வியாழன், 5 மே, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.26


1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1967 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கான தீர்மானத்தை 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டதால், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.



ஆனால் அந்த அமைதியை குலைக்கும் விதமாக மய்ய அரசு பின்னர் எடுத்த ஒரு கொள்கை முடிவு திரும்பவும் இந்தி திணிப்பை எதிர்த்து 1986 ஆம் ஆண்டு ஒரு போராட்டம் நடத்த வழிவகை செய்துவிட்டது.

1985 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த திரு ராஜீவ் காந்தி அவர்கள் ஒரு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன்படி கிராமப்புற மாணவர்களிடையே ஆட்சித்திறனை வளர்க்கும் நோக்கில் நவோதயா வித்யாலயங்கள் என்று பெயர் கொண்ட பள்ளிகள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவுவதென முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த பள்ளிகள் பண்டித ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தவிழாக் கொண்டாட்டங்களின் போது ‘ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த பள்ளிகள் மய்ய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான ‘நவோதயா வித்யாலய சமிதி’ யினால் நடத்தப்படும் என்றும், அவை தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளுக்கு இணையான தரம் கூடியக் கல்வித்திட்டத்தை கிராமப்புற சிறுவர்களுக்கு அவர்களது குடும்ப வருமானம், சமூகநிலை என்னவாக இருந்தாலும் தரவேண்டும் என்ற நல்ல நோக்கோடு உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

அதன்படி நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவ 1986 ஆம் ஆண்டு முயற்சி செய்தபோது அந்த பள்ளிகளில் இந்தி கற்பது கட்டாயமாக்கப்படும் என அறிந்ததும் திமுக அதை எதிர்த்தது. அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தார். தி.மு;க எதிர்கட்சியாக இருந்தது.

இந்தி கற்பது கட்டாயம் என்பதால் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திரு கருணாநிதி போராட்டத்தை துவக்கினார். அந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் தமிழ் நாடு சட்டப்பேரவையும் ஒருமனதாக அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியை நீக்கவும் ஆங்கிலத்தை இந்திய நாட்டின் ஒரே அலுவல்மொழியாக அங்கீகரிக்கவும் தீர்மானம் இயற்றியது.

ஆயினும் கோவையில் நவம்பர் திங்கள் 9 ஆம் நாள் கூடிய தி.மு.க.வின் செயற்குழு நவம்பர் 17 ஆம் நாள் முதல் டிசம்பர் 17 ஆம் நாள் வரை மாநிலத்தின் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பகுதியில் இந்தி தான் ஆட்சிமொழி என இருப்பதால் அந்த பகுதியை தீயிட்டு கொளுத்துவதென்றும் தீர்மானித்தது.

அந்த தீர்மானத்தின்படி தமிழகம் முழுதும் நவம்பர் 17 ஆம் நாள் திமுக உறுப்பினர்கள் மய்ய அரசின் கல்விக் கொள்கைக்கெதிராக, அரசியலமைப்பின் பதினேழாவது பகுதியைக் தீயிலிட்டனர். அதற்காக திரு கருணாநிதி உட்பட 20,000 க்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள் கைதாயினர். அந்த போராட்டத்தின் போது 21 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த போராட்டத்தில் ஈடுபட்ட திரு கருணாநிதிக்கு பத்து வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையே அதே ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவை முன்னவர் நாவலர் திரு நெடுஞ்செழியன் அவர்கள், பொது இடத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை தீயிட்டு கொளுத்திய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து பேரவையில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை சட்ட பேரவை ஏற்று, திரு அன்பழகன் உட்பட பத்து திமுக பேரவை உறுப்பினர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை பொது இடத்தில் தீயிட்டு கொளுத்தியதன் காரணத்தால் பேரவையின் உறுப்பினராக இருக்க தகுதி அற்றவர்கள் என கருதி அவர்களை அவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் (Expulsion) செய்தது. அப்போது அவைத்தலைவராக இருந்தவர் திரு பி. எச். பாண்டியன் அவர்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவல் ஒன்றையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியின் நகலொன்றை எரித்ததற்காக தமிழகம் முழுதும் கைது செய்யப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டாலும், ஒரு மாவட்ட நீதி மன்றத்தில் அந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கிடைத்த தீர்ப்பு வேறு விதமாக இருந்தது.



தொடரும்


35 கருத்துகள்:

  1. இந்த சமீபத்திய, நமக்கும் ஓரளவு தெரிந்துள்ள ஆனால் மறந்துபோன சரித்திரங்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

    பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    மேலும் இந்தப் பகுதிகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  3. திரு. கருணாநிதி இந்தி எதிர்ப்பை வைத்து அரசியல் வளர்த்து 21 நபர்கள் தீக்குளித்து இருக்கின்றார்கள் ஆனால் இதே கருணாநிதி தனது பேரக்குழந்தைகளை இந்தி படிக்க வைத்து இருக்கின்றார் தனது அரசியல் வாழ்வுக்காக இதை மக்கள் உணர வேண்டாம் தி.மு.க நண்பர்கள் உணர வேண்டும்.
    தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி! முக மேல் உள்ள ஆதங்கம் நியாமானதே! ஆழ்ந்து சிந்தியுங்கள்; உங்கள் கோபம் தவறு. நீங்கள் சொல்வது...ஊடகங்கள் மக்களை மூளை சலவை செய்து தவறாக சிந்திக்கவைத்தன!

      முக அரசியல் தலைவர். அவர் கொள்கையை அவர் சொல்கிராரர்; அரசியல் செய்கிறார். அதற்காக, அவர் குடும்பம் முழுவதும் அவர் கொள்கைகளை பின்பற்ற வேண்டுமா? யாருக்குமே சுயமா சிந்திக்கக் கூடாதா! எங்க அப்பாவை நான் நேசிப்பதர்க்கு அளவு இல்லை. அதற்காக அவர் கொள்கைகளை எல்லாம் நான் பின்பற்றனும் என்றால், எனக்கு எதுக்கு படிப்பு, அறிவு எல்லாம்.

      என் மனைவி கும்பிடும் சாமிகள் எனக்கு பழக்கம் இல்லை! அதற்காக அவர்களுடன் நான் கோவிலுக்கு செல்லமாட்டேன் என் வழியைத்தான் அவர்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்வது பக்கா ஆணாதிக்கம். நாளைக்கு என் மனைவி மதம் மாறினாலும்....நான் அந்த கோவிலுக்கு செல்வேன். அவர்களுகடன் கடை கணனிக்கு செல்வது மாதிரி கணவனா கோவிலுக்கும் செல்வேன். என்னென்றால், என்றும் அவர்கள் தான் என் மனைவி. இந்தியாவில் இதை ஒத்துக்கொள்ளமாட்ட்ர்கள். காரணம் மனைவி கணவனுக்கு அடிமை; கணவன் மதத்திற்கு மனைவி மாறனும்.

      எந்த முக பேரன்? மாறன் பையன்களா? மாறன் MP வாசம் டெல்லியில். டெல்லியில் வாழ்ந்தால், கழுதைகள கூட இந்தியில் பேசும்! ஹந்தி திணிப்பை வெறுத்தவன்; ஆனால், என்னுடய நண்பிகள் சகவாசத்தால், நானே ஹிந்திப்படங்கள் ஏராளமா பார்த்தேன்.

      எனது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலம் சொல்லிக்கொடுகவிலை; தமிழில் தான் பேசுவேன். தமிழ் எழுத படிக்க கற்றுகொடுத்தேன். கற்றுக்கொள்ளவில்லை; ஆங்கிலம் அவர்களே கற்றுக்கொண்டார்கள்; வளர்ந்தது அமெரிக்கா? அவர்கள் ஆங்கிலம் அவர்கள் முயற்சி! எப்படி தடுக்க முடியும்? ஏன் அதை தடுக்கவேண்டும்!

      முட்டாள்கள் தீக்குளித்தால் சாவட்டும்; முக சொன்னாரா தீக்குளி என்று; அறிவிலிகள்! இந்தியாவில் தமிழ் மூடர்களைத் தவிர யார் தீக்குளிக்கிறார்கள்! சாவட்டும் அவர்கள் இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!

      நீக்கு
    2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு KILLERGEE அவர்களே! நான் சொல் நினைத்ததை திரு நம்பள்கி அவர்கள் சொல்லிவிட்டார். தாய்மொழி மேல் பற்று இருக்கலாம் வெறி இருக்கக்கூடாது. நம்மை அழிக்க நினைப்பவர்களை, நம் மேல் ஒன்றை திணிக்க நினைப்பவர்களை எதிர்த்து நின்று போராடவேண்டுமே தவிர உயிர்த்தியாகம் செய்யக்கூடாது. அதனால் க(ந)ஷ்டப்படப் போவது உயிர் துறந்தவரின் குடும்பமேயன்றி மற்றவர்கள் அல்லர் என்பது என் கருத்து.

      நீக்கு
    3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! உங்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன்.

      நீக்கு
  4. நிகழ்வுகள் சிலவற்றைக் கோர்வையாய்ச் சொல்லி வருவதற்குப் பாரட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  6. தொடர்ந்து இப்பொருண்மையில் எழுதிவரும் தங்களின்முயற்சிக்கு பாராட்டுகள். அறியாத பல செய்திகளை அறிய தங்களின் பதிவு உதவுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  7. இந்தி பேசாத மற்ற மாநிலங்களில், குறிப்பாக நம் அண்டை மாநிலங்களில், இந்த 'திணிப்பு'
    பிரச்னையை எப்படி எதிர் கொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் எழுப்பிய கேள்விக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!
      இந்தி பேசாத மாநிலங்களான மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்திக்கு எதிர்ப்பு இல்லை. ஆரம்பத்தில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்தியை எதிர்த்தார்கள்.

      அரசமைப்பு சட்டப் பேரவை (Constituent Assembly of India) யில் இந்தியாவுக்கான பொது மொழி பற்றி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை நடந்த முக்கியத்துவம் வாய்ந்த காரசாரமான விவாதத்தில் பங்கேற்ற மகாராஷ்ட்ராவை சேர்ந்த திரு சங்கர ராவ் தேவ் அவர்கள் “ஆங்கிலத்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் மொழியை தேசிய மொழி என அறிவிக்கக்கூடாது என சொல்பவர்களில் நானும் ஒருவன். தேசிய மொழி என்பது நாடு முழுதுவதற்கும் உள்ள ஒரே மொழி என நீங்கள் எண்ணினால் நான் அதை ஆதரிக்கமாட்டேன். இந்திய நாட்டில் நான் ஒரு இந்தியன். ஆனால் எனது மொழி மராத்தி என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன். “ என்று காட்டமாக பேசினார். ஆனால் ஏனோ பின்னர் அவர்கள் எதிர்க்கவில்லை.

      தென்னக மாநிலங்களான ஆந்திரம் ,கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்களில் அவர்கள் தங்கள் மொழியை பற்றி பெருமை கொண்டிருந்தாலும் அங்கு போராட்டம் நடத்த அப்போது காங்கிரசுக்கு எதிரான வலுவான எதிர்கட்சி அப்போது இல்லாததால் இந்தி திணிப்பை எதிர்க்கவில்லை.

      மேலும் வட ஆந்திராவில் உள்ளோர் (தற்போதைய தெலிங்கானா) நிஜாம் ஆட்சியிலும், மைசூரில் உள்ளோர் ஹைதர் அலி திப்பு சுல்தான் ஆட்சியிலும், ஆட்சி மொழியாக இருந்த உருதை அறிந்திருந்ததால் அவர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டார்கள். மேலும் வட கர்நாடக மக்கள் பழைய பம்பாய் ராஜதானியின் கீழ் இருந்தபோது இந்தி படித்திருந்ததால் அவர்களும் எதிர்க்கவில்லை.

      கேரள மாநிலத்தின் முதல்வராக இருந்த திரு பட்டம் தாணுப் பிள்ளை அவர்கள் ‘ ஆங்கிலம் எப்படி தென்னிந்தியர்களுக்கு அன்னியமோ அதுபோலவே இந்தியும் அந்நியம் தான்.’ என்று சொன்னாலும், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்த மலபாரும் உருதுவிற்கு பரிச்சயப்பட்டிருந்ததால் அவர்களும் அதிகமாக எதிர்க்கவில்லை.
      தமிழக எல்லையில் உள்ள அண்டை மாநிலங்களின் மாவட்டங்களில் சிலவற்றில் மட்டும் ஆரம்பத்தில் போராட்டம் இருந்தது. பின்னர். அதுவும் வலுவிழந்து போய்விட்டது.

      தற்போது பெங்களூருவில் உள்ள சில கன்னடர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து சமூக வலைத்தளங்கள் மூலம் அறிக்கை விட்டிருக்கிறார்கள். அது பற்றி வரும் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.

      நீக்கு
    2. நன்றாகச் சொன்னீர்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திராவிடப் பகுதிகள் என்று சொல்லப்படுகிற அருகாமை மாநிலங்களின் 'போர்த் தந்திரங்களி'லிருந்து இந்த விஷயத்தில் நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது என்று தெரிகின்றது.

      நம்மைப் பொருத்த மட்டில் நமக்கு நிறையவே இந்த விஷயத்தில் சேதாரம்.

      தமிழையும் வளர்தோமில்லை; அது தான் மிகப்பெரிய இழப்பு. .

      குழந்தைப் பருவ ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழ் இடத்தை ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.

      இதை மீட்டெடுப்பது மிகப் பெரிய சவால் போலிருக்கிறது.

      இன்றைய நிலையில் எதற்காக மீட்டெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருந்தால் சரி தான்.

      நீக்கு
  8. //இந்தி கற்பது கட்டாயம் என்பதால் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திரு கருணாநிதி போராட்டத்தை துவக்கினார். //

    நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அரசாங்கம்தான் செலவு செய்கிறது. நவோதயா பள்ளிகளுக்குப் பதிலாக அதற்கு இணையான பள்ளிகளை மாநில அரசாங்கம் துவங்கியிருக்க வேண்டும். செலவினை மத்தியில் இருந்து பெற்றுக்கொண்டிருந்தால் அது சாமர்த்தியம். அரசியல்வாதிகளின் சுயநலத்தையே இறுதியில் இங்கு காணமுடிகிறது. நம் பக்கத்து பாண்டிச்சேரியும் தமிழ் பேசும் மாநிலம்தான். அங்கு நவோதயா பள்ளிகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். சாதாரணர்கள் அரசியலைவிட்டு ஒதுங்கி இருக்கும்வரை யாரையும் குறைசொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! அப்போது இருந்த முதல்வர் திரு எம்.ஜி.ஆருக்கு மய்ய அரசோடு இணக்கமான புரிதல் இருந்ததால் மய்ய அரசை வற்புறுத்தி இந்தி இல்லாமல் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க சொல்லியிருக்கலாம். அப்படி முடியவில்லை என்றால் நீங்கள் சொல்வதுபோல் தமிழ் நாட்டிலும் நவோதயா பள்ளிகள் போன்ற பள்ளிகளை தமிழக அரசே திறந்திருக்கலாம். எல்லாம் அரசியல். வேறென்ன சொல்ல.

      நீக்கு
  9. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்த போது, தினத்தந்தி படித்த பள்ளிச் சிறுவன் நான். இந்த தொடரைப் படிக்கும்போது, ஒவ்வொரு பதிவின் போதும், பதிவில் உள்ள நிகழ்வு நடந்த நாட்கள், தகவல்கள் ஆகியவை குறித்த அந்நாளைய செய்தித்தாள் தலைப்புகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இளங்கோ மாதிரி நானும் பள்ளி சிறுவன் தான்! எங்கள் நண்பர்கள், சீனியர்கள் இவர்களுடன் தினமும் மாலை முரசை பார்த்து நாங்கள் "டேய்! நாளைக்கு லீவுடா; இன்னும் ஒரு வாரம் லீவுடா! ஜாலிடா!" என்று அன்று ரசித்தது. அறியாத வயசு! இப்ப நினைத்தால் அதுக்கு போய்ய்...என்று கேவலமாக இருக்கு. என்ன ஏது என்று புரியாமல் லீவுகளை கொண்டாடிய அறியா வயது.

      சென்னையில் அவ்வளவோ பாதிப்பு இல்லை என்று நினைக்கிறேன். வெளியூர்களிலிருந்து வரும் செய்தி தான் அதிகம். செய்தியை படித்து அதற்கு expert comments கொடுக்க ஒருத்தன் ஒவ்வொரு கும்பலில் இருப்பான்! அந்த இரண்டு மாதங்கள் எப்பவும் விளையாட்டு தான்! அப்போதைய எங்கள் மாதிரி சிறுவர்களின் கேவலமான மலரும் நினைவுகள்!

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே!

      நீக்கு
  10. இந்தித் திணிப்பு எதிர்ப்பிலேயே இருந்தால் எப்படி? எனது 'அழகிய தமிழ் மொழி இது' பதிவுக்கு வந்து தமிழை வளர்க்க, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வாருங்கள். இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்.

    சுட்டி:

    http://jeeveesblog.blogspot.in/


    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! மூன்று நாட்களாக வலைப்பக்கமே வரமுடியாததால் தங்களின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க இயலவில்லை. இந்தி திணிப்பு போராட்டம் முடியாவிட்டாலும் அதைப்பற்றிய எனது தொடர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். தங்களது ‘அழகிய தமிழ் மொழி இது’ தொடரை முதலில் இருந்து படித்து கருத்து தெரிவிக்க எண்ணி, முதல் மூன்று பகுதிகள் வரை படித்துவிட்டேன். மீதமுள்ளவைகளை படித்து கருத்து தெரிவிப்பேன்.

      நீக்கு
    2. இந்திய தேசத்திற்கு ஒரு பொது மொழியை தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சிக்கலே இந்தப்
      பிரச்னைகளுக்கான வேர் என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

      மொழி வாரி மாநிலங்கள் அமைந்த பிறகு ஓரளவு இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வை சில மாநிலங்கள் கண்டிருக்கின்றன.

      இந்தியத் தேசத்திற்கான பொதுமொழி அமைவதில் காட்டும் ஆர்வத்தை விட தங்கள் மாநில மொழியை வளர்ப்பதில், அதை இந்த தேசத்தின் பொது மொழி அந்தஸ்துக்கு உயர்த்துவதில் சில மாநிலங்கள் கவனம் கொண்டிருக்கின்றன.

      இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்கிற காலகட்டத்தில் வாழ்ந்த, தமிழ் உணர்வும் கொண்டிருந்த என்போருக்கு புகட்டப் பட்டது இந்தி வெறுப்பே. அந்த வெறுப்பின் அடித்தளம் தாய் தமிழுக்கான எதிரி இந்தி என்கிற மாதிரி தோற்றம் கொண்டது.
      அதனால் தான் இந்தி கற்க வாய்ப்புகள் ஏற்பட்ட போதும் அந்த மொழியைக் கற்க மனம் இடம் கொடுக்காமலேயே போயிற்று.

      தமிழுக்கு எதிராக என்று பாவனை கொண்டது தான் இன்று தமிழுக்கு எதிரானது என்று ஆங்கிலம் ஏற்பட்டிருகிற காலத்தும் உணர்வாகிறது.

      அன்று பண்டித நேருவிடம் பெற்ற உறுதிமொழி கொடுத்த பாதுகாப்பு சுகத்தில் தமிழ் வளர்ச்சி என்பது மெத்தனமாகிப் போயிருக்கிறது.

      நம் இலக்கியம், பண்பாடு, மன இயல்புகள், அன்றாட வாழ்க்கைச் சூழல்கள் என்று அத்தனையும் மேனாட்டு பாணியிலேயே வார்ப்புகள் கொண்டிருக்கின்றன.

      இதில் என்ன தப்பு இருக்கிறது என்று நினைப்பவர்கள் பின்னூட்டம் போட்டால் அது இந்த தொடர் பதிவை எழுதியதான, இதை வாசித்ததான முழு பலனையும் அளிக்கும்.

      நீக்கு
    3. திரு ஜீவி!
      சில உண்மைகளை கவனத்தில் கொண்டால் விவாதம் செய்யலாம்.

      உண்மை ஒன்று: இந்தியா ஒரு தேசம் அல்ல! இந்தியா ஒரு உப கண்டம். ஆம்! எப்படி ஆப்ரிக்கா ஒரு கண்டமோ அதே மாதிரி தான். இந்தியாவில் எந்த ஒரு இரு மாநில கலாசாரமும் ஒன்றாக இல்லை! மேலும், நாம் ஹிந்துக்கள் என்பதே கேலிக் கூத்து! நான் ஓய்ந்ரும் சொல்வேன்--நான் சைவ மதம்! வெள்ளைக்காரன் கொடுத்த ஹிந்து மதம் அல்ல! சொந்த புத்தியே நமக்கு இல்லையா?

      ஒவ்வொரு மாநிலத்திலேயும் தீபாவளிக்கு ஒரு கதை! நாமெல்லாம் ஹிந்துவாம்! தமிழ் நாட்டிற்கு நரகா சூரன். குஜாரத்தில் புது வருடம்! ஹிந்து மதமே தமாஷ் தான்!

      33% பேசின [ஹிந்தி] ஒரு மொழியை ஒரு கண்டத்திற்கு பொது மொழியாக சொல்வது தவறு இல்லையா? இது தமிழர்களுக்கு அளித்த அநீதி!

      அது என்ன ஒரு மொழிக்கு மட்டும் விசேஷ அந்தஸ்து? தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் நேரு இப்படி உறுதி மொழி கொடுத்து இருந்து ஹிந்தி மாதிரி status தமிழுக்கு கொடுத்தால்..வட நாட்டான் ஒத்துக் கொள்வானா?

      ஆப்ரிக்காவில் பல மொழிகள் பல கலாசாரம்! அங்கு கிரியோல் மொழிக்கு (இந்தியாவில் ஹந்தி மாதிரி) அந்தஸ்து கொடுத்தால் ஒத்துக் கொள்வார்களா? நாம் ஏன் ஒத்துக்கொள்ளவேனும்!

      நான் ஆங்கிலம் படிப்பது என் உரிமை! நான் கேட்பது தமிழுக்கு ஹிந்திக்கு உள்ள சம அந்தஸ்து!

      To be precise, English is out of the equation. Treat Tamil at par with Hindi!

      தமிழ்நாட்டில் ரயிலில் செல்லும் போது ஒரு மண்ணும் புரிவதில்லை! எனக்கு ஆங்கிலமும் தெரியாது! இப்ப உங்கள் தீர்வு என்ன?

      நீக்கு

    4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்தியை கட்டாயமாக திணித்ததால்தான் அதன் மேல் வெறுப்பு வளர காரணமாகிவிட்டது என எண்ணுகிறேன். மேலும் தமிழ் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டதற்கு நாம் எல்லோரும் தான் காரணம். நமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியிலோ அல்லது மருத்துவக் கல்லூரியிலோ சேரவேண்டும் என்பதற்காக தமிழை இரண்டாம் பாடமாக எடுக்காமல் இந்தி, வடமொழி அல்லது ஃபிரெஞ்சு போன்ற மொழிகளைப் எடுத்து படிக்க சொன்னதால் தாய் மொழியாய் இருந்தும் தமிழ் மேல் உள்ள ஆர்வம் இக்கால இளைஞர்களுக்கு குறைந்துவிட்டது என எண்ணுகிறேன்.
      மேலும் நான் படித்தபோது தமிழ்த் தேர்வில் 65 அல்லது 70 க்கு மேல் மதிப்பெண்கள் தரமாட்டார்கள். ஆனால் வடமொழி பாடம் எடுத்து படிக்கும் மாணவர்கள் 90 க்கு மேல் மதிப்பெண்கள் தருவார்கள். அதனால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக மதிப்பெண்கள் பெற அந்த மொழியை தேர்ந்தெடுத்து படித்ததால் தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

      ஆனால் இப்போது தமிழ் பாடத்திற்குக் கூட தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் தருகிறார்கள். ஆனாலும் இப்போது தமிழை இரண்டாம் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் போதிய ஆழ்ந்த அறிவு இல்லை என்பது வருத்தம் தரும் தகவல். இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர்களும் நமக்கு இருந்தவர்கள் போல் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

      திரு நம்பள்கி அவர்களின் “33% பேசின [ஹிந்தி] ஒரு மொழியை ஒரு கண்டத்திற்கு பொது மொழியாக சொல்வது தவறு இல்லையா? இது தமிழர்களுக்கு அளித்த அநீதி!

      அது என்ன ஒரு மொழிக்கு மட்டும் விசேஷ அந்தஸ்து?’” என்ற கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

      இந்திக்கு நமது தேசிய மொழியாகும் தகுதி இல்லை என்பதை அந்த மொழியைப் படித்த இந்தி பேசாதோர் ஒத்துக்கொள்வார்கள். நாட்டை ஒருங்கிணைத்த ஆங்கிலத்தை விட்டுவிட்டு இன்னும் வளராத ஒரு மொழியை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் பேசும் மொழியைஅந்த மாநிலத்தின் அலுவலக மொழியாகவும் இந்தியாவிற்கு பொதுவாக ஆங்கிலத்தை அலுவலக மொழியாகவும் ஆக்கவேண்டும். அப்படி செய்தால் தான் எல்லா மொழிகளுக்கும் சம நிலை கிடைக்கும்.

      நீக்கு
    5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு நம்பள்கி அவர்களே! உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

      நீக்கு
  11. மலரும் நினைவுகளாக எனக்கும் சில நினைவுகள் வருகின்றன !

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! தாங்களும் தங்களின் ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துகொள்ளலாமே!

      நீக்கு
  12. விவாதம் செய்ய வேண்டுமென்பது என் நோக்கமில்லை. அதுவும் இந்த மாதிரி உணர்வு பூர்வமான விஷயங்களில் விவாதங்களைத் தவிர்ப்பதே நல்லது.

    ஆனால் பலரும் கலந்து கொள்கிற மாதிரியான ஒரு கலந்துரையாடலில் ஓரளவு நம்மை அழுத்துகிற பிரச் னைகளில் அனைவரின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும். அதனால் அப்படியான பின்னூட்டங்களில் பலரின் கருத்துக்களை நாம் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றேன்.

    1. தமிழ் நாட்டில் ஆரம்ப கல்வியிலிருந்து தமிழைப் பாடமொழியாகக் கொண்டு தமிழ் கற்கும் ஆர்வம் பெருக வேண்டும். நான் என் ஆரம்ப கல்வியைக் கற்றது அப்படித்தான். .

    2. அதற்கான வாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்ளவும் அரசும் கல்வி நிருவனங்களும் எல்லா ஒத்துழைப்புகளையும் நல்க வேண்டும்.

    3. ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியும் இன்னொரு மொழியைக் கற்கிறோம் என்ற அளவில் இதர மொழிப் பாடத் திட்டத்தில் (other languages) இருக்கலாம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இன்றைய உலகமயமாதல் சூழலில் 'ஒரே உலகம்' என்ற பார்வை அவசியம். அதனால் இளைஞர்களுக்கு அவர்களில் இளம் பருவத்திலேயே எவ்வளவு மொழி கற்கிறார்களோ அவ்வளவு நல்லது. இந்த 'சுருங்கிய' உலகில் அவர்கள் பணியேற்கும் காலத்து இந்தப் பிற மொழிக்கல்வி பயனுள்ளதாய் இருக்கும்.

    அது என்ன சுருங்கிய உலகப் பார்வை?.. (அமெரிக்காவில் இந்தியர்களை ஏஷியன்ஸ் என்று தான் சொல்வார்கள். அந்தளவுக்கு உலகம் அதற்கான பார்வையில் சுருங்கி விட்டது. இந்தச் சுருங்கலும் உலகளாவிய பார்வையில் ஒன்றாகி 'ஒரே உலகம்' என்று விரிவு பெறுவது அடுத்த கட்டம். உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே என்ற கவிஞனின் கனவு அது!

    பிற நாட்டு மொழிகளைக் கற்பதற்கு வசதியாக பல கல்வி நிருவங்கங்கள் (Institutes) பல்கிப் பெருக வேண்டும்.

    4. ஆனால் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியில் மொழிப் பாடத்திட்டத்தைத் தாண்டி பிற துணைப்பாடங்களும் (வரலாறு, பூகோளம், கணிதம்) போன்ற பாடங்களும் தமிழ் மொழியிலேயே இருத்தல் வேண்டும்.

    தமிழ் நாட்டுச் சிறார்களுக்கும் இலைஞர்களுக்கும் தமிழ் அன்னியப்பட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. 'இளமையில் கல்' என்பதற்கேற்ப தமிழ் மொழி தமிழ்ச் சிறார்களுக்கு அவர்களின் இளம் வயதில் பசுமரத்தாணி போல பதிந்தால் போதும். நம் நிலத்திற்கும் மொழிக்கும் உரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், மனித நேயம், தமிழற்கே உரிய தனிக்குணங்கள் எல்லாமே காப்பாற்றப் படும்.

    இன்றைய சூழலில் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை எழுதக் கூடத் தெரியாத நிலை இருக்கிறது. இந்த அவலங்கள் எல்லாம் களையப் பட வேண்டும்.

    தமிழ் வழிக் கல்வியில் சொல்ல வேண்டிய செய்திகளைத் தமிழில் சிந்தித்து அதற்கேற்ப கல்வி அமைய வேண்டும். அப்பொழுது தான் மாணவர்களுக்கு இயல்பானத் தமிழைப்படிக்கிற உணர்வு ஏற்படும்.

    ஆங்கி மொழி வார்த்தைகளை தமிழ் படுத்தியதாக அமைவதைத் தவிர்க்க வேண்டும்.

    உதாரணமாக மலைப்பகுதி சாலைகளில் நீங்கள்பார்த்திருப்பீர்கள். குருட்டு வளைவு என்று அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்கள். இது என்ன குருட்டு வளைவு என்று திகைக்காதீர்கள். Blind curve என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமே அது! கடவுச்சொல் என்று password என்பதற்கு தமிழாக்கம் கொண்டிருக்கிறோமே அதுவும் இந்த மாதிரியான ஒன்று தான்!


    இந்த மாதிரியான மொழிபெயர்க்கும் துன்பங்கள் நேரக்கூடாது. தமிழில் புழங்கும் சொற்களைக் கொண்டதாய் தமிழ்ப் பாடத்திட்டம் அமைய வேண்டும்.

    தமிழின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு இப்போதைக்கு இது போதும்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! விவாதம் செய்வதில் தவறேதும் இல்லை. விதண்டாவாதம் தான் செய்யக்கூடாது.

    நானும் பள்ளி இறுதி வகுப்பு வரை ஆங்கில பாடத்தை தவிர மற்ற பாடங்களை தமிழில் படித்தவன் தான்.

    பிள்ளைகள் தங்கள் தாய்மொழியில் படித்து சிந்தித்தால் அவர்களது கல்வி நிலை உயரும் என்ற உங்களின் கருத்துக்கு இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. அதே போல் வேறு மொழிகளையும் விரும்பிக் கற்க வழி செய்யவேண்டும். கட்டாயப்படுத்தி அல்ல.

    அதுபோல ஆங்கில மொழியில் உள்ள சில சொற்களை நேரடியாக மொழி பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்தலாம். எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் புதிய சொற்களை அறிமுகப்படுத்தலாம். எடுத்துக் காட்டாக ‘பேருந்து, கணினி, இணையம் போன்ற சொற்கள் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

    எனவே நம் பிள்ளைகளை தமிழைப் படிக்க சொல்வோம் தமிழில் சிந்திக்கச் சொல்வோம். அதே நேரத்தில் ஆங்கிலம் போன்ற மொழிகளையும் இளமையில் கற்கச் செய்வோம்.

    தங்களின் ஆக்கப்பூர்வ கருத்திற்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  14. இவ்வளவெல்லாம் நடந்தாதா? வரலாற்று தகவல்கள் புதிது.முந்தைய பகுதிகளையும் படிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கு நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! இந்தி திணிப்பு போராட்டம் பற்றி பல பேருக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத்தான் இந்த தொடர் பதிவு. தாங்களும் படித்து கருத்திட விழைகின்றேன்.

    பதிலளிநீக்கு