புதன், 26 அக்டோபர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 2

2013 ஆம் ஆண்டு தஞ்சையில் சந்திக்க முடிவெடுத்ததுமே அந்த சந்திப்பை சிறப்பாக நடத்த தஞ்சை நண்பர்கள் உடனே செயலில் இறங்கிவிட்டார்கள் என்று சொல்லியிருந்தேனல்லவா? அந்த சந்திப்புக்காக இரவு பகல் பாராது அதைப் பற்றியே சிந்தித்து பொன் விழா சந்திப்பை சிறப்பாக நடத்த முக்கிய பங்காற்றியவர் நண்பர் R.பாலசுப்ரமணியம்.




அவருக்கு பக்க பலமாக செயல்பட்ட தஞ்சை நண்பர்களில் முருகானந்தமும் நாகராஜனும் குறிப்பிடத்தக்கவர்கள்.

சேலம் சந்திப்புக்கு வந்த வகுப்புத் தோழர்களில் இருவர் 2014 ஆம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார்கள். அவர்களில் ஒருவர் வேலூரைச் சேர்ந்த திரு திரு D.கோவிந்தராஜன். அவர் 23-01-2014 இல் காலமானார். இது பற்றி மீண்டும் சந்தித்தோம் 14 இல் எழுதியிருந்தேன்,

இன்னொருவர் தான் மன்னார்குடியைச் சேர்ந்த திரு K.நாராயணசாமி. மூன்றாம் ஆண்டு படிக்கும்போது அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் மாணவர் விடுதியில் உள்ள திரு.வி.க மனையில் எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்தவர். பழகுவதற்கு இனிமையானவர். சேலம் சந்திப்பின்போது அடுத்த சந்திப்பை தஞ்சை வாழ் நண்பர்களோடு சேர்ந்து சிறப்பாக நடத்த தானும் உதவுவதாக உற்சாகமாக கூறியவர் துரதிர்ஷ்டவசமாக 01-10-2014 அன்று இயற்கை எய்திவிட்டதை என்னவென்று சொல்ல.

தஞ்சையிலிருந்து நண்பர் பாலசுப்ரமணியம் அடிக்கடி மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமும் தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்த ஆலோசனைகளைக் கூறுமாறு வேண்டுகோள் விடுத்துக் கொண்டு இருந்தார்.

அதோடு தஞ்சைக்கு வரமுடிந்த நண்பர்களை அழைத்து, அவரும் நண்பர் முருகானந்தமும் மூன்று முறை ஆலோசனைக்கூட்டங்கள் வேறு நடத்தினார்கள். என்னை இரு கூட்டங்களுக்கு அழைத்தும் எனக்கு அப்போது வேறு பணி இருந்ததால் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை.

இந்த கூட்டங்களில் பொன் விழாவை எத்தனை நாட்கள் நடத்துவது, எங்கு நடத்துவது, எப்படி நடத்துவது, எவ்வளவு செலவாகும் போன்றவை பற்றி முடிவெடுத்து அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து நண்பர்களுக்கும் உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார்கள்.

சந்திப்பை நடத்துவது சம்பந்தமாக முடிவெடுக்குமுன் அனைத்து நண்பர்களின் கருத்தையும் மின்னஞ்சல் மூலமும் கைப் பேசி மூலமும் கேட்டறிந்து பின்னர் அவைகளை அந்த கூட்டங்களில் வைத்து ஆலோசித்தே முடிவெடுத்தார்கள் தஞ்சை நண்பர்கள்.

கனடாவில் இருக்கும் நண்பர் அய்யம்பெருமாள் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நண்பர் திரு முகம்மது உஸ்மான் ஆகிய இருவரும் கலந்துகொள்ள இருந்ததால் அவர்களுக்கு இந்தியா வர சௌகரியப்பட்ட மாதத்தில் வைத்துக்கொள்ளவேண்டி செப்டம்பர் 11,12 தேதிகளில் சந்திப்பை நடத்த முடிவு செய்து அதை அனைவருக்கும் தெரியப்படுத்தினார் நண்பர் பாலு.

அனைவரும் தங்கும் விடுதியிலேயே சந்திப்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டதால் தஞ்சையில் Hotel ABI’s INN என்ற தங்குமிடம் கொண்ட உணவு விடுதியை தேர்வு செய்தனர் விழாக் குழுவினர்.

எங்கள் அனைவரையும், நாங்கள் தஞ்சை வரும் நாள், தங்கும் நாட்கள். எங்களுடன் வருவோர் ஆகிய விவரங்களை உடனே தெரியப்படுத்த சொன்னதொடு மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் அனுப்பவேண்டிய பங்களிப்பு தொகை பற்றிய விவரத்தையும் மேலும் நடக்க இருக்கின்ற நிகழ்வுகளையும் அதற்கான செலவையும் குறிப்பிட்டு அதை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள் (Sponsors) அந்த தொகையையும் சேர்த்து அனுப்பலாம் என்று சொல்லியிருந்தார் நண்பர் பாலு.

மேலும் சந்திப்பு விழாவை இரண்டு நாட்கள் நடத்துவது என்றும் முதல் நாள் தஞ்சையில் உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு இரண்டாம் நாள் முத்துப்பேட்டையில் உள்ள காயல் (Lagoon) பார்க்க செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அவரது அஞ்சல் வந்த உடனே நான் என் துணைவியாருடன் தஞ்சை சென்று வர மன்னை விரைவு இரயிலில் ஜூன் திங்கள் 10  ஆம் நாளன்றே முன் பதிவு செய்து அதை நண்பர் பாலுவுக்கும் தெரியப்படுத்திவிட்டேன். கனடாவிலிருந்து நண்பர் அய்யம்பெருமாளும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது துணைவியாருக்கும் நாங்கள் பயணம் செய்யும் அதே இரயிலில் முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவருக்கும் முன்பதிவு செய்து வைத்தேன்.

இதற்கிடையே வகுப்புத் தோழர்களின் தற்போதைய முகவரி, பணி பற்றிய விவரங்கள் மற்றும் தோழர்கள் தங்கள் துணைவியாருடன் கூடிய புகைப்படத்துடன் உள்ள ஒரு கையேட்டை விழா அன்று வெளியிட விரும்பியதால் எங்களை புகைப்படத்துடன் விவரங்களையும் தெரிவிக்க சொன்னார் நண்பர் பாலு. நானும் உடனே கேட்டிருந்த விவரங்களையும் எங்களின் புகைப்படத்தையும் அனுப்பிவிட்டு அந்த செப்டம்பர் 10 ஆம் நாளுக்குக்காக காத்திருந்தேன். ஏனெனில் அன்று தான் தஞ்சை செல்ல இரயிலில் முன் பதிவு செய்திருந்தேன்.


தொடரும்.



24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  2. பதிவு சந்திப்பைப்பற்றிய குறிப்பு விறுவிறுப்புடன் செல்கிறது தொடர்கிறேன் நண்பரே...
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  3. நண்பர்களின் இழப்பு வருத்தமான விஷயம். அவர்களுக்கு எனது அஞ்சலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  4. வணக்கம்.

    தங்களின் நண்பரின் இழப்பைத் தவிர்த்து ஏனைய
    அனுபவங்கள் இனிமையானவை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு
  5. தொடருங்கள். அஸ்திவாரம் பலமாம இருக்கிறது. அதனால் கட்டிடமும் ஜோராகத் தான் இருக்கும். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜூவிஅவர்களே! நிச்சயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என எண்ணுகிறேன்.

      நீக்கு
  6. நண்பர்கள் இருவரின் எதிர்பாராத இழப்புக்களையும் அவர்கள் மறைந்த தேதியுடன் நினைவு கூர்ந்து எழுதியிருப்பது மிகவும் வியப்பளிக்கிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நண்பர்கள் மறைந்த நாளன்று தகவல் எனக்கு வந்து, அதை எனது வகுப்பு தோழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதால் அந்த நாட்கள் எனக்கு தெரியும்.

      நீக்கு
  7. ஒரு விழா .... சந்திப்பு என்றால், முன்கூட்டியே எவ்வளவு ஒருங்கிணைப்பு வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.

    ஒன்றையும் மறக்காமல், ஒவ்வொன்றாகச் சொல்லி வருவது படிக்க மிகவும் இனிமையாக உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! சொல்லவேண்டியவை அதிகம் உண்டு. ஆனாலும் பதிவின் நீளம் கருதி குறைத்து சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  8. //நானும் உடனே கேட்டிருந்த விவரங்களையும் எங்களின் புகைப்படத்தையும் அனுப்பிவிட்டு அந்த செப்டம்பர் 10 ஆம் நாளுக்குக்காக காத்திருந்தேன். ஏனெனில் அன்று தான் தஞ்சை செல்ல இரயிலில் முன் பதிவு செய்திருந்தேன். //

    தாங்கள் இவ்வாறு காத்திருந்ததாகச் சொல்லி, ஏதோ ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, மேற்கொண்டு என்ன ஆச்சு என அறியும் ஆவலுடன், எங்களை இப்போது காத்திருக்க வைத்து விட்டீர்கள். சபாஷ் !

    மேலும் தொடர்ந்து படிக்க ஆவலுடன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருப்பதற்கும் நன்றி!

      நீக்கு
  9. திரு.முருகானந்தம் அகில இந்திய வானோலியில் வேலை பார்த்தவராக இருந்தால் அவரை நான் நன்கு அறிவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் நன்கு அறிந்த அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அதே முருகானந்தம் தான் எனது வகுப்புத் தோழர். அவர் தூத்துக்குடி அகில இந்திய வானொலியில் நிலைய இயக்குனராக இருந்து ஓய்வு பெற்று தற்சமயம் தஞ்சையில் வசிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கைப்பந்து விளையாட்டு அணிக்கு தலைமை தாங்கி விளையாடியிருக்கிறார்,

      நீக்கு
  10. ஒவ்வொரு நண்பர்கள் சந்திப்பு பற்றி அறியும் போது எனக்கு வலைப் பதிவர் சந்திப்பு பற்றி முடிவு ஏதும் இல்லாமல் இருப்பது வருந்தச் செய்கிறது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! வலைப்பதிவர் சந்திப்பை யார் நடத்துவது என்று கடந்த வலைப்பதிவர் சந்திப்பில் முடிவு செய்யாததால் தான் இந்த குழப்பம் என நினைக்கிறேன்.

      நீக்கு
  11. தங்களது நண்பர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி! அப்படி சந்திக்கும்பொழுது சில நண்பர்கள் வாழ்க்கையில் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளதையும், சிலர் கல்லூரியைவிட்டு வந்த முதிர்ச்சியிலேயே இருப்பதையும் கண்டது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

    தற்போதைய தலைமுறைகள் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களாக இருப்பதால், பள்ளி, கல்லூரியுடன் உள்ள பந்தமும், சிநேகமும் அவ்வளவாக இல்லையென்று நினைக்கிறேன். இத்தகைய நண்பர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் வரும் தலைமுறையிலும் தொடருமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன்.
      தற்போதைய தலைமுறையினர் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பழகுவது குறைந்துவிட்டதால் நீங்கள் சொல்வது போல் இது போன்ற சந்திப்புகள் வருங்காலத்தில் நடக்குமா என்பது ஐயமே

      நீக்கு
  12. தஞ்சை சந்திப்புக்கு உற்சாகமாக உதவுவதாகச் சொன்ன நண்பரின் இழப்பு மிகவும் வேதனை தரக்கூடியது. சந்திப்பு பற்றிய மற்ற விபரங்களை அறிய ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே!

      நீக்கு