திங்கள், 22 ஜூலை, 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 5


எனக்கும் மேடைப்பேச்சை மொழிபெயர்க்கும் அனுபவம் ஏற்பட்டது என்று சொல்லியிருந்தேன். 1988 ஆம் ஆண்டு நான் சேலத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது அந்த மாவட்டதில் இருக்கும் ஒரு சிற்றூரில் கிளை திறக்க எங்களது வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தது.




சேலம் மாவட்டத்தில் முதன்மை கிளையாக நான் பணியாற்றிய கிளை இருந்ததால்,அந்த புதிய கிளையைத்  திறக்க தேவைப்படும் உதவிகளைச் செய்யுமாறு என்னை பணித்திருந்தார்கள்.

அந்த கிளையில் புதிதாய் மேலாளராக பணிபுரிய இருந்தவருக்கு ஆரம்பக்கட்ட பணிகளை முடிக்க உதவியாக இருந்து என்னாலான உதவிகளை செய்தேன். வங்கியின் திறப்பு விழாவில் தலைமை விருந்திராக இருந்து கிளையை திறந்துவைக்க அருகில் இருந்த நூற்பாலை ஒன்றின் மேலாண்மை இயக்குனரை கேட்டுக்கொண்டோம். (அவர் வங்கியின் வாடிக்கையாளர் என்பதால் அவரும் திறப்பு விழாவுக்கு வர ஒப்புக்கொண்டார்.)

திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னை மண்டல அலுவகத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த துணைப் பொதுமேலாளரும் அவருடன் அங்கு பணியாற்றும் உதவிப் பொது மேலாளரும் வந்திருந்தனர். கோவை கோட்ட மேலாளரும் அந்த விழாவில் கலந்து கொண்டார்.

விழா தொடக்கத்தில் வந்திருந்தவர்களை கோட்ட மேலாளர் தமிழில் வரவேற்றுப் பேசினார். கோட்ட மேலாளர் கர்நாடகத்தில் உள்ள தென் கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், பல ஆண்டுகள் தமிழ் நாட்டில் பணிபுரிந்ததால் அவருக்கு  தமிழ் பேச வரும்.

அடுத்து விழாவில் முன்னிலை வகித்த துணைப் பொதுமேலாளர் பேச எழுந்தார். அவரும் மங்களூரைச் சேர்ந்த கன்னடக்காரர். அவருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் தான் பேசமுடியும். அந்த சிற்றூரில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் தெரியாதாகையால், தான்  ஆங்கிலத்தில் பேசுவதை யாராவது மொழிபெயர்க்கவேண்டும் என்று அவர் சொன்னார்.

யாரை மொழிபெயர்க்கச் சொல்லலாம்?  என அவர் கேட்டபோது எங்கள் உதவிப்பொது மேலாளர் என்னைப் பார்த்து நீங்கள் மொழிபெயர்த்துச் சொல்லுங்கள் என சொல்லிவிட்டார்.

திடீரென அவர் அப்படி சொன்னதும் எனக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் அதுவரை நான் எந்த பேச்சையும் மொழிபெயர்த்ததில்லை. துணைப் பொதுமேலாளர் பேச இருப்பது முன்னேற்பாடின்றி பேசும் (Extempore) பேச்சு. மேலும் வங்கி சார்ந்த சொற்றொடர்களை பேச்சினூடே சொல்லக்கூடும் என்பதால் அவர் பேசுகின்றவற்றை உள்வாங்கி உள்ளூர் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பேசவேண்டிய கட்டாயம்.

வேறு வழியின்றி உள்ளுக்குள் ஒரு வித படபடப்போடு மேடைக்கு சென்றேன். எங்களது துணைப் பொதுமேலாளர் எனக்காக நிறுத்தி நிதானமாக பேசினார். இடையிடையே நிறுத்தி நான் மொழிபெயர்த்து சொல்ல உதவினார்.

அப்போதுதான் புரிந்துகொண்டேன் மேடையில் மொழிபெயர்ப்பது  நாம் நினைப்பதுபோல் எளிதல்ல என்று. மேடைக்கு இந்த பக்கம் இருந்து என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால் மேடை ஏறினால் தான் தெரியும் அந்த பணி எவ்வளவு கடினம் என்று, 

எங்களது துணைப் பொதுமேலாளர் பேசும்போது, வேறெங்கும் கவனம் செலுத்தாமல் விழிப்புடன் மனதை ஒருமுகப்படுத்தி அவரது பேச்சை உன்னிப்பாக உள் வாங்கிக்கொண்டேன்.

அவர் பேசிமுடித்து நிறுத்தியதும், உடனே தயங்காமல் தடுமாறாமல் அவர் பேசிய பேச்சில் இருந்த கருத்துக்களை மாற்றாமல் எளிய நடையில்  கர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில் தொடங்கப்பட்ட இந்த சிண்டிகேட் வங்கி இன்று நாடு முழுதும் கிளைகளைத் திறந்து பல்லாயிரக் கணக்கானோருக்கு சேவை செய்வதோடு நின்றுவிடாமல், இன்று இந்த சிற்றூரில் உங்களுக்கு சேவை செய்ய உங்கள் வீட்டருக்கே வந்துள்ளது. என்று சொல்லிவிட்டு எங்கள் உதவிப் பொது மேலாளரின்  முகத்தைப் பார்த்தேன்.

அவர் புன்சிரிப்போடு தலையை அசைத்து ஆமோதித்ததும், எனது மொழிபெயர்ப்பில் குறையில்லை என அறிந்ததும் தைரியம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு எங்களது துணைப் பொது மேலாளரின் பேச்சின் கருத்தை  மாற்றாமல் எனது கருத்துகள் எதையும் சேர்க்காமல் எளிய நடையில் தங்கு தடையின்றி மொழிபெயர்த்தேன். எப்படி தடுமாற்றமின்றி அவரது பேச்சை கருத்து பிசகாமல் மொழிபெயர்த்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

Below poverty line, Overdue amount, Rotation of money போன்ற ஆங்கில சொற்றொடர்களுக்கு சரியான தமிழ் சொற்களை பயன்படுத்தி அவர் சொல்ல வந்ததை மக்களுக்கு புரியும் வகையில் மொழிபெயர்த்து சொன்னேன்.

இன்றைக்கு வேண்டுமானால் மேலே சொல்லப்பட்ட ஆங்கில சொற்றொடர்களுக்கு இணையான தமிழ் சொற்றொடர்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் அனைவருக்கும் எளிதாக தோன்றலாம். ஆனால் 1988 ஆம் ஆண்டில் இவை பலருக்கு புரியாத சொற்றொடர்களாகவே இருந்தன.  

துணைப் பொதுமேலாளர் பேசி முடித்ததும் என்னைப் பார்த்து பணியை சிறப்பாக செய்தீர்கள் என ஆங்கிலத்தில் பாராட்டினார். நண்பர்கள்  அனைவரும் நான் மேடையை விட்டு இறங்கியதும், இனி  நீங்கள் தான் சிண்டிகேட் வங்கியின் சிதம்பரம் என்றார்கள்.

அவர்கள் அப்படி சொன்னதன் காரணம் அப்போது திரு ராஜீவ் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் திரு சிதம்பரம் அவர்கள் தான் அவரது ஆங்கில பேச்சை தமிழ் மொழிபெயர்ப்பார்.

நான் அவர்களிடம் சொன்னேன். திரு சிதம்பரம் போல் நான் மொழிபெயர்த்தேனா எனத் தெரியாது ஆனால் எனக்கும் சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு. ஏனெனில் நான் படித்தது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். மேலும் திரு சிதம்பரம் அவர்கள் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மகள் வயிற்றுப் பேரன். என்று வேடிக்கையாய் சொன்னேன்.

ஒன்று மட்டும் சொல்வேன் மொழிபெயர்ப்பது என்பது எளிதான செயல் அல்ல. இத்தாலிய எழுத்தாளரான உம்பெர்த்தோ எக்கோ( Umberto Eco) வின் கூற்றுப்படி மொழிபெயர்ப்பு என்பது ஒரு தோல்வியுறும் கலை. அவரது சொற்களில் சொன்னால் Translation is the art of failure. ஆனால் எழுத்தாளரான சல்மான் ருஷ்டியோ மொழிபெயர்ப்பின் போது சில இழப்புகள் இருந்தாலும்  அதனால் சில ஆதாயங்களும் உண்டு என்கிறார்.

எது எப்படியோ மொழிபெயர்ப்பு பற்றி சரியான புரிதல் இல்லாமல், நமக்குத்தான் மொழிகள் தெரியுமே என்று அசட்டு துணிச்சலுடன் மொழிபெயர்த்தால், சமீபத்தில் இரண்டு மாநிலங்களில்  நடந்த மொழிபெயர்ப்பு கொலைகள் போல் ஆகி கேலிக்கூத்தாக ஆகிவிடக்கூடும். அது திரு உம்பெர்த்தோ எக்கோ வின் கருத்தை ஏற்றுக்கொள்வதுபோல் ஆகிவிடும்.
  


16 கருத்துகள்:

  1. முதல்முறையாகவே அசத்தி விட்டீர்கள் என்றால், தங்களின் மீதுள்ள தங்களின் நம்பிக்கையே மிகப்பெரிய காரணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. உண்மைதான் நண்பரே உடனுக்குடன் மொழி பெயர்ப்பது கடினமின விடயமே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!

      நீக்கு
  3. மிகப் பொறுமையுடன் மொழிபெயர்ப்புப் பணியிலுள்ள சிக்கல்களை ஒன்று விடாமல் தங்கள் அனுபவத்தில் சொல்லிவிட்டீர்கள், சார்.
    எதைப் பற்றியாவது சுதந்திரமான கருத்துக்கள் விரவிய பேச்சாக இருந்தாலும் கவலையில்லை. ஆனால் இது ஒரு அலுவகம் சம்பந்த ப்பட்ட தமிழ்-ஆங்கிலம் இரண்டும் அறிஹ்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் அல்லவா?.. எவ்வளவு எச்சரிக்கையுடன்
    செய்திருக்க வேண்டிய பணி அது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

    ராஜா அண்ணாமலை செட்டியாரின் மகள் வயிற்றுப் பேரன் தான் ப.சிதம்பரம் அவர்கள் என்பது எனக்குப் புதுச்செய்தி.

    அதே மாதிரி உம்பெர்த்தோ எக்கோ, சல்மான் ருஷ்டி போன்றவர்கள் மொழிபெயர்ப்புக் கலை பற்றிச் சொல்லியவற்றையும்-- விஷயத் தெளிவு உள்ளவர்கள் அவர்கள் சொல்ல வந்த செய்திகள் வேறாயினும் அது தொடர்புப்படுத்தி எத்தனை புதுச்செய்திகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுகிறது என்பது மகிழ்வேற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மொழிபெயர்ப்பு பணியில் உள்ள சிக்கல்கள் பற்றி பல நாட்களாக எண்ணியிருந்தாலும் ஏனோ எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். சமீபக்ட்டில் தமிழகத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற மொழிபெயர்ப்பு குளறுபடிகளைப் பார்த்ததும் எழுதிவிட்டேன்.

      உண்மையில் உயர் அதிகாரிகள் முன் தவறு ஏதும் செய்யக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் பேசவேண்டிய பொறுப்பு இருந்ததால் சிறிது பதற்றம் இருந்தது. ஆனால் பணியை என்அளவிற்கு சிறப்பாக செய்ததால் மன நிறைவு ஏற்பட்டது.

      அண்ணாமாலைப் பல்கலைக் கழகத்தில் படித்ததால் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் குடும்பம் பற்றி அறிவேன். மேலும் எட்டாவது படிக்கும்போது (1956-57) பேராசிரியர் லெ.ப.கரு . இராமநாதன் செட்டியார் எழுதிய ‘அண்ணாமலை அரசர்’ என்ற நூல், தமிழில் துணைப் பாடமாக இருந்ததால் எங்கள் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் பற்றி முழுதும் அறிய முடிந்தது.

      எனக்கு தெரிந்த தகவல்களை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் எழுதிவருகிறேன். அவ்வளவே. விரிவான கருத்துக்கு நன்றி!

      நீக்கு
  4. உங்களால் முடியாதா என்ன?அதுதான் முடித்துக் காட்டினீர்கள்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  5. Translation of an extempore speech is a delicate job which sometimes may land the translator in embarrassment. You have skillfully performed the task and deserve all appreciation. Congratulations.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!

      நீக்கு
  6. சற்றே சிரமமான செயலை சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  7. நேற்று ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே?.. வந்து சேரவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ தெரியவில்லை. இன்றுதான் தங்களின் பின்னூட்டம் எனது அஞ்சல் பெட்டிக்கு வந்தது. . உடனே எனது மறுமொழியையும் தெரிவித்துவிட்டேன். நன்றி!

      நீக்கு
  8. உடனடியாக மொழி பெயர்ப்பு செய்வது என்பது கடினமான பணி. அதுவும் உரையாற்றுபவரின் கருத்தினை அப்படியே சொல்வது சிரமம் - நம் கருத்துகளும் வந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். முதல் முறையே அசத்தலாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு