ஞாயிறு, 6 நவம்பர், 2016

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 3

தஞ்சையில் நடக்க இருக்கும் பொன் விழா சங்கமத்திற்காக காத்திருக்கும்போது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஓரு நாள் சென்னையில் இருக்கும் நண்பர் ஹரிராமன் தொடர்புகொண்டு செப்டம்பர் 10 ஆம் நாளன்று தஞ்சை செல்ல நான் எந்த இரயிலில் முன்பதிவு செய்திருக்கிறேன் என விசாரித்தார். ஏனெனில் அவரும் அதே இரயிலில் முன்பதிவு செய்தால் அவர் தம் துணைவியாரோடு எங்களோடு வரலாமே என்பதற்காக.




நான் ‘மன்னை’ விரைவு இரயிலில் முன் பதிவு செய்திருக்கிறேன்.’ என்று சொன்னதும் அவரும் அதே இரயிலில் முன்பதிவு செய்துவிட்டு என்னிடம் 10 ஆம் நாளன்று இரவு எழும்பூர் இரயில் நிலையத்தில் சந்திப்பதாக சொன்னார்.

தனது மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் இன்னொரு நண்பரான சீரங்கன் (இவர் சென்னையில் எனது வீட்டருகே வசிக்கிறார்.) அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னை வந்துவிடுவதாகவும், இருவரும் குடும்பத்தோடு காரிலேயே தஞ்சை செல்லலாம் என்றார். நான் இரயிலில் பயணிக்க முன் பதிவு செய்திருப்பதை சொன்னதும் சென்னை வந்ததும் தனது பயண திட்டம் பற்றி முடிவு செய்வதாக சொல்லிவிட்டார்.

சென்னையில் இருக்கும் மற்றொரு நண்பரான பிச்சைதுரையும் என்னை தொடர்புகொண்டு எனது பயண விவரம் பற்றி கேட்டார். நான் மன்னை விரைவு இரயிலில் பயணிக்க இருப்பதாக சொன்னதும் அவரும் அதே இரயிலில் வர முயற்சிப்பதாக சொன்னார். பின்னர் தொடர்புகொண்டு தனக்கு அந்த இரயிலில் இடம் கிடைக்கவில்லையென்றும் அதற்கு அடுத்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ‘உழவன்’ விரைவு இரயிலில் வர இருப்பதாகவும் சொன்னார்.

நாங்கள் புறப்பட 15 நாட்கள் முன்பு கனடாவிலிருந்து நண்பர் அய்யம்பெருமாள் தொடர்புகொண்டு தாங்கள் ஒரு நாள் முன்பே தஞ்சை செல்லவேண்டியிருப்பதால் தங்களுக்குக்காக எங்களோடு முன்பதிவு செய்திருந்த பயண சீட்டுகளை இரத்து செய்ய சொல்லிவிட்டார்.

இன்னொரு நண்பரான முத்தையா என்னை தொடர்புகொண்டு, எனது பயணத்திட்டம் பற்றி விசாரித்துவிட்டு தான் முதல் நாளே தஞ்சை செல்லவிருப்பதாகவும் அங்கு சந்திப்பதாகவும் சொன்னார்.

இந்த சந்திப்பு எங்களுக்குள் சொல்லவொணா உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது என்பதையும், பள்ளியில் தேர்வு முடிந்ததும் விடுமுறை நாட்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ள இருக்கும் போது பிள்ளைகள் எவ்வளவு மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பார்களோ அதே மன நிலையில் நாங்கள் இருந்தோம் என்பதை விளக்கத்தான் இந்த விரிவான விவரங்களை சொல்லியிருக்கிறேன்.

தஞ்சை என்றதுமே அங்கிருக்கும் நண்பர் இக்பால் அவர்களின் நினைவு எனக்கு வந்தது.. எங்கள் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்று தற்போது அவர் தஞ்சையில் பள்ளி நடத்தி வருகிறார். எனக்கும் அவருக்கும் ஒரு வினோத தொடர்பு உண்டு.

அது என்னவென்றால் அவரும் என்னைப்போலவே ஒரு வேளாண் அறிவியல் பட்டதாரி. அவரும் படிப்பை முடித்ததும் என்னைப் போலவே சில மாதங்கள் தமிழக வேளாண்மைத் துறையில் வேளாண்மை விரிவாக்க அலுவலராக பணிபுரிந்திருக்கிறார். அதுவும் நான் முதன்முதல் பணிபுரிந்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதே நீர்முளை என்ற ஊரில்!

சிண்டிகேட் வங்கியில் நான் முதன்முதல் கள அலுவலராக பணியாற்றிய பொள்ளாச்சியில் அவரும் கள அலுவலராக பணியாற்றியிருக்கிறார்! சேலத்தில் நான் மேலாளராக வங்கியில் பணியாற்றியதுபோல் அவரும் சேலத்தில் மேலாளராக பணியாற்றியிருக்கிறார்!

அவரை சேலத்தில் ஒரு திருமணத்தில் சந்தித்தபோது, தான் விருப்ப ஓய்வு பெற்று தஞ்சையில் பள்ளி நடத்தி வருவதாகவும், அவசியம் தஞ்சை வந்தால் தனக்கு தெரிவிக்கவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார்.

எனவே அவரை தொடர்பு கொண்டு எனது தஞ்சை வருகை பற்றி சொன்னதும் மிகவும் சந்தோஷப்பட்டு நான் தஞ்சை சென்றடையும் நாள் மற்றும் பயணிக்கும் இரயில் பற்றி கேட்டு, அவசியம் என்னை தஞ்சை இரயில் சந்திப்பில் வந்து சந்திப்பதாக சொன்னார்.

எங்களது இரயில் அதிகாலை 4.35 மணிக்கு தஞ்சை செல்லும் என்பதால் அவரை அந்த நேரத்தில் வந்து சிரமப்படவேண்டாம் என்றும், தஞ்சை வந்தபின் பின்னர் சந்திக்கலாம் என்றும் சொன்னேன். ஆனால் அவர் ‘அதெல்லாம் பரவாயில்லை சார். அவசியம் உங்களை வரவேற்க நிச்சயம் தஞ்சை சந்திப்புக்கு 11 ஆம் நாள் காலை 4.35 மணிக்கு முன்பு வருவேன்.’ என்று சொன்னார்.

செப்டம்பர் 10 நாள் காலை நண்பர் முகம்மது உஸ்மான் என்னைத் தொடர்புகொண்டு தான் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துவிட்டதாகவும் தஞ்சை சென்றுகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நான் பயணிக்க இருக்கும் மன்னை விரைவு இரயில் புறப்படும் நேரம் இரவு 10 மணி என்பதால் அன்று இரவு வீட்டிலிருந்து துணைவியாருடன் 9 மணிக்கே கிளம்பி எழும்பூர் இரயில் நிலையம் சென்றடைந்தேன். நாங்கள் சென்றபோது அந்த இரயில் நடைமேடையில் ஏற்கனவே நின்றுகொண்டு இருந்ததால் உடனே அதில் ஏறி அமர்ந்தோம்.

இரயிலின் உள்ளே எங்களது இருக்கையில் அமர யத்தனித்தபோது, அப்போது யாரோ என்னை பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். என்னை அழைத்தவரை பார்த்ததும் எனக்கு ஓரே மகிழ்ச்சி. என்னை அழைத்தவர்  எனது இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த எனது வகுப்பு நண்பர் சேதுராமன்.

அவர் எங்கள் ஊர் அருகே உள்ள பெண்ணாடத்தை (பெண்ணாகடம்) சேர்ந்தவர். படிக்கும்போது எனக்கு நெருங்கிய நண்பர். அவரது துணைவியாருக்கு வர சௌகரியப்படாததால் தான் மட்டும் தஞ்சை சந்திப்பு வருவதாக சொன்னார். அவரை எனது மனைவிக்கு அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

காலையில் தஞ்சை இரயில் சந்திப்பிலிருந்து நாங்கள் செல்லவேண்டிய ABI’s INN க்கு எப்படி செல்வது என நண்பர் சேதுராமன் கேட்டதற்கு, நண்பர் இக்பால் வருவதாக சொன்னதை சொல்லிவிட்டு, ‘அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நாம் தானி (Auto) யில் அங்கு செல்வோம். அந்த ஹோட்டல் மிக அருகில் தான் உள்ளதாக நண்பர் பாலு சொல்லியிருக்கிறார்.’ என்று சொன்னேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதால் படுத்து உறங்க சென்றோம். காலை 4 மணிக்கு எழுந்து பார்த்தால் காலை 3.25 மணிக்கு கும்பகோணம் இரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டிருக்கவேண்டிய
எங்களது இரயில் கும்பகோணம் இரயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தது.

எப்போது தஞ்சை போகுமோ என்று பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு வழியாய் புறப்பட்ட இரயில் காலை 5-10 மணிக்கு எங்களை தஞ்சை சந்திப்பில் இறக்கிவிட்டது.

கீழே இறங்கியதும் நண்பர் ஹரிராமன் வந்திருக்கிறாரா என்று பார்த்தபோது அவர் தன் துணைவியாருடன் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்துகொண்டு நாங்கள் தஞ்சை இரயில் சந்திப்பு நிலையத்தை. விட்டு வெளியே வந்தோம்.

நடை மேடையில் நண்பர் இக்பாலைக் காணவில்லை. அதிகாலையில் தஞ்சை சந்திப்புக்கு என்னை வரவேற்க வரவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதால் அவர் வரவில்லை போலும் என எண்ணிக்கொண்டு வெளியே வந்தால், வாசல் அருகே நண்பர் இக்பால் நின்றுகொண்டிருந்தார்!



தொடரும்



26 கருத்துகள்:

  1. தங்களது வர்ணனை எங்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டு செல்கின்றது நண்பரே தொடர்கிறேன்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. சந்திப்பு பற்றிய மூன்று பதிவுகளையும் இன்று தான் படிக்க முடிந்தது. கல்லூரி நண்பர்களின் தொடர்பு 50-வருடங்களாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நட்பு என்றால் அது தானே.... நானும் எனது சில கல்லூரி நண்பர்களுடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறேன். ஒரு குழுமமும் உண்டு. ஒரே ஒரு முறை தான் சந்திக்க முடிந்திருக்கிறது. இந்த வருடம் 25-ஆம் வருடம் - சந்திக்க எண்ணியிருந்தோம் என்றாலும் இயலவில்லை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! இப்போது படித்துக்கொண்டு இருப்பவர்கள் தொடர்பில் இருப்பதற்கு கைப்பேசி WhatsApp போன்றவைகள் உள்ளன. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த எங்களுக்கு அஞ்சல் வழியே தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும் சிலரோடு தொடர்பு இருந்ததால் அவர்கள் மூலம் அனைவரின் முகவரியையும் பெற்று தொடர்பு கொண்டு இதுவரை 5 முறை சந்தித்துவிட்டோம். இனியும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பதாக உத்தேசம். நீங்களும் அடிக்கடி சந்தியுங்கள். அது எத்தகைய மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அனுபவித்து பாருங்கள்.

      நீக்கு
  3. நண்பர்கள் சந்திப்பு பற்றி படிக்கும்போதெல்லாம் நாக்பூரில் எதிர்வரும் ஃபெப்ருவரியில் நடக்க இருக்கும் அம்பர்நாத் ஆலும்னி மீட்டுக்கு ஏற்கனவே 160 நண்பர்கள் குடும்பமு ம் சேர்த்தால் 280 பேர் பதிவு செய்திருப்பதாகத் தகவல் இருக்கிறதுடிசம்பர் 31 வரை பதிவு செய்யலாம் என்னும் ஏற்பாடுகள் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நாக்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க இருக்கும் தங்களது அம்பர்நாத் பழைய மாணவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்!

      நீக்கு
  4. ஆஹா .... இனிய பழைய நண்பர்கள் .... இரயில் பயணம் .... என பதிவு களை கட்டுக்கொண்டு வருகிறது.

    மேலும், படிக்க சுவாரஸ்யமாகவும், ஓர் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதுமாக உள்ளது.

    மேலும் தொடரட்டும். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  5. இனிய சந்திப்புகள் மனிதனை உற்சாகப்படுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இந்த சந்திப்பு எங்களை உற்சாகப்படுத்தியது உண்மை.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. இது போன்ற விபரங்களை நான் நினைவுகூர்ந்தால், இரவு ரெயில் பிடித்தோம்; காலையில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். அதற்கு மேல் சொல்லத் தெரியாது. நண்பரொருவர் இரண்டரை மணி நேர சினிமாவை மூன்று மணி நேரம் ரசிக்குமளவுக்கு சொல்வார். திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொல்வதுபோல விவரித்த விதம் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ஒரு பயணம் பற்றி எழுதும்போது அப்போது நடந்தவைகளை எழுதினால் படிப்போருக்கு அலுப்புத் தராது என்பதால் விரிவாக எழுதினேன். அது தங்களைப் போன்றோர்களுக்கு பிடிக்கிறது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  8. ஒவ்வொரு நண்பர்களின் வருகையும், எதிர்பார்ப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  9. மிக அழகாக விவரிக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே!

      நீக்கு
  10. 'All the ways to Paris' என்று சொல்வார்கள்.

    இந்தப் பதிவில் தஞ்சையை நோக்கியே எல்லாவற்றையும் அமைத்திருப்பது அங்கு செல்லும் நோக்கத்தின் சிறப்பைக் கூட்டியது.

    கனடா அய்யம்பெருமாளுக்கும் பதிவுச்சீட்டு ஏற்பாடு செய்திருப்பீர்களே என்று சென்ற பகுதியின் தொடர்ச்சியாய் யோசனையில் இருந்த பொழுது இந்தப் பகுதியில் பதிவுச்சீட்டை இரத்து செய்யச் சொல்லி விட்டார் என்று அறிந்தேன்.

    வகுப்பு நண்பர் சேதுராமனோடு சந்திப்பு நாங்களும் எதிர்பாராதது.

    பெண்ணாகடம் தான் பெண்ணாடம் ஆயிற்று என்று இப்பொழுது தான் தெரிந்தது.

    திரு. இக்பால் மனசில் நிற்கிறார்.

    அடுத்த பகுதிக்கு ஆவலோடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ஆவலோடு காத்திருப்பதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!

      பெண்ணாகடத்திற்கு திருத்தூங்கானைமாடம், திருக்கடந்தை என்ற பெயர்களும் உண்டு. இந்த ஊரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள்.

      இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க பூலோகம் வந்த தேவகன்னியர்கள் இங்குள்ள இறைவனைக் கண்டு மகிழ்ந்து இங்கேயே தங்கிவிட்டனராம். மலர் பறிக்கக் சென்றவர்கள் வராததைக்கண்டு, இந்திரன் காமதேனு பசுவை அனுப்ப அதுவும் இறைவனை வழிபட்டு அங்கேயே நின்றுவிட்டதாம். காமதேனுவை தேடிவர இந்திரன் தனது வெள்ளையானையை (ஐராவதம்) அனுப்ப, அதுவும் வந்து, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட்டதாம். சென்ற யாவரும் வராததால் தானே புறப்பட்டுத் தேடிவந்த இந்திரன் நிலைமையறிந்து சுடர்க்கொழுந்தீசர் என அழைக்கப்படும் இறைவனை வழிபட்டான் என்பது தல வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்ட தலம் என்பதால் இது பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றது. ஆனால் நாளடைவில் மருவி பெண்ணாடம் என ஆகிவிட்டது. (இங்கு நான் 8 ஆம் வகுப்பை 56-57 ஆண்டுகளில் படித்தேன்.)

      ‘சிவஞான போதம் இயற்றிய மெய்கண்ட நாயனார் அவதரித்ததும் இங்குதான். மறைஞான சம்பந்தர் பிறந்ததும் இங்கு தான்.

      அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது. தேவாரத்தில் நான்காம் திருமுறையில் வரும் ‘பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்’ என்று தொடங்கும் பாடல்களை அப்பர் பாடியதும் இங்கு தான்.

      நீக்கு
  11. Respected Sir,
    I read your blog today 09/11/2016 only. I tried to type my reply in Tamil. But I couldn't get and I don't know how to register my view in Tamil. Anyway, you gave a place in your heart and recording my name in your blog. I apologies not giving you company on that day. I was very much worried not showing you our third child - CRESCENT NURSERY AND PRIMARY SCHOOL to you Sir. Please make yourself convenient to visit me again.

    Thank you Sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இக்பால் அவர்களே! தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பது பற்றி தனியே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்.

      ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.’ என்பார்கள். ஆனால் இங்கோ அகத்தில் உள்ளது பதிவில் வந்துவிட்டது. அதனால் நீங்கள் திரு ஜீவி அவர்களின் மனசிலும் நிற்கிறீர்கள்.

      எனக்கும் உங்களது பள்ளியை—மன்னிக்க—உங்களது மூன்றாவது பிள்ளையை பார்க்க ஆவலாக இருந்தது. உங்களுக்கும் அன்றைக்கு வேறு பணிகள் இருந்ததை அறிவேன். நேரம் இல்லாதால் பார்க்க இயலவில்லை. நிச்சயம் அடுத்த முறை தஞ்சை வரும்போது அவசியம் பள்ளியைப் பார்க்க வருவேன்.

      நீக்கு
  12. பழைய நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று . தொடரவும். நானும் எனது பள்ளித் தோழி கள் மூவருடன் இன்னும் தொடர்பில் உள்ளேன்
    பெண்ணாடத்தில் லட்சுமி டீச்சர் (60 களில் அவர் ஒருவர் தான் விருத்தாசலம் பெண்ணாடம் ஏரியாவிற்கு ஹிந்தி டீச்சர்) என்பவரிடம் ஹிந்தி படித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அபயா அருணா அவர்களே!

      நீக்கு
  13. எல்லாம் இன்ப மயம். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு