செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.17


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நசுக்க இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக நினைத்து அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டதால் காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.



நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதாக எண்ணி துணை இராணுவத்தை முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் அழைத்தது, எரிகின்ற தீயில்எண்ணையை ஊற்றியதுபோல் ஆகி, அதனால் கலவரங்கள் தமிழகம் முழுதும் பரவி தீவைப்பு, பொதுச்சொத்து அழிப்பு என பெருகின.

காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த மக்கள் ஒரு காவல்துறை ஆய்வாளர் உட்பட இரு காவலர்களைத் தீயிட்டு கொன்ற நிகழ்வும் அப்போது நடைபெற்றது.

அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யம்பாளையம் திரு வீரப்பன், கீரனூர் திரு முத்து, மயிலாடுதுறை திரு சாரங்கபாணி, விருகம்பாக்கம் திரு அரங்கநாதன் கோடம்பாக்கம் திரு சிவலிங்கம் ஆகியோர் தங்கள் மீது கல்லெண்ணெயை (Petrol) ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்கள்.

1964 ஆம் ஆண்டு தீக்குளித்து மாண்ட அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் திரு சின்னைசாமியையும் சேர்த்து இந்தி திணிப்பை எதிர்த்து தங்களையே தீயிற்கு இரையாக்கியோரின் எண்ணிக்கை மட்டும் ஆறு ஆகும்.

இதோடு திருவாளர்கள் தண்டபாணி,முத்து, சண்முகம் ஆகிய மூன்று போராளிகள் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்கள். வெளியுலகிற்கு தெரிந்த தகவல்கள் இவ்வளவுதான். இன்னும் முகம் தெரிய போராளிகள் பலர் தங்களின் இன்னுயிரை பலி கொடுத்திருக்கலாம்.

இரண்டு வாரங்களுக்குமேல் நடந்த அந்த கலவரங்களில் மட்டும் 70 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அப்போது எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு பேர் காயமடைந்தார்கள் எவ்வளவு பேர் ஊனமுற்றார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் Alfred Stephan என்பவர் காவல் துறையினரும், இராணுவத்தினரும் 22 நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் அனேகமாக 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும், 10000  பேருக்குமேல் கைது செய்யப்பட்டிருக்கலாமென்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இறந்தவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் என நம்பப்படுகிறது. எந்த நாளேடும் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை தரவில்லை. பிப்ரவரி 8 ஆம் நாளிலிருந்து 12 ஆம் நாள் வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் 31 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதில் இறந்தவர்கள் 13 வயதிலிருந்து 50 வயதிற்குள் உட்பட்டவர்கள் என்பது ஒரு அதிர்ச்சியான தகவல்.அந்த போராட்டத்தினால் ஏற்பட்ட சொத்துகளின் இழப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

இதற்கிடையே செய்தி கேள்விப்பட்டு பாபநாசத்தில் இருந்த என் அண்ணன், கண் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருக்கும் அப்பாவிற்கு உதவியாக இருக்க உடனே வரச் சொல்லி எனக்கு அஞ்சல் அனுப்பினார். நானும் உடனே புறப்பட்டு பாபநாசம் சென்றேன். தஞ்சையில் அப்பாவுக்கு உதவியாக இருக்க விடுப்பில் வந்திருந்த என் இன்னொரு அண்ணன் சிவசுப்ரமணியன் அவர்கள் நான் சென்றதும் பணிக்கு திரும்பிவிட்டார்.

அப்பாவிடம் பல்கலைக் கழகம் மூடப்பட்டது பற்றி சொன்னதும் ‘திரும்ப எப்போது திறப்பார்கள்?’ என்றுதான் கேட்டார்களே தவிர போராட்டம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

தஞ்சையில் இருக்கும்போது என் அண்ணன் ஞானப்பிரகாசம் அவர்கள் ‘ ‘அனாவசியமாக வெளியே செல்லாதே. அண்ணாமலை பல்கலைக் கழகம் மூடப்பட்டதால் சென்னை சென்று தனது சகோதரனோடு ஒரு கல்லூரி விடுதியில் தங்கிருந்த ஒரு மாணவனை காவல்துறையினர் சென்னையில் மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த ‘திட்டம் தீட்ட’ வந்திருப்பதாக கருதி(!) கைது செய்து விட்டார்கள். எனவே நீ வெளியே சென்றால், போராட்டம் செய்ய மாணவர்களைத் தூண்டிவிட நீயும் தஞ்சை வந்திருப்பதாக கருதி கைது செய்யலாம்.’ என்று அறிவுரை சொன்னார்.

நானும் வெளியே செல்லாமல் மருத்துவமனையிலேயே இருந்துவிட்டு அப்பாவை மருத்துவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என்றதும் திரும்ப அப்பா அம்மாவுடன் பாபநாசம் வந்தேன்.

பாபநாசத்தில் இருந்த போது ஒரு நாள் கடைவீதி சென்றபோது அங்கு ஒரே களேபரமாக இருந்தது. என்னவென்று பார்த்ததில் போராட்டம் செய்துகொண்டிருந்த மாணவர்களும் பொதுமக்களும் வெளி மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகளின் பேருந்தை மடக்கி அதிலிருந்தவர்களை இறங்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தாங்கள் வங்காளிகள் என்றும் தாங்களும் இந்தி திணிப்பை எதிர்ப்பதாக சொன்னதும் தான் அவர்களை மேலே செல்ல அனுமதித்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பவும் இது போன்ற இடைஞ்சல்கள் வழியில் நேரலாம் என்பதால் அங்கேயே ‘நாங்கள் வங்காளிகள் நாங்களும் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்’ என்ற பதாகையை தயார் செய்து அதை பேருந்தில் கட்டிக்கொண்டு பயணித்தார்கள்.

தமிழகம் முழுதும் இந்தி திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள் யாவும் போராட்டத்தின் எதிரொலியால் இந்தி திரைப்படங்களை நிறுத்திவிட்டு தமிழ் படங்களை காட்டத் தொடங்கினார்கள். (இதனுடைய எதிரொலியாக வடக்கே தமிழர்கள் தயாரித்த இந்தி திரைப்படங்களை வெளியிடுவதை இந்தி ஆதரவாளர்கள் எதிர்த்ததால் அவைகள் யாவும் அங்கு திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டன. )

தொடரும்






26 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா! நலம்தானே! இந்த பதிவுக்கும், இதற்கு முந்தைய பதிவிவுக்கும் நீண்ட இடைவெளி விட்டு விட்டீர்கள்.
    தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நலமே. கடந்த 15 நாட்களாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடந்த திருமணம்/வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் வலைப்பக்கமே வர இயலவில்லை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. விரிவான நான் அறிந்திடாத அரிய தகவல்கள் நண்பரே தொடர்கிறேன்....
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா

    விரிவான தகவல் அறியாத விடயங்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு ரூபன் அவர்களே! வருகைக்கும், தமிழ்மண வாக்கிற்கும், கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  6. என் பதிவில் பின்னூட்டம் கண்டு உங்கள் தளம் வந்தேன் அன்றைய கலவரங்கள் சாதித்தது என்ன என்று நினைக்கத் தோன்றுகிறதுHas anything been achieved tangibly.? இப்போது ஹர்யானாவில் நடக்கும் ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது உயிர் சேதமும் பொருட்சேதமும்தான் கையிருப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே! அன்றைய கலவரங்கள் நடக்க யார் காரணம் என்று ஆராய்ந்தீர்களானால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. அந்த போராட்டம் நடக்காதிருந்தால் தமிழகத்தில் தமிழே அழிந்திருக்கும். (இப்போதே இளைய தலைமுறையினர் மதிப்பெண்கள் பெற வேறு மொழியை இரண்டாம் பாடமாக எடுத்து படிக்கிறார்கள்) வரும் தலைமுறை தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாமல் வளர்ந்து தமிழே மறைந்திருக்கும். அந்த போராட்டத்தால் உருப்படியான (Tangible) சாதனை உண்டா எனக் கேட்டு இருக்கிறீர்கள். அந்த சாதனை கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அந்த உயர்ப்பலிகள் அதை சாதித்திருக்கின்றன என்றே எண்ணுகிறேன்.

      ஹரியானா போராட்டம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அந்த போராட்டம் காரணமாக அரசு இறங்கி வந்து அவர்களது கோரிக்கையான இட ஒதுக்கீட்டை தர இசைந்துள்ளதை தாங்கள் இன்னேரம்அறிந்திருப்பீர்கள். சும்மா வரவில்லை சுதந்திரம் என்பக்டை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

      நீக்கு
    2. // அன்றைய கலவரங்கள் சாதித்தது என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது //

      தமிழ் மட்டும் அழித்திருந்திருக்காது. கூடவே ஆங்கிலமும் இந்தியாவில் வளர்ந்திருக்காது. இன்று இந்தியர்களுக்கு கணிணித்துறையில் வேலையும் இந்த அளவுக்குக் கிடைத்திருக்காது. அறுபது வயதைக் கடந்தவர்களுக்கே இந்த சிந்தனை உள்ளதென்றால் இளைய வயதினர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஹிந்தி வாழ்க! முதலில் ஹிந்திகாரனை ஹிந்தி மீடியத்தில் படிக்கச் சொல்ல வேண்டும்.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அன்று மட்டும் நம்மவர்கள் இந்தித் திணிப்பை எதிர்க்காமல் இருந்திருந்தால் இன்று நமது இளைஞர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் அறியாமல் வேலையின்றி தவித்திருப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழர்களே தமிழுக்கு எதிரியாக இருப்பதால்தான் இந்தி வெறியர்கள் அவர்களது மொழியை திணிக்க முயற்சித்தார்கள். இன்றோ இந்திக்காரர்களே தங்கள் தாய்மொழியான இந்தியில் படிக்காமல் ஆங்கிலத்தில் படித்துவிட்டு வந்து இங்கு சென்னையில் பணிபுரிகின்றனர். நீங்கள் சொல்வதுபோல் நம்மை இந்தி படிக்க சொல்லும் நம்மவர்களில் சிலர் இந்திக்காரர்களை இந்தி படிக்க சொல்லட்டுமே.

      நீக்கு
  7. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்கள் பதிவு! அருமை. தொடர்கிறேன்
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே!

      நீக்கு
  8. The dravidan party leaders gained political mileage and won the elections, There were hate speeches against Hindi and Tamilians were deprived of learning Hindi. But it is a fact that Dravidan leaders wards were trained well in Hindi as this further their business prospects, Even now, Hindi language issue is more of political nature, than born out of love for Tamil Some police exceses should have been avoided, This is personal opinion.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! திராவிட கட்சிகளின் தலைவர்கள் அரசியல் ஆதாயம் அடைந்து தேர்தலில் வெற்றிபெற்றதாக சொல்லியுள்ளீர்கள். இதற்கு காரணம் யார் என ஆராய்ந்தால் தங்களின் கூற்றிற்கு விடை கிடைத்துவிடும்.

      1. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் அலுவலக மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியை சீர் குலைக்கும் விதமாக மய்ய அரசு செயல்பட்டதும்
      2. இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மதுரையில் மாணவர்கள் 1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25 ஆம் நாள் ஊர்வலம் சென்றபோது அவர்களை காங்கிரசார் தாக்கியதும்
      3. அந்த தாக்குதலை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலம் போனபோது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு மாணவனின் உயிரைப் பறித்ததும்
      4. போராட்டம் நடைத்திய மாணவர்களை கேவலப்படுத்தியும் காவலரையும் துணை இராணுவத்தையும் கொண்டு அடக்குமுறை தர்பார் செய்ததும்

      தான் காரணம். ஒருவேளை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அப்போது முதல்வராக இருந்திருந்தால் மாணவர்களை சமாதானப்படுத்தி, நிலைமையை சமாளித்து மக்களின் கோபத்தை சம்பாதிக்காமல் தடுத்திருந்திருக்கலாம். எனவே திராவிட கட்சியின் தலைவர்கள் அரசியல் ஆதாயம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என சொல்வதை விட காங்கிராசர் தான் அவர்களை வெற்றிபெற உதவினார்கள் என்பதுதான் உண்மை,

      தமிழர்கள் இந்தி படிப்பதை திராவிட கட்சித் தலைவர்களின் இந்தி பற்றிய வசை சொற்கள் தான் தடுத்துவிட்டது என்பதும் உண்மையல்ல. திராவிட முன்னேற்ற கழகம் பதவிக்கு வருமுன்பே அதாவது 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரசார் ஆண்டபோதே தமிழக பள்ளிகளில் இந்தி ஒரு கட்டாய பாடமல்ல. எனவே இந்தி பாட ஆசிரியர்கள் அப்போது வகுப்பில் பாடமே நடத்தமாட்டார்கள். விருப்பப்பட்டோர் அதே ஆசிரியர்களிடம் மாலையில் தனியாக இந்தி படித்து தட்சிண பாரத் இந்தி பிரச்சார் சபா நடத்திய தேர்வுகள் எழுதித்தான் வெற்றிபெற்று இந்தி மொழியை கற்றுக்கொண்டனர்.
      (அப்படித்தான் நானும் தனியாக படித்து 1957 ஆம் ஆண்டு பிராத்மிக் தேர்வு எழுதி வெற்றிபெற்றேன்.) தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் அந்த கட்டாயமில்லாத பாடத்தை எடுத்துவிட்டனர் அவ்வளவே. அப்போதும் விருப்பப்பட்டோர் தனியாக இந்தி படித்து தேர்வு எழுதினார்கள். இப்போதும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே தமிழர்கள் இந்தி மொழியைப் படிக்கும் உரிமை பறிக்கப்பட்டது என்பது சரியல்ல.

      மேலும் இந்தி மொழி படிக்காததால் நமது பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது என சிலர் சொல்வது சரியல்ல. ஏனென்றால் இந்தியை தாய்மொழியாய் கொண்டவர்களும் ஆங்கிலம் படித்துவிட்டுத்தான் மென்பொருள் துறைக்கு வருகின்றனர். இந்தி படித்தால் தான் வேலைகிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிக்கவேண்டும்?

      இன்னும் தங்களைபோல் பலர் திராவிடக் கட்சிகள் தான் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்ததாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அது சரியல்ல. 1938 ஆம் ஆண்டு
      மே திங்கள் 28 ஆம் நாள் மாநிலம் முழுதும் உள்ள தமிழ் பற்றாளர்கள் (கவனிக்கவும். எந்த அரசியல் கட்சியினரும் அல்லர்.) ஒன்று கூடி நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களைக் கொண்ட இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒன்றை தொடங்கினார்கள். அதே ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தினார்கள். இது குறித்து இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 2 என்ற பதிவில் விரிவாக எழுதியிருக்கிறேன். இதுவரை படிக்கவில்லையென்றால் படித்துப் பார்க்கவும்.

      எனவே இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது எந்த குறிப்பிட்ட கட்சியின் எதிர்ப்பு அல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களின்( ஒரு சிலரைத் தவிர) எதிர்ப்பு அவ்வளவே.

      நீக்கு
    2. இந்தி திணிப்பு எதிர்ப்பில் சி.சுப்ரமணியம், காமராஜர் போன்ற காங்கிரசார் ஆற்றிய பங்கு பற்றிய விரிவான கட்டுரை

      http://tamilfuser.blogspot.com/2012/07/blog-post.html

      நீக்கு

    3. வருகைக்கு நன்றி சதுக்க பூதம் அவர்களே! தங்களது பதிவில் எனது கருத்துக்களை பின்னூட்டமாக தந்திருக்கிறேன்.

      நீக்கு
  9. நன்றி ஐயா .தேசிய மொழி கொள்கை எவ்வாறு பாக்கிஸ்தானை துண்டாக்கியது என்பது பற்றி எழுதி இருந்தேன். நேரமிருக்கும் போது பாருங்கள்
    http://tamilfuser.blogspot.com/2016/02/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சதுக்க பூதம் அவர்களே! தங்களது வலைப்பக்கத்தில் தேசிய மொழி கொள்கை எப்படி அன்றைய பாகிஸ்தானை துண்டாக்கியது என்பது பற்றிய விரிவான பதிவை படித்தேன். அருமையான படைப்பு.

      நீக்கு
  10. லால்பகதூர் சாஸ்திரியின் அப்போதைய அறிவிப்பு படி அனைத்து மத்திய அரசு பணிக்கான கேள்வி தாள்களும் இந்தியில் மட்டுமே இருக்கும் என்பது. அவர்களுடைய நோக்கமே பள்ளி கல்லூரியில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை மட்டும் புகுத்துவது தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதுக்க பூதம் அவர்களே! அப்போது மட்டும் இந்தி திணிப்பு போராட்டம் நடக்காதிருந்தால் நீங்கள் கூறியது போல் ஆங்கிலம் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருந்திருக்கும். நல்ல வேளை அது போல நடக்கவில்லை.

      நீக்கு
  11. இந்தத்தொடர் கட்டுரை மிக அருமையாகச் செல்கிறது.

    ’சும்மாவா கிடைத்தது சுதந்திரம்’ என்பதுபோலவே, அன்றைய இந்தப்போரட்டமும், பலரின் உயிர்த்தியாகங்களும், பிற மொழித் திணிப்பினைத் தவிர்த்து, நம் தமிழ்மொழி நம் தமிழ்நாட்டில் இன்றும் நம்மிடையே தொடர வழி வகுத்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

    என் ப்ளாக்கரில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் பிறர் பதிவுகள் பக்கம் செல்வதோ, பின்னூட்டம் இடுவதோ முடியாமல் உள்ளது. தொடர்ந்து 100 முறை முயற்சித்தால் ஒருமுறை மட்டும் கிடைத்து வருகிறது. அதனால் கருத்து எழுத தாமதம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தாமதமாக கருத்துக்களை தந்தாலும் அவைகள் எனக்கு ஊக்கமூட்டும் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.

      நீக்கு