புதன், 9 ஆகஸ்ட், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 31

அண்ணாமலை நகரில் 2011 ஆம் ஆண்டு நடந்த எங்களின் சந்திப்பின் போது பிச்சாவரத்தில் 14-08-2011 நாங்கள் மேற்கொண்ட படகுப் பயணமும், அதுபற்றி பிரிந்தவர் கூடினால் ....???????? என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவும், இந்த காயல் பயணத்தின்போது கண்டல் தாவரங்களை (Mangroves), பார்த்த போது என் மனதில் நிழலாடின.




அந்த சந்திப்பு பற்றி அதே ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் வெளியிட்ட பிரிந்தவர் கூடினால் ....???????? 9 என்று தலைப்பிட்ட தொடரில், அலையாத்தி தாவரங்கள் பற்றி குறிப்பிடும்போது ‘இந்த தாவரங்களைப்பற்றிய சுவையான தகவல்கள் உண்டு. ஆனால் பதிவு நீண்டுகொண்டு போவதால் அது பற்றி பின்னர் எழுதுகிறேன்.’ என்று சொல்லியிருந்தேன்.

எனவே அவைகள் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம் தரலாமென எண்ணுகிறேன்.

அலையாத்தித் தாவரங்கள் எனப்படும் கண்டல் தாவரங்கள் (Mangrove) கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் (Brackish Water) வளரும் தாவரங்களாகும். இந்த வகைத் தாவரங்கள், கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படுகிறது.

நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். இந்த இடங்களில் வளரும் அலையாத்தித் தாவரங்கள் உள்ள இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 110 வேறுபட்ட இனங்கள் இருக்கின்றன. இவை உயிர்மம் (Oxygen) குறைவான மண்ணில் வளரும் தன்மையோடு, நிலநடுக் கோட்டுக்கு (Equator) அருகில் உள்ள, வெப்ப மண்டலம் (Tropics), வெப்ப மண்டல அணிமையிடம் (Subtropics) பகுதிகளிலேயே வளரும். இவைகளில் சிறிய செடி வகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீட்டர் உயரம்வரை வளரும் மரங்களும் உண்டு.

உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக்காடு கங்கை ஆற்றுப்படுகையில் சுந்தரவனக்காடு ஆகும். உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக்காடு நமது பிச்சாவரம் காடு தான்.

வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் கழிமுகத்தில் (Estuary) இருக்கும் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடுகளில், கருப்பு கண்டல் (Black Mangroves) எனப்படும் Avicennia மற்றும் சிகப்பு கண்டல் (Red Mangroves) எனப்படும் Rhizophara ஆகிய தாவரங்களைக் காணலாம் ஆனால் முத்துப்பேட்டை காயலில் கருப்பு கண்டல் (Black Mangroves) எனப்படும் Avicennia தாவரம் மட்டுமே உண்டு.

எப்போதும் உவர் நீரால் சூழப்பட்டு, அதுவும் உயிர்மம் (Oxygen) குறைவாக இருக்கும்போது தாவரங்கள் உயிர்வாழ்வது கடினம். இந்த சூழ்நிலையில் கண்டல் தாவரங்கள் நிலைத்து நிற்க இயற்கை இவைகளுக்கு தந்திருக்கும் கொடை வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

சிகப்பு கண்டல் தாவரங்கள், உயிர்மம் (Oxygen) குறைவாக உள்ள உப்பு நீரில் சுவாசிக்க முடியாது என்பதால் அவைகளின் அடிப்பாகத்திலிருந்து ஊன்று வேர்கள் (Stilt Roots) என்பவை வளர்ந்து மேலெழும்பி நிற்கும். அதில் உள்ள சிறு துவாரங்கள் (Pores) மூலம் காற்றை உள் வாங்கி இவைகள் உயிர்வாழ்கின்றன. இந்த ஊன்று வேர்கள் கால்கள் போல் இருப்பதால் அவை நடப்பது போன்ற தோற்றத்தை தருவதால் இவைகளை நடக்கும் மரங்கள் (Walking Trees) என்றும் சொல்வதுண்டு.


ஊன்று வேர்கள் உள்ள சிவப்பு கண்டல் தாவரங்கள்

ஆனால் கருப்பு கண்டல் தாவரங்களைப் பொறுத்தவரை அவைகளினுடைய அடிப்பாகத்தை சுற்றி காற்றை உறிஞ்சுவதற்காக கை விரல்கள் தோற்றத்தில் மூச்சு வேர்கள் (Pneumatophores) தண்ணீருக்கு மேலே சுமார் 30 சென்டி மீட்டர் உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இந்த மூச்சுவேரில் உள்ள சிறு துவாரங்கள் மூலம் காற்றை சுவாசிக்கின்றன இந்த தாவரங்கள்.


மூச்சு வேர்கள் உள்ள கருப்பு கண்டல் தாவரங்கள்

இந்த மரங்களை சுற்றிலும் உயிர்மம் குறைவான நீர் சூழ்ந்திருப்பதால் இவைகளின் விதைகள் கீழே விழுந்தால் நீரில் முளைக்காது என்பதால் இயற்கையே இவைகளுக்கு வேறொரு வழியையும் காட்டியிருக்கிறது.

இந்த தாவரங்களின் பூக்கள் பூத்து, கனியாகி அதிலுள்ள விதைகள் தாய் மரத்தில் இருக்கும்போதே முளைத்து ஒட்டிக்கொண்டு இருக்கும். தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற தாவரங்கள் (Viviparous) என இவைகளை இனம் பிரித்து சொல்வதுண்டு.


தாய்ச்செடியில் முளைத்து இருக்கும் காட்சி

இது போல் கனிகளில் முளைத்தவை பின்னர் தாங்களே ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் தங்களது உணவை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடும்போது, இவைகளை தயார் நிலையில் உள்ள இளஞ்செடிகள் ( Propagule) என்பார்கள்.



தாய்ச்செடியில் உள்ள இளஞ்செடிகள்

இவைகள் மரத்தில் தொங்கும்போது ஏதோ முருங்கைக் காய்கள் காய்த்து தொங்குவது போல் தோற்றமளிக்கும்.



நன்கு முற்றிய இளஞ்செடிகளை சரியான நேரத்தில் தாய்ச்செடியால் கீழே விடப்படும்.இவைகள் கீழே விழும்போது மேலிருந்து வான்குடை(Parachute) இறங்குவது போல் இலாகவமாக இறங்கி சரியான சூழ்நிலை அமையும் வரையில் ஓராண்டு காலம் கூட செயலற்று (Dormant) இருந்து, தண்ணீரில் மிதந்து சென்று சரியான இடத்தில் (சேற்றில்) வேர்பிடித்து வளரத்தொடங்கும்.


முற்றிய இளஞ்செடி



வேர் பிடித்து வளர்ந்துள்ள தாவரங்கள்.

கண்டல் தாவரங்கள் பற்றி இதற்கு மேல் சொன்னால், பதிவை படிப்பவர்களுக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் இதோடு நிறுத்திவிட்டு, எங்களது காயல் பயணம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகிறேன்.

தொடரும்

26 கருத்துகள்:

  1. அலையாத்தித் தாவரங்கள் பற்றி பிரமிப்பான தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே....

    இக்காடுகளில் உலகிலேயே முதலிடமும், இரண்டாவது இடமும் இந்தியாவில் இருப்பது பெருமையான விடயமே..

    அழகிய படங்களும் நன்று தொடர்கிறேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. அலையாத்தி...

    அடியாத்தி இப்போதுதான் இந்த பேரையே கேள்விப்படுறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வியந்தமைக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! இதுபோல் நாம் அறியாத அறிய தகவல்கள் இன்னும் பல உண்டு.

      நீக்கு
  3. அலையாத்தி பற்றி தகவல் இது வரை நான் அறியாதது .
    Walking trees ம் இது வரை கேள்விப்பட்டதே இல்லை . வங்கியில் வேலை ..... பிறகு எப்படி இதில் ஆர்வம் வந்தது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி அபயா அருணா அவர்களே! வங்கியில் வேலை. பின் இதில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என வினவியுள்ளீர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை அறிவியல் படிக்கும்போது இந்த தாவரம் பற்றிய பாடம் எங்களுக்கு உண்டு. மேலும் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பிச்சாவரத்திற்கு கல்வி சுற்றுலா சென்றபோது இந்த தாவரத்தை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். வேளாண்மை அறிவியல் படித்துவிட்டு மாநில மற்றும் மய்ய அரசு நிறுவனத்தில் பணி புரிந்துவிட்டு வங்கியில் சேர்ந்து வங்கியாளனாக மாறிவிட்டேன்.

      நீக்கு
  4. படங்கள் அருமை நேரில் பார்க்க ஆசை எழுகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! அவசியம் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை போய் பார்த்து வாருங்கள்.

      நீக்கு
  5. பிரமிப்பான தகவல்கள்.

    பிச்சாவரம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. கல்லூரி சமயத்தில் சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே

      நீக்கு
  6. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அரங்கநாதன் அவர்களே!

      நீக்கு
  7. அருமையான மொழியாக்கங்கள் சார். முதலில் ஒரு பேரேட்டில் ஆங்கில-- அதற்கான தமிழ் மொழி மாற்ற வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு விளக்கம் தேவைப்படுபவற்றிற்கு தங்களிடம் விளக்கம் கேட்கலாம் என்றிருக்கிறேன். பிறகு தமிழாக்க வார்த்தைகளும் மனசில் நன்கு படிந்து விடும்.

    இயற்கையின் கொடையை நினைக்க பிரமிப்பாக இருக்கிறது.
    நீரின் அடி ஆழத்திற்குப் போகும் பொழுது ஒரு குழலை நீருக்கு வெளியே நீட்டியபடி இருக்குமாறு வைத்துக் கொண்டு சுவாசிக்கும் வித்தையும் நாம் கற்றுக் கொண்டது இப்படித் தானா?.

    பாவம், மீன்கள். படைப்பிலேயே இப்படியான ஒரு வசதியை அவை பெற்றிருந்தால் அடிக்கடி நீருக்கு வெளியே வந்து அவை சுவாசிக்கும் வேலை இருந்திருக்காதல்லவா?..

    //நன்கு முற்றிய இளஞ்செடிகளை சரியான நேரத்தில் தாய்ச்செடியால் கீழே விடப்படும்.இவைகள் கீழே விழும்போது மேலிருந்து வான்குடை(Parachute) இறங்குவது போல் இலாகவமாக இறங்கி சரியான சூழ்நிலை அமையும் வரையில் ஓராண்டு காலம் கூட செயலற்று (Dormant) இருந்து, தண்ணீரில் மிதந்து சென்று சரியான இடத்தில் (சேற்றில்) வேர்பிடித்து வளரத்தொடங்கும்.. //

    எங்கே இறைவன்?.. என்ற கேள்வி எழும் பொழுது இதோ இங்கே இறைவன் என்று சொல்லத் தோன்றுகிறது.

    சிரமம் பார்க்காமல் தாங்கள் தாவரவியலில் பெற்ற அறிவை வாசிப்போரிடம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! உங்களுக்குத் தெரியாத தமிழ் சொற்களா? இருப்பினும் தாங்கள் விரும்பும்போது எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களை நிச்சயம் தங்களிடம் பகிர்ந்துகொள்வேன்.
      ஒவ்வொரு உயிரனமும் இயற்கையின் கொடையால் உயிர்வாழ்கின்றன என்பது உண்மையே. இல்லாவிடில் இந்த உலகில் உயிரினம் என்பதே அழிந்தொழிந்திருக்கும். எனவே நம்மைப் படைத்த இறைவைனைப் போற்றுவோம்!
      பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எனக்கு பிடித்த பாடம் வேளாண்மைத் தாவரவியல் (Agricultural Botany). அதனால் தான் படித்தவைகளில் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. உண்மையில் மகிழ்ச்சியே

      நீக்கு
  8. இயற்கையின் செயலைக் கொண்டு பிரமிக்கிறேன் ஐயா...

    அருமையான விளக்கம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இயற்கையின் செயல்களில் நாம் அறியாதவை இன்னும் நிறைய இருக்கின்றன.

      நீக்கு
  9. இயற்கையின் மகத்துவம் பிரமிக்கவைக்கிறது. கண்டல் தாவரங்கள், கங்காரு தாவரங்கள். இங்கே ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அடிக்கடி இருப்பதால், சில தாவரங்களின் விதைகள், அதற்கேற்றபடி தீயிலிட்டால்தான் முளைக்கும். இயற்கை பெரிய விந்தை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

      இந்த பதிவை எழுதும்போது இந்த தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாய் மரத்தில் இருப்பதை, கங்காரு குட்டிகள் தாய் கங்காருவின் வயிற்றுப்பையில் இருப்பது போல் என எழுத நினைத்தேன்.ஏனோ எழுத மறந்தேன். தாங்கள் சொல்லிவிட்டீர்கள். அதற்கு நன்றி!

      ஆஸ்திலியாவில் சில தாவரங்கள் அதன் விதைகளை தீயில் இட்டால் தான் முளைக்கும் என்பது எனக்கு புதிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  10. ஒரு பாட்டனி வகுப்புக்குள் அமர்ந்தது போல் இருக்கிறது ஒரு முறை நேரில் பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கலாமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது Seeing is believing என்று வேளாண்மை விரிவாக்கம் (Agricultural Extension) பாடத்தில் படித்ததுண்டு.எனவே எதையும் நேரில் பார்த்தால் தான் புரியும். எனவே அடுத்தமுறை தமிழகம் வரும்போது பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக் காடுகளை பார்க்க முயற்சி செய்யுங்களேன்.

      நீக்கு
  11. அலையாத்தி காடுகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அந்த காடுகளில் உள்ள தாவரங்கள் குறித்து, இன்றுதான் உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன். இயற்கையின் அதிசயம். இறைவனின் படைப்பு. பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் அதிசயம் தான்.

      நீக்கு
  12. அரிய வகை தாவரங்கள்/அரிய தகவல்கள்/

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விமலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

    படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமையோ அருமை.

    //உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக்காடு கங்கை ஆற்றுப்படுகையில் சுந்தரவனக்காடு ஆகும். உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக்காடு நமது பிச்சாவரம் காடு தான்.//

    ஆஹா, எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இவை.

    மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருகிறேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு