அருவி இது.
நம் நாட்டில் இதைப் போன்று கர்நாடகாவில் ஷிவமோகா மாவட்டத்தில் சாகரா (Sagara) என்ற ஊரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஷாராவதி ஆற்றில் 830 அடி உயரத்திலிருந்து விழும் ஜோக் (Jog) அருவி போன்றவைகள் இருக்க நம்மில் பலர் இன்னும் நயாக்ராவை பார்க்கவில்லையே என ஏங்கிக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை!

அந்த முகவர் ‘அதிரப்பள்ளி அருவியைப் பார்த்திருக்கிறீர்களா?’ என கேட்டபோது ‘பார்த்திருக்கிறேன். அதற்கென்ன?’ என்றேன். அதற்கு அவர் ‘சார். இந்த அருவிக்கு அருகில் தான் எங்கள் நிறுவனம் ஒரு விடுமுறை ஓய்வகம் (Holiday Resort) கட்டியுள்ளது. இந்த ஓய்வகத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலம் உரிமையுடன் தங்கிக் கொள்வதற்காக எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள திட்டம் தான் இந்த Timeshare எனப் படும் திட்டம்.

இது ஒரு உலகம் முழுதும் பிரபலமான திட்டம். இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை நீங்கள் கட்டிவிட்டால் 25 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு வாரம் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். எங்கள் விடுதியில் 5 நட்சத்திர தங்குமிடம் போன்ற வசதிகள் உண்டு. உங்களைப்போல் வங்கியில் எந்த நேரமும் மன அழுத்ததோடு பணியாற்றுபவர்களுக்கு இது ஒரு நல்ல இளைப்பாறிக்கொள்ளும் இடமாக இருக்கும்.’ என்றார்.

‘நல்லது. 5 நட்சத்திர தங்குமிட வசதி என்கிறீர்கள். இலவச உறைவிட வசதியோடு உணவும் உண்டுதானே?’ என்று கேட்டதும், அவர் ‘இல்லை சார். நீங்கள் கட்டும் பணம் உறைவிடத்திற்கு மட்டும் தான். உணவிற்கான கட்டணம் அப்போதைய விலைவாசி நிலவரப்படி வசூலிக்கப்படும்.’ என்றார்.

‘அது சரி. அதிரப்பள்ளியில் மட்டும் தானே உங்களது ஓய்வகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும் அல்லவா? அப்படி இருக்கும்போது அதே இடத்திற்கு 25 ஆண்டுகள் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட வெறுப்பை மூட்டுமே.மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்தால் வேறு இடத்திற்கு செல்லாமல் இதே இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஆகிவிடுமே?’என்றேன்.

அதற்கு அவர் ‘ சார். எங்கள் நிறுவனம் மேலும் பல இடங்களில் இதுபோன்ற விடுதிகள் கட்ட இருக்கிறது. அப்படி பல இடங்களில் விடுமுறை ஓய்வகம் நாங்கள் அமைத்ததும், நீங்கள் இங்கு தங்க இருக்கும் நாட்களுக்கு பதிலாக அங்கு சென்று தங்கிக்கொள்ளலாம்.’ என்று சொன்னார்.

உடனே நான் ‘அந்த நாட்களில் அங்கு வேறு யாராவது முன் பதிவு செய்திருப்பார்களே? அப்போது நான் எப்படி எங்கு போகமுடியும்?’ என்றதும், அவர் ‘ நீங்கள் சொல்வதும் சரிதான். நீங்கள் விரும்பும் ஆண்டில் அங்கு இடம் காலியாக இல்லையென்றால், இங்குள்ள உங்களுக்கான நாட்களை எங்களிடம் ஒப்புவித்துவிட்டு (Surrender) அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.’ என்றார்.

‘அது சரி! அதிரப்பள்ளியில் கூட அருவிதானே உள்ளது. வேறு பொழுதுபோக்கிற்கான இடங்கள் இல்லையே. ஒரு நாள் வேண்டுமானால் அதை பார்த்து மகிழலாம். ஒரு வாரம் அங்கு தங்கி என் செய்ய! அருவியில் குளிக்கக்கூட இயலாது. இந்த ஓய்வகமே தமிழ் நாட்டில் உள்ள குற்றலாத்தில் இருந்தால் தினம் மூலிகை கலந்து வரும் அருவியில் குளித்தாவது மகிழலாம். ‘என்றேன்.

எனது அசௌகரியமான கேள்விகளை தவிர்ப்பதற்காக, எனது கவனத்தை திருப்ப எண்ணி அவர் ‘சார். முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். இந்த அருவியில் தான் நடிகர் கமலஹாஸன் நடித்த ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் வரும் காட்சிகள் எடுக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதனாலேயே இதை புன்னகை மன்னன் அருவி என்றும் அழைக்கிறார்கள். மிகவும் பிரசித்திபெற்ற இடம் சார்.’ என்றார்.

அவர் இதை சொன்னதன் காரணம் என்ன என்பதை உடனே புரிந்துகொண்டேன். தமிழர்கள் திரைப்பட நடிகர்கள் என்றால் ‘ஆ’வென்று வாயைப் பிளப்பார்கள். அதை வைத்து தனது பணியை சுலபமாக முடித்துவிடலாம் என நினைத்திருப்பார் போலும்.

அவரை சொல்லி குற்றமில்லை. பொதுவாகவே தமிழர்கள் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீட்டை அவரும் அறிந்திருப்பார் போலும்.

ஒரு நாளிதழில் படித்தேன்.தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாமாம். அது என்ன மூன்று வகை?

தொடரும்




35 கருத்துகள்:

  1. எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு.ஆனால் அவற்றை அப்படியே நினைவில் வைத்திருந்து எழுதுவது என்பது உங்களால் மட்டுமே முடியும்!
    அதென்ன மூன்று வகை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நெனெகளும் உங்களது அனுபவங்களை எழுதலாமே? அந்த மூன்று வகை பற்றி வரும் பதிவில் அறியலாம்.

      நீக்கு
  2. ஆஹா, தொடரும்? காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. நான் அதிரப்பள்ளி அருவிகொட்டும் அருகே சென்றிருக்கிறேன் புகைப் படத்தில் நீங்கள் இருக்கும் இடம் அருவியின்மேல் தளம், அதன் அடிவாரத்துக்குச் செல்ல மிகவும் சரிவான வழியில் செல்ல வேண்டும் என் வயதைக் கருதியும் அந்த நீள் சரிவைக் கருதியும் என்னை இறங்க வேண்டாம் எனப் பலரும் தடுத்தும் கீழே இறங்கி அந்தக் காட்சியை ரசித்தேன் உங்கள் இப்பதிவு எனது நினைவுகளை மீட்டெடுத்தது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எனது பதிவு தங்களது நினைவுகளை மீட்டெடுத்தது அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு
  4. எப்படியெல்லாம் மடக்கப் பார்க்கிறார்...!

    அடுத்த பகுதியை ஆவலுடன்...

    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். மேலும் சுவாரஸ்யங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. விடாது கருப்பு. தொடர்கின்றேன்.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  7. வணக்கம்.

    என்ன ஒரு தெளிவான கேள்விகள்....!!!

    இனிமேல் இதுபோன்ற திட்டத்தோடு யாராவது வந்தால் முதலில் இவரைச் சேர்த்துவிட்டு வாருங்கள்..! பின்பு நான் சேர்ந்து கொள்கிறேன் என உங்கள் முகவரியைக் கொடுத்து அனுப்பப் போகிறேன் :)

    அதிரப்பள்ளி சென்றதும் அருவி வீழும் இடத்தில் நின்று அடிவாரம் பார்த்ததும் அடிவாரத்திற்குச் சென்று சிறு சிறு பாறைகளைக் கடந்து சாரலிலேயே குளித்துவிட்டது இனிய அனுபவங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! திரு G.M.B ஐயா அவர்கள் போலவே உங்களையும் அந்த பழைய இனிமையான அனுபவங்களை திரும்பவும் அசைபோட என பதிவு உதவியக்டு அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  8. இந்த மாதிரி முகவர்கள் மிகவும் வார்த்தை ஜாலம் காட்டி ஏமாற்றுவார்கள்! நீங்கள் அந்த ஜாலத்தில் மயங்காமல் உஷாராய் இருந்தது பெரிய விஷயம்தான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  9. Onee way to avoid such pestering salesmen is to pose inconvenient questions the way u did very cleverly

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! அசௌகரியமான கேள்விகள் கேட்டதால் நான் சௌகரியமாக இருக்கிறேன்!

      நீக்கு
  10. மூன்று வகை தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கு நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! மூன்று வகை தமிழர்கள் பற்றிய தகவலை அடுத்த பதிவில் தருகிறேன்.

      நீக்கு
  11. பாண்டி பற்றி தற்போதுதான் அறிகிறேன். சுற்றுலாத்தலம் வாய்ப்புகிடைக்கும்போது பார்ப்பேன். அனுபவம் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும், பாராட்டிற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  12. வருகைக்கும், கருத்துக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! தங்களது பின்னூட்டத்தை படித்துவிட்டு மறுமொழி தருவதற்குள் அது மறைந்துவிட்டது. அதனால் உங்கள் பின்னூட்டத்தை இங்கு வெளியிட முடியவில்லை,

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் தொடருங்கள் தங்களின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும்,கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. திரு சென்னை பித்தன் அவர்கள் கூறியது போல், எனக்கும் இவ்வாறு ஏற்பட்டு இருந்தாலும், உங்கள் பதிவு படிக்கும் போது தான் நினைவு வருகிறது. தங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே!

      நீக்கு
  16. விதம் விதமாய் ஏமாற்றக் காத்திருக்கிறார்கள்.... :)

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  17. தமிழர்கள் திரைப்பட நடிகர்கள் என்றால் ‘ஆ’வென்று வாயைப் பிளப்பார்கள். அதை வைத்து தனது பணியை சுலபமாக முடித்துவிடலாம் என நினைத்திருப்பார் போலும்.

    அவரை சொல்லி குற்றமில்லை. பொதுவாகவே தமிழர்கள் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பீட்டை அவரும் அறிந்திருப்பார் போலும்
    தெளிவாகச் சொன்னீர்கள் நண்பரே தமிழ்நாட்டின் உண்மை
    நிலை துதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  18. முகவர்களிடம் பொறுமையாகக் கேட்பதோ, விளக்கம் கூறுவதோ கடினமான காரியம். வாழ்த்துக்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! வங்கியில் மேலாளர்களாக இருப்பவர்களுக்கு பொறுமை அவசியம். அது இல்லாவிடில் பணி செய்வது கடினம்.

      நீக்கு
  19. மூவகை தமிழர்கள்? எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கு நன்றி திரு சொர்ணமித்ரன் அவர்களே! மூவகை தமிழர்கள் பற்றி அறிய காத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி!

      நீக்கு