வெள்ளி, 11 மார்ச், 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.20


1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25 ஆம் நாள், பாராளுமன்ற அவைத் தலைவரால், பாராளுமன்றத்தில் கலந்தாய்வு (Discussion) க்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற துணைக்குழு தயாரித்த அலுவல் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய சட்ட முன்வரைவு (Bill), பஞ்சாப் பிரிவினைப் போராட்டம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளை காரணம் காட்டி சட்ட திருத்தம் கொண்டுவர அது சரியான நேரம் இல்லையென கூறி அந்த சட்ட முன்வரைவு திரும்பப்பெறப்பட்டது என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.



அதன் பின்னர் நடந்த சில எதிர்பாராத நிகழ்வுகளால் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் 30,000 பாகிஸ்தான் இராணுவத்தினர் இரு நாடுகளுக்கிடையே இருந்த எல்லைக்கோட்டைத் தாண்டி காஷ்மீரில் ஊடுருவியதால் இந்தியா பாகிஸ்தானிடையே போர் மூண்டது.அதனால் தான் மொழி சட்டத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றம் பற்றிய பேச்சே எழவில்லை..

இரண்டு நாடுகளுக்கிடையே நடந்த போரில் அதிகம் சேதம் ஏற்பட்டது பாகிஸ்தானுக்குத் தான். அதே ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது.

அதனை அடுத்து 1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 2 ஆம் நாள் சோவியத் நாட்டில் இருந்த தாஷ்கெண்ட் (தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலை நகர்) சென்ற இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் நாட்டின் தலைவர் அயூப் கானும் சனவரி திங்கள் 10 ஆம் நாள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது.மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது.

அவரை அடுத்து திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1966 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 24 ஆம் நாள் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டிய முனைப்பில் இருந்ததால் உடனே அலுவல் மொழி சட்டத்தில் மாற்றம் செய்வது பற்றி சிந்திக்கவும் இல்லை. எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதே சமயம் எங்கள் சக மாணவர் திரு இராஜேந்திரன் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடிபட்டு இறந்து ஓராண்டு ஆகிவிட்டபடியால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்த நாங்கள் திரு இராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான சனவரி திங்கள் 27 ஆம் நாளன்று அவரது பெற்றோரை அழைத்து நினைவாஞ்சலியை செலுத்த எண்ணினோம்.

அந்த நாளில் கூட்டம் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது அவரது பெற்றோருக்கு எங்களாலான உதவியையும் செய்ய எண்ணி பல்கலைக்கழக மாணவர்களிடையே நிதி திரட்டினோம். எல்லா மாணவர்களும் மனமுவந்து தங்களாலான நன்கொடையை அளித்தார்கள்.

அப்போது எனது வகுப்புத் தோழரான திரு P.T. நடராஜன் தனது கையில் கட்டியிருந்த புதிய கைக்கடிகாரத்தை உடனே கழட்டி நன்கொடை வசூலிக்க வந்தவர்களிடம் தந்தது எனக்கு இன்னும் நினைவில் பசுமையாய் இருக்கிறது. (அந்த நண்பர் தற்போது ஹைதராபாத் நகரில் Oil Palm ஆலோசகராக பணி புரிந்து வருகிறார்.)

சனவரி திங்கள் 27 ஆம் நாள் மாலை பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் (Open Air Theatre) அனைவரும் கூடினோம். அதில் கலந்து கொள்ள பாவலரேறு திரு பெருஞ்சித்திரனார் அவர்களும் வந்திருந்தார்.





தொடரும்


19 கருத்துகள்:

  1. மேற்கொண்ட நடந்த சுவாரஸ்யமான பல செய்திகளைத் தாங்கி வந்துள்ளது இந்தத் தங்களின் இன்றைய பதிவு. மேலும் மேலும் நிகழ்ந்துள்ள சரித்திரங்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தொடரட்டும்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’மேற்கொண்ட’ என்ற ஆரம்ப வார்த்தை ‘மேற்கொண்டு’ என இருக்க வேண்டும். அவசரத்தில் ஓர் எழுத்தில் பிழை நேர்ந்துள்ளது. நானும் கவனிக்கவில்லை. :( Sorry, Sir.

      நீக்கு
    2. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  2. இந்தி எதிர்ப்பு தீவிர சிந்தனையாகஉங்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறது என்பதையே உங்கள் பதிவுகள் காட்டுகின்றன.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! என்னைப்பற்றி தாங்கள் கூறியதில் ஒரு சிறிய திருத்தம். நான் இந்தி மொழியை எதிர்ப்பவன் அல்லன். இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்த்தவன். இப்போதும் எதிர்ப்பவன்.இனியும் எதிர்ப்பேன். இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்ற கருத்தை உடையவன். நீங்கள் எனது பதிவை ஆழ்ந்து படித்திருந்தால் இவ்வாறு கூறியிருக்கமாட்டீர்கள். தயை செய்து பதிவின் தலைப்பைப் பாருங்கள். உண்மை நிலை உங்களுக்கு புரியும்.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    ஆண்டுப்படி ஒவ்வொரு தகவலையும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  4. தகவல்கள் சிறப்பு....
    தொடர்ந்து தகவல்கள்
    தாருங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  6. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட். நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  7. //மாற்றம் பற்றிய செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.//

    இன்றுவரை ஹிந்திதான் இந்தியாவின் அரசாங்க மொழி என்று அதிகமான இந்தியர்கள் நம்பிக்கொண்டு உள்ளனர். அரசாங்கமும் ஓட்டுக்காக அத்தகைய சிந்தனையையே வளர்த்து வருகிறது. ஆனால் அப்படிப் பேசுபவர்கள் யாரும் அவரவர்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் சேர்ப்பவர்களாக இருப்பதுதான் நிஜம். ஊரில் தற்பொழுது இயலாதவர்கள் மட்டுமே பிராந்திய மொழிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். இனிமேல் மாற்றம் என்று நிஜத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் குறைவு.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்தியாவில் இந்திதான் அரசின் மொழி என மக்கள் நினைப்பதன் காரணம் அரசு மட்டுமல்ல. அரசில் பணிபுரியும் அலுவலர்களின் அறியாமையும் காரணம். இது பற்றி ஏற்கனவே
    இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். அரசியல்வாதிகளைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இந்தியை எதிர்த்து தமிழை வளர்ப்பதாக சொல்பவர்களின் பிள்ளைகள் படிப்பது Don Bosco பள்ளியில்! இந்திக்கு ஆதரவாக குரல் கொடுப்போரின் பிள்ளைகள் படிப்பதோ Doon School இல்! நீங்கள் சொல்வது போல் மாற்றம் வரும் சாத்தியம் குறைவுதான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல். ஊதவேண்டிய சங்கை நாம் ஊதுவோம்.

    பதிலளிநீக்கு
  9. தொடருங்கள் தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு
  10. சாஸ்திரியின் மரணம், இந்திரா காந்தி பிரதமர் ஆனது ஆகிய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு