ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 11

A Batch நண்பர்களின் அறிமுகம் முடிந்ததும் B Batch நண்பர்களை அறிமுகம் செய்ய வந்த நண்பர் நாச்சியப்பன் முதலாவதாக நண்பர் முத்துக்கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி, அவரையும் அவருடைய துணைவியாரையும் மேடைக்கு அழைத்தார்.




இரண்டாம் ஆண்டில் என்னுடன் அறைத்தோழர்களாக இருந்தவர்கள் நண்பர் முத்துக்கிருஷ்ணனும் நண்பர் நாச்சியப்பனும். நாங்கள் மூவருமே நெருங்கிய நண்பர்கள்.


நண்பர் முத்துக்கிருஷ்ணன் தனது துணைவியாருடன்

அகரவரிசைப்படி அடுத்து நண்பர் நாச்சியப்பன் தான் மேடைக்கு அழைக்கப்படவேண்டும். அவரே நண்பர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்ததால் அறிமுக நிகழ்ச்சியின் கடைசியில் தான் பங்கேற்பதாக சொல்லிவிட்டு அடுத்து என்னை அழைத்தார்.

நானும் என் துணைவியும் மேடை ஏறியபோது என்னை அறிமுகப்படுத்தும்போது நான் அவரிடம் வெவ்வேறு குரலில் தொலைபேசியில் பேசி அவரை குழப்பியதை சொல்லி நினைவு கூர்ந்தார். நண்பர் நாச்சியப்பன் இரண்டு ஆண்டுகள் எனது பக்கத்து அறைத் தோழராகவும் இரண்டு ஆண்டுகள் எனது அறைத் தோழராகவும் இருந்தவர். எனது நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். பலமுறை அவரிடம் நான் தொலைபேசியில் மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் பேசி ‘ஏமாற்றி’யதுண்டு.


நண்பர் ஜனார்த்தனம் எனக்கு பொன்னாடை போர்த்தும்போது அருகில் என் துணைவியார். ஏனோ தெரியவில்லை அப்போது நான் முகத்தை இறுக்கமாக வைத்திருந்திருக்கிறேன்.


என் துணைவியாருக்கு நான் பொன்னாடை போர்த்தியபோது

அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டவர் நண்பர் நாகராஜன். இறுதி ஆண்டு படிக்கும்போது என்னுடைய பக்கத்து அறைத் தோழராக இருந்தவர். மேலும் இருவர் சேர்ந்து செய்யும் வேதியல் செய்முறைப் பயிற்சியில் என்னுடைய கூட்டாளியாக இருந்தவர்.

2013 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சந்திப்பில், அடுத்த சந்திப்பு தஞ்சையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தபோது, தஞ்சையில் சந்திக்கும்போது எங்கெங்கு செல்லலாம் என கலந்தாலோசித்தோம். அப்போது தஞ்சை வரும்போது அனைவரும் அவசியம் முத்துப்பேட்டை காயலுக்கு செல்லவேண்டும் என்றும் அதற்குரிய ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் சொல்லி முத்துப்பேட்டை காயலை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியவர் நண்பர் நாகராஜன்.

இந்த பொன்விழா சந்திப்பில் முத்துப்பேட்டை காயல் பயணம் சிறப்பாக நடைபெற நண்பர் நாகராஜன் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஆற்றிய பணி பற்றி அந்த பயணம் பற்றி எழுதும்போது எழுதுவேன்.

அவரது துணைவியார் சென்னைக்கு சென்றிருந்ததால் அவர் மட்டும் சந்திப்பில் கலந்துகொண்டார். ஆனால் அவரது மகனும் மருமகளும் வந்திருந்தார்கள்.


நண்பர் நாகராஜனுக்கு பொன்னாடை போர்த்துபவர் நண்பர் ஜனார்த்தனம்.



தஞ்சை சந்திப்பை வெற்றிகரமாக நடத்த துணைபுரிந்த நண்பர் பெத்தபெருமாளுக்கு நண்பர் கோவிந்தசாமி பொன்னாடை போர்த்தியபோது அருகில் திருமதி பெத்தபெருமாள்.

இந்த சந்திப்பிற்காக கையேடு வெளியிட, விழாக்குழுவினர் முடிவுசெய்தபோது அதில் கட்டுரை, கவிதைகள் எழுத எல்லோரையும் நண்பர் பாலு கேட்டுக்கொண்டிருந்தார். என்னையும் ‘மலரும் நினைவுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுத நண்பர் பாலு கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது எனது வீட்டில் பராமரிப்பு பணி நடந்து கொண்டு இருந்ததால் என்னால் எழுத இயலவில்லை. ஆனால் நண்பர் சரவணன் ஒரு அருமையான கவிதையை பொன்விழா கையேட்டிற்காக இயற்றித் தந்திருந்தார்.

அவரது கவிதை வாசிப்பு இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது கவிதையை அவரது குரலில் கேட்க ஆவலாக காத்திருந்தபோது மேடை ஏறினார் நண்பர் சரவணன்.


நண்பர் சரவணனுக்கு பொன்னாடை போர்த்துபவர் நண்பர் கோவிந்தசாமி

நண்பர் சரவணன் அறிமுகம் முடிந்ததும், பேசும்போது தான் எவ்வாறு பல தடைகளை சந்தித்து வெற்றிபெற்று தேசிய நூற்பாலைக் கழகத்தின் (National Textile Corporation Ltd) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக (Chairman and Managing Director) பதவியேற்றேன் என்று விவரித்தபோது, அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். பின்னர் அவர் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.

அது பற்றி அடுத்த பதிவில்




தொடரும்





14 கருத்துகள்:

  1. காயல் நினைவுகளையும் கிளறி விட்டுப் போன பதிவு இது.

    முந் புகைப்படத்தில் அப்படியொன்றும் இருக்கமாக இல்லையே!
    அதுவும் அழ்காகத் தான் இருக்கிறது; இயல்பான அரைகுறைப் புன்னகையுடன்.

    எல்லா நண்பர்களையும் மகிழ்ச்சியுடன் பார்க்கும் பொழுது அந்த மகிழ்ச்சி நமக்கும் தொற்றிக் கொள்வது உண்மை.

    அடுத்த கட்டத்திற்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மகிழ்ச்சி ஒரு தொற்று நோய் போல. நீங்கள் சொல்வது போல ஒருவர் அதுவும் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சி வருவது இயற்கை தான்.
      எனது புகைப்படத்தைப் பார்த்து அது இயல்பான அரைகுறை புன்னகைதான் என்று சொன்னதற்கு நன்றி

      நீக்கு
  2. கவிதையை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும். கவிதையை வாசிக்க காத்திருப்பதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  3. //ஏனோ தெரியவில்லை அப்போது நான் முகத்தை இறுக்கமாக வைத்திருந்திருக்கிறேன்.//

    அதனால் பரவாயில்லை ஸார். அதற்கு அடுத்த படத்தில் நன்கு சிரித்த முகத்துடன் மிகவும் அழகாகவே உள்ளீர்கள்.

    ஒருவேளை பொன்னாடையிலிருந்து விடுதலை பெற்றதால் இருக்குமோ என்னவோ ! :)

    வழக்கம்போல் தொடரின் இந்தப்பகுதியும் படிக்க மிகவும் அருமையாக உள்ளது.

    மேலும் தொடரட்டும். நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! சிலசமயம் புகைப்படம் எடுக்கும்போது நான் சிரிக்க மறந்ததுண்டு. அது போலத்தானோ இது என் எண்ணி அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். திரு ஜீவி அவர்கள் அதை இயல்பான அரைகுறை புன்னகை என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!

      நீக்கு
  6. மனைவிக்குப் பொன்னாடை போர்த்தும்போது அவர் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த மகிழ்ச்சி தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
  7. மகிழ்வான நினைவுகள். உங்களுக்கு பொன்னாடை போற்றும்போது இயல்பாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு